Saturday, 8 November 2014

சான்றோர் குல வரலாறு - தூக்குமேடை’ ராஜகோபால்

சான்றோர் குல வரலாறு - தூக்குமேடை’ ராஜகோபால்

தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்பது போல் பலர் வரலாறு புனைகிறார்கள். வரலாற்று பதிவுகள் அனைத்திலுமே சான்றோர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்கிறார் அ.கணேசன் (தலைவர் சான்றோர் குல பண்பாட்டு கழகம், சென்னை). அவர் இது குறித்து மேலும் கூறுவது பதிவாக:

 நெல்லைச் சீமையில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) 1942 செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குலசேகரபட்டினம் உப்பளத்தில் பி. எஸ். ராஜகோபால நாடார் தலைமையில் நுழைந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்தது. அங்குப் பணியிலிருந்த காவலர்களைக் கட்டிப்போட்டதோடு அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.
டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தான். சத்தம் கேட்டு விழிப்படைந்த அவன் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களை வழிமறித்தான். குண்டுகள் இல்லாத காரணத்தால் தம் துப்பாக்கியின் பெய்னெட் பகுதியைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான். கூடியிருந்த விடுதலை வீரர்கள் தம் கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் லோன் துரையை வீழ்த்தினர்.
இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடியில் (Thoothukudi District Gazetteer, Vol-1, 2007, Tamil Nadu Archives, Chennai-8) குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்திலுள்ள லோன்துரையின் சமாதியின் படமும் இத்தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கு விசாரணை 1943 பிப்ரவரியில் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் எதிரியான ராஜகோபால நாடாருக்கும், இரண்டாம் எதிரி காசிராஜன் நாடாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1943 ஏப்ரல் 30 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் எதிரியான பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ. எஸ். பெஞ்சமினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை ஒத்த ஃபெடரல் நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதிசெய்தது.
காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஆர். வெங்கட்ராமன், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லண்டனில் இருந்த ப்ரைவி கவுன்ஸிலில் ஆஜராகி இவர்கள் சார்பில் வாதாட மனுசெய்தனர். தேவைப்படுமானால் ராஜாஜியும் லண்டன் சென்று இவர்கள் சார்பில் வாதாடத் தயாராக இருந்தார். இவ்வழக்கில் வாதாடுவதற்காக ராஜாஜி லண்டன் வருவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி இந்தியாவின் கவர்னர் ஜெனரலை அறிவுறுத்தியது. அதன்படி, 1945 ஏப்ரல் 23 அன்று கவர்னர் ஜெனரல் தண்டனைக் குறைப்பு ஆணையை வெளியிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா விடுதலை பெற்றதை முன்னிட்டு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜகோபால நாடார், ‘
தூக்குமேடை’ ராஜகோபால் என்று குறிப்பிடப்படலானார். இச்சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில், 1997ஆம் ஆண்டில் குலசேகரபட்டினத்தில் நினைவுத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதேபோல நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வரலாறாகட்டும், பண்பாட்டுப் பொருளியல் சமூக வரலாறாகட்டும், நாடார் எனப்படும் சான்றோர் சமூகத்தவரின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதே வரலாற்று ஆய்வாளர்களின் பணியாக இருந்து வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் கருத்தில் நாடார் என்ற சமூகமே இப்பகுதியில் இருந்ததில்லை போலும்.

Thursday, 6 November 2014

வர்மம் மறந்த சான்றோர்கள்

வர்மம் மறந்த சான்றோர்கள்



வர்ம சிகிச்சையின் வரலாறு 

பதினெண் சித்தர்களால் குறிப்பாகப் பொதியில் முனிவர் அகத்தியரால் கற்பிக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்மசிகிச்சை என்பது ஒரு பிரிவாகும். மனித உடலின் மேற்பரப்பிலுள்ள நரம்புமுனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் எனச் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுவர். இந்நரம்பு முனைகளில் அடி விழுந்தால் உடலுள்ளுறுப்புகளுக்கு ஊறு நேருமென்றும் உயிருக்கே ஆபத்து விளையக் கூடுமென்றும் கருதப்படுகின்றன. இது குறித்த அறிவியலே வர்மக்கலை ஆகும். வர்மக்கலையைக் கற்றறிந்து அதனைப் பிரயோகிக்கும் நிபுணத்துவம் உடையோரை வர்மாணி ஆசான் என அழைப்பது வழக்கம். கேரள மாநிலத்திலும் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் வர்மாணி ஆசான் பரம்பரையைச் சேர்ந்தோர் பலர் உள்ளனர். வர்மக்கலை என்பது களரிப் பயிற்று எனப்படும் போர்முறைக் கல்விப் பயிற்சிப் புலத்தின் உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆயினும், இதன் ஆக்கபூர்வமான பயன்பாடே - வர்ம சிகிச்சை என்ற மருத்துவச் செயல்பாடே - பரவலாக அறியப்பட்டுள்ளது. சீன நாட்டு அக்குபங்க்சர் சிகிச்சை முறை அண்மைக் காலமாக நம் நாட்டில் பிரபலமடைந்துள்ளதாலும், அச்சிகிச்சை முறையிலும் வர்மஸ்தானங்களுக்கு இணையான நரம்பு முனைகள் குறிப்பிடப்படுவதாலும் வர்ம சிகிச்சை குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அவ்வகையிலும் வர்மக்கலை என்பது மருத்துவ அறிவியலாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 

வன்மம் = வர்மம்


வெளித்தோற்றத்தில் புலப்படாமல் மர்மமாக (இரகசியமாக) ஒளிந்திருக்கும் நரம்புமுனைகள் மர்ம ஸ்தானங்கள் என வழங்கப்பட்டுக் காலப்போக்கில் வர்மஸ்தானங்கள் என மருவியதாகக் கருதப்படுகிறது. இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. வர்மம் என்பது வன்மம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகவே இருக்க வேண்டும். வன்மை, வலிமை முதலிய சொற்களைப் போன்றே வன்மம் என்ற சொல்லுக்கும் ‘வல்' என்ற வேர்ச் சொல்லுடன் வலிமையான தொடர்பு உள்ளது. கம்ப ராமாயணம் யுத்த காண்டம் அதிகாயன் வதைப் படலத்தில், நீலன் என்ற வானரப் படைவீரன், உன்மத்தன் (அல்லது போர்மத்தன்) எனும் அரக்கர் படைவீரனைக் கொல்வது விவரிக்கப்படுகிறது. அந்நிகழ்வைக் குறிப்பிடும் பாடலையடுத்துப் பின்வரும் பாடல் இடம் பெற்றுள்ளது: 

உன்மத்தன் வயிரமார்பின் உரும் ஒத்த கரம் சென்றுற்ற 
வன்மத்தைக் கண்டும் வீழ்ந்த மதமத்த மலையைப் பார்த்தும் 
சன்மத்தின் தன்மையானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த 
கன்மத்தின் கடைக் கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் 

‘உன்மத்தனின் வஜ்ரம் போன்ற மார்பில் நீலனது கையானது இடி போன்ற வன்ம அடியைச் செலுத்தியதன் விளைவாக உன்மத்தனின் மலை போன்ற உடல் உயிரற்று வீழ்ந்ததைக் கண்கூடாகப் பார்த்தபின்னரும் அரக்கப் பிறவியின் தன்மைக்கேற்பவும் தர்ம நெறியை விட்டு விலகி வாழ்ந்த கர்ம வினையின் பயன் விளையப்போகிற நேரம் வந்துவிட்டதாலும் வயமத்தன் என்ற அரக்கர் படைவீரனும் நீலனுடன் போர் புரிய விரைந்து வந்தான்' என்பது இப்பாடலின் பொருளாகும். வன்மம் என்பது ‘ஆழமான பகையுணர்ச்சி' என்ற பொருளில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனவே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆழமாகப் பாதிக்கக்கூடிய பகை நரம்புமுனைகள் வன்மத்தானங்கள் என்றும் அவற்றை நுட்பமாகத் தாக்கும் பயிற்சியே வன்ம அடி முறை என்றும் குறிப்பிடப்பட்டன எனத் தெரியவருகின்றது. 

வன்ம அடிமுறை = அங்கவெட்டு 


வன்மத்தானங்களைத் தாக்கும் அடிமுறை, பழங்காலத் தமிழகத்தில் ‘அங்கவெட்டு' எனப்பட்டது. இது ‘அங்கை வெட்டு' என்பதன் திரிபாகும். விரிந்த உள்ளங்கையை அகங்கை அல்லது அங்கை எனக் குறிப்பிடுவது வழக்கம். எந்த ஆயுதமும் ஏந்தாமல் வெறும் அங்கையைப் பயன்படுத்தி எதிரியை வெட்டி வீழ்த்துகிற போர் முறையா தலால் இது அங்கைவெட்டு எனப்பட்டது. மொத்தம் நூற்றெட்டு அங்கவெட்டு முறைகள் இருந்தன எனக் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி எனப்பட்ட வேம்பத்தூராரால் இயற்றப்பட்ட திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (‘‘அங்க நூற்றெட்டும் வென்றான்'' - பா. 16) படுவர்மம் பன்னிரண்டு, தொடு வர்மம் தொண்ணூற்றாறு - ஆக மொத்தம் நூற்றெட்டு வர்மஸ்தானங்கள் மனித உடலில் உள்ளன என்பது சித்த மருத்துவக் கோட்பாடு. இந்நூற்றெட்டு வன்மத்தானங்களை அங்கையால் தாக்கி எதிரியை வீழ்த்தும் தொழில் நுட்பமே ‘அங்க வெட்டு' எனப்பட்டது. 

அங்கக்காரர்கள் 


கி.பி. 12 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான பல தமிழ்க் கல்வெட்டுகளில் ‘அங்கக்காரர்', ‘அங்கக் களரி' என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.(கி.பி. 14ஆம் நூற்றாண்டைய வரலாற்று நிகழ்வு தொடர்பான) கி.பி. 15 - 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஐவர் ராசாக்கள் கதை' என்ற வில்லுப்பாட்டு இலக்கியத்தில் ‘அங்கஞ் சிரமிகள்' என்று அழைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அங்கம், சிரமம் என்ற இரு வகைப் போர் முறைகளிலும் தேர்ந்தவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர். அங்கைப் போர்முறை அங்கம் என்று வழங்கப்பட்டதெனில் வாள்வீச்சு, கோல் சுழற்றுதல் ஆகியவையே சிரமம், சிரம்பம், சிலம்பம் என்றெல்லாம் வழங்கப்பட்டன. தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருத்தவரை, கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குரிய வணிகக் குழுவினர் (ஐந்நூற்றுவர்) கல்வெட்டுகளிலிருந்து வணிகக் குழுவினரின் பாதுகாப்புப் படைவீரர்களுள் அங்கக்காரர்களும் இருந்தனர் என்ற செய்தி தெரிய வருகிறது. கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலிருந்து ‘வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்' எனப்பட்ட சான்றோர் (நாடார்) குலப்பிரிவினருள்ளும், ‘வெட்டுமாவலி அகம் படியர் எனப்பட்ட அகம்படிய மறவர் குலப்பிரிவினருள்ளும் சிலர் ‘அங்கக்காரன்' என்ற பட்டத்தைப் புனைந்திருந்தனர். என்ற விவரம் தெரியவருகிறது. எனவே கி.பி. 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் அங்கக்காரர்கள் மேற்குறித்த சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் வென்றான் என்ற ஊருக்கருகில் சோழபுரம் என்ற ஊரிலுள்ள அணைந்தான் கோயில் என வழங்கும் சுடலைமாட சுவாமி கோயிலின் வாயிலில் கற்பலகையொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அக்கற்பலகையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மல்லன் குடியான உத்தம சோழபுரத்து நகரத்தார் (வணிகர்கள்) வசம், அவ்வூரின் பரிக்ரகத்தைச் (போர் அவை Military Academy) சேர்ந்த தேவேந்திர வல்லவன் அங்கக்காரர்களில், கொற்றன் குடியனான கலங்காத கண்டப் பேரையன் என்பவர் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி, இறந்து போன தமது மகன் குறுமன் இரட்டை என்பவனின் நினைவாகச் சிலையேற்றி, அச்சிலையின் வழிபாட்டுக்கு இறையிலியாக (அரசுக்குரிய வரியைச் செலுத்தாமல் அனுபவிக்கும் நிலமாக) அந்நிலத்தை வழங்கியுள்ளார். என்ற செய்தி அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் அரசர் பெயர், ஆட்சியாண்டு முதலிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லையாயினும், சடையவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1250 - 1284) பட்டப் பெயரான "தேவேந்திர வல்லபன்' என்பதைத் தங்களுடைய குழுவின் பட்டப் பெயராகச் சூட்டிக்கொண்ட அங்கக்காரர்கள் தொடர்பான கல்வெட்டாதலால் அது சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென முடிவு செய்யலாம்.  மேற்குறித்த அங்கக்காரர், இறந்து போன தமது மகனுக்காகச் ‘சிலை' எனப்படும் கல் நாட்டியுள்ளார். அக்கல்லே, அணைந்தான் எனத் தற்போது வழங்கும் சுடலைமாட சுவாமியாக இருக்க வேண்டும்.  தற்போது இக்கோயில் நாடார் சமூகத்தவர்க்குரியதாக உள்ளது. 

கிட்டதட்ட இதற்குச் சமகாலத்தில் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்துள்ள அங்கமங்கலம் என்ற ஊரிலும் அங்கக்காரர்கள் மிகுந்த அதிகாரத்துடன் வாழ்ந்துள்ளனர். அவ்வூரிலுள்ள நரசிம்மேஸ்வரர் கோயில் எனப்படும் சிவன் கோயில் கல்வெட்டுகளில், சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலம் (கி.பி. 1216 - 1239) தொடங்கி, "அங்கைமங்கலமான வீரபாண்டியன் மடிகை (மளிகை) மாநகரத்து நரசிங்க ஈஸ்வரம்'' என அக்கோயில் குறிப்பிடப்படுகிறது. அங்கைப் போர்வீரர்களுக்கு இறையிலி மானியமாக வழங்கப்பட்டிருந்த அங்கைமங்கலத்தின் இறைவன், சிவபிரானாக - சிவலிங்க வடிவினனாக - இருந்தபோதிலும் நரசிங்க ஈஸ்வரன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளான் எனில், எவ்வித ஆயுதமுமின்றி இரணியனைக் கொன்ற நரசிம்மருக்கு இணையான அங்கைப் போர் வீரர்களை இவ்வகையில் அரசர் கெளரவித்துள்ளார் என்று நாம் பொருள்கொள்வது தவறாகாது. இவ்வூரிலும் தற்போது நாடார் சமூகத்தவரே பெரும்பான்மையோராக உள்ளனர். இவ்வூரையடுத்துப் ‘பணிக்க நாடான் குடியிருப்பு' என்ற ஊர் உள்ளது. பணிக்கன் என்பது போர்க்கலை கற்பிக்கும் ஆசானைக் குறிக்கும் பட்டமாகும். இப்பகுதியிலுள்ள ஆறுமுகனேரியைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ”தட்சிண மாற நாடுசீமை ஆயிரம் நாடாக்கள்” என்ற பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்தல் போன்ற சுயச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தங்கள் நலன்களைக் காத்துக் கொண்டனர் என்பதற்குச் செப்பேட்டு ஆதாரம் உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அங்கமங்கலம், மளிகைப் பொருள்களைச் சேமித்து மொத்த விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மடிகை மாநகர'மாக இருந்துவந்த வரலாற்றை நாம் கவனத்தில் கொண்டால், நாடார்களின் பாரம்பரியப் பின்னணியை உணர இயலும். 

களரிப்பயிற்று :

இன்றைய காலத்தில் கேரளாவில் பெரிதும் பயிற்றுவிக்கப்படும் கலையான களரிப்பயிற்று பண்டைய தமிழர்களின் ஒரு தற்பாதுகாப்புக் கலையாகும். இந்தகலை தமிழர்களின் கலை என்பது தமிழ் ஏடுகளின் மூலம் தெளிவாகிறது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம், பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைகிறது. வீர விளையாட்டுக் கலையான களரி எதிரியை தாக்கவும் மடக்கவும் உதவுகிறது.
களரி உருவாகிய இடங்களுக்கமைய வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆதிகாலங்களில் போர் வீர்ர்களும் அரச பரம்பரையினரும் கற்ற இக்கலையானது பிற்காலங்களில் அனைத்து தரப்பினரும் பயிலும் தற்காப்புக்கலையாக தோற்றம் கண்டது.
வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்ளும் வாய்த்தாரி, உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும் மெய்த்தாரி , ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறையான அங்கதாரி, கோல்த்தாரி எனும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி மற்றும் கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் வெறுங்கைப்பிரயோகம் எனபனவே களரிப்பயிற்சி வகைகளாகும்.
சிவன் அல்லது விஷ்ணுவை களரி தெய்வமாக வைத்து இரு புறங்களிலும் ஆயுதங்களை நிரப்பிவைத்து பயிற்சி நடக்கும் களரிப் பயிற்சியில் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும் ஆசனப்பயிற்சிகளும் இடம்பெறும்.
அனேக களரி ஆசிரியர்கள் வர்மக்கலையும் அறிந்திருந்தனர். சிலம்பத்தில் பாவிக்கப்படும் ஆயுதங்கள் களரியிலும் பாவிக்கப்படுகின்றன.

அனந்தபத்மநாபன் நாடார்

வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசருமானவர் பால மார்த்தாண்டன் (1728-1758). கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். [தமிழினி, மே 2008 இதழில் வெளிவந்த கட்டுரை எனது (குமரன் ந.பா தோலாண்டி) ஆய்வுகளுக்கு பின் சில மாற்றங்களுடன் .


புரூஸ் லீ – மாவீரனின் தத்துவார்த்தமான சன்டைக் கலை

புரூஸ் லீ –  மாவீரனின் தத்துவார்த்தமான சன்டைக் கலை


குங் பூ பிற சண்டை முறைகளில் இருந்து மிக நுட்பமாக பலவிதங்களில் வேறுபடுகிறது. புரூஸ் லீயின் சண்டை காட்சி அமைப்பு சினிமாவில் வன்முறையின் தத்துவத்தையே மாற்றி அமைத்தது. அவர் தனது சினிமா வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் தனது சண்டை முறையின் பின்னுள்ள தாவோயிச தத்துவத்தை விளக்க முயன்றார். உதாரணமாக“Enter the Dragon” இல் ஷாவ்லின் கோயிலின் தலைமை குருவுக்கு அங்குள்ள மாணவனான புரூஸ் லீக்கும் ஒரு உரையாடல் வரும். குரு கேட்பார்: “சண்டையின் போது உன் எதிரி யார்?”
“எனக்கு எதிரியே இல்லை. ஏனென்றால் மோதலின் போது “நான்” என்கிற பிரக்ஞையே இருப்பதில்லை” என்பார் லீ.
எதிரி என்பவன் நமது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே என்கிற புரிதல் இந்த பதிலின் பின் உள்ளது. மேலும் சொல்வார் லீ: “என் சண்டை சண்டையே அல்ல, அது ஒரு விளையாட்டு. தீவிரமான விளையாட்டு. ஒரு நல்ல தற்காப்புக் கலைஞன் பதறுவதில்லை, ஆனால் தயாராகிறான். அவன் சிந்திப்பதில்லை, ஆனால் கனவு காண்பதுமில்லை. எதற்கும் தயாராக இருக்கிறான். எதிரி விரியும் போது நான் சுருங்குவேன். அவன் சுருங்கும் போது நான் விரிவேன். ஒரு வாய்ப்பு நேரும் போது நான் அடிக்க மாட்டேன். அது தானாகவே அடிக்கும்.”. இந்த சின்ன விளக்கத்துக்குள் புரூஸ் லீ பயின்ற குங் பூவின் அத்தனை பரிமாணங்களும் வந்து விடுகின்றன. 

“எதிரி விரியும் போது” அவன் தாவோயிச தத்துவத்தின் யின் யாங் ஆகிறான். யாங் என்றால் சக்தியின் வெளிச்சமான ஆண்மையான வன்மையான செயல்பாட்டு ரீதியான பக்கம். “நான் (லீ) சுருங்கும் போது”அவர் யின் எனப்படும் சக்தியின் இருட்டான பெண்மையான அனைத்தையும் அமைதியாக உள்வாங்கும் பகுதி ஆகிறான். சக்தியின் இந்த இருவேறு பட்ட பகுதிகளின் முரணியக்கம் தான் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதாரம் என தாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். யின் – யாங் தத்துவப்படி இருட்டும் வெளிச்சமும், நன்மையும் தீமையும், நேர்மறையும் எதிர்மறையும், வன்மையும் மென்மையும் சேரும் போது தான் உச்சபட்ச உன்னத ஆற்றல் பிறக்கிறது. அதை சீனர்கள் “ச்சி” என்கிறார்கள். இந்த உச்சபட்ச ஆற்றலை ஒருவன் ஒரு சண்டையின் போது வெளிப்படுத்தினால் அவன் வெல்ல முடியாதவனாகிறான். அதை வெளிப்படுத்த எதிரி தாக்கும் போது அவனை அதே வித எதிர்தாக்குதல் கொண்டு நேரிடாமல் “விரிந்து”அவன் ஆற்றலை உள்வாங்கி அதையே திரும்ப அவன் பலவீனமாகும் போது பயன்படுத்த வேண்டும் என்பதே லீ சொல்வது. 


லீ இளமையில் ஒருநாள் ஒரு நீர்நிலை அருகே அமர்ந்து இருந்தார். திடீரென்று நீரைக் குத்தினார். அது உள்வாங்கி குவிந்து மீண்டும் நிரம்பிக் கொண்டது. அவர் தொடர்ந்து குத்திக் கொண்டே இருந்தார். சட்டென்று அவருக்கு புரிந்தது நீரை ஒருநாளும் காயப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அது திரும்ப தாக்குவதில்லை, விரிந்து வாங்கிக் கொள்கிறது. மீண்டும் பழையபடி ஆகிறது. அவர் புன்னகைத்து இனிமேல் அந்த நீரைப் போல் இருக்க வேண்டும் என தீர்மானித்தார். அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை. கோப்பையில் ஊற்றினால் கோப்பையை போல் ஆகும், குடுவையில் ஊற்றினால் குடுவையைப் போலாகும் நீரைப் போன்று ஒரு நல்ல சண்டை வீரன் இருக்க வேண்டும் என்று பின்னர் அவர் ஒரு டி.வி பேட்டியில் அழகாக இந்த தத்துவத்தை விளக்கினார்.

விரிந்து சுருங்கி சுருங்கி விரியும் இந்த விளையாட்டின் போது ஆற்றல் மாறி மாறி பயணிக்கிறது. ஆற்றல் தான் சண்டையை நிகழ்த்துகிறது. தீமையையும் நன்மையும் இணையும் இந்த முழுமையான ஆற்றல் சண்டையிடும் இருவரில் யார் தன்னை முழுமையாக உள்வாங்குகிறார்களோ அவரை வெற்றி பெற வைக்கிறது. ஆக புரூஸ் லீ சொல்கிறார் “நான் அடிக்கவில்லை. அதுவாக அடிக்கிறது” என. அதே காரணத்தாலும் தான் புரூஸ் லீயைப் பற்றி பேசும் குரு “அவனுடைய சண்டைத் திறன்கள் மட்டுமல்ல முக்கியமாக ஆன்மீக ஆற்றலும் முதிர்ச்சி அடைந்து விட்டது” என்கிறார். இதன் பொருள் குங் பூ வீரன் ஒரு வழமையான ஞானி அல்லது சாமியார் என்றல்ல. மாறாக அவன் சண்டைக் கலை வழி தன்னை அறிந்தவன் என்பது. அவன் தன்னை இயக்கும் உள்-ஆற்றலை உணர்ந்தவன். ஒரு கவிஞனைப் போல் அவன் சண்டையிடும் போது வேறொருவன் ஆகிறான். தன்னைக் கடந்த ஒரு உன்னத ஆற்றலின் பகுதியாகிறான். மற்றபடி அவன் சாதாரண மனிதன் தான். “Enter the Dragon”படத்தில் மற்றோர் இடத்தில் அவர் சொல்வார்: “நான் சண்டை இடாத சண்டை வீரன்”.


உரையாடலின் இறுதியில் குரு ஒன்று சொல்வார். படத்தின் ஆகச் சிறந்த ஆழமான வசனம் அது. “எதிரி என்பவன் பிரதிபிம்பங்களால் ஆனவன். பிரதிபிம்பங்களை நொறுக்கினால் அவனை அழித்து விடலாம்”. யோசிக்க யோசிக்க எத்தனையோ விசயங்களை இந்த வாக்கியம் நமக்கு விளக்குகிறது. எதிரி என்பவன் நமது பிரதிபலிப்பு மட்டும் அல்ல. அவன் தன்னை ஏராளமான வகையில் பிரதிபலித்து அந்த விதவித பிம்பங்களால் மூடிக் கொள்கிறான். வாழ்நாளெல்லாம் நாம் மோதுவதும் போட்டியிடுவதும் இந்த பிம்பங்களுடன் தான். பிம்பங்களை அறிந்து கடந்தால் எதிரி என்பவன் ஒரு பலவீனமானவன் தான். இந்த தத்துவத்தை காட்சிப்படுத்தும் விதமாய் லீ இப்படத்தின் மிகப் பிரபலமான இறுதிக் காட்சியான லீக்கும் வில்லன் ஹேனுக்குமான கண்ணாடி அறை மோதலை அமைத்திருப்பார். லீ ஒரு சிறந்த தற்காப்புக் கலை வீரனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலும் இருக்கக் கூடாது என்பார். அவன் அனைத்து சண்டை ஸ்டைல்களையும் அறிந்து அவற்றை மறந்து விட வேண்டும். அப்போது தான் அவன் ஒரு சண்டையின் போது இயற்கையாக தனக்குள்ள உள்ளுணர்வு சார்ந்து சரளமாக எண்ணமற்று இயங்க முடியும். லீயின் அபார வேகத்தின் ரகசியம் அது தான். கற்று மறத்தல் என்பது ஒரு ஆன்மீக மார்க்கமும் தான் என்பதை விளக்க வேண்டியதில்லை.

லீ தத்துவத்தை ஆன்மீகமாகவும் நடைமுறையாகவும் கண்டவர். இந்த சிந்தனை மேற்சொன்ன இறுதிச் சண்டைக் காட்சியில் உருவகமாக வெளிப்படும். வில்லன் ஹேனுக்கு ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை. அங்கே அவன் இரும்பு முஷ்டி பொருத்தியிருப்பான். சண்டையின் போது தேவைக்கேற்றாற் போல் கத்திக் கரம், முள்கரம் எல்லாம் பொருத்துவான். அவன் இரு கைகளிலும் தோல் உறைந்த அணிந்துள்ளதால் இந்த விபரம் எளிதாக வெளியே தெரிய வராது. அவனிடம் மோதும் பலரும் வீழ்வதற்கு அவனுக்கு ஒரு கையல்ல, “பல கைகள்” என்பது காரணம். நெஞ்சில் கம்பி நகக் கீறல் தடத்துடன் லீ நிற்கும் அந்த பிரபலமான புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அது இம்மோதலின் போது அவருக்கு கிடைக்கும் காயம் தான். கண்ணாடி அறைக்குள் நின்று சண்டையிடும் தனது எதிரிக்கு எண்ணற்ற பிரதிபிம்பங்கள் மட்டுமல்ல பல செயற்கை கரங்களும் உண்டு என லீ அறியும் இடம் சண்டையில் மிக கவித்துவமான ஒன்று. இந்த மாறும் இரும்புக் கரம் என்பது ஸ்டைலின் உருவகம் தான். நிலைத்த கரம் இல்லாதவன் நிலைத்த ஸ்டைல் இல்லாதவன். அவன் நீரைப் போல் கட்டற்று ஒழுகி செல்பவன். அவனை தோற்கடிப்பது சிரமம்.

சினிமாவில் எத்தனையோ சண்டைக் காட்சிகள் பார்த்திருக்கிறோம். நாயகன் முதலில் அடிக்க வில்லன் திரும்பத் தாக்க அதன் பாட்டுக்கு சண்டை தொடரும். இல்லாவிட்டால் வில்லன் அடிக்க அடிக்க நாயகன் துவண்டு பின் திடீர் உத்வேகம் பெற்று திரும்ப அடிப்பான். (90கள் வரை தமிழில் நாயகன் வாயில் குத்து வாங்கி உதட்டில் அரும்பும் தன் சொந்த ரத்தத்தை தொட்டுப் பார்த்து வெறியேறி பாய்ந்து தாக்குவது ஒரு பிரபல பாணியாக இருந்தது. ரஜினி அடிக்கடி பயன்படுத்திய இந்த முறை புரூஸ் லீயின் The Big Boss படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். வில்லன் கத்தியால் கிழிக்க தன் ரத்தத்தையே அவர் ஒரு பூனை போல் நக்கி சுவைக்கும் ஒரு உக்கிரமான காட்சி அப்படத்தில் வரும்.). புரூஸ் லீயின் சண்டைக் காட்சிகளில் அவர் ஒரு நிலையமைதி (stance) எடுத்துக் கொள்வார். எதிரி முன்வந்து தாக்க இவர் முன்னேற மாட்டார். நின்ற இடத்திலேயே சட்டென்று அடியை தடுத்து கண்ணிமைக்கும் முன் அடுத்த அடி கொடுப்பார். அதே வேளை அவர் எதிரியை சுற்றி சுற்றி நகர்ந்து கொண்டும் இருப்பார். இந்த நகர்வு என்பது ஓட்டம் அல்ல. அது எந்த நிலையிலும் தன்னை உறுதியாக நிறுத்திக் கொள்ளத்தக்க வகையிலான சமநிலை கொண்ட ஒரு நகர்வு. ஒரு பூனை எலியை வைத்து விளையாடுவது போன்ற நகர்வு இது. எப்படி தட்டி தட்டி விளையாடினாலும் எங்கு சென்றாலும் எலி பூனையின் பிடிக்குள் தான் இருக்கும். நகர்வின் போது லீ எதிரிக்கு மிக சரியான தொலைவில் தன்னை வைத்துக் கொண்டே இருப்பார். புரூஸ் லீக்கும் விஜய காந்துக்கும் அது தான் வித்தியாசம். லீயின் வன்மத்தின் ஒரு கலைசார்ந்த அழகியல் இருக்கும். சில சமயம் மயில்களின் நடனம் போல தோன்றும். விஜயகாந்த போன்றவர்கள் சண்டைக்காட்சிகளில் பண்ணுவது உலக்கை இடி. புரூஸ் லீயிடம் நம்மை முதலில் கவர்வது அவரது பிரமிப்பூட்டு வேகம், குறைவான அளவான அசைவுகள், மற்றும் சமநிலை. இவை மூன்றும் குங் பூவின் அடிப்படைகள். குங் பூவுக்கு வலிமையும் வேண்டும். ஆனால் மேற்சொன்ன மூன்றுக்கும் பிறகு தான்.


லீ டேய் என்று கத்துவதோ கண்களை சிவக்க வைப்பதோ இல்லை. அமைதியாக கவனிக்கிறார். கண்கள் தான் இருக்கும் சூழலை மற்றும் எதிரியை கூர்ந்து கவனிக்கின்றன. அவர் கண்களால் பார்க்கவில்லை. அவரது ஆழ்மனதால் பார்க்கிறார். எதிரியின் தாக்குதலை பார்க்க அல்ல உணர வேண்டும் என்கிறது குங் பூ. ஏனென்றால் பார்த்து அத்தகவல் மூளையில் பரீசீலிக்கப்பட்டு கைக்கு வருவதற்கு சில நொடிகள் தாமதமாகி விடும். அதனால் புரூஸ் லீ ஒரு வீரன் காலியான கோப்பை போல இருக்க வேண்டும் என்கிறார். அவன் தான் இருக்கும் சூழலின் ஒரு பகுதியாகி விட வேண்டும். எதிரியின் மனதின் ஒரு பகுதியாக அவன் மனமும் ஆகிட வேண்டும். எதிரி தாக்கு என எண்ணும் போது இவனும் அதற்கு தயாராகிறான். ஒரு சண்டையில் எதிரி என்பவன் வேறொருவன் அல்ல, நமது உடலின் இன்னொரு பாதி தான். அதனால் தான் ஒரு சண்டையின் போது மனதை காலியாக, எந்த எண்ணமுமற்று ஒரு தியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் லீ.

மாடியில் நின்று சற்று தொலைவில் ஒரு மரக்கிளையில் இருக்கும் குருவியை பார்க்கிறீர்கள். குருவி உங்களுக்கு திரும்பி இருக்கிறது. அது உங்களை கவனிப்பதாகவே தெரியவில்லை; ஆனால் உங்கள் விரலை உயர்த்தி அசைத்துப் பாருங்கள், உங்கள் விரல் கீழே வரும் முன் குருவி பறந்து விடும். கல்லை விட்டு எறியுங்கள், கல் பாதி தொலைவு இருக்கும் போது பறவை வானில் எம்பி பறந்து கொண்டிருக்கும். ஒரு லட்சிய குங் பூ வீரன் இந்த பறவையின் தயார் மனநிலையில் சதா இருக்கிறான். ஒருமுறை அமெரிக்காவில் ஒரு தற்காப்புக் கலை செயல்விளக்க நிகழ்ச்சியின் போது ஒரு ஆசான் அப்போது நன்கு பிரபலமாகி வந்த லீயிடம் தன் முறுக்கேறி வலுவான வயிற்றைக் காட்டி இங்கு குத்து என்றார். புரூஸ் லீயால் தன் வயிற்றில் குத்தி நிலைகுலைய வைக்க முடியாது என்று சவால் விட்டார். லீ அருகே சென்றார். முகத்தில் நிச்சலனம். சட்டென்று ஆசானின் மூக்கில் குத்து விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்த ஆசான் “ஏன் மூக்கில் குத்தினாய்?” என கோபமாய் கேட்டார். அதற்கு லீ “ஒரு தற்காப்புக்கலை வீரன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். உடம்பில் ஏதாவது ஒரு பகுதியை வலுவாக்கி விட்டு அங்கே குத்து என சவால் விட யாராலும் முடியும். ஆனால் நிஜ சண்டையில் இது எந்த பயனுமற்றது” என்றார்.

மனதை காலியாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக லீ தன் மாணவர்களுக்கு அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். நன்கு பிரபலமான கதை தான். ஒரு பேராசிரியர் ஒரு ஜென் துறவியிடம் சென்று ஜென்னை விளக்குமாறு கேட்கிறார். துறவி எதைச் சொன்னாலும் “அதான் எனக்குத் தெரியுமே...” என பேராசிரியர் தன் பாட்டுக்கு ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடுவார். அவருக்கு ஒன்றையுமே சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று அறிந்து கொண்ட துறவி அவரை தேநீர் அருந்த அழைத்தார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை அது நிரம்பி வழிந்த பின்னரும் ஊற்றிக் கொண்டே இருந்தார். பேராசிரியர் “நிறுத்துங்கள் நிறுத்துங்கள் வழிகிறது” என்று கத்தினார். துறவி அமைதியாக “உங்கள் மனமும் இப்படித் தான் இருக்கிறது. மனத்தில் இடமில்லாமல் இருக்க நான் எப்படி புதிதாக ஒன்றை உங்களுக்கு சொல்லித் தர முடியும்?” என்று கேட்டார். இந்த அழகான கதை ஜென்னின் அடிப்படையை விளக்குகிறது. ஜென் என்பது ஒரு கோட்பாடோ தத்துவமோ அறிதல் முறையோ அல்ல. அது ஒரு அனுபவம் அல்லது வாழ்தல் முறை. மனிதன் அறிவை துறக்கும் போதே உலகை அறிகிறான் என்கிறது ஜென். சொல்லப் போனால் அறிதல் என்பதே ஜென்னுக்கு விரோதமானது. உணர வேண்டும். உணர்தல் தான் ஜென்னின் மையம்.


நாம் தேடும் உண்மை என்பது நம்மையும் சேர்த்த ஒரு மாபெரும் இருப்பு என்கிறது ஜென். ஒரு சிறு உப்புக்கல் கடலில் கரைந்து போய் தன்னை அறியும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை அறிந்திருப்பீர்கள். இயற்கையை ஜென் தனியாக பார்ப்பதில்லை. மேற்கத்திய கல்வியில் வளர்ந்த நமக்கு இது மிக அந்நியமான ஒரு புரிதல். இயற்கை என்பது மரம், கடல், வானம் அல்ல. இயற்கை என்பது ஒரு முடிவற்ற இருப்பு. நாம் அதில் ஒரு பகுதி. வாழ்க்கையை நன்றாக வாழ சிந்தனை பாரமின்றி வாழ்வோடு ஒன்றிப் போக தெரிய வேண்டும். ஒரு வேலையில் தன்னை மறந்து ஈடுபட்டிருப்பது, ஒரு கவிதையை ஆழ்ந்து படிப்பது, தன்னை மறந்து உதட்டோடு உதடு பொருத்தி மற்றொரு உடலோடு ஒன்று கலப்பது, எதற்கென்றே புரியாமல் சில நொடிகள் சிரிப்பது இவை எல்லாம் ஜென் தான். ஆனால் நம் வாழ்வில் மிகச் சில நிமிடங்களே இது சாத்தியமாகிறது. ஜென் தினசரி வாழ்வின் அத்தனை கவனச் சிதறல்கள், பதற்றங்கள், நெருக்கடிகள், அதிரடி நிகழ்வுகளுக்கு மத்தியிலும் எப்படி மனதை காலியாக வைத்து நதியில் ஒழுகும் இலை போல இருப்பது என்று சொல்லித் தருகிறது.

புரூஸ் லீ குங் பூவை ஒரு ஜென் கலையாகப் பார்த்தார். குங் பூ அதன் ஆதி அர்த்தத்தில் சண்டைக் கலை அல்ல. சீனாவில் எந்தவொரு துறையிலும் முழுமையான அறிவு பெற்றவர்களை குங் பூ ஆசான் என்று அழைத்தார்கள். புரூஸ் லீயின் வன்முறையின் மற்றொரு பக்கம் அவரது சலனமுறாத அமைதி. அவரை படத்தில் பார்க்கும் போது நம்மை மிகவும் ஈர்ப்பது இந்த முரணமைவு தான். இது தன்னிறைவினால் வருகிறது என்கிறார் புரூஸ் லீ. அவரிடம் அடிக்கடி பேட்டிகளில் கேட்கப்பட்ட கேள்வி தெருவில் நிஜமாக அவரை யாராவது தாக்க வந்தால் அவரால் சமாளிக்க முடியுமா, வெற்றி கொள்ள இயலுமா என்பது. ஒரு முறை இதற்கு பதிலளித்த லீ நடைமுறையில் தன்னை ஒருவன் சண்டைக்குத் தூண்டினால் அவனை உதாசீனித்து விடுவேன் என்றார். ஏன்? எதிரியை பார்த்ததும் தன்னால் அவனை ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை தோன்றினால் பிறகு அவருக்கு அவனுடன் சண்டையிட மனம் வராது. அது தான் ஏற்கனவே ஜெயித்தாகி விட்டதே. தனது தன்னிறைவை அறிந்த லீக்கு ஒரு எதிரியிடம் அதை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆக சண்டை என்பது மனதளவில் நடக்கும் ஒன்று தான் என லீ புரிந்து வைத்திருந்தார்.  அவர் சிறுவயதில் லீ மோசமான சண்டையாளராக இருந்ததற்கு இந்த செயலமைதி இல்லாதது தான் காரணம். சின்னதாய் தூண்டப்பட்டாலே வெகுவாக ஆத்திரம் கொண்டு உடனடியாக சண்டைக்கு செல்பவராக லீ அப்போது இருந்தார். அவரது விங் சுன் குருவான யிப் மேன் அவரிடம் இதைச் சுட்டிக் காட்டி மெல்ல மெல்ல முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.

முதிர்ச்சியடைந்த லீ எப்படியானவராக இருந்தார் என்பதற்கு ஒரு உதாரணம். Fist of Fury உடன் அவர் சீனாவில் பிரபல நடிகராகி விட்ட பின் ஒருமுறை நண்பர் ஒருவருடன் ஒரு உணவகத்துக்கு சென்றார். அப்போது சீனாவில் பல இளைஞர்கள் லீயுடன் மோதி எளிதில் புகழடைய வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒருவன் தான் அன்று லீக்கு உணவு பரிமாறிய வெயிட்டர். அவன் அவரை சீண்டிக் கொண்டே இருந்தான். புண்படும் படி பேசினான். லீ ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நண்பர் “எப்படி உங்களுக்கு கோபம் வராமல் இருக்கிறது?” என்று வினவ அதற்கு லீ “நான் இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நாள் முழுக்க என் மகிழ்ச்சியை கெடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்றார். ஒரு ஆழமான குளத்தில் கல் வீசினால் அலைகள் எழும். ஆனால் அவை பரப்பில் தான் எழும். குளம் அதன் ஆழத்தில் எதனாலும் தூண்டப்படாமல் அமைதியாக இருக்கும். மனித மனம் அப்படியானது என லீ அறிந்து வைத்திருந்தார். பரப்பில் உள்ள சிற்றலைகளை பொருட்படுத்தாமல் இருப்பது ஒரு கலை.

ஒரு சிறந்த குங் பூ ஞானி எளிதில் சீண்டப்படாமல் இருப்பான் என்பதை விளக்க லீ அடிக்கடி தன் மாணவர்களுக்கு சொல்லும் ஒரு கதை நான்கு தற்காப்புக் கலை ஆசான்களின் கதை. ஒரு ஊரில் மிகச் சிறந்த ஒரு குங் பூ ஆசான் இருந்தார். அவர் ஒரு ஞானி. தற்காப்புக் கலை வழி தன்னை அறிந்தவர். மேற்சொன்ன நான்கு ஆசான்களும் தற்காப்புக் கலையை ஒரு சண்டைக்கலையாக மட்டுமே அறிந்தவர்கள். அவர்கள் குங் பூ ஞானியை தேடி ஒரு உணவகத்துக்கு வந்தனர். அவரை எப்படியாவது சண்டைக்கு இழுத்து தோற்கடித்து அதனால் தாம் புகழடைய வேண்டும் என்பது அவர்களின் உத்தேசம். அவரது பக்கத்து மேஜையில் அமர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர். ஞானி புறக்கணித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நால்வரும் மிகுந்த காழ்ப்புணர்வுடன் தனிப்பட்ட முறையில் அவரை ஏச ஞானி ஒன்று செய்தார். சுற்றிப் பறக்கும் நான்கு ஈக்களை அவற்றின் இறகுகளைப் தன் கையில் உள்ள சாப் ஸ்டிக்குகளால் பற்றிப் பிடித்து எறிந்தார். அதைப் பார்த்த நால்வரும் சட்டென்று அமைதியாகி எழுந்து வெளியேறினர். ஒரு உன்னத குங் பூ வீரன் தன்னை நிரூபிக்க சண்டை போட வேண்டிய தேவையில்லை. அவனது உன்னதம் அவன் செய்யும் ஒவ்வொரு சிறு செயலிலும் வெளிப்படும். ஈயை சாப் ஸ்டிக்கால் பிடிக்க முடிந்தவருக்கு நான்கு பேரை சமாளிப்பது எம்மாத்திரம் என்பதே ஞானி குறிப்புணர்த்திய செய்தி. இக்கதையை “The Karate Kid” படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் ஞாபகப்படுத்துவார்.

புரூஸ் லீ பயின்ற விங் சுன் குங் பூவில் மைய அச்சுக் கோடு என்று ஒரு கற்பனையான கோடு உண்டு. ஒரு வீரன் தனது மைய அச்சுக் கோட்டை அறிந்திருப்பது கிரிக்கெட்டில் மட்டையாளன் லெக் அல்லது மிடுல் குச்சி கார்டு எடுப்பதை போன்றது. இது தனது வீச்சு எல்லை எதுவரை என்கிற புரிதலையும் சமநிலையையும் அவனுக்கு அளிக்கிறது. அவனது அடி இலக்கை நோக்கி சரியாக சென்றடைய உதவுகிறது. புரூஸ் லீ எந்த ஒரு குறிப்பிட்ட மரபான விதிகளையும் கராராக பின்பற்றுபவர் அல்ல என்றாலும் அவரது அநேகமான சண்டைகளில் இந்த மைய அச்சை அவர் தக்க வைப்பதை அவர் நின்று தாக்கும் முறையில் இருந்து நாம் கவனிக்க முடியும். தனது எல்லையை வகுத்து அதற்குள் நின்ற படி கிரிக்கெட்டில் மட்டையாளன் பந்தை தன்னை நோக்கி வர அனுமதிப்பது போல புரூஸ் லீயும் எதிரியை தாக்க அனுமதிக்கிறார். இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

எதிரி நம்மைத் தாக்கும் போது அவனது ஆற்றல் நம்மை நோக்கி வருகிறது. மேலும் அவனது சமநிலை குலைகிறது. இது மிக விரைவில் நடக்கிறது. நம்மை அடித்த உடன் எதிரி சமாளித்து தன் சமநிலையை மீட்டுக் கொள்வான். விங் சுன் குங் பூ எதிரி நம்மை தாக்கும் போது கண்ணிமைக்கும் வேகத்தில் செயல்பட்டு அவனது அடியைத் தடுத்து அவனது ஆற்றலை திரும்பி அவனை நோக்கியே செலுத்தி அடிக்க சொல்லுகிறது. அந்நேரத்தில் அவனது சமநிலைக் குலைவை நாம் பயன்படுத்த வேண்டும். குங் பூவில் வேகம் மிக முக்கியம். (வேகமாக தாக்கும் பொருட்டே லீ தன்னை ஒல்லியாக ஆனால் திடமாக வைத்துக் கொண்டார். எடைகள் கொண்டு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போதும் அவர் உயர்ந்த எடையில் இருந்து குறைந்த எடைகளுக்கு செல்லும் உடற்பயிற்சி பாணியை பயன்படுத்தினார். இது அவரை எடை குறைந்தவராக வைக்க உதவியது.).

ஆற்றலை திரும்ப எதிரியை நோக்கியே வழிமாற்றி விடும் உத்தியை கவனியுங்கள். புரூஸ் லீயின் சண்டையில் இது அடிப்படையான உத்தி. விங் சுன்னில் இத்திறமையை வளர்க்க sticking hands என்னும் ஒட்டும் கரங்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அதாவது எதிரியுடன் பொருதும் போது நமக்கு நான்கு கைகள். எதிரியின் அசைவுகளை முன் கூட்டி உணர்ந்து நாம் தடுத்து தாக்கும் போது ஒரு கட்டத்தில் எதிரியின் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறோம். எதிரியின் கைகால்கள் நமதாகின்றன. அவனது உடல் கொண்டு அவனையே அடித்து வீழ்த்துகிறோம். புரூஸ் லீ மிக வலிமையானவர் என்றாலும் அவரது குச்சிக் கைகளுக்கு தன்னை விட இரட்டிப்பு எடை கொண்ட எதிரியை அடித்து வீழ்த்தும் ஆற்றல் இப்படித் தான் கிடைக்கிறது.

இவ்விசயத்தில் கிரிக்கெட் குங் பூவோடு ஒத்துப் போகிறது. சொங்கி போல் தெரிபவர்கள் பிரம்மாண்ட சிக்ஸர் அடிப்பதை பார்த்து வியந்திருக்கிறோம். டைமிங் தான் இதன் ரகசியம். டைமிங் என்றால் பந்தின் வேகத்திற்கு ஏற்ப மட்டை செயல்பட்டு இரண்டும் ஒரே புள்ளியில் சந்திப்பது. 2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டு ஆட்டத்தில் சேவாக 309 அடித்தது நினைவிருக்கலாம். அப்போது ஷோயப் அக்தர் கடும் வேகத்தில் உயரப்பந்துகளாக வீசிக் கொண்டிருந்தார். சேவாக் அவற்றை நான்கு ஓட்டங்களுக்கு சுலபமாக அப்பர் கட் செய்தார். ஒவ்வொரு முறையும் ஷோயப் சேவாகிடம் வந்து “முடிந்தால் புல் ஷாட் அடி பார்ப்போம்” என்று சவால் விடுப்பார். ஒரு கட்டத்தில் சேவாக் அவரிடம் “தயவு செய்து பிச்சையெடுப்பதை நிறுத்தி பந்து வீசு” என்றார். ஷோயப் அதோடு சவால் விடுப்பதை நிறுத்தினார். புல் ஷாட்டை விட அப்பர் கட்டில் ஒரு மட்டையாளன் குறைந்த வலுவை தான் பயன்படுத்துகிறான். பந்து வீச்சாளனின் பாதி மைதானம் ஓடி வந்து தனது தோளை வருத்தி உற்பத்தி செய்யும் வேகத்தை நுணுக்கமாக திசை திருப்பி விடுகிறான். அவ்வளவே. இது ஷோயப்பின் கையைக் கொண்டு அவரையே அடிப்பது போல். அதனால் தான் ஷோயப் அவ்வளவு எரிச்சலானார். கிரிக்கெட்டில் தோள்வலுவை கொண்டு பந்தை மைதானத்துக்கு வெளியே துரத்துவது போல், குறைந்த ஆற்றல் பயன்படுத்தி, டைமிங் கொண்டும் செய்யலாம். குங் பூ இந்த உத்தியையே மேம்படுத்தி பல மடங்கு வேகம் மற்றும் கூர்மையுடன் செய்யக் கற்றுத் தருகிறது.

இறுதியாய் விங் சுன் குங் பூவில் சிக்கனம் ரொம்ப முக்கியம். எதிரியை நோக்கிய வெகு அருகிலான குத்து என்பது நேர்கோட்டில் பயணிப்பது என்கிறது விங் சுன் குங் பூ. ஒரு கையை தடுக்கும் நோக்கமாக நேராக நெஞ்சுக்கு சற்று சாய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றைய கரம் அடிப்பதற்கும் தடுப்பதற்கும் தோதாக சற்று மேலெழும்பி இருக்கும். கையை வளைத்து சுற்றி அடிப்பதெல்லாம் குங் பூவில் கிடையாது. தனதுChinese Gung Fu எனும் நூலில் புரூஸ் லீ பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே முழங்கை கொண்டு தாக்க வேண்டும். சற்று தள்ளி இருப்பவர்களைக் கூட முழங்கை கொண்டு தாக்குவது ஆபத்தானது என்கிறார். அடி தப்பும் அல்லது அதற்கு முன் எதிரி சுதாரித்து நம்மை தாக்கக் கூடும். அவர்களை கால் கொண்டு தாக்க வேண்டும். குங் பூவில் கை கால்கள் நான்குமே ஒரே வேளை தடுக்கவும் தாக்கவும் தயாராக இருக்க வேண்டும். தள்ளி இருக்கும் எதிரியை காலால் எதிர் கொண்டு அவன் அருகே வர மட்டுமே கையை வேகமாக சிக்கனமாக இயக்கி தாக்க வேண்டும் என்கிறார் அவர். குங் பூவில் குத்துவது கிரிக்கெட்டில் குறைந்த back lift கொண்டு தோனி மிகுந்த ஆற்றலுடன் அடிப்பதைப் போன்றது.

Sunday, 2 November 2014

விருதுநகர் என்ற விருதைவெற்றி

விருதுநகர் என்ற விருதைவெற்றி

விருதுநகர் தல வரலாறு






விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது. "Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.

“பொதியை ஏத்தி வண்டியிலே, பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு”
என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.

அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் அட்சி “பொற்காலம்” என்று கூறலாம். இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேறுபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன. மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம். ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.
 விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது. விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 101மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம்,கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும். 

திருத்தங்கலில் கண்டெடுக்கப்பட்ட மீன் பொரித்த நாணயம் பாண்டியமன்னர்களின் ஆட்சியைக்குறிக்கிறது . பாண்டிய மன்னர்கள் ஏறத்தாழ 16ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாக கூறப்படுகிறது. ஆப்போது புங்க நாடு என்று அழைக்கப்பட்டது. இடையில் சிறிது காலம் சோழர் கீழ் மதுராந்தநாடாகவும் (கி.பி.985-கி.பி.12,5) கூறப்படுகிறது. பிற்கால பாண்டியர் ஆட்சியின் போது செங்குடி நாடாக அழைக்கப்பட்டது. (கி.பி.1266- 1345). நாயக்கர் ஆட்சியின் கீழ் சிறிது காலம் இருந்துள்ளது. எரிச்சநத்தம் - விருதுநகர் சாலை, மங்கம்மாள் சாலை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இருந்தமையால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வடக்கே இருந்து வந்த வீரனோடு போரிட்டு அவன் விருதுகள் யாவும் இங்குள்ள வீரன் பெற்றமையால்,“ விருதுபட்டி” விருது-விருதுகள்பட்டி-சிறிய கிராமம் , விருதுபட்டி என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமங்கலம் ஸ்ரீ பெரியகாத்தவராயன் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் விருதுவெற்றி என்றும் கூறப்படுகிறது. கந்தசாமி கவிராயர் தம் “தெப்பக்குளச்சிந்து” வில் “விருதூர்” மற்றும்“விருதையூர்” எனவும் குறிப்பிடலாம். விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது. 6-4-1923 முதல் “விருதுநகர்” என்று அழைக்கப்படுகிறது.
வணிகத்தில் விருதுநகர்
கல்லடைக்குறிச்சி கல்வெட்டின்படி சோழர், பாண்டியர் காலத்தில் நாடார்கள் உயர் பதவிகளை வகித்து பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தனர். நாயக்கர்களின் காலத்தில் நாடார்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு அடைந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியக்கத்தக்க வகையில் விருதுநகர் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.

கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் வணிகர்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர்.

காபி, ஏலக்காய் எஸ்டேட்களை ஏற்காடு, பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் நிறுவியுள்ளனர்.1940ஆம் ஆண்டு வரை விருதுநகர் தென் பிராந்தியங்களின் விளைபொருள்களுக்கு வணிக மையமாக இருந்தது.

“பஞ்சு” ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சு வணிகத்தில் விருதுநகர் சிறப்பான இடம் வகித்தது.150 ஆண்டுக்கு முன்னர் விருதுநகர் பாக்கு வணிகத்தின் பெரிய சந்தையாக இருந்தது. இலங்கையில் இருந்து பாக்கு கொள்முதல் செய்யப்பட்டது. புகையிலையும் இங்கிலாந்து, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

காபி வணிகத்தில் அகில இந்திய அளவில் விருதுநகர் சிறப்பிடம் வகிக்கிறது. சிக்கரி வணிகத்தில் விருதுநகர் வணிகர்கள் இந்தியா முழுவதற்குமான உரிமம் பெற்றுள்ளனர். ஏலக்காய் விருதுநகரில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லி மற்றும் மிளகாய் வற்றல் வணிகத்திலும் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளனர் விருதுநகர் மக்கள்.

முதலில் வணிகச்செட்டியார் சமுகத்தினரும் நாடார் பெருமக்களும் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டனர். இன்று மாநில அளவில் 75% எண்ணெய் விருதுநகரில் தயார் செய்யப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியிலும் சிறப்பிடம் வகிக்கிறது. பருப்பு வணிகம் 1857ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.இங்கு தயாராகும் பருப்பு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


விருதை வணிகத்தின் சிறப்பம்சங்கள்

1. M.S.P. குடும்பத்தினர் காப்பி ஏற்றுமதி செய்வதில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது.

2. சிக்கரி வணிகத்தில் P.M.A.NarayanaNadar குடும்பத்தினர் தென்னிந்தியாவில் முன்னனியில் உள்ளனர். 1975ஆம் ஆண்டு ஏற்றுமதியில் இந்திய அளவில் பெரும்பங்கு அம்பாள்காபி நிறுவனத்தினருடையதாகும்.

3. இந்திய அரசின் சிறந்த ஏலக்காய் ஏற்றுமதிக்கான விருதுனை ஒன்பது முறை பெற்றுள்ளனர் S.P.G. இராமசாமி நாடார் வணிக நிறுவனம்.

4. அகில பாரத அளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதியில் முன்னனியில் இருந்து வருகின்றனர் V.P.S.A. நிறுவனமாகும். V.P.S.A.ஜெயகர் சைனாவில் மிளகாய் வற்றல் செய்யும் முதல் விருதுநகர்காரர்.

5. P.C. கண்ணன் & கோ நிறுவனம் மல்லி ஏற்றுமதியில் அகில இந்திய அளவில் முதன்மையான ஏற்றுமதியாளர் விருதினை பெற்றுள்ளனர்.

கல்வியும் விருதையும்


இந்தியாவில் ஆங்கிலக்கல்வி மற்றும் இனமொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் இலவசகல்வி அளித்த இரு பள்ளிகளில் ஒன்று 26.11.1889 ஆண்டு தொடங்கப்பட்ட “இந்து பிரைமரிப் பள்ளி” ஆகும். இப்பள்ளியே 1892ஆம் ஆண்டு உயர் தொடக்கப்பள்ளியாகி 1895ஆம் ஆண்டு “கூத்திரிய வித்யாசாலா”வாகி 1902ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. இது தற்பொழுது 125 வருட விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி வித்யாசாலா, சுப்பிரமணிய வித்யாசாலா, திருவள்ளுவர் வித்யாசாலா, காமராசர் வித்யாசாலா, பாலர் பள்ளி, பெரிய கருப்பநாடார் பள்ளி ஆகியவை இதன் கிளைகள்.
K.V.S. Matriculation Higher Secondary School 4.10.1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.



மகளிருக்காக 1910ஆம் ஆண்டு இந்து நாடார் பெண் பாடகசாலை துவக்கப்பட்டது. இப்பள்ளியே 1916ஆம் ஆண்டு கூத்திரிய பெண் பாடசாலையாகி, 1935ஆம் ஆண்டு கூத்திரிய மகளிர் உயர் தொடக்கப்பள்ளியாகி, 1943ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது. மாங்காய்மச்சு, ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளிகள் ஆகியவைகள் இதன் கிளைகள்.

P.S.Chidhambara Nadar Senior English School (CBSE) 23.06.1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

விருதுநகர் இந்து நாடார்களால் செந்திக்குமார நாடார் கல்லூரி 1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி 23.06.1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ச. வெள்ளைச்சாமி நாடார் தொழில் நுட்பப்பயிலகக் கல்லூரி 1952ஆம் ஆண்டு காமராசர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி 3.08.1998ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

A.P. சங்கரலிங்க நாடார் பெண் பாடகசாலை (30.10.1925). V.P. பெரியசாமி நாடார் உயர்நிலைப்பள்ளி (1953). வே.வ.வன்னியப்பெருமாள் தொடக்கப்பள்ளி(1960). இங்கு 1993 முதல் பார்வையற்ற சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சௌடாம்பிகை தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (1986). ஜோதி வித்யாலயம்(1967). V.M.G. ராஜசேகரன் ரமணி ஸ்ரீசாரதா சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி(1970). Virudhunagar Matriculation School (1991). Noble Matriculation School (2002).

T.E.L.C. நடுநிலைப்பள்ளி, ஏனாதி T.E.L.C. தொடக்கப்பள்ளி (1936). Roman Catholic Schools(1936).

Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலைப்பள்ளி, Hajee. P. செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி, இஸ்லாமிய சமுகத்தினரால் நடத்தப்படும். இப்பள்ளிகள் 1924ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளான சி.ச.சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியனவும் சிறப்பாக இயங்குகின்றன. நகராட்சிப் பள்ளிகளும் உள்ளன.

“பிடி அரிசிதிட்டம்” (இந்து நாடார் பெண்கள் அரிசி எடுக்கும் போது ஒரு பிடி அரிசியை கலயங்களில் இடுவார். இவ் அரிசியை எல்லா வீட்டினின்றும் சேகரித்து விற்று கிடைக்கும் நிதி ,கோவில் நிதி. பல்வேறு மகமை தரப்பின் நிதி, நகரின் உள்ள பெரியோரின் நன்கொடை, என்று ஒரு சமுதாயமே தங்களுக்கு தேவையான கல்வியை, எல்லோருக்கும் கிடைத்திடவும் “இலாப நோக்கில் இல்லாமல்”, நடத்துவது விருதுநகர் இந்து நாடார்களின் தனிச் சிறப்பாகும்.

மாநில அளவில் கல்வியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Saturday, 1 November 2014

குமரி விடுதலைப் போராட்டம்

குமரி விடுதலைப் போராட்டம்




இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார்.

 தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. குமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர்.  குறிப்பிட்டுக் கூறுவதென்றால், நாடார் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. 

இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். தங்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால் பொறாமை கொண்ட உயர் சாதியினர் அவர்கள் மீது பல் வேறு அடக்குமுறைகளை ஏவினர். நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்து பேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார்.எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.இதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் பாசத்தோடு குமரி மாவட்டத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.  8 செப்டம்பர் 1947-ல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.த.நா.கா.) என்ற அரசியல் கட்சி தமிழர்களின் நலன் காக்க, குமரித்தந்தை மார்ஷல் A. நேசமணி அவர்கள் தலைமையில் உருவெடுத்தது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தமிழர்களைக் கொண்ட ஒரு தனி நிர்வாகம் வேண்டும் என்பதே அந்த அரசியல் கட்சியின் கொள்கையாய் இருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்த போது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு உச்சகட்ட போராட்டம் நடந்தது.

இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவிலில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது.  இணைப்பு நாளன்று (01.11.1956) தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், நாகர்கோவில் S.L.B  கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்ப்பு விழாவில் இவ்வாறு ஏற்புரையாற்றினார்்-


“நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள்.  ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும்.  அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.  செய்யவும் மாட்டோம்.  பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள்.  நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடனே சேருவதற்கு நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

சாம் டானியேல், மார்ஷல் நேசமணி, குஞ்சன்நாடார், சிதம்பரநாதன், ரசாக், நூர்முகமது, சைமன், காந்திராமன், மணி, தாணுலிங்கநாடார், பொன்னப்பநாடார், வில்லியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாறு போராட்ட களங்கள் பல கண்டு, பலரை தியாகம் செய்து தாய் தமிழகத்துடன் இணைந்தது குமரி மாவட்டம்.இன்று எங்கள் கன்னியாக்குமரி மாவட்டம் மலையாளி ஆளுகையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு தாய் தமிழகத்தோடு இணைத்தது.

தகவல் ஆதாரம்: முனைவர் பீட்டர் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை
முனைவர் பீட்டர்
தலைவர் கன்னியாகுமரி வளர்ச்சி கல்வித் துறை நிறுவனம்