Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Tuesday, 17 November 2015

நமக்கு எல்லாமே தற்காலிகம் தான்!!

கொஞ்சம் பெரிய பதிவுதான் தயவு செய்து படியுங்கள் மக்களே

1993ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்பு ஓடிய வெள்ள நீரின் காட்சி இது. மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் கள்ளந்திரி போன்ற ஊர்களில் பல ஊரணிகளும், கண்மாய்களும் நிறைந்து உடைந்து வந்ததால் மதுரைக்குள் இருந்த மிகப்பெரிய இரண்டு கண்மாய்கள் உடைந்தன. வண்டியூர் கண்மாய் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்க உடைக்கப்பட்டது! செல்லூர் கண்மாய் நள்ளிரவுக்கு பின்னர் உடைந்ததால், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே வீடுகளில் வெள்ள நீர் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து மிகப்பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் விளைவித்தது. செல்லூர் பகுதிகளில் இருந்த பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்களால் பெரிய ரப்பர் டியூப்கள் உதவியால் உடனடியாக மீட்கப் பட்டனர். பொது மக்கள் போர்வையில் சில சமூக விரோதிகள் மக்களை நடு தண்ணீரில் நிறுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்தன! மதுரையின் வடக்கு பகுதியே வெள்ளத்தில் மிதந்தது. கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், செல்லூர், பி.பி.குளம், ஐயர் பங்களா, தபால் தந்தி நகர், நரிமேடு, தல்லாகுளம், கரும்பாலை, அரவிந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள், குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், கோமதிபுரம், கே.கே.நகர், சதாசிவ நகர், தாசில்தார் நகர், வண்டியூர், புதூர் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

காரணம் வேறொன்றுமில்லை ஒரு கண்மாய் நிறைந்து அல்லது உடைந்து அடுத்த கண்மாய்க்கு நீர் பாய்ந்ததே தவிர எந்த கண்மாய்க்குமே முறையான வடிகால் இல்லை. இருந்த வடிகால்களும் முழுக்க ஆக்கிரமிக்க பட்டிருந்தன. முக்கியமாக வன்டியூர் கண்மாயிலிருந்து அண்ணாநகரையும் சதாசிவ நகரையும் பிரித்து வண்டியூர் கண்மாயின் உபரி நீரை வைகைக்கு கொண்டு செல்லும் வடிகால் இருபது அடி அகலத்தில் இருந்து மூன்று அடி அகலத்திற்கு சுருங்கி இருந்தது! கிருதுமால் நதியே காணாமல் போயிருந்தது. பற்றாக்குறைக்கு மதுரையை சுற்றி ஆங்காங்கே சிறு மலைகளில் பெய்த மழை நீர் காற்றாற்று வெள்ளங்களால் நிறைந்து வைகை நதியை நிறைத்து வெள்ளக்காடாக்கியது. மிகப்பெரிய பாதிப்பு என்னவென்றால் வைகையில் காடாக வளர்ந்திருந்த சீமைக்கருவேலைகள் பாலக்கண்களை அடைத்து, அவை வேறு நீரை ஊர்பக்கம் திருப்பிக் கொண்டிருந்தன.

மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அப்போதும் செ.செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசே ஆட்சியிலிருந்தது! ஆனால் சேதத்திற்கு பின்னர் அந்த அரசு எடுத்த பல நடவடிக்கைகள் அதிரடி. வைகையை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புக்கள் கட்சி பாகுபாடின்றி உடனடியாக அகற்றப்பட்டன, வைகையின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டன (இதை இன்றும் காணலாம்!). அதே போல் ஆக்கிரமிப்பை தவிர்க்க மதுரை நகருக்குள் வைகையின் இரு புறமும் சாலைகள் போடப்பட்டன! கண்மாய்களின் வடிகால்களின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் அகலப்படுத்தப் பட்டன. கிருதுமால் நதியும் அகல்ப்படுத்தப்பட்டது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை! ஆம்!! 1993ல் கடும் வெள்ள பாதிப்பு. 1999ல் அதே வன்டியூர் கண்மாய் ஆக்கிரமிக்கப் பட்டு நவீன ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது, மிகப்பெரிய மலர் சந்தை, நெல் பேட்டை என எல்லாமே கண்மாய் ஆக்கிரமிப்புகள். இப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உண்டாக்கப்பட்டிருப்பதும் கண்மாய் ஆக்கிரமிப்புதான். தமிழக அரசுகளுக்கு மிகப்பெரிய திட்டத்திற்கு நிலம் தேவை என்றால் அவர்கள் கண்ணுக்கு அகப்படுவது எல்லாம் கண்மாய்களும் ஏரிகளும் தான்! உதாரணம் பல வருடங்களுக்கு முன்பே அவணியாபுரம் கண்மாயும், அனுப்பானடி கண்மாயும் அரசு ஆக்கிரமிப்புக்குள்ளானது!

1993 வெள்ள பாதிப்புக்கு பின்னர் அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளை 1996ல் வந்த தி.மு.க அரசு காற்றில் பறக்க விட்டது. அதற்கு பின்னால் மீண்டும் 2001ல் வந்த அ.தி.மு.க அரசும் அதை காற்றில் விட்டதுதான் மிகப்பெரிய சோகம். நாமும் இது போல் ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு ஒரு முறை இது போல் அதிக மழை பொழியும் போது தான் இதை பற்றி எல்லாம் சிந்திக்கிறோம். நம் வீடுகளில் முன்பிருந்த கிணற்றடிகளும் தோட்டங்களும் மாயமாகிவிட்டன. நம் வீட்டு கிணற்றில் ஊற்றுக் கண்ணாக வேண்டிய மழை நீரை, கூவத்தில் கலந்து கடலுக்குள் வீணாக்கிய பாவம் நம்மையும் தான் சேரும். மழை நீரை சேமித்து, கிணற்றுக்கு ஊற்று குடுக்க வேண்டிய மண் தரையை, சிமெண்ட் தரை போட்டு மூடியாகி விட்டது, கிணற்றை முழுக்க மூடி சாந்தி செய்தாகி விட்டது. இப்போது அரசுக்கு எதிராய் ஒப்பாரி வைத்து என்ன நடக்கப் போகிறது. வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப் பட்ட பொழுது, எத்தனை பேர் முறையாக செய்தோம் இப்போது அரசை தூற்ற. மழை நீர் சேகரிப்பை முறையாக செய்தவர்களை தவிர அரசை தூற்றும் அனைவரது எச்சிலும் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து துப்பிய கதைதான்!!

Friday, 13 November 2015

நீர் மேலாண்மை என்பது ஒரு வேளை மூட நம்பிக்கையோ??!


பெருந்தலைவருக்கு பிறகு வந்த திராவிடர்களுக்கு கடவுள் (இந்து கடவுளகள் மட்டும்!) நம்பிக்கை அற்று போனது போல் நீர் மேலான்மையிலும் ஏனோ நம்பிக்கை போய் விட்டது போலும்! நம் முன்னோர்கள் ஏதோ மூட நம்பிக்கையில் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள் என வெட்டியாக வெட்டி வைத்துள்ளனர் என கருதி இருக்கின்றனர்! நாங்களும் குளம், கண்மாய் வெட்ட மாட்டோம், இருப்பதையும் அழிக்காமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டிக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர்!  இதற்கு மதுரையே மிகப் பெரிய உதாரணம்.

மழை பெய்யாவிட்டால் மழை இல்லாததால் வறட்சி என்றும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும் நமக்கு சகஜமாகி விட்டது. நீர் நிலைகள் குறித்த விழிப்புணர்வோ, அறிவோ, கல்வியோ நமக்கு வராத அளவிற்கு தெளிவாக் பார்த்துக் கொண்டுள்ளன தீராவிட அரசுகள். இருக்கும் நீர்நிலைகளை பராமரித்திருந்தாலே இன்று கர்னாடகத்திடமும், கேரளத்திடமும் கெஞ்சிக் கொண்டோ, வழக்காடிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை! அதை விட்டு விட்டு காமராஜர் விட்டுக் குடுத்தார், நட்டு குடுத்தார் என்று தவறாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன தீராவிட விச வித்துக்கள். ஒரு வேளை எனக்குதான் புத்தி குறைவா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

மதுரையில் மட்டும் கடந்த நாற்பது வருடங்களில் நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள கீழே படியுங்கள்.

1. வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.
2. அனுப்பானடி சின்ன கண்மாய்
3. சிந்தாமணி கண்மாய்
4. தூளிபத்திக் கண்மாய்
5. ஐவத்தான் கண்மாய்
6. அயன் பாப்ப்குடி கண்மாய் (மேல் கண்ட ஐந்துமே கழிவு நீர் தேக்கமாக உள்ளன.)
7. அவனியாபுரம் கண்மாய் ( திடக் கழிவு கிடங்காக உள்ளது.)
8. சிலையனேறிக் கண்மாய்
9. ஆனையூர்க் கண்மாய்
10. தத்தனேரி கண்மாய்
11. வில்லாபுரம் கண்மாய்
12. ஆ.கோசாக்குளம் கண்மாய் (மேற் கூறிய ஐந்து கண்மாய்களும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன .)
13. வண்டியூர் கண்மாய் (மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட் மற்றும் எஞ்சிய பகுதியும் குற்றுயிரும் குலையுமாக நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
14. செல்லூர் கண்மாய் (தென்னக இரயில்வே மற்றும் ஒரு பகுதி குடிசைகளும் உள்ளன. எஞ்சியுள்ள பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
15. பீ.பி குளம் கண்மாய் (வருமான வரி அலுவலகம், சுங்கத்துறை மற்றும் அஞ்சல் அலுவலகமாக உள்ளன. எஞ்சியுள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது.)
16. சொரிக்குளம் கண்மாய் (வானொலி நிலையம் மற்றும் அலுவலர் குடியிருப்பு, அரசு அலுவலர் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவை உள்ளன.)
17. தல்லாக்குளம் கண்மாய் (மதுரை மாநகராட்சி அலுவலகம், சட்டக்கல்லூரி, வணிகவரி அலுவலகம். எஞ்சியுள்ள இடத்தில் தமிழ் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.)
18. மானகிரிக் கண்மாய் (வக்பு வாரிய கல்லூரி மற்றும் அதன் விடுதி கட்டிடம்.)
19. செங்குளம் கண்மாய் ( மாவட்ட நீதிமன்றம்.)
20. உலகனேறிக் கண்மாய் ( உயர் நீதிமன்றம்.)
21. புதுக்குளம் கண்மாய் (செய்தியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகள் உள்ளன.)
22. கோச்சடை கண்மாய் (வீடுகட்டவும், செங்கல்லுக்காவும் மண் தோண்டப்பட்டு ஆழமாக உள்ளது. அறிவிக்கப் படாத குப்பைக் கிடங்காகவும் உள்ளது)
23. புதூர் கண்மாய் (மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.)
24. நாராயணபுரம் கண்மாய்
25. முடக்கத்தான் கண்மாய் (குடியிருப்புகளின் கழிவு நீர் இக்கண்மாய்களில் கலக்கிறது.)
26. ஆத்திக்குளம் கண்மாய் ( கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.)
27. அனுப்பானடி பெரிய கண்மாய்
28. விரகனூர் கண்மாய்
29. ஐராவதநல்லூர் கண்மாய் ( இவைகளின் பெரும் பகுதி குடியிருப்புகளாகும், எஞ்சியுள்ள பகுதிகள் கழிவு நீர் தேக்கமாகவும் உள்ளது.)
30. சம்பக்குளம் கண்மாய் (வடிவேலு நகைச்சுவை போல் இந்த கண்மாயையே காணவில்லை)
31. மாடக்குளம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)
32. திருப்பரங்குன்றம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)

இவற்றில் பெரும்பாலான் கண்மாய்கள் 1980கள் வரை ஒன்றோடொன்று தொடர்புடன் வடிகால்கள் நிறைந்த கண்மாய்களாகவும் என் பள்ளிபிராயத்தில் பார்த்திருக்கிறேன். இந்த காலத்து பிள்ளைகளுக்கு கண்மாய்கள் என்றால் காட்டுவதற்கு வண்டியூர் கண்மாய் மட்டுமே மாட்டுதாவனி பேருந்து நிலையம், பூ சந்தை என உள்ளாட்சி நிர்வாகமே ஆக்கிரமித்தது போக குற்றுயிருக் குலையுமாக உள்ளது! இதுவல்லாமல் என் கவணித்திற்கு வராமல் போன கண்மாய்கள் எத்தனையோ? என் தந்தை இன்றிருந்தால் கேட்டிருக்கலாம்!!

இது போக எனக்கறிய காணாமல் போன தெப்பக்குளங்களும் உள்ளன!

1. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் (ஞாயிற்று கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. தெப்பகுளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்த தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பகுளம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது)
2. எழுகடல் தெப்பக்குளம் (இங்கு தெப்பக்குளம் இருந்தது யாருக்குமே தெரியாது. எழுகடல் தெரு மட்டுமே உள்ளது!)
3. கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்.
4.  இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெப்பக்குளம்
5. பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தெப்பக்குளம்
6. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் (தற்போதைய மதுரையின் பிரதான கிரிக்கெட் மைதானம்!)
7. பொற்றாமரைக்குளம் (இதில் இப்போது காண்கிரீட் தரை போட்டாகிவிட்டது)

இவற்றிலும் நிறைய விடுதல் ஆகியிருக்கலாம்!

அப்புறம் கிருதுமால் நதி. இப்படி ஒரு நதி இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதை நதியென்று கூறினாலும் உலகமே சிரிக்கும். இதுதான் தற்போதைய மதுரையின் பிரதான கழிவுநீர் கால்வாய்!!
இவ்வலவு நீர்நிலைகள் மதுரையில் இருப்பதோ அல்லது இருந்ததோ கூட அடுத்த தலைமுறை என்ன நம் தலைமுறைக்கே தெரியாமல் இருக்கலாம். இவ்வளவு நீர்நிலைகளை கட்டி அவற்றை பராமரித்து வந்த நம் முன்னோர்கள் கன்டிப்பாக் முட்டாள்கள் இல்லை.

எவ்வளவு நீர் செல்வங்களை நாம் இழந்து வருகிறோம், இழந்திருக்கிறோம் என்பதை இந்த பட்டியல்களை பார்த்த பிறகாது நாம் உணர்வோமா? இப்பொழுது சுதாரித்தால் கூட பத்து, இருபது கண்மாய்களை காப்பாற்றலாம்.

செய்வோமா?
நாம் செய்வோமா?
நாம் செய்வோமா??