Friday, 14 August 2015

காலத்தால் கரைந்து போன "கல்லா மண்ணா?"

பாழாய் போன கிரிக்கட்டாலும் இன்னபிற மேற்கத்திய விளையாட்டுக்களாலும் கரைந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல உண்டு அவற்றில் கபடி, கில்லி தாண்டு, குதிரை தாண்டு, பம்பரம், சில்லாக்கு, கோலி குண்டு என்று வரும் வரிசையில் நானே மறந்து போன விளையாட்டு ஒன்று உண்டு. அதன் பெயர் "கல்லா மண்ணா?"! விருதுநகரில் எங்கள் சிறுவர் பருவத்தில் பெரும்பாலான வீடுகளில் கண்டிப்பாக பெரிய திண்ணைகள் உண்டு, வீடுகளும் மிக விஸ்தாரமாக இருக்கும். தலைவாசல் ஒரு தெருவிலும், கொல்லைப்புற (பின்புற) வாசல் இன்னொரு தெருவிலும் இருக்கும். பெரும்பாலும் ஒரு தெருவில் ஒரே வகையறாக்கள் எனப்படும் பங்காளிகளே இருப்பர். எனது பெயரில் இருக்கும் "தோலாண்டி" என்பதும் ஒரு வகையறா எனப்படும் விருதுநகர் நாடார் குடும்பப் பெயரே. தோலாண்டிகள் அனைவரும் பங்காளிகள். இவர்களைப் போல் ஒரே வகையறாக்களுக்குள் பெண் எடுத்தல் குடுத்தல் இருக்காது. ஒரு வகையறாக்கள் அனைவரும் ஒரு குலசாமி கும்பிடுவர். அனைவருக்கும் மூதாதையர் ஒருவராக இருப்பார்! தலைப்பை விட்டு வெகுதூரம் செல்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்வதில் என் பள்ளிப் பருவம் திரும்பியது போன்ற ஒரு மகிழ்ச்சி, அதனால் தொடர்கிறேன்!

ஒரு தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் அங்காளி பங்காளிகள் என்பதால் விடுமுறை காலங்களில் அவரவர் வீட்டு பேரப் பிள்ளைகளால் அந்தந்த வீதிகள் அல்லோலப்படும். யார் வீட்டு பேரன் எவர் வீட்டில் விளையாடுகிறார், எவர் வீட்டில் உண்கிறார் என்ற கணக்கெல்லாம் கிடையாது! இவர் வீட்டு பிள்ளையை இவர்தான் கண்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அதனால் தான் சின்ன தாத்தா, பெரிய தாத்தா என அனைவர் வீட்டு பேரப்பிள்ளைகளும் ஒன்றாக விளையாட முடிந்தது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் இன்று போல் கிடையாது! ஆண் பிள்ளைகள் விடுமுறை தினங்களில் வீடு தங்கினாலே "ஆம்புள பயலுக்கு பொட்டைப் பிள்ள மாதிரி வீட்ல என்னடா வேலை?" என்று திட்டி வெளியில் பத்தி விடுவார்கள்! சாபாட்டு நேரத்துக்கு வீடு வந்தால் போதும்! வீதிகளும், வீட்டு படிகளும் பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் பெரிய செவ்வக வடிவ கற்கலாலேயே வேயப்பட்டிருக்கும்! அதிலும் சந்துக்கள் ஒரு கார் போகுமளவுக்கு குறுகலாகவே இருக்கும். பெருமாபாலான சந்துக்கலில் கார் உள்ளே புகாத அளவுக்கு குத்துக்கல் நட்டிருப்பர். கார் அல்லது வேறு பெரிய வண்டிப் போக்குவரத்து இல்லாததால் அந்த சந்துக்களில் விளையாட்டுக்களுக்கு பஞ்சமிருக்காது. அதில் முக்கியமானது "கல்லா மண்ணா?" இந்த விளையாட்டு ஊர் ஊருக்கு வேறு விதங்களில் இடங்களின் சூழல் பொருத்து விளையாடப் பட்டிருக்கும்!

முதலில் "சாட் பூட் திரி!" போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவரே அனைவரையும் அவுட் ஆக்க வேண்டியவர். படிகள் "கல்" எனவும் தெருவே "மண்" எனவும் உருவகப் படுத்தப் பட்டுவிடும்! பெரும்பாலும் அவர் மண் என கருதப்படும் தெருவில் நின்று கொள்வார். மற்றவர் அனைவரும் படிகளில் நின்று கொள்வர். தெருவில் இறங்கும் எவரும் அவரால் தொடப்பட்டால் "அவுட்' என கருதப்படுவர். பின்னர் அவர் மண்ணில் நிற்பார், கல்லிலிருந்து மண்ணுக்கு வருபவர்களை பிடிக்கும் பொறுப்பு அவரது. வீதியில் இறங்கினால் பிடிபடுவோம் என தெரிந்தே நாம் நிற்கும் படிக்கட்டிலிருந்து எதிர் வீட்டு படிக்கட்டுக்கு ஓடுவதே இதில் உள்ள திரில்! படிகளை தாண்டாவிட்டால் நாம் அவுட் ஆகப்போவதில்லை என்றாலும் அவற்றை தான்டி மன்ணில் நிற்பவரை நம்மை பிடிக்க தூண்ட வேன்டும் என்ற ஆவலும் ஆர்வமுமே நம்மை விளையாடத் தூண்டும்! இந்த விளையாட்டு பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் கருங்கல் மீதான் விளையாட்டு என்பதால் கீழே விழும்போது மண்டை பிளப்பதும், பல் உடைவதும் சகஜமாகும்! கடும் வெயிலிலும், வெயிலின் தாக்கம் அறியாமல் ஆடுவோம். மழை பெய்தால் கூடுதல் ஆனந்தமே. இப்பொழுது போல் வெயிலில் ஆடக்கூடாது, மழையில் ஆடக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத காலம்.

தங்கை பிள்ளைகளை அக்கா திட்டுவதும், அக்கா பிள்ளைகளை தங்கச்சி திட்டுவதும் பெரிதாக்கப் படாத காலம்! அதே போல் அண்ணன் பிள்ளைகளை தம்பி கண்டிக்கலாம், தம்பி பிள்ளைகளை அண்ணன் கண்டிக்கலாம். தன்டனைகள் பெரும்பாலும் தீய பழக்கவழக்கங்களை கண்டிப்பதற்காக இருக்குமே ஒழிய படிப்பு சம்பந்தமாக இருக்காது. படிப்பை விட ஒழுக்கம் மட்டுமே பெரிதாக வீட்டிலும் பள்ளிகளிலும் கருதப்பட்ட காலமது! மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் "கல்லா மண்ணா!" போன்ற மண்ணோடு இணைந்த விளையாட்டுக்கள் எப்படி கல்லறைக்கு போனதோ, அதே போல் நல்ல பழக்க வழக்கங்களும் மண்ணுக்கு போய்க் கொண்டிருக்கின்றன! ஓடி விளையாண்ட காலம் மலையேறிப் போய், ஜிம்மில் ஒடும் காலக்கட்டதில் வாழ்கிறோம்.

இந்த தலைமுறை மண்ணுடன் தொடர்பறுந்து போய் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் விண்ணில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றது! கல்லா மண்ணா விளையாட அன்று எதிரெதிர் வீட்டில் இருந்த படிக்கட்டுகளும், உறவுகளும் கூட தொலைதூரம் விலகிப் போய்விட்டன!! கணினியில் நம் சந்ததியினர் 'கேண்டி கிரஷ்" விளையாட ஆரம்பித்து விட்டனர். மிகப் பெரிய பேரிழப்பை நாம் இந்த தலைமுறைக்கு கொடுத்திருக்கிறோம்!! மலரும் நினைவுகள் தந்த ஆனந்தத்துடன், இந்த தலைமுறையின் இழப்புக்கள் தரும் வருத்தத்துடன்!!!

Wednesday, 12 August 2015

பெருந்தலைவர்-காவியத் தலைவர்

நினைத்தாலே பிரமிப்பாகத் தான் இருக்கிறது - கர்மவீரர் காமராஜரைக் குறித்து! 

தன்னைத் தானே கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்த மனிதன் இந்த நாட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு காமராஜர் தான்!

பற்றுகள் இல்லாமல் அவர் வாழ்ந்த பத்திய வாழ்வு தான் அவரை பெருந்தலைவராக்கியது. இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு பொற்கால ஆட்சியை சாத்தியமாக்கிற்று.

பதவிகள் இருந்தும் பற்றற்று வாழ்வது துறவிலும் உன்னத துறவாகும்! 

அதிகார பலங்கள் அபரிமிதமாய் வாய்த்திருந்த போதிலும் ஆத்மபலத்தை மட்டுமே பயன்படுத்தி வாழ்வதற்கு பெரிதும் பக்குவம் தேவை.

அவர் காந்திய யுகத்தால் கட்டமைக்கப்பட்ட தலைவரல்லவா...?

மெத்தப்படித்த மேதாவியான பண்டித ஜவஹர்லால்நேருவே காமராஜரின் யோசனைகளை கேட்டுப் பெற்றார் என்றால், சமூகத்தை படித்ததில், மனிதர்களை மதிப்பீடு செய்வதில், பட்டறிவில், அனுபவஞானத்தில் காமராஜர் ஓர் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார் என்பதுவன்றோ உண்மை!

வாராது போல் வந்த மாமணியாய் தமிழகத்தின் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்று அவர் ஆட்சி செய்த ஒன்பதே ஆண்டுகளில் ஒப்பற்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்.

அந்த காலகட்டத்தில் தமிழகம் கல்வி எனும் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பெற்றது. தமிழகத்தை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நீராதாரத்திட்டங்களான பல அணைகள் கட்டப்பட்டன. வைகை. மணிமுத்தாறு, கீழ்பவானி, அமாரவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, நொய்யாறு, ஆழியாறு... என்ற அணைகள் தான் இன்று தமிழகத்தை வாழவைத்துக் கொண்டுள்ளன, அவர் காலத்திற்குப் பின் இது போன்ற அணைகள் ஏன் உருவாக்கப்படவில்லை?

சில நூறு கோடிகளே அரசு வருவாயிருந்த ஒரு காலகட்டத்தில் நிகழ்த்த முடிந்த சாதனைகளை இன்று ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வரிவருவாய் பெறுகின்ற அரசுகளால் நிகழ்த்த முடியவில்லை.

குறைந்த பட்சம் ஏரி குளங்களைக் கூட தூர்வாறத் துப்பற்ற நிலைமைகளையே காண்கிறோம் - இத்தனைக்கும் ஆண்டுக்காண்டு ஏரி குளங்களைத் தூர்வாற பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டும் பலன் காண இயலவில்லை!

இது மட்டுமா? என்.எல்.சி உள்ளிட்ட எத்தனையெத்தனை மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன... அதற்கு பின் வந்தவர்களால் ஏன் முடியவில்லை?

பெரம்பூரில் ரயில்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை, மணலியில் ஆயில்சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் போட்டோபிலிம் தொழிற்சாலை... போன்றவை லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த திட்டங்களல்லவா?

இவ்வளவு சிறந்த நல்லாட்சியை தந்து கொண்டிருந்தவர் தானே விரும்பியல்லவா பதவியைத் துறந்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் பலர் அதிகார போதையில் சிற்சில தவறுகளை செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், காங்கிரசின் நற்பெயருக்கு ஒரு களங்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது எனத் தெரியவந்தவுடனேயே காமராஜர் அவர்கள் அகில இந்திய அளவில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் துறந்து களப்பணிகளில் ஈடுபட முன்வரவேண்டும். அதன் மூலம் மட்டுமே மீண்டும் மக்களிடம் நம் நற்பெயரை மீட்டெடுத்து தக்க வைக்க முடியும் என்றார்.

இது சாதாரணத்திட்டமா? அதிகாரத்தை துறப்பது என்பது எவ்வளவு சிரமமானது. கர்நாடகத்தில் எடியூரப்பாவை பதவி இறங்க வைக்க பா.ஜ.க மேலிடம் எவ்வளவு பகிரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் காமராஜரோ ஏதோ செருப்பை கழட்டுவதை போல தன் பதவியை மிக இயல்பாகத் துறந்தார். அது அகில இந்தியாவின் அனைத்து முன்னணி தலைவர்களின் மனசாட்சியையும் உலுக்கியது.

காமராஜர் செயலின் எதிர்வினையாக ஒரிசா முதல்வர் பி.ஜூபட்நாயக், காஷ்மீர் முதல்வர் பக்ஷிகுலாம்முகமது, உத்தரபிரதேச முதல்வர் பி.ஏ.மண்டலாய் ஆகியோரும் முதலமைச்சர் பதவியைத் துறந்தனர். இதோடு முடியாமல் மத்திய அமைச்சர்களாயிருந்த மொரார்ஜிதேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம், பி.கோபால்ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகியோறும் பதவியைத்துறந்தனர்.

இறுதியாக பிரதமர் நேருவும் தன் பதவியை துற்க்க முன்வந்தபோது காமராஜர் அதனை உறுதியாகத் தடுத்துவிட்டார். 'அது இட்டுநிரப்பமுடியாத வெற்றிடம் எனவே நிச்சயம் நீங்கள் தொடரவேண்டும' என நேருவுக்கே கட்டளையிட்டார்.

உண்மையில், காமராஜர் இடத்தையும் அதற்குபின் இட்டு நிரப்பக்கூடிய யாரும் இல்லை என்பதே நிதர்சனமாயிருந்தது என்றாலும், அடுத்தவருக்கு அதிகாரம் செய்ய வழிவிட்டு கர்மமே கண்ணாய் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மகத்தான கர்மவீரர் காமராஜரே!

காமராஜர் ஓர் ஆபூர்வதலைவர். இனி இப்படியொரு தலைவன் கிடைக்க தமிழகம் நூறாண்டுகள் தவம் கிடக்க வேண்டுமோ? 

Thursday, 6 August 2015

பெருந்தலைவர் பதவியாலா முன்னுக்கு வந்தனர் சான்றோர்கள்?!

நாடார் சமுதாயம் முன்னுக்கு வந்தது காமராசர் பதவிக்கு வந்த பின்னர் தான் என்று சில சிறு பிள்ளைகள் வரலாறு தெரியாமலும், சிலர் தீராத வயித்தெரிச்சலாலும் முகநூலிலும் பிளாக்கிலும் புலம்பி தீர்க்கின்றனர் பாவம்! பொய்யை எத்தனை தடவை கூறினாலும் உண்மையாகப் போவதில்லை! பெருந்தலைவர் கல்வி கொடுத்துதான் நாடார் சமுதாயம் கற்க வேண்டும் என்ற நிலையில் நாடார் சமுதாயம் அன்று இல்லை. ஏனென்றால் காமராசர் கல்வி பயின்றதே விருதுநகர் இந்து நாடார் மகமைக்கு பாத்தியப்பட்ட விருதுநகர் சத்திரிய வித்தியா சாலையில் தான்! பெருந்தலைவர் உண்மையில் பாடுபட்டதே ஆடு மேயத்துக் கொண்டும், ஆடுகளை களவாடிக் கொண்டும், அரிவாள், வேல் கம்பு என வெட்டியாக சுற்றிக் கொண்டு திரிந்த மாற்று சமுதாய கல்வியறியாத பாவப்பட்ட மக்களுக்காகத்தான்!

ஆணடிப்பட்டி கணவாய் பகுதிகளில் திருட்டுக்களும், கொள்ளைகளும் அதிகம் நடக்கின்றன என கேள்விப் பட்டபோது அந்தப் பகுதியில் ஒரு அணையும் பள்ளியும் இருந்தால் போதும் என செயல் படுத்தியவர் பெருந்தலைவர். ஆண்டிப்பட்டியில் நாடார்களா பெரும்பான்மை? வரலாறு தெரியாதவர்கள் "கருவாச்சி காவியம்" படைத்த திரு,வைரமுத்து அவர்களிடமும், இயக்குனர் பாரதிராசாவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!! தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களையும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களையும் என்ன செய்வது? இருப்பினும் மேலும் சில ஆதாரங்களை கீழே கொடுக்கிறேன்! (ஏற்கனவே பல முறை சொல்லி ஓய்ந்து போயாகிவிட்டது!)

பெருந்தலைவர் அவனியிலே அவதரித்த நாள் 15-07-1903 இல். அவர் ஆட்சிக் கட்டிலில் அமரந்தது 1954 சித்திரை 1 இல்!

1885ல் விருதுநகரில் முதன் முதலாக விருதுநகர் நாடார் உறவின் முறையால் சத்திரிய வித்தியாசாலை பள்ளி உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட போதே ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப் பட்ட முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளி இதுவே ஆகும்.  இது நாடார் சங்கங்களின் முதல் பள்ளியுமாகும். இதில் கல்வி பயின்றவர்களே காமராசர், சௌந்திரபாண்டியன் நாடார் போன்றோர்.

ஆக காமராசர் பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு காமராசருக்கே கல்வி வழங்கிய பள்ளி இது!

1889ல் கமுதியில் சத்திரிய வித்தியாசாலை உருவாக்கப் பட்டது.

இதுவும் காமராசர் பிறப்பதற்கு முன்னரே தொடங்கப்பட்ட பள்ளியாகும்.

1909ல் திருமங்கலத்தில் சத்திரிய வித்தியாசாலை தொடங்கப்பட்டது.

இது பெருந்தலைவருக்கு 6 வயது இருக்கும் போது தொடங்கப்பட்டது!

1921ல் நாடார் வங்கி உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி"யானது!

அப்போது பெருந்தலைவருக்கு வயது 18! 51 வயதில்தான் அவர் முதல்வரானார்! 

நாடார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அன்று பெருந்தலைவர் அங்கு ஆற்றிய உரை இதோ:

நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இனைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம் என்றார்.

அவர் நினைத்தால் தன் சமுதாய மக்கள் நிரம்ப வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி ஓர் உரை ஆற்றாமல், அங்கு பிரத்யேகமாக முன்னேற்றப் பனிகளை முடுக்கி விட்டிருக்கலாம்! இப்படிப்பட்ட நேர்மையான மனிதரா நாடார்களுக்கென்று பிரத்தியேகமாக உதவினார் என புலம்பித் தீர்க்கிறீர்கள்! இதற்கு மேலும் நீங்கள் புலம்பினால், முட்டாள்களுக்கு பாடம் எடுக்க என்னால் முடியாது. நேரமும் கிடையாது!!

Monday, 3 August 2015

தாயைத் துறந்த தனையன் - அரசியல் துறவி

பூர்ணா நதியில் குளித்துக்கொண்டு இருந்தான் அந்தச் சிறுவன். கரையில் அவனைப் பெற்ற தாய் ஆர்யா காத்துக்கொண்டு நின்றாள். உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த அவனை, முதலை ஒன்று பற்றி இழுத்தது. மெல்ல ஆற்றுக்குள் மூழ்கினான். கரையில் நின்று ஆர்யா கதறினாள். அவன் சொன்னான் “ சந்நியாசம் என்பது இன்னொரு பிறவி. எனக்கு துறவு நிலை தந்தால், இந்த முதலை என்னை விட்டுவிடும். குருகுலத்தில் எனக்குச் சொன்னார்கள்” என்றான். பிள்ளைப்பாசத்தில் “தந்தேன்” என்றாள். சாமான்ய சங்கரன், ஜெகத்குரு ஆதிசங்கரராக அவதரித்தார். முதலை காலை உமிழ, வெளிவந்த சங்கரனைக் கட்டிப்பிடித்தாள் ஆர்யா. விலக்கிவிட்டு மெல்ல வேறுதிசை நடந்தார் ஆதிசங்கரர்!

“என்ன கொண்டுவந்திருக்கிறான் இவன்?. அத்தனையும் உமி மூட்டைகள், இந்த தொழிலைத்தான் படித்தானா இத்தனைக் காலமாக?”, மகன் வெளிநாட்டு வியாபாரத்துக்கு சென்று கொண்டுவந்திருந்த பொருட்களை பார்த்துக்கொண்டே, கோபத்தில் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார் சுவேதாரண்யச்செட்டியார். வாய்பிளந்த மூட்டையில் இருந்து வைரமும், வைடூரியமும் கொட்டியது. விரிந்த கண்களும், மருங்கிய மனமுமாக மகனைத் தேடினார் செட்டியார். “எங்கே மருதவாணன்?, என் ஆசை மகன், ஆத்தா.... உன் பேரனை பார்த்தாயா, அப்பனை விஞ்சி விட்டான் தொழிலில், அத்தனையும் மின்னும் பொற்குவியல், எனக்கு உடனே அவனைக் கட்டித்தழுவ வேண்டும் போலிருக்கிறது ஆத்தா... எங்கே அவன்?”. ஞானக்கலை மெல்ல சொன்னாள், இந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, “அப்பச்சி கேட்டால் நான் போய்விட்டேன் என்று சொல், என்று சொல்லிவிட்டு போய்விட்டான்” என்றாள். ஏற்கனவே அவன் கொண்டு வந்த பொருளில் மிரண்டு போயிருந்த திருவெண்காடர், இன்னொரு அதிசயத்துக்கு ஏங்கும் மனதுடன் அதைத் திறந்தார். உள்ளே ஒரு காதறுந்த ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தது.காதற்ற ஊசியும் வாராதுகாண்  கடைவழிக்கே  என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. இந்த ஒற்றைச்சொல் உண்டாக்கிய மயக்கத்தில், காவேரிப்பூம்பட்டினத்தின் கணக்கற்ற சொத்துக்களை, விட்டுவிட்டு கோவணாண்டியாக வீட்டைவிட்டு புறப்பட்டது ஒரு ஞானப்பிழம்பு. அவர்பெயர்தான் பட்டினத்தார்.

உலகம் போற்றும் இந்த இரண்டு துறவிகளும், துறக்காத ஓர் உறவு உண்டு. அதுதான் தாய் எனும் உறவு. மரணம் நெருங்கும் தருவாயில், சங்கரா.... என்று ஆர்யாம்பாளும், சுவேதாரண்யா... என்று ஞானகலையாச்சியும் ஈனஸ்வரத்தில் முனங்கிய ஒலி, எத்தனையோ யோசனை தூரத்தில் இருந்த இருவருக்கும் கேட்டு, கால் நடக்கவும், மனம் பறக்கவும், காலடிக்கும், புகாருக்குமாக வந்துசேர்ந்தார்கள். துறவிகள் செய்யக்கூடாத ஈமக்கிரியைச் சடங்குகளை அன்றைக்குச்  செய்தார்கள். அப்போது சங்கரர் புலம்பிய மாத்ருகாபஞ்சகம் கல்நெஞ்சையும் கரைக்கும். அன்னையின் சிதையைத் தீக்குத் தந்துவிட்டு, அதன் முன்னின்று பட்டினத்தார் அழுது தீர்த்த அருட்புலம்பல் உள்ளத்தை உருக்கும். இவ்விருவரும் துறவிகள். உலகின்பம் அத்தனையையும் துறந்த துறவிகள்கூட, துறக்கமுடியாமல் நின்ற உறவு தாயின் உறவு. 

அந்த தாயையே துறந்துநின்ற ஒரு தவமுனிவனைத் தெரியுமா உங்களுக்கு?. அவருக்கு பெயர்தான் காமராசர். தள்ளாதவயதில் விருதுப்பட்டி வீட்டின் ஒரு மூலையில் துவண்டு போய்க்கிடக்கிறார் சிவகாமி அம்மாள். நாட்டை ஆளும் அரசரைப் பெற்ற தாய். “ஏம்பா மெட்ராசுல நீ இருக்க வீட்டுல, ஒரு ஓரத்தில ஒதுங்கிக் கிடந்துக்குவனே....என்னிய கூட்டிட்டுப் போயேன் காமராசு”. பொக்கை வாய்திறந்து புலம்பிய தாய்க்கு பதிலேதும் சொல்லாமல், வாகனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்கிறார். முருகதனுஷ்கோடி சொல்கிறார் “ பெரியவரே....அம்மா பாவந்தான....”. யார் என்ன சொல்லத் தொடங்கினாலும், முதலடியிலேயே அவர்கள் சொல்ல வந்த பொருளைப் புரிந்துகொள்ளும் அறிவு அந்த மாமேதைக்கு இருந்தது. விழிகளில் நீர் அரும்ப அந்த அரசியல்துறவி சொன்னார் “ எனக்கு மட்டும் என்ன பாசம் இல்லாமலா இருக்குன்னேன்... என்ன பண்ணட்டும்....அத்தைய பாக்க வாறேன், சித்திய பாக்க வாறேன்னு வரிசையா வந்து நிப்பான்னேன்.....அதுல எவனாவது ஒருத்தன் நம்ம வூட்டு போன எடுத்து நான் முதலமைச்சர் வூட்டுல இருந்து பேசுறேன் னு சொன்ன அன்னைக்கி, என் அத்தனை நேர்மையும் அடவுக்கு போயிருமா இல்லையான்னேன்.... இங்கேயே  இருக்கட்டும்..அப்பப்ப வந்து பாப்போம்னேன்....”. 

என் எழுத்துக்களில் இதை படிக்கும் போதே என் கண்கள் பணிக்கின்றன! இனி எங்கே காண்பேன் நாட்டுக்காக தாயை துறந்த இப்படி ஓர் அரசியல் துறவியை. உங்களையும் தோற்கடித்த எங்களை சும்மா விடுமா தமிழ்த்தாயின் சாபம்! அதனால்தான் நீங்கள் கல்வியாளர்களாய் பார்க்க நினைத்த சமூகம் சாராயக் கடையில் முடங்கி கிடக்கிறதோ?!

தள்ளுபடியாகிப் போன ஆடி!


``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...

சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம் தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல்.

ஆனால் இப்போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப் பெருக்கை நினைவூட்டுகின்றன.

ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. விவசாயிகள் காவேரி அன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந் நாளின் சிறப்பம்சங்களாகும்.

நமக்கு சிறு வயதில் ஆணந்தத்தையும் குதூகலத்தையும் குடுத்த இத்தகைய திருவிழாக்கள், இன்று வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக் கொண்டிருக்கின்றன.

.

.
ஆடிப்பெருக்கு என்றாலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் சித்தி மகள் நேற்று என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு அண்ணிக்கு நீங்க என்ன வாங்க போறீங்க அண்ணா.?’’ என்றாா். 

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை 

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு 

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.

காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப் பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

ஆடிப்பெருக்கும் வறண்ட காவிரியும்!

''சோழர்கள் ஆட்சிக் காலத் தில், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது குறித்து, குறிப்புகளோ ஆவணங்களோ கிடைக்கவில்லை. ஆனால், அதையடுத்து மராட்டியர்கள் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், இந்த விழா கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஷாஜி ராஜா என்பவரின் காலத்தில், ஆடிப்பெருக்கு விழாவை 'காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடினார்களாம்.

ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தை செழிக்கச் செய்வதையே கடமையாகக் கொண்டு, ஓடி வந்து சேவை செய்துகொண்டிருக்கிறது காவிரி எனும் புண்ணிய நதி. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு ஏற்ப, தன்னைப் பூக்களாலும் வளையல்களாலும் கனிகளாலும் சித்ரான்னங்களாலும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் குளிர்வித்து மகிழ்கிற தம்பதியை, அந்தக் காவிரித்தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள். மாறாக, அந்தத் தம்பதியின் இல்லத்தை சுபிட்சமாக்குகிறாள். சந்ததியைப் பெருக்கி அருள்கிறாள். தனம் - தானியம் என சகல செல்வங்களையும் தந்து, காத்தருள்கிறாள்.  

''ஆனால், காவிரியை நாம் காக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றார்கள். மிகச் சிறிய அளவில் சாதாரண மணல் திருட்டாக இருந்த அது, இப்போது பிரமாண்ட மணல்கொள்ளையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. லாரி லாரியாக மணல் கொள்ளை நடந்துகொண்டே இருக்கிறது. சீராக, நேராக, துள்ளித் திரியும் அழகிய பெண்ணைப் போல் காட்சி அளித்த காவிரிப்பெண், இப்போது பற்கள் விழுந்து, கன்னம் ஒட்டி, தோல் சுருங்கிப் போன கிழவியெனக் காட்சி தருகிறாள்.  

சமீப காலங்களில், ஆடி பிறந்ததுமே, ஆடிப்பெருக்கு நாளிலாவது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவார்களா... திறந்துவிடவேண்டுமே என்கிற பிரார்த்தனை உள்ளே ஓடத் தொடங்குகிறது. இந்த வருடம் காவிரித்தாய் அருள் பாலித்தாள். ஒரு வழியாக 6000 கண அடி திறக்கப்பட்டு தருச்சி வந்தடைந்தாள்! ஒருவேளை தண்ணீர் திறந்துவிடாமல் போனால், வெறும் மணல் நதியாக, குண்டும் குழியுமாக இருக்கிற இடங்களுக்கு மக்கள் சென்று, ஆங்காங்கே குழி தோண்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஊற்று போல் வரும் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, ஏதோ பேருக்கு படையலைப் போட்டுவிட்டுச் செல்கிற அவலமும் நிகழ்கிறது.

'இங்கேதான் நான் குதித்தாடிய குளம் இருந்தது’, 'இதோ... இந்த தோப்பில்தான் விளையாடினேன்’, 'ஊஞ்சல் கட்டி விளையாடிய மரங்கள் இங்குதான் இருந்தன’... என்பது போல, 'இதோ... இந்த இடத்தில்தான் காவிரி நதி ஓடியது ஒருகாலத்தில்’ என்று சொல்லும் கொடுமை நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் கலவரமும் அடிவயிற்றைப் பிசைகின்றன.

கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்கிப் பயனென்ன? மணலைக் கொள்ளையடித்து, தண்ணீரை மாசுபடுத்தி, நதியைக் குலைத்து வறட்சியாக்கி விட்டு, நாம் வாழ்வது எப்படிச் சாத்தியம்?

நீரின்றி அமையாது உலகு! 

காவிரியைக் காப்போம். ஆடிப்பெருக்கை இன்னும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். எல்லா நதிகளையும் போற்றுவோம். ஒரே நதியாக இணைத்து, ஆடிப்பெருக்கை அகிலம் முழுவதும் கொண்டாடிக் குதூகலிப்போம்!

Sunday, 2 August 2015

பெருந்தலைவரும் - சினமும்!

பெருந்தலைவர் பொறுமையானவர்தான் ஆனால் கையாலாகாதவர்களை அவர் என்றும் ஊக்குவித்ததில்லை. தங்கள் கடமை அறியாது பணிபுரியும் அரசியல்வாதிகளிடமோ அல்லது அதிகாரிகளிடமோஆவர் காட்டம் காட்ட சிறிதும் தயங்கியதில்லை. படிக்காத மேதை என்கிறோம் ஆனால் அவர் பேச்சுக்கள் எதிலும் அவர் படிக்காதவர் என்பதை உணர முடியாது! அவர் கூறியது போல் புத்தகத்தில் படித்தது தான் கல்வியென்றால் அவர் கல்லாதவரே, ஆனால் உலக அனுபவமே கல்வியென்றால் அவர் மேதையே!
 காமராஜருடைய ஆட்சியில் விருதுநகர் பகுதியில் ஒரு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. திட்ட விளக்கம் மற்றும் மதிப்பீடுகளைச் செய்யும் பொறுப்பு பொ ப து பொறியாளாரான தேவநாதன் உட்பட மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாலம் கட்டப்பட வேண்டிய இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தின் மண் தன்மை மற்றும் பாலத்தின் மேல் செல்லக் கூடிய வாகனங்களின் நிறை மற்றும்
எண்ணிக்கைய கணக்கில் எடுத்து அந்த இடத்தில் பாலங்கட்டினால் அது தாக்குப்பிடிக்காது என்றும் வெள்ளம் அதிகரிக்கும் போது பாலச்சுவர்கள் அரிக்கப்பட்டு பாலம் இடிந்துவிடும் என்றும் காமராஜரிடம் சொன்னார்கள்.
அதுக்கு காமராஜர், “பாலங்கட்ட முடியாதுன்னு சொல்ல எதுக்கு எஞ்சினியர்ன்னேன். மணல் பகுதியில பாலங்கட்டினா வெள்ளம் வந்தா அரிக்கும் இடிஞ்சு விழும்னு படிக்காத எனக்கே தெரியும்ன்னேன். இதை சொல்லுறதுக்கா எஞ்சினியர் படிப்பு படிச்சிங்கன்னேன்? என்னைப் போல படிக்காதவங்க முடியாதுன்னு நினைக்கிறத உங்க படிப்பை பயன்படுத்தி முடிச்சுக்காட்டணும்னேன். ”
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த இடத்தில் பாலங்கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்கலன்னா வேலையை விட்டு அனுப்பிவிடுவேன்னேன்” என்று காலக் கெடு வைத்தார்.
பின்னர் தேவநாதன் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டு பாலம் கட்டி முடிக்கப் பட்டது! எகிப்து நைல் நைதியின் கிளையின் குறுக்கே கட்டிய பாலத்தின் அடிப்படையில் இந்தப் பாலம் கட்ட திட்டம் தீட்டப் பட்டது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.