Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, 5 October 2015

சமூக சீரழிவிறகு வித்திட்ட இமயங்கள்...

நான்கைந்து தினங்களுக்கு முன் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்யில் இளையராஜா பாடல்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது! பாலுமகேந்திரா அவர்களின் வண்ண பூக்கள் படத்திலிருந்தும், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்தும் அடுத்தடுத்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன! யாதார்த்தம் என்ற பெயரிலும், சமூக விழிப்புணர்வு என்றும், தங்களை அறிவு ஜீவிகள் என்ற அளவிலும் சினிமாவை இவர்கள் எந்த அளவு சீரழித்திருக்கிறார்கள்? வண்ண வண்ண பூக்கள் பாடலில் விநோதினி ஆண்கள் அணியும் மேல்சட்டை அணிந்திருந்தார், கீழாடையே கிடையாது! சத்தியமாக இடுப்புக்கு கொஞ்சம் கீழே வரைதான் சட்டையே, அதற்கு கீழே ஒன்றுமில்லை! அடுத்து அலைகள் ஓய்வதில்லை பாடலில் கார்த்திக்கும், ராதாவும் பள்ளிப் பருவத்தில் காம ரசம் சொட்ட சொட்ட விரசமாக பாடிக் கொண்டிருந்தனர்!

யதார்த்தம் என்ற பெயரில் இவர்கள் படுக்கயறை காட்சிகளையும் காண்பித்து காசு பார்த்த புண்ணியவான்ளே! அந்த விசயத்தில் இவர்களின் முன்னோடி பாலசந்தர் அவர்கள்! அவரது பிரமிளா நடித்த அரங்கேற்றம் படம் நல்ல தியேட்டர்களில் சரிவர ஓடியதை விட பலான தியேட்டர்களிலேயே மிக அதிகமாக கல்லா கட்டியது!! தேசிய விருதகளை வென்ற மூன்றாம் பிறை படத்திலேயே யதார்த்தமான படுக்கயறை காட்சிகளை சிறப்பாக கொடுத்திருப்பார் பாலுமகேந்திரா! யாதா்த்தமென்ற பெயரில் விரச காட்சிகளை பதார்த்தமாக படைத்து சினிமாவை கெடுத்த புண்ணியவான்கள் இவர்கள் என்றால், பள்ளிககு செல்லும் பிள்ளைகளின் காதலே தெய்வீக காதல் என்ற கோட்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு சொன்னவர் பாரதிராஜா!! அது வரை கல்லூரியில் சுற்றிக் கொண்டிருந்த காதலை யதார்த்தமாக பள்ளிக்கு கொண்டு வந்த புதுமை புரட்சி இயக்குனர் இவர்!

உண்மையிலேயே மெல்லிய உணர்வுகளை புகுத்தி விரசமோ கவர்ச்சியோ இல்லாமல் இவர்கள் காலத்திலேயே படமெடுத்து காட்டியர் திரு.மகேந்திரன் அவர்கள். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் என அவர் படமனைத்துமே பொக்கிஷங்கள். அவரை திரையுலகமும், ரசிகர்களும் புறக்கணித்து, இந்த புரட்டு புரட்சியாளர்களை இமயத்திற்கு கொண்டு வந்ததுதான் யதார்த்தத்தின் உச்சம். நீளப் படஙகள் அனுமதிக்கப் பட்டிருந்தால், இந்த இமயங்களின் யதார்த்தமும் அவையாகவே இருந்திருக்கம்!!! அது சரி, அவைதான் யதார்த்தமான குடும்பப் படமாக இருந்திருக்கும்!!!

Monday, 3 August 2015

தள்ளுபடியாகிப் போன ஆடி!


``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...

சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம் தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல்.

ஆனால் இப்போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப் பெருக்கை நினைவூட்டுகின்றன.

ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது. விவசாயிகள் காவேரி அன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந் நாளின் சிறப்பம்சங்களாகும்.

நமக்கு சிறு வயதில் ஆணந்தத்தையும் குதூகலத்தையும் குடுத்த இத்தகைய திருவிழாக்கள், இன்று வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக் கொண்டிருக்கின்றன.

.

.
ஆடிப்பெருக்கு என்றாலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் சித்தி மகள் நேற்று என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு அண்ணிக்கு நீங்க என்ன வாங்க போறீங்க அண்ணா.?’’ என்றாா். 

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை 

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு 

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.

காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப் பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

ஆடிப்பெருக்கும் வறண்ட காவிரியும்!

''சோழர்கள் ஆட்சிக் காலத் தில், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது குறித்து, குறிப்புகளோ ஆவணங்களோ கிடைக்கவில்லை. ஆனால், அதையடுத்து மராட்டியர்கள் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், இந்த விழா கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஷாஜி ராஜா என்பவரின் காலத்தில், ஆடிப்பெருக்கு விழாவை 'காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடினார்களாம்.

ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தை செழிக்கச் செய்வதையே கடமையாகக் கொண்டு, ஓடி வந்து சேவை செய்துகொண்டிருக்கிறது காவிரி எனும் புண்ணிய நதி. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு ஏற்ப, தன்னைப் பூக்களாலும் வளையல்களாலும் கனிகளாலும் சித்ரான்னங்களாலும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் குளிர்வித்து மகிழ்கிற தம்பதியை, அந்தக் காவிரித்தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள். மாறாக, அந்தத் தம்பதியின் இல்லத்தை சுபிட்சமாக்குகிறாள். சந்ததியைப் பெருக்கி அருள்கிறாள். தனம் - தானியம் என சகல செல்வங்களையும் தந்து, காத்தருள்கிறாள்.  

''ஆனால், காவிரியை நாம் காக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றார்கள். மிகச் சிறிய அளவில் சாதாரண மணல் திருட்டாக இருந்த அது, இப்போது பிரமாண்ட மணல்கொள்ளையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. லாரி லாரியாக மணல் கொள்ளை நடந்துகொண்டே இருக்கிறது. சீராக, நேராக, துள்ளித் திரியும் அழகிய பெண்ணைப் போல் காட்சி அளித்த காவிரிப்பெண், இப்போது பற்கள் விழுந்து, கன்னம் ஒட்டி, தோல் சுருங்கிப் போன கிழவியெனக் காட்சி தருகிறாள்.  

சமீப காலங்களில், ஆடி பிறந்ததுமே, ஆடிப்பெருக்கு நாளிலாவது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவார்களா... திறந்துவிடவேண்டுமே என்கிற பிரார்த்தனை உள்ளே ஓடத் தொடங்குகிறது. இந்த வருடம் காவிரித்தாய் அருள் பாலித்தாள். ஒரு வழியாக 6000 கண அடி திறக்கப்பட்டு தருச்சி வந்தடைந்தாள்! ஒருவேளை தண்ணீர் திறந்துவிடாமல் போனால், வெறும் மணல் நதியாக, குண்டும் குழியுமாக இருக்கிற இடங்களுக்கு மக்கள் சென்று, ஆங்காங்கே குழி தோண்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஊற்று போல் வரும் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, ஏதோ பேருக்கு படையலைப் போட்டுவிட்டுச் செல்கிற அவலமும் நிகழ்கிறது.

'இங்கேதான் நான் குதித்தாடிய குளம் இருந்தது’, 'இதோ... இந்த தோப்பில்தான் விளையாடினேன்’, 'ஊஞ்சல் கட்டி விளையாடிய மரங்கள் இங்குதான் இருந்தன’... என்பது போல, 'இதோ... இந்த இடத்தில்தான் காவிரி நதி ஓடியது ஒருகாலத்தில்’ என்று சொல்லும் கொடுமை நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் கலவரமும் அடிவயிற்றைப் பிசைகின்றன.

கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்கிப் பயனென்ன? மணலைக் கொள்ளையடித்து, தண்ணீரை மாசுபடுத்தி, நதியைக் குலைத்து வறட்சியாக்கி விட்டு, நாம் வாழ்வது எப்படிச் சாத்தியம்?

நீரின்றி அமையாது உலகு! 

காவிரியைக் காப்போம். ஆடிப்பெருக்கை இன்னும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். எல்லா நதிகளையும் போற்றுவோம். ஒரே நதியாக இணைத்து, ஆடிப்பெருக்கை அகிலம் முழுவதும் கொண்டாடிக் குதூகலிப்போம்!

Sunday, 26 April 2015

செந்தமிழுக்கு உழைத்த 'மனோன்மணியம்' சுந்தரனார்!

அன்னைத் தமிழுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாங்குற அணி செய்தவர்! நிறை தமிழ்ச் சான்றோராய் நின்று நிலைபெற்றவர்! தமிழக அரசின் நிகழ்ச்சிகள் துவங்கும்போது, “நீராரும் கடலுடுத்த நிலமட‌ந்தைக்கு எழில் ஒழுகும்” என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்! கடின உழைப்பு-விடாமுயற்சி-பிறர்க்கு உதவும் பாங்கு – நன்றி மறவாமை, உண்மையை யாரிடத்தும் எவ்விடத்தும் துணிந்து கூறி நிலைநிறுத்தும் நேரிய கொள்கை – ஆகிய உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்! தாய் மொழிப் பற்று, தாய் நாட்டுப்பற்றுடன் நெஞ்சமெலாம் நிறைந்த மனிதப்பற்றாளர்! தத்துவஇயல், மொழிஇயல், வரலாற்றியல், தொல்லியல் ஆகிய பல்துறை அறிஞர்! அவர்தான் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்.

                கேரள மாநிலம் ஆலப்புழைத் துறைமுகப்பட்டினத்தில், பெருமாள்பிள்ளை- மாடத்தி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 05.04.1855 ஆம் நாள் பிறந்தார்.

                சுந்தரனார் ஐந்தாம் வயதில் ஒரு தமிழ்ப் பள்ளியில் பாதம் பதித்தார். பள்ளிக் கல்வியுடன், அவரது தந்தை மூலம் ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நீதி நூல்களையும், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களையும், திருக்குறள், நாலடியார் போன்ற அறம் உரைக்கும் நூல்களையும் கற்றுத் தெளிந்தார்! பன்னிரெண்டாம் வயதிலேயே சிறந்த தமிழ்மொழி அறிவு பெற்றவராய் விளங்கினார்.

                ஆலப்புழையில் ஓர் ஆங்கிலப் பள்ளியில் பயின்று நன்கு தேர்ச்சியடைந்ததுடன், ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்றார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் சேர்ந்து உயர்நிலைக் கல்வி கற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். இதன் மூலம் அரசின் உதவித் தொகையினை இளங்கலை படிப்புவரை கிடைக்கப் பெற்றார். இளங்கலைப் பட்டப்படிப்பிலும், திருவனந்தபுரத்தில், முதல் மாணவராகத் தேர்ந்தார்!

                நாகை நாராயணசாமிப் பிள்ளையிடம் யாப்பருங்கலக்காரிகையைத் தெளிவுபெறக் கற்றார்.

                தத்துவத்துறையில் 1880 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். திருவிதாங்கூர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சட்டக் கல்வியும் பயின்று முடித்தார்.

                தான் பயின்ற திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார். மாணவர்களுக்கு வரலாறும், தத்துவஇயலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் போதித்தார்.

                சிவகாமி என்னும் மங்கையை 1877 ஆம் ஆண்டு மணம்புரிந்தார். சுந்தரனார், ஆராய்ச்சியும் கல்வியும் இரு கண்களாகக் கருதிச் செயல்பட்டார்.

                திருநெல்வேலி ஆங்கிலக் கலாசாலைக்குத் தலைவர் ஆனார். அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். சிறந்த முறையில் பாடங்களைக் கற்பிக்குமாறு ஆசிரியர்களை உற்சாகப்படுத்தினார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகியவை பற்றி ஒப்பியல் நெறியில் உரை நிகழ்த்தினார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் மீண்டும் 1879 ஆம் ஆண்டு தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். இவர் திறமையை அறிந்த மாமன்னர் தன் அரண்மனையிலேயே, ‘பிறவகை சிரஸ்ததார்’ எனும் உயர்பதவியை வழங்கினார்.

                சுந்தரனார்யின் ஆராய்ச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிட இன ஆராய்ச்சியாகும். தென்னாட்டில் திராவிட இன உணர்வுக்கு வித்திட்டவர் என்று திராவிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                பழந்தமிழ் இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் ஆராய்ந்தவர் பேராசிரியர் சுந்தரனார். அவர் மொழிப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்தார்.

                மனோன்மணியம் என்னும் நாடகத்தை 1891 ஆம் ஆண்டு படைத்தார். ‘அது ஒரு பொழுதுபோக்கு நாடகமல்ல; வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு உரிய தத்துவக் கருவூலமாக மிளிர்கிறது’- என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                ‘மனோன்மணியம்’ என்ற நாடகத்தினைப் படைத்ததால் ‘மனோன்மணியம் சுந்தரனார்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இந்நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்களால் ‘மனோன்மணி’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

                திருவனந்தபுரம் பூர்வீக அரசியல் வரலாறுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து ‘திருவிதாங்கூர் பண்டை மன்னர்கள் வரலாறு’ என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.

                அந்த நூல் அந்நாட்டு வரலாற்றை உரைக்கும், இன்றியமையாத ஆதாரங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. இந்நூலின் பொருட்டு, திருவிதாங்கூர் மாமன்னர், இவர் குடும்பத்தினர் திங்கள்தோறும், ஒரு நன்கொடை தொகையை பரம்பரையாகப் பெற்றுவர ஆணையிட்டார்.

                திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையைத் தொடங்கியது. பேராசியர் சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

                புரவசேரி ஆழ்வார் கோயில், சோழபுரம் சோழராஜாகோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், திருவல்லம் பரசுராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை அவர் தேடிக் கண்டுபிடித்து அவை தரும் தகவல்களை வெளியிட்டார். கல்வெட்டுத் துறையில் சுந்தரனார் முன்னோடியாக விளங்கினார் என்று வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை தமது ‘சுசீந்திரம் கோயில்’ என்ற ஆய்வுநூலில் குறிப்பிட்டுள்ளார்.

                இவரின் தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி, இவரை இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் ஏஷியாடிக் கழகம்’ தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது. பிறகு, லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் F.R.H.S. என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு ‘ராவ்பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கியது. ஜெர்மன் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்று 1896 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

                சென்னைப் பல்கலைக்கழகம் இவரை, ‘உயர்கலைக் கழக உறுப்பினர்’ பொறுப்பில் நியமித்தது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, தத்துவம் ஆகிய துறைப் பாடங்களின் தேர்வு நிலை உறுப்பினராகவும் விளங்கினார்.

பேராசிரியர் பெ.சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நாடகக் காப்பியத்திலுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், தமிழக அரசு விழாக்களில் பாடப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி 1970 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                திருவனந்தபுரத்தில் ‘சைவப் பிரகாச சபை’ என்ற சபையை சுந்தரனார் 1885 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் போற்றி வளர்த்தல் – தமிழ்ச் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்துதல்- தமிழ் மக்களின் பொருளாதார நிலையை மேன்மையுறச் செய்தல்-தமிழ்ச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்-தமிழ் மக்களின் உயர்தரக் கல்வி, தொழிற் கல்வி ஆகியவற்றிற்குரிய வசதிகள் அளித்தல் ஆகிய சீரிய நோக்கங்களுடன் சபையை நிர்வகித்தார். மேலும் இச்சபையின் மூலம் தமிழ்ப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சபையின் சார்பில் கேரளப் பல்கலைக் கழகத்தில், “பேராசிரியர் சுந்தரனார் அறக்கட்டளை” நிறுவப்பட்டுள்ளது.

                வீரத்துறவி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு ஆன்மீகப் பயணமாக திருவனந்தபுரம் வந்திருந்தார். அப்போது, சுந்தரனார்யின் விருந்தினராக அவர் இல்லம் வந்தார். விருந்திற்குப் பின்பு விவேகானந்தரும், சுந்தரனார்யும் உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில், விவேகானந்தர், சுந்தரனார்யைப் பார்த்து, ‘தங்கள் கோத்திரம் என்ன’? என்று கேட்டார். சுந்தரனார் ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் இவ்வாறு குறித்துள்ளார்: “உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர், ‘தங்கள் கோத்திரம் என்ன?’ என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த, அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது- தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்” என்பதே அக்குறிப்பு!

                பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார், ‘மனோன்மணியம்’, ‘நூற்றொகை விளக்கம்’, ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள்’, ‘பண்டைய திருவிதாகூர் முடிமன்னர்களின் காலம்’ ஆகிய நூல்களையும், ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களையும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களையும், ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் படைத்து தமிழுலகுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

                பேராசிரியர் சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள் இளமை முதிராத தன் நாற்பத்திரெண்டாவது வயதில் இயற்கை எய்தினார். அன்றே – ‘தமிழ் உலகம்’, தன் தலைமகனை இழந்ததாய்க் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது. தென்னகத்தின் முக்கடலும், கண்ணீர் சூழ உப்புக் கடலாய் உருமாறி ஓலமிட்டது.

                இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, ‘அவர், ‘பொதுமறையாம் திருக்குறளோடு ‘மனுநீதி சாத்திரத்தை’ ஒப்பிட்டும், ‘திருவாசகத் தேனோடு’, ‘வேதத்தை ஒப்பிட்டும்’ தீந் தமிழின் உயர்வு பேசுகிறார்’ என்று கருத்துரைத்துள்ளார்!

                பாவேந்தர் பாரதிதாசன், சுந்தரனார்யின் புகழைத் தன் கவிதை நூலில் ‘தேனருவி’ யாய் இப்படிக் கொட்டிப் பாடியுள்ளார்.

                “நான் பெற்ற மக்களிள் சுந்தரன் சிறந்தவன்!

                நற்றமிழ் காக்கத் தன்னலம் துறந்தவன்!

                தேன்போன்று தமிழை வளர்க்கப் பிறந்தவன்!

                செந்தமிழுக்கு உழைத்தே இறந்தவன்!”

                பேராசிரியர் பெயரில், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது.

                தத்துவப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராக – வரலாற்று ஆராய்ச்சி அறிஞராக–கல்விக் கடலாகத் திகழ்ந்தவர்! அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர். தமிழ் மொழி உள்ளவரை, மனோன்மணியம் சுதந்திரனார்யின் பெயரும் நின்று நிலைத்திருக்கும் !

                மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் உருவம் பொறித்த ‘அஞ்சல் தலை’யும், ‘நாணயமும்’ நடுவரணரசு வெளியிட வேண்டும் என்பது நானிலமெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமாகும்.

- பி.தயாளன்

Saturday, 18 April 2015

சிவந்தி ஆதித்தன் வாழ்க்கை வரலாறு!

இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தன், சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின், மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

சி.பா.ஆதித்தனார், 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார்.

அதிபரின் மகனாக இருந்தபோதிலும், அச்சுக் கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புகிறவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக (பத்திரிகையின் அனைத்து துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். ஒரு சிறந்த பத்திரிகையாளராக பட்டை தீட்டப்பட்ட பிறகு, நிர்வாகத் துறையிலும் பயிற்சி பெற்றார்.

பா.சிவந்தி ஆதித்தனிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஆதித்தனார் ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. சிவந்தி ஆதித்தனின் நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து வெளிவருகிறது. அதிக விற்பனையுள்ள தமிழ் நாளிதழ் என்ற பெருமையை 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.




திருச்செந்தூரில் ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவுக்கு சிவந்தி ஆதித்தன் உயர்த்தினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி யியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவன தலைவராகவும் இருந்து வந்த சிவந்தி ஆதித்தன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995ஆம்ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982ஆம் ஆண்டும், 1983ஆம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில், ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தன் செய்துள்ளார். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தன். அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000வது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.


நன்றி: விகடன்

Friday, 17 April 2015

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு!
ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து ராஜாங்கம் நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ சாம்ராஜ்யத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.
"கனம்" இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார் "கன்னி" தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர்.
இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார் "ஜதளம்" அல்லது "தளம்" கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.
"மண்டலம்" கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.


நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.
அணி பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.
"அதிபதி" இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும்.
இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.
கைப்பற்றிய பகுதிகள் இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, ஜாவா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.
"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.

நன்றி: இளையோர் களம்

Sunday, 5 April 2015

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !

ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் !


.

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்
கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள்.இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு 'என்று அழைக்கப் பட்டது .
சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில்புதைத்து மேலே மேடு அமைப்பர். அது "சிறுஇடு " .
மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால்"பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில்அழைக்கப் படுகிறது .
தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. தமிழ் பலமொழிகளின் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர்இதற்கு சான்று. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர்.........
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன்,கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன்பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
தமிழர் பெருமையை share பண்ணுவோம் .!

நன்றி: தமிழர் அறம்

Saturday, 21 March 2015

தமிழர் வாழ்வோடு கலந்த பறை

துக்க வீடுகளில் ஏன் பறை‬ அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும்,பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை எனஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம்கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்.

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.

தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும்.
குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது 'பேசு' அல்லது 'சொல்' என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
  • டன்டனக்கு டனக்குனக்கு
  • டன் டன் டன் டன்டனக்கு
  • ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
  • ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.

பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும்.

பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான்பறையாட்டம் பிறந்தது. பறை இசையில் பல வகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது.

பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;-
  • அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).
  • ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).
  • உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
  • சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
  • சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
  • வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
  • நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115
  • பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).
தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).
  • மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
  • மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
  • கல்லவடம் - ஒரு வகைப்பறை
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).
  • குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
  • தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
  • குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
  • கொடுகொட்டி - ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).
  • கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
  • தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
  • நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
  • சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
  • தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
  • தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
  • பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
  • தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
  • படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
  • பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
  • பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
  • முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
  • பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
  • முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
  • வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
  • வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
  • பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.


சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.
  • ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,
  • பெருகிவரும் புனலை அடைக்க,
  • உழவர் மக்களை அழைக்க,
  • போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
  • வெற்றி தோல்வியை அறிவிக்க,
  • வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
  • விதைக்க,
  • அறுவடை செய்ய,
  • காடுகளில் விலங்குகளை விரட்ட,
  • மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
  • இயற்கை வழிபாட்டில்,
  • கூத்துகளில்,
  • விழாக்களில்,
  • இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்காலத்தில் பறை தலித் மக்களின் இசைக்கருவியாக உள்ளது. பறையர்கள் மற்றும் ஆந்திராவிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய அருந்ததியர்கள் என்ற இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விசைக்கருவியை இசைக்கிறார்கள். அருந்ததியர்கள் இதை தப்பு என்றழைக்கிறார்கள்.

நன்றி: கலையரசி
                தினகரன் செய்தித் தாள்