Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Friday, 8 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 6)


இந்த பாடலின் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு என முதலில் கூறினேன் அல்லவா? அந்த விசயத்திற்கு இப்போதுதான் வருகிறேன். ஆம் ஒரு விருதுநகர்காரனாக விருதுநகர் வியாபாரியை பற்றி எழுதும் போது எனக்குள் ஒரு பூரிப்பு!


விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது. விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 101மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம்,கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும். இதனால் விருதுநகரை சுற்றிலும் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என அனைத்துமே கரிசல் காடுதான். இங்கு சீமைக்கருவேல் எனப்படும் வேலிக்கருவேல் புதர்களே ரொம்ப யோசித்துதான் முளைக்கும்! கந்தக பூமி எனப் படும் பூமி! மழை, தண்ணீர் பாசனம், விவசாயம் என எல்லாமே எட்டாக்கணி தான். இது எந்த பயிறும் விளைவிக்க முடியாத பூமி.


ஆனால் வாழ்ந்தாக வேண்டுமே? விவசாயம் இல்லாமல் வேலை இல்லை, விவசாயம் இல்லாமல் தொழில் இல்லை, விவசாயம் இல்லாமல் வாழ்க்கை இல்லை! ஆனால் விருதை வாசிகள் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்தனர். ஆம் அது தான் வியாபாரம்! கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். 1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் வணிகர்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர். இன்று காபி, ஏலக்காய், பருப்பு, மிளகாய், எண்ணெய், புண்ணாக்கு என கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்குமே இந்திய அளவில் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய இடமாக வளர்ந்திருக்கிறது. தமிழக அளவில் ஆரம்பித்தது, அகில இந்திய அளவில் வளர்ந்து, இன்று உலக அளவில் விருதுநகர் வியாபாரிகளின் ராஜ்ஜியம் விரிந்திருக்கிறது.


எந்த பயிர்களை எல்லாம் தன் மண்ணில் விளைவிக்க முடியாமல் போனதோ அவற்றுக்கு எல்லாம் இன்று அகில இந்திய அளவில் விலை நிர்னயித்து, ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கிறார்கள் விருதுநகர் வியாபாரிகள். எங்கோ குடகு மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் விளைகின்ற காபிக்கும், ஏலக்காய்க்கும் விலை நிர்ணயம் செய்து, அதை ஏற்றுமதி செய்யும் இடமாக வளர்ந்திருக்கும் விருதுநகரில் எம்.எஸ்.பி. குரூப், தொடர்ந்து 20 வருடமாக காபி ஏற்றுமதியில தேசிய அளவில் முதல் இடம் பெற்று வருகின்றது. போடிநாயக்கனூரில் கூடும் ஏலக்காய் ஏலத்தை, விரல் நுனியில் வைத்து அசைப்பவர்கள் இந்த விருதுநகர் வியாபாரிகள்தான். இத்தனை வளர்ச்சிக்கான காரணம் முக்கியமான மூன்று விசயங்கள். ஆம் உண்மை, உழைப்பு, உயர்வு. யாருடைய வயிற்றிலும் அடிக்காமல் உரிய விலை குடுத்து தரமான பொருட்களை கொள்முதல் செய்து முறையாக பணமும் கொடுத்து விடுவதால் தான் விருதுநகர் வியாபாரிகளுக்கென்று தனி பெயர். இது தான் #கவிஞர்_மருதகாசி அவர்களை விருதுநகர் வியாபாரிகள் கவர்ந்த விசயமாக இருக்கக் கூடும்!


விருதுநகர் வியாபாரிகளிடம் எனக்கு பிடித்த வியாபார முறை ஒன்று உண்டு! அது கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்ற வியாபாரமாய் இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல், எந்த வித டென்சனும் காட்டாமல் இயல்பாய் சிரித்த முகத்துடன் அண்ணாச்சி, மச்சான் என்ற உறவு முறையுடன் அழைத்து வியாபாரம் செய்வார்கள். என்றுமே விருதுநகர் வியாபாரிகளை டென்சன் முகத்துடன் காண முடியாது!


இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை! எந்த ஒரு மக்களும் வளரும் வரை அவர்களுக்குள் வெறியும், ஒற்றுமையும் இருக்கும். வளர்ந்த பிறகு அங்கே பொறாமையும் வளர ஆரம்பித்து விடும்! விருதுநகரிலும் அந்த சிக்கல் சில வருடங்களாய் இருந்து வருகிறது. இதை விட ஆபத்தான இன்னொரு விசயம் ஒன்றும் முளை விட்டிருக்கிறது! முன்பெல்லாம் படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்ன படிப்பு படித்தாலும் படித்து முடித்து தொழிலுக்கு வந்து விடுவர். ஏர்ணாட்டிக்ஸ் படித்து விட்டு கமிஷண் தொழிலுக்கு வந்தவர்களையும் எனக்கு அங்கு தெரியும்! இப்போது அங்கே உள்ள இளம் தலைமுறையினர் ஒயிட் காலர் ஜாபில் மோகம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். அதே போல் வெளிநாட்டு வேலை மோகமும் சமீப காலமாக அங்கு தலைவிரித்து ஆடுகிறது. நல்ல படிப்பு படித்து விட்டு அமெரிக்கா சென்று விட வேண்டும் என்றும் இன்றைய தலைமுறையினர் வெறித்தனமாக விரும்புவதாக தெரிகிறது. பல விருதுநகர் வியாபாரங்கள் அடுத்த தலைமுறையின் கவணிப்பில்லாமல் மார்வாரிகளின் கைக்கு மாறி வருகின்றன! விருதுநகரின் அடுத்த தலைமுறை தன் கவணத்தை வியாபாரத்திலிருந்து திசை திருப்பினால்......

தமிழனத்தின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் தமிழர்களின் கைவிட்டு போய் விடும்.....

Thursday, 7 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 5)


இன்று போல் ஷாப்பிங் மால்களும், ஹைபர் மால்களும் இல்லாத காலங்களில் மக்களுக்கு, வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு என அனைவருக்கும் கொள்முதல் இடம் சந்தைதான். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை பிரபலம், புதன் கிழமை தேனி சந்தை, வெள்ளிக்கிழமை நாகர்கோவில் கோட்டார் சந்தை, சனிக்கிழமை கமுதி அபிராமத்தில் சந்தை என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாள் சந்தைகள் பிரபலம். இன்றும் மதுரையில் ஞாநிற்றுக் கிழமை சந்தையில் கிடைக்காத பொருளே இல்லையென கூறலாம். பல வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்ட நிறுவனங்களான மெட்டடார் மற்றும் ஸ்டாண்டர்ட் வாகணங்களுக்கே இன்னும் அங்கு உதிரி பாகங்கள் வாங்க முடியும் என கூறுவார்கள். அதே போல் எல்லாமே இன்றும் அங்கே கிடைக்கும், அதாவது வளர்ப்பு புறா, இறைச்சிக்கான புறா, கிளி, வீட்டு நாய்கள், வேட்டை நாய்கள், பழைய பீரோக்கள், சோபாக்கள் என எல்லாமே மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கிடைக்கும்! இப்போது நாம் நமது பாடல் வரிகளுக்கு வருவோம்....

#பொள்ளாச்சி_சந்தை
மேலே பார்த்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு சந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்பது போல், பொள்ளாச்சி சந்தை வியாழக்கிழமை சந்தை. பொள்ளாச்சியை சுற்றி அனைத்து ஊர்களுமே விவசாயத்துக்கு பேர் போன ஊர்கள்! நான் தொழில் விசயமாக 10 வருடங்களுக்கு முன் வாராவாரம் அந்த பக்கம் செல்லும்போதே உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் முப்போகம் (வருடத்திற்கு மூன்று போகம்) விளைந்ததாக கூறுவார்கள். அது போல் பொள்ளாச்சியே அந்த இடங்களுக்கு ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்திருந்தது. கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் பொள்ளாச்சி சந்தை மையப் பகுதியாக இருக்கும்! அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாலக்காடு சென்று விட முடியும். அதே போல் உடுமலை வழியாக மூனாறும் பக்கமே. பொள்ளாச்சியை சுற்றி உள்ள் பகுதிகளில் அரிசி மட்டுமின்றி, கம்பு, ராகி, சாமை போன்ற னைத்து பொட்களுமே விளைவதால் பொள்ளாச்சி சந்தை மிக பிரபலமானது. உடுமலை மற்றும் அதன் அருகே உள்ள தளி போன்ற மலை சிற்றூர்களில் அதிக காய்கறிகளும், பொள்ளாசியை சுற்றியும் மலைகளிலும் அதிகம் காய்கறிகள் விளைந்ததால் பொள்ளாச்சி சந்தையில் எல்லாமே கிடைக்கும்

அடுத்தது பொள்ளாச்சி சந்தையில் நடக்கும் மாட்டுச் சந்தை. பொள்ளாச்சி சந்தையில் அந்த காலத்தில் ஆடு, மாடு போன்ற அனைத்து கால்நடைகளையும் விற்பனைக்கு ஓட்டி வருவார்களாம். இப்போது நீங்கள் கிராமத்து சினிமாக்களில் பார்ப்பது போன்ற சந்தையை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். சினிமாவில் வருவது போல குடை ராட்டிணம், குதிரை ராட்டிணம், குருவி மிட்டாய், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், புழுதி பறக்கும் கட்டாந்தரை என எதுவும் இப்போது கிடையாது!  ரெட்டை சடையும், கலர் ரிப்பனும், தாவணியும், நாலு முழ வேட்டியும் தொலைந்த போதே சந்தையும் காங்கிரீட் கட்டிடமாகி விட்டது!! பழைய பரபரப்பான சந்தையும் இப்போது கிடையாது! ஆனால் எனக்கு தெரிந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் வரை பொள்ளாச்சியின் மாட்டு சந்தை பிரபலமாகவே இருந்தது. பொள்ளாச்சியில் இறங்கி சந்தைக்கு போகனும் என்று சொன்னாலே மாட்டு சந்தைக்கு தான் கொண்டு போய் விடுவார்கள்.ஆனால் சோகம் என்னவென்றால் இங்கு வருவது பெரும்பாலும் அடி மாடுகளே. அருகில் உள்ள கேரளாவை மனதில் கொண்டு இங்கு தமிழகத்தின் அடிமாடுகள் என்றில்லை, கர்ணாடக். ஆந்திர அடி மாடுகளும் இங்கேதான் வருகின்றன!

மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கழுத்தில் கட்டும் மணி, சங்கு, திருஷ்டிக்கயிறு, தார் குச்சி, சாட்டை என அனைத்து பொருட்களும் கிடைக்கும். மாட்டு சந்தை இன்றும் அடி மாடுகளால் கலகலத்துக் கொண்டிருக்க....

பாரம்பரியம் மிக்க தானிய சந்தையோ.... தள்ளாடி படுத்து விட்டது....

Wednesday, 6 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 4)


கவிஞர் மருதகாசி அவர்களின் அடுத்த வரிகள்....
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
கருதை நல்ல வெளையச்சு #மருத_ஜில்லா_ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு

ஆம் மதுரை ஜில்லா ஆள்தான் இன்றைய தலைப்பு....

இப்போ மருத ஜில்லா ஆள் என்று அவர் குறிப்பிடுவதன் அர்த்தம் பார்போமா? அது ஏன் கருதறுக்க மதுரை ஆட்கள் பற்றி குறிப்பிடுகிறார்? மற்ற ஊர் ஆட்கள் என்ன மட்டமா? அன்று அவர் குறிப்பிட்டிருக்கும் மதுரை ஜில்லா என்பது இன்றைய விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிடும் MRT மதுரை-இராமனாதபுரம்-தேனி மாவட்டங்களை இணைத்தது. இதில் இன்றைய விருதுநகர் மாவட்டமும் சேர்ந்தே வரும். அதாவது வைகையை பாயும் மதுரை, தேனி, இராமனாதபுரம், விருதுநகரின் சில பகுதிகள், சிவகங்கை, கமுதி, போடி, கம்பம், பெரியகுளம் என பெரிய ஜில்லா அது!  அந்த காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆட்கள் குஸ்தி, மல்யுத்தம் போன்ற தற்காப்பு சன்டை கலைகளுக்கு பேர் போனவர்கள். இந்த ஒருங்கிணைந்த அன்றைய மதுரை ஜில்லாகாரர்களிடம் சாதிப் பெயரை போல் நிறைய பேருக்கு பெயரின் பின்னால் வாத்தியார், பயில்வான் போன்ற பட்டங்கள் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு மதுரையின் சிறு பகுதிகலும் மல்யுத்த பள்ளிகளும், குஸ்தி வாத்தியாரும் இருப்பார்கள். இந்த வாத்தியார்களுக்கு வஸ்த்தாது என்ற பெயரும் உண்டு. இன்றும் சிலர் நீ என்ன பெரிய வஸ்த்தாதா என கேட்பதை பார்த்திருப்போம்!

நன்றாக் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து உடலை கிண்ணென்று வைத்திருப்பார்கள் அன்றைய ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாக்காரர்கள். எப்பேற்பட்ட கடின வேலைக்கும் அஞ்சாதவர்கள் அவர்கள். மழை வெயில் குளிர் பாராமல் எந்த சீதோசன நிலையிலும் வேலை பார்ப்பவர்கள் அன்றைய மதுரை ஜில்லாக்காரார்கள். எந்த பணியில் இருந்தாலும் இவர்கள் அறுவடை காலங்களில் வயல் வேலைக்கு கிளம்பி விடுவார்களாம். உள்ளூரில் பஞ்சமோ இல்லை வெள்ளமோ என்றால் சட்டென்று யோசிக்காமல் வெளியூர்களுக்கு கதிரறுக்க கூலிக்கும் செல்வார்களாம். உள்ளூரில் பணி முடிந்து வெளியூர்களில் கதிரறுக்கும் வேலை நடந்தால் இவர்களையே அழைத்து செல்வார்களாம். ஆனால் இன்று இங்கும் நிலமை தலைகீழே. முன்பு போல் இன்று கூலியாக நெல்லைக் கொடுத்தால், விளைச்சலில் பாதியைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கர் கதிர் அறுப்புக்கு இருபது ஆட்கள் என நாலைந்து நாட்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும். நெல்லை உதறுவதற்கு பத்து ஆட்கள் என, நாலு நாட்களுக்கு மேல வேலை செய்ய வேண்டும். கணக்குப் பார்த்தால் நூற்றி ஐம்பது ஆட்கள் கூலி கணக்கு வரும் ஒரு ஏக்கருக்கு. களம் தூரமாக இருந்தால், கூலி அதிகமாக குடுக்க வேண்டி வரலாம். இவ்வளவு செலவு செய்தாலும் நெல் கிலோ ஆறு ஏழு ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யப்ப்டுகிறது.

இந்த லட்சனத்தில் ஆட்கள் வைத்து வேலை பார்த்தால் கடன்தான் மிஞ்சும். கதிரறுக்கும் இயந்திரம் வைத்து அறுத்தால். இரண்டு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுக்கலாம். நெல்லாகவே வந்துவிடும். மணிக்கு 1,200 ரூபாய் இயந்திரக் கூலி. நெல்லை களத்திற்க்கு கொண்டு போக டிராக்டருக்கு ஒரு ஒரு நடைக்கு 250 ரூபாய். இதுதான் இன்றைய கணக்கு! வேலையும் இலகுவாய் முடியும், கொஞ்சம் லாபமும் மிஞ்சும்! சரி அப்போ மதுரை ஜில்லா ஆட்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அரிசி ஆலை வேலைக்கு சென்று விட்டார்கள். மூடை தூக்குவது போன்ற வேலைக்கு சென்றவர்களும் உண்டு. அரிசி ஆலைகளிலும் தற்பொழுது இயந்திர மயமாகி விட்டதால், சிலர் வேறு சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு சென்று விட்டனர். அதே போல் இன்றும் கட்ட கூலி வேலை போன்ற கடினமான வேலைகளுக்கு மதுரை சுற்றுப்புற ஆட்களே வெளியூர்களுக்கும் செல்கின்றனர். கேரளாவில் கூட போய் தங்கி வேலை பார்த்து வருவதுன்டு மதுரை சிற்றாள் மற்றும் கொத்தனார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வரையில் எங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் கூட கதிர் அறுக்கும் நாட்களில் எவ்வளவு கூலி நாங்கள் குடுக்க முன் வந்தாலும் உதறி தள்ளிவிட்டு வயல் வேலைக்கு சென்று விடுவார்கள்! அந்த காலங்களில் எங்கள் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாகி விடும். ஆனால் இப்பொது முற்றிலுமாக அந்த பழக்கம் மறைந்து விட்டது என்றே கருதுகிறேன்!

மதுரை ஜில்லா ஆட்களுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது கவிஞரே.....

Tuesday, 5 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 3)


அடுத்த வரி....

ஆத்தூரு கிச்சடி சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சு...... 

ஆத்தூர் கிச்சடி சம்பாவை போலவே புகழ் பெற்ற மற்றொரு ரகம் நாம் அனைவரும் அறிந்ததாய் இருக்கும் என நம்புகிறேன். கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி என்று மாநிலத்தின் பேரை குறிப்பிடுவது போல் நம் தமிழக பொன்னியை நாம் குறிப்பிடுவது இல்லை! ஊர் பேரை சொல்லியே குறிப்பிடுகிறோம்! ஆம், #மண்ணச்சநல்லூர்_பொன்னிதான் அது! மண்ணச்சநல்லூர் என்பது திருச்சி அருகில் உள்ள சிற்றூர். ஆனால் இதுவும் கர்நாடகா பொன்னி ரகங்களால் தொலைந்து போய் கொண்டிருக்கிறது என்பது முதல் சோகம். இரண்டாவது சோகம் ஆத்தூரின் கிச்சடி சம்பா இப்போது முற்றிலும் ஆத்தூரை விட்டு துடைத்தெடுக்கப்பட்டு விட்டது என்பது!!

சேலத்திலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சேலத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருக்கிறது #ஆத்தூர். அப்போதும் ஆத்தூர் விவசாயத்திலி இருந்து, விதை நெல், விதை நிறுவனங்கள் என பிரபலமாவே இருக்கிறது. சேலத்தின் பிரபலமான வசிஷ்ட நதிதான் இந்த கிச்சடி சம்பாவின் ருசிக்கு காரணம் என்கின்றனர். ஆனால் இப்போது ஆத்தூரில் கிச்சடி சம்பாவும் விளைவதில்லை, #வசிஷ்ட_நதி ஓடுவதும் இல்லை!! அன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் என ஒருங்கிணைந்திருந்த சேலம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக் விளங்கியிருக்கிறது ஆத்தூர். சுத்தமான வசிஷ்ட ஆற்று நீர், இயற்கை உரங்களை வைத்து அன்று கிச்சடி சம்பாவை சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்த கிச்சடி சம்பா ரகம் மிகவும் சன்ன ரகமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்குமாம். இந்த கிச்சடி சம்பா ரக்ம் இப்போது ஆத்தூரில் சுத்தமாக இல்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

இவை தற்பொழுது மாயவரம் ( அதாங்க நம் ஏர் புகழ் மாயவரம் தான்!) மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மண்ணின் பாரமரிய நெல் வகைகள் தொலைந்து விடக் கூடாது என்ற இயற்கை ஆர்வம் மிக்க தன்னார்வலர்களால் மட்டுமே சாகுபடி செய்யப் படுகிறது.

இந்த கிச்சடி சம்பாவின் குணம் நம் மண்ணுக்கும் நம் சீதோசனத்திற்க்கு மிகவும் இணைந்து வளரக் கூடியது. ஆம் இவை வெள்ளம் வந்தாலும் சரி, கடும் வறட்சி என்றாலும் சரி மீறி வளரக் கூடியவை. வயலில் எவ்வளவு தண்ணீர் நின்றாலும் இவை அழுகாது, ஒரு மாதத்திற்கு காய்ந்தாலும் நிற்கக் கூடியவை! ஏக்கருக்கு 1.250 டண் முதல் 1.5 டண் வரை மகசூல் த்ரக்கூடியவையாம்! இது போன்ற லாபம் தரக்கூடிய பாரம்பரிய நெல் வகைகள் எப்படி காணாமல் போகின்றன என்பது என்னை போன்றவர்களுக்கு புதிரே! இதில் இன்னொன்றும் உண்டு. தற்பொழுது வரும் அரிசி ரகங்களில் வருவது போன்ற வாயுத் தொல்லையும் இந்த ரகத்தில் இருக்காதாம்!

இயற்கை விஞ்ஞாணி திரு #நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டது போல் " நம் பாரம்பரிய விதைகளுடன் சேர்ந்து நம் பாரம்பரியத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம்"! 

மணப்பாறை மாட்டை தொலைத்தாகிவிட்டது, மாயவரம் ஏரும் தொலைந்து விட்டது, ஆத்தூரில் கிச்சடி சம்பாவே இல்லை....

ஆனால் கவிஞரின் வரிகள் மட்டுமே வலியாய் என் மனதிலும், என் பதிவிலும்...
வருத்தத்துடன்.....

Monday, 4 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 2)



கலப்பைகளுக்கு பேர் போன இன்னொரு ஊரும் உண்டு! அது மேலூர். ஆம், மதுரைக்கு அருகில் இருக்கும் மேலூரே. அதை நாம் பின்னொரு பதிவில் பார்ப்போம்! நாம் இப்போது பார்க்கப் போவது நம் பாடலில் வரும் மாயவரம் ஏர்!
பெரும்பாலான ஊர்களில் வயல் காடுகள் மணல் பூமி ஆகவும், மணலும் களிமண்ணும் கலந்த பூமியாகவுமே இருக்கும். அதிலெல்லாம் உழுவது மிகவும் சுலபமாக இருக்கும். சாதாரணமாக எல்லா ஊர்களிலும் இரும்பு கலப்பைகள் இருந்தாலே போதும். அதாவது மொத்தமும் இரும்பாலேயே செய்யப் பட்ட கலப்பைகள். ஆனால், மாயவரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில பெரும்பாலும் களிமண்ணாத்தான் நிலம் இருக்கும். அந்தச் சேற்றில் உழவு செய்வதற்க்கு கூர்மையான கலப்பைகள் தேவை. சேறு முழங்கால் அளவுக்கு ஆழமாக இருக்குமென்பதால், கலப்பைகள் மிகவும் கனமாவும் இருக்கக்கூடாது. அவ்வாறு கனமாக இருந்தால் மாடும் இழுக்காது, விவசாயினாலும் அதை ஓட்டமுடியாது.
இதையெல்லாம் கவனத்தில கொண்டு தான் மாயவரம் ஏர் கலப்பைகளை தயாரிக்கப் பட்டிருக்கின்றன முன்பு. மாயவரம் கலப்பைகளை கொண்டு காலையில இருந்து மாலை வரையில் கூட அசராமல் ஏர் ஓட்டலாமாம். அந்த அளவுக்கு அவை இலகுவாக இருக்குமாம். இப்படி ஆழ உழவு செய்யவும், அதிக நேரம் வேலை செய்யவும் மணப்பாறை மாடுகள்தான் லாயக்கு.அதனால் தான் கவிஞர் மருதகாசி அவர்கள் மணப்பாறை மாடுகளை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஏர் கலப்பைகள் பெரும்பாலும் ‘நாட்டு கருவை’ (குறிப்பு: வேலி கருவை என்கிற சீமை கருவை கிடையாது) என்று சொல்லப்படும் கருவேலமரத்தில்தான் செய்யப்படுகிறது. அந்த மரம் ரொம்பவே உறுதியானது. ஏரின் முனையில் மட்டும் இரும்பாலான கொழு இருக்கும். எவ்வளவு நேரம் உழுதாலும் ஊறிப்போகாது. இதே மரத்தில் மண்வெட்டிக்கான பிடிகளையும் செய்வார்கள். இந்த மரங்கள் டெல்டா பகுதி முழுவதும் தோட்டம்-துரவு, காடு கரை என எல்லா இடங்களிலும் வளர்ந்து கிடப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலிருந்து மரத்தை வெட்டி தச்சுக்கூடங்களில் கொடுத்து கலப்பைகள் செய்து கொள்வார்கள் உழவர்கள். இப்போது, டிராக்டர் வந்துவிட்டதால் மரத்தாலான ஏருக்கு மவுசு குறைந்துவிட்டது. என்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் ஏர் பூட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
மயிலாடுதுறையை சுற்றியுள்ள நாஞ்சில்நாடு, வழுவூர், கொல்லுமாங்குடி, விசலூர், புலியூர், பேரளம் என்று பல ஊர்களில் இந்தக் கலப்பைகளைச் செய்யும் வண்டிப்பட்டறைகள் இருக் கின்றன. ஆனால், கலப்பைகள் குறைந்த அளவே செய்யப்படுவதால், அந்தப் பட்டறைகள் தற்போது கட்டை வண்டி, டயர் வண்டி ஆகியவற்றை செய்து கொண்டிருக்கின்றன.
சோகம்!!

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 1)

பாடலின் முதல் வரியே மணப்பாறை மாட்டுடன் தான் தொடங்குகிறது. தமிழகத்தின் புகழ் பெற்ற மாடு வகைகள் என்ற வகையில் நாம் பெரும்பாலும் கேள்விப் பட்டவை‪#‎காங்கேயம்_காளைகள்‬ தான். ‪#‎மணப்பாறை_மாடு‬ என்றொரு வகை இருக்கிறது என்பதே இந்த பாடலில் தான் நாம் கேள்விப் பட்டிருப்போம். அது போக மணப்பாறையில் ‪#‎முறுக்குதான்‬பிரபலம். முறுக்குக்கு பிரபலமான மணப்பாறையில் மாடு எங்கிருந்து வந்தது என்று தேடும் போது தான் உதவினார் முனைவர் ந.குமாரவேலு அவர்கள்.
அவரது ஆராய்ச்சி நூலான ‪#‎காங்கேயக்_காளைகள்‬(‪#‎தமிழகத்தின்_பெருமை‬) என்ற நூலில் இருந்து சுட்ட (!) தகவல் தான் இது!

இன்றைய கரூர் மாவட்டத்தின் மணப்பாறை என்ற ஊரில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய எருதுகளை விற்றும் வாங்கியும் சென்றனர். இச்சந்தையில் காங்கேயக் காளைகளும் விற்பனைக்கு வந்தன. இவ்வாறு விலைக்கு வந்த காங்கேயக் காளைகள் நல்ல விலை கிடைக்காவிட்டால் வியாபாரிகள் தங்கள் ஊரில் சில நாட்கள் வைத்து அடுத்த சந்தையில் விற்பர்… இப்படித் தங்கும் வேளையில் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் இனச்சேர்க்கை செய்துவிடுவதும் உண்டு. இப்படியாக உருவானதே மணப்பாறை மாடுகள் என்று சுப்பிரமணியம் 1947-ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பதிவில் ஏர்களை ஆராய்வோம்....

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி....

#மக்களை_பெற்ற_மகராசி படத்தில் திரு.மருதகாசி அவர்கள் இயற்றிய இந்த பாடல் தமிழர்கள் பாரம்பரியத்தை பறை சாற்றும். இந்த பாடல் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு....

சிலருக்கு தெரிந்திருக்கலாம். பிறருக்கு பின்னர் தெரியவரும். இந்த பாடலில் சில ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் குறிப்பிடிருப்பார் பாடலாசிரியர். அவற்றை கொஞ்சம் விரிவாக பார்க்க எனக்கு ஆவல்.

சில பதிவுகளை ஏற்கனவே நான் இறுதிப் படுத்தாமல் விட்டிருக்கிறேன்! ஆனாலும் இந்த பதிவை நிச்சயமாக் நல்லபடியாக நிறைவுப் படுத்துவேன் என கருதுகிறேன்...

உங்கள் ஆதரவுடன் இன்றே அடுத்த பதிவிலேயே #மணப்பாறை_மாடு_கட்டிஎன்ற பெயரில் முதல் பாகத்திலிருந்து தொடங்குகிறேன்....
வாழ்த்துங்கள் மக்களே.....

Saturday, 21 November 2015

இப்படியும் ஓர் அரசியல்வாதி? கக்கன் அவர்கள்!

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிய அவனிடம் அதிகாரத்தை குடுத்துப் பார் என்பர்!

ஆனால் கடைசி வரை பெரியார் அதிகாரத்திற்கே வராமல் விமர்சனங்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை தள்ளிவிட்டார்! 

துக்ளக் பத்திரிக்கை நடத்தும் சோவுக்கும் அவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை!

பதவி, அதிகாரங்கள் கைக்கு வந்த பின்னர் தீரா வியாதி (திராவிட) குஞ்சுகள் சம்பாதித்த சொத்துக்களும் , பண்ணிய, பண்ணிக் கொண்டிருக்கும் அட்டூழிங்களும் நாம் அறிந்ததே!

(விருதுநகரில் கூட்டங்களுக்கு பேச வரும் போதெல்லாம் கா. காளிமுத்துவும், கருணாநிதியும் டீக்கு காசில்லாமல் தெப்பத்து மேட்டை சுற்றி வந்ததாக எங்க ஐயா சொல்வார்!)

ஆனால் பதவியும், அதிகாரமும் கையில் இருந்தும் அனுபவிக்க குடும்பம் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்ந்த கக்கன் போன்றோரை தமிழ் சமூகம் எப்படி மறக்கின்றது?

ஒரு வேளை அவரை போல் மறந்தும் யாரும் இருந்து விடக்கூடாது என்று நாம் நினைக்கிறோமா?! அவரை நினைவூட்டினால் நாம் பிழைப்பு நடத்த முடியாது என அதிகார வர்க்கம் நினைக்கிறதோ??!

அவரை எல்லாம் தமிழக காங்கிரசும் மறந்து விட்டதே... அது சரி தமிழே தெரியாத நடிகைகளை வைத்து கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக காங்கிரசுக்கு எங்கே தெரிய போகிறது அவர்கள் வரலாறு!!

பதவி கையை விட்டு போன அடுத்த நொடியே, அரசு குடுத்த காரை அலுவலகத்திலேயே விட்டு விட்டு, சொந்த காசில் நகர பேருந்தில் வீட்டுக்கு சென்றவர் தும்பைபட்டி தூயவன்.

வயதான காலத்தில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கக்கன் அவர்களை, அடையாளம் தெரியாமல் கீழே படுக்க வைத்தது நிர்வாகம். அப்போது தற்செயலாக வந்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் அவரை அடையாளம் கண்டு எது வேன்டுமானாலும் செய்து தர தயாராக இருந்தார். அதுவும் வேண்டாம் என்றாராம் கக்கன். நல்லபடியாக அவரை கவணிக்க சொல்லி மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி விட்டு சென்றாராம் எம்ஜியார்!

இவரை போன்ற நல்ல, நாணயமான, ஒழுக்க சீலர்களை எல்லாம் பற்றி எல்லாம் படிக்காமல், எட்டு கல்யாணம், பத்து கல்யாணம் பண்ணியவர்கள் பற்றியும், தொண்ணூறு வயதில் இருபது வயது பெண்ணை திருமணம் செய்தவர்கள் பற்றிய வரலாறையும் படித்தால் எப்படி சமூகத்தில் நல்ல சிந்தனை வரும்??!!

Sunday, 1 November 2015

தெற்கெல்லை காப்புப் போராளி' குஞ்சன் நாடார்

இவரைப் பற்றி தகவலறிய நான் பல்வேறு இடங்களிலும், மக்கள் வாயிலாகவும் திரட்ட முற்பட்ட போது, சரியான, விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை! ஆனால் இன்று என் முகநூல் நண்பர்  திரு. Titus Nagamony அவர்கள் மூலமாக முகநூலில் இந்த தகவல்கள் கிட்டின. அவருக்கு நான் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் தகவல்கள் திரட்டிய தமிழின மீட்சி முகநூல் பக்கத்திற்கும் இதயம் கணிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குஞ்சன் நாடார் அவர்கள் இன்றைய கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை திருப்புறம் என்ற ஊரில் அப்பியான் வைத்தியர் என்ற இராயன் நாடார் ஆசான் -அறத்தம்மாள் இணையருக்கு மகனாக 23.1.1910இல் பிறந்தார்.

இவரின் தந்தையார் பண்டாரவிளை தறவாடு என்ற செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் மருத்துவம் கற்றதோடு சிலம்பம், களரி விளையாட்டுகளில் கை தேர்ந்தவர். குஞ்சன் நாடார் சிறுவயதிலே தந்தையாரிடம் மரபுக்கலைகளை கற்றுத் தெளிந்தார்.

நெல்லிமூடு பள்ளியில் தொடக்கக் கல்வியையும், நெய்யாற்றின்கரையில் பள்ளி இறுதி வகுப்பையும் முடித்த இவர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதன் பிறகு அரசர் சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற் கொண்டார். 1935இல் பேராயக் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

அதன்பிறகு திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசில் இணைந்தார். 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் பொறுப்பாட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு என்னுமிடத்தில் பெருந்திரள் மக்கள் கூட்டத்தை நடத்திக் காட்டியதால் "வட்டியூர் காவு வீரன்" என்று இவரை அழைப்பதுண்டு.

அப்போது பட்டம் தாணுப்பிள்ளையின் தமிழர் பகைப்போக்கிற்கு ஆதரவாக திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசு செயல்பட்டு வந்ததைக் கண்டித்து அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் 1948இல் மார்சல் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

பாளையங்கோட்டை தீர்மானம் காரணமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி இரண்டாகப் பிளவுபட்ட போது தாணுலிங்கம் நாடார் தலைமையிலான போட்டித் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். சில மாதங்களில் அக்கட்சியிலிருந்து விலகி கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

1952ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தலில் நெய்யாற்றின் கரைத் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் போட்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தது. நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் அது தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டது. குஞ்சன் நாடாரின் விருப்பமும் அதுவாக இருந்தபடியால் தன்னையும் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

மூணாறில் மார்சல் நேசமணி அவர்கள் மலையாள காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது அடுத்த கட்டப் போராட்டத்திற்கு முதல் சர்வாதிகாரியாக அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். பட்டம் தாணுப்பிள்ளை அரசிற்கு எதிராகவும், ஐக்கிய தமிழகம் அமைப்பதற்கு ஆதரவாகவும் திருவிதாங்கூர், சென்னை மாகாணத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கினார்.

பசல்அலி புணரமைப்புக்குழு பரிந்துரை முடிவுகள் வரும் வரை ஐக்கியத் தமிழகப் போராட்டத்தைக் கைவிடக் கோரிய பிரதமர் நேருவிற்கு "தமிழர் பகுதிகள் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது" என்று கடிதம் எழுதினார்.

திருவிதாங்கூர் தமிழர்களின் ஆகஸ்டுப் புரட்சி என்றழைக்கப்படும் "விடுதலை நாள்" (1954) கிளர்ச்சியில் 11 தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, அமைதி காக்கும்படி வேண்டிக் கொண்டார்.

விடுதலை நாள் பிரகடனம் வெளியிட்ட குஞ்சன் நாடார் மீது கோபம் கொண்ட மலையாள இனவெறி கொண்ட காவல்துறை அன்று நள்ளிரவில் வீடு புகுந்தது. அவரது மனைவி ரோசலின் கண்முன்னே, குருதி கொட்டக் கொட்ட அடித்தும், பூட்சுக் காலால் மிதித்தும், தரதரவென்று இழுத்தபடி வேனில் ஏற்றியது. குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் மிகத் தீவிரப் போக்குக் கொண்ட தலைவராக குஞ்சன் நாடார் விளங்கிய காரணத்தால் பட்டம் தாணுப்பிள்ளை அரசு இவரைக் கண்டு அஞ்சியது.

1956க்குப் பிறகு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி கலைக்கப்பட்டு காமராசர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரசு கட்சியோடு இணைக்கப்பட்டது. அப்போது முதல் காங்கிரசு கட்சியில் இணைந்து குஞ்சன் நாடார் செயல்பட்ட போதும் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தார். தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து இவரை புறக்கணித்து வந்தது.

இந்நிலையில், தனது 64ஆம் வயதில் அ.குஞ்சன் நாடார் அவர்கள் வேலூர் கிறித்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19.8.1974ஆம் ஆண்டு காலமானார்.

தெற்கெல்லைப் போராட்ட வீரர் குஞ்சன் நாடார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திடுவோம்!

Thursday, 15 October 2015

பனைவெல்லம், கருப்புகட்டி, கருப்பட்டி, உடன்குடி.... (பகுதி-2)

சென்ற பகுதியில் உடன்குடி என்னும் ஊரை பற்றியும், பனை மரத்தினை பற்றியும், கள் பற்றியும் மிக விரிவாக பார்த்து இருந்தோம், இந்த பகுதியில் அதை எப்படி கருப்பட்டி ஆக்குகின்றனர் என்று பார்ப்போம். கருப்பட்டி தயாரிப்பவர்கள் இன்று கிராமத்தில்தான் இருக்கின்றார்கள் என்று நமக்கு தெரியும், ஆனால் அந்த கிராமத்திலேயே மிக மிக தொலைவில்தான் இது செய்யப்படுகிறது என்றால் அது எப்படிப்பட்ட முள் காடாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்..... 


நாம் பெரிய குடங்களில் மட்டுமே பதநீரை பார்த்து இருப்போம், பொதுவாக கிராமத்திலும் நகரத்தில் எப்போதாவதும் பதநீர் பதநீர் என்று கூவிக்கொண்டு வருபவர்களை காணும்போது பதநீர் என்பது இவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் கருப்பட்டி செய்யுமிடத்தில் பதநீரை தொட்டி தொட்டியாக காணலாம். ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும். அதிகாலையிலேயே மரத்தில் ஏறி பதநீரை சட்டி சட்டியாக இறக்கி அதை கொண்டு வந்து இங்கு கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். பதநீரை காய்ச்சும் அந்த அடுப்பு என்பது மிகவும் வித்யாசயமாக இருக்கும், நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் இந்த அடுப்பு தரையில் இருந்து பள்ளம் தோண்டி வைத்து இருப்பர், அதனில் இருந்து ஒரு சுரங்கம் போன்று அமைத்து தூரத்தில் முடியும், அங்கு இருந்துதான் விறகும், தேங்காய் மட்டைகளும், பனைமர இலைகளும் கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். பதநீரை ஒரு சிறிய டம்பளரில் மட்டுமே குடித்து பழகிய நமக்கு அங்கு குடம் குடமாய் அள்ளி ஒரு பெரிய வாணலியில் ஊற்றுவது கண்டால் ஆச்சர்யமாகவே இருக்கும்!


ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் பிரவுன் நிறமாக மாறி பின்னர் கெட்டியாக ஆக ஆரம்பிக்கும். அதை சரியான பதம் பார்த்து ஒரு கட்டத்தில் தீயை அணைப்பாரகள். பி்ன்னர் தரையில் தண்ணீர் தெளித்து, அதன் மீது இப்போது ஒரு பருத்தி சேலையினை தண்ணீரில் பிழிந்து விரிப்பார்கள். பின்னர் வரிசையாக கொட்டாங்குச்சியை அடுக்கி வைப்பார்கள். இப்போது ஒரு சிறிய ஜக்கில் சிறிது ஆறி இருந்த காய்ச்சிய பதநீரை எடுத்து வந்து இந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்றுவார்கள். கொஞ்சம் கூட கூடுதல் குறைச்சல் இல்லாமல் ஒரே அளவில் அந்த கொட்டாங்குச்சிகளில் ஊற்ற வேண்டும்! இப்படி ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை காய வைத்து, அந்த கொட்டாங்குச்சியை எடுத்து டக்கென்று தட்டினால் கருப்பட்டி ரெடி !!


புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது. இவ்வளவு சிரமம் கொண்டு கருப்பட்டியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுவோமே...


கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். 


அடுத்த முறை உடன்குடி வழியாக சென்றால் இந்த ஊரின் சிறப்புமிக்க கருப்பட்டியை வாங்கி வாருங்கள், அப்படியே இந்த ஊரின் ஸ்பெஷல் கருப்பட்டி காபியையும் குடித்து வாருங்கள் !!

Wednesday, 14 October 2015

பனைவெல்லம், கருப்புக்கட்டி, கருப்பட்டி, உடன்குடி....

இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம்! ஆனால் இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டிஊ்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்...... கருப்பட்டியில் பிரபலமான ஊர் ஒன்று உண்டே...... ஆங்...... உடன்குடி!

உடன்குடி 
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும். உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் அடர்ந்த ரோட்டில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதியான ஊர் எனலாம் !

நம் தமிழ் நாட்டின் மாநில மரம் எது தெரியுமா ? பனை! பனை (Palmyra Palm),புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில்வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை.  சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் இரு வகை உண்டு..... கரும்பு வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதில் பனை வெல்லம் என்பதை கருப்பட்டி என்கிறோம் ! கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால்பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும்.கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறுஆனதோ, அது போல. இன்றுகருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது. 

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

இப்படி எடுக்கப்பட்ட பதநீரைதான் காய்ச்சி கருப்பட்டி செய்கின்றனர். அதில் என்னவெல்லாம் அடங்கி இருக்கிறது, எப்படி அப்படி ஒரு வடிவத்தில் செய்கிறார்கள், அதை எப்படி அனுப்புகின்றனர் என்றெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா ?!

Sunday, 11 October 2015

திரை உலகை ஆட்சி செய்த ஆச்சி மனோரமா....



தமிழ் சினிமாவில் பச்சைத் தமிழர்களை காண்பதே அரிதாகி விட்டதென்ற சூழலில், அரை நூற்றாண்டுக்கு முன்னாரே தமிழ் திரை உலகில் அறிமுகமாகி நேற்று இரவு மூச்சிரைப்பால் அவதிப்பட்டு, மாரடைப்பால் மறையும் வரை செல்லமாக ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரமா என்ற இந்த தமிழச்சி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் திரை உலகையே ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்றால் மிகையாகாது!
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: மே 26, 1943
பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணி: திரைப்பட நடிகை   
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு 
கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943  ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
நாடகத் துறையில் ஒரு பயணம்
ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.
கலையுலக வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’,  ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.
தனிப்பட்ட வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
  • தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
  • 1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
  • 2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
  • 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
  • மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
  • கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
  • ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
  • சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
அன்னாரது மறைவு நம் தமிழ் சமூகத்துக்கு திரை உலகில் மிகப்பெரிய இழப்பாகும்!!!