Showing posts with label கக்கன். Show all posts
Showing posts with label கக்கன். Show all posts

Saturday, 21 November 2015

இப்படியும் ஓர் அரசியல்வாதி? கக்கன் அவர்கள்!

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிய அவனிடம் அதிகாரத்தை குடுத்துப் பார் என்பர்!

ஆனால் கடைசி வரை பெரியார் அதிகாரத்திற்கே வராமல் விமர்சனங்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை தள்ளிவிட்டார்! 

துக்ளக் பத்திரிக்கை நடத்தும் சோவுக்கும் அவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை!

பதவி, அதிகாரங்கள் கைக்கு வந்த பின்னர் தீரா வியாதி (திராவிட) குஞ்சுகள் சம்பாதித்த சொத்துக்களும் , பண்ணிய, பண்ணிக் கொண்டிருக்கும் அட்டூழிங்களும் நாம் அறிந்ததே!

(விருதுநகரில் கூட்டங்களுக்கு பேச வரும் போதெல்லாம் கா. காளிமுத்துவும், கருணாநிதியும் டீக்கு காசில்லாமல் தெப்பத்து மேட்டை சுற்றி வந்ததாக எங்க ஐயா சொல்வார்!)

ஆனால் பதவியும், அதிகாரமும் கையில் இருந்தும் அனுபவிக்க குடும்பம் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்ந்த கக்கன் போன்றோரை தமிழ் சமூகம் எப்படி மறக்கின்றது?

ஒரு வேளை அவரை போல் மறந்தும் யாரும் இருந்து விடக்கூடாது என்று நாம் நினைக்கிறோமா?! அவரை நினைவூட்டினால் நாம் பிழைப்பு நடத்த முடியாது என அதிகார வர்க்கம் நினைக்கிறதோ??!

அவரை எல்லாம் தமிழக காங்கிரசும் மறந்து விட்டதே... அது சரி தமிழே தெரியாத நடிகைகளை வைத்து கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக காங்கிரசுக்கு எங்கே தெரிய போகிறது அவர்கள் வரலாறு!!

பதவி கையை விட்டு போன அடுத்த நொடியே, அரசு குடுத்த காரை அலுவலகத்திலேயே விட்டு விட்டு, சொந்த காசில் நகர பேருந்தில் வீட்டுக்கு சென்றவர் தும்பைபட்டி தூயவன்.

வயதான காலத்தில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கக்கன் அவர்களை, அடையாளம் தெரியாமல் கீழே படுக்க வைத்தது நிர்வாகம். அப்போது தற்செயலாக வந்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் அவரை அடையாளம் கண்டு எது வேன்டுமானாலும் செய்து தர தயாராக இருந்தார். அதுவும் வேண்டாம் என்றாராம் கக்கன். நல்லபடியாக அவரை கவணிக்க சொல்லி மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி விட்டு சென்றாராம் எம்ஜியார்!

இவரை போன்ற நல்ல, நாணயமான, ஒழுக்க சீலர்களை எல்லாம் பற்றி எல்லாம் படிக்காமல், எட்டு கல்யாணம், பத்து கல்யாணம் பண்ணியவர்கள் பற்றியும், தொண்ணூறு வயதில் இருபது வயது பெண்ணை திருமணம் செய்தவர்கள் பற்றிய வரலாறையும் படித்தால் எப்படி சமூகத்தில் நல்ல சிந்தனை வரும்??!!

Wednesday, 11 November 2015

நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் கக்கன் அவர்கள்.

நான் பெருந்தலைவரை பற்றி பதிவுகள் போடும் போதெல்லாம் சாதிய அடிப்படையில் அவரை நான் கொண்டாடுகிறேன் என பலர் நினைத்திருக்கலாம். (என் சமூகத்தவர் உட்பட!) ஆனால் அவரை விட நான் மதிக்கும் நபர் ஒருவர் உண்டென்றால் அது மாபெரும் தலைவர் கக்கன் அவர்கள். பெருந்தலைவர் நாட்டுக்காக குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்தார், ஆனால் நாட்டுக்காக தன் குடும்ப நலனையே தியாகம் செய்தவர் கக்கன் அவர்கள். அவரை அவர் சமூகம் தூக்கி பிடிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்குன்டு!

சாதாரண மனிதர்களாய் இல்லாமல், சாதனை மனிதர்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர், 
எளிமையின் அடையாளம், கக்கன்!மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909ல் கக்கன் பிறந்தார். தந்தை பூசாரிக் கக்கன். தாயார் குப்பி. இவர், நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்.

25.01.1934ல் மதுரை வந்த காந்தியடிகள், 'மதுரை காந்தி' என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர்., சுப்பு
ராமனின் வீட்டில் தங்கினார். அங்கு தான் சுப்பராமனால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன்பின் காந்தியோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இதன்மூலம் காந்தியம் மற்றும் சர்வோதய கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் வைத்தியநாத அய்யருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 8.7.1939ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த ஆலயப்பிரவேசத்தில் கக்கனும் பங்கேற்றார்.

செல்லுமிடமெல்லாம் 'வந்தே மாதரம்...' சொல்லி நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார். இதை கண்காணித்த ஆங்கில அரசு, அவரை கைது செய்தது.விடுதலை போராட்ட காலங்களில் இரவு நேரத்தில் கூடுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு எடுப்பதும் வழக்கம். சில நேரங்களில் போலீஸ் கண்காணிப்பில் இருந்து பெண் வேடமிட்டு தப்பிப்பார். 
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து அவரை கைது செய்தது.மேலூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் எதையும் அவர் சொல்ல மறுத்தார். இதனால் ஐந்து நாட்கள் தொடர்ந்து கசையடி கொடுத்தனர். அதை பார்க்க அவரது மனைவி அழைத்துவரப்பட்டார். இக்கொடுமையை பார்த்து கண்ணீர் சிந்தினார். தம்மை இழந்து பிறரை காப்பாற்றும் மன வலிமையும் எந்த சூழலிலும் எவரையும் காட்டிக்
கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன்.

ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. தேசிய காங்கிரசின் 70வது ஆண்டு அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. அது 'திறன் மிக்க நிர்வாகி' என கக்கனை அடையாளம் காட்டியது. மாநாட்டுக்கு தலைமையேற்ற பிரதமர் நேரு, அவரை குறிப்பிடும் போதெல்லாம் 'கக்கன்ஜி..." என்றே அழைத்தார். அதன் பிறகு பிற தலைவர்கள் அனைவரும் அவரை அவ்வாறே அழைத்தனர்.
1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காமராஜரின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியை தொடங்கிட உத்தரவிட்டார். 'கல்வியே ஆன்மாவின் உணர்வு. அது இன்றேல் நம் ஆற்றல்கள் செயலற்று போகும்' என்பதை அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டு வசதி வாரியம் அமைத்து குடிசை வாழ் மக்களுக்கும் கிராம வாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார்.

பதவி மயக்கம் இல்லாதவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னறிவிப்பின்றி மதுரை வந்தார். எப்போதும் போல அரசு பயணியர் மாளிகைக்கு சென்றார். அப்போது இரவு 10 மணி. அங்கு யாரோ தங்கியிருந்தனர். "தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அதிகாரிகள் சமாளித்தனர். கண்காணிப்பாளரோ "அங்கு தங்கியிருப்பவரை காலி செய்ய சொல்கிறேன்" என்று விரைந்தார். ஆனால், "அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரும் நம்மை போல மனிதர்தானே" எனக் கூறி, ரயில்வே காலனியிலுள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிகப் பெரிய மரியாதையாக கருதினார்களோ அதை மிகச் சாதாரணமாக அன்று அவர் கருதினார்.
விளையாட்டு வீரரான தம்பி விஸ்வநாதனை பார்த்து அவரை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க செய்தார், அப்போதைய ஐ.ஜி., அருள். பணி நியமனத்திற்கான ஏற்பாடும் நடந்தது. 
இதை கேள்விப்பட்டு, "விஸ்வநாதனின் வலது கை விரல்கள் சரியாக செயல்படாது. அவனால் 
துப்பாக்கி சுட முடியாது. நாட்டின் பாதுகாவலர் பதவிக்கு எப்படி இவரை தேர்வு செய்யலாம்' என கேட்டு பணி நியமனத்தை நீக்க 
உத்தரவிட்டார்.மக்களால் வழங்கப்பட்ட பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காகவும், பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டிய அந்த நேர்மை விளக்கு, 1981, டிச., 23ல் அணைந்தது.

'ஒருவர் பிரிவால் நம் மனதில் சோகம் சூழ்ந்து அவரை பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது பொருத்தமானது தான்.

- முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 
98430 62817. 

Sunday, 3 May 2015

பெருந்தலைவரும் ஐயா கக்கனும் மண்ணில் வாழ்ந்த தெய்வங்கள்

ஐயா கக்கன் அவர்கள் பற்றியும் பெருந்தலைவர் அவர்கள் பற்றியும் நாம் படித்தாலே இவர்கள் எல்லாம் நாம் வாழும் இந்த பூமியில் நம்மைப் போல்தான் வாழ்ந்தார்களா? நம்மோடுதான் வாழந்தாரகளா? என்ற சந்தேகம் ஏற்படும்! இவர்களைப் பற்றிய பாடங்களும் இவர்கள் வரலாறுகளும் இன்றைய அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே மழுங்கடிக்கப்படுகின்றனவோ என்ற ஐயமும் எழாமல் இல்லை!! இது போன்ற அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் நம்மோடு வாழ்ந்தார்கள் என்பதையும், இதுதான் தூய்மையான அரசியல் என்பதையும் மக்கள் கண்டுவிடக்கூடாது என்பதில் இன்றைய அரசியல்வாதிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஐயா கக்கன் அவர்களின் மகள் வரைந்த இக்கட்டுரையை படித்தாலே பல விசயங்கள் ஆச்சர்யமூட்டும். மாநில அமைச்சர் ஒருவரின் மகள் பள்ளி முடிந்து நகரப் பேருந்துக்காக காத்திருப்பதும், ஒரு மாநில முதல்வர் பள்ளி சிறுமி ஒருவருக்காக தனது காரை வழியில் நிறுத்தி ஏற்றிக் கொள்வதும் இன்றைய நிலையில் சாத்தியமா? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை!!

கக்கன் அவர்களது மகள் திருமதி.கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள்

தன்னலம் அற்ற தன்னிகரில்லாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, நானும் என் சகோதர்களும் ‘பெரியப்பா’ என்றுதான் அழைப்போம். நாங்கள் அப்படி அழைக்கும் போதெல்லாம் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு அவர் பூரிப்போடு சிரிப்பார். அவருடன் மகளைப் போல் நான் பழகி வந்தேன்.

இந்த மகளுக்காக, முதலமைச்சராகிய அவர் ஒரு நாள், சென்னை – கோட்டையிலிருந்து வரும்போது வழியில் காரை நிறுத்தி, என்னை ஏற்றிச் சென்ற நிகழ்ச்சி இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

என் தந்தையாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருடைய வாழ்க்கைப் பாதையின் சில நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதும்பொழுது, ‘பெரியப்பா’ காமராஜர் அவர்கள் என்மீது பொழிந்த பாசத்தின் வெளிப்பாடான அந்த நிகழ்ச்சியையும் தொட்டுக்காட்டத் தோன்றுகிறது.

சென்னை – லேடி வெல்லிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நான் 7ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த சமயம். மாலையில் பள்ளி முடிந்தபின், பேருந்துக்காகக் கடற்கரைச் சாலை ஓரமாக மழைத் தூறலில் நின்றுகொண்டு இருந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த திரு. காமரஜர் அவர்கள் தம் வீட்டுக்குச் செல்ல காரில் வந்துகொண்டு இருந்தார். வேகமாக ஓடிய அந்தக் கார் பின்புறமாகத் திரும்பி வந்தது.

பெரியப்பா அவர்கள், “கஸ்தூரி! காரில் ஏறு!”என்று சிறிது அதட்டுகின்ற குரலில் கூப்பிட்டார்.நானும் உடனே காரில் ஏறிவிட்டேன்.

“நான் பெரியப்பா போகிறேன். நீயோ மழையில் நனைந்துகொண்டு பள்ளிக்கு முன்னால் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறாய். ஏன் இந்தக் காரைப் பார்த்ததும் நிறுத்தவில்லை” என்று அவர் கேட்டார்.

“நீங்கள் ‘சீஃப் மினிஸ்டர்’ (முதலமைச்சர்) நான் எப்படி உங்கள் காரை நிறுத்த முடியும்“ என்று பதிலுக்கு அவரிடம் கேட்டேன்.

அவரோ சிரித்துக்கொண்டே, “சரி… சரி… நீயும் விவரம் தெரிஞ்ச பெண்ணாத்தான் இருக்கே!”என்று, எங்கள் வீடு வரும்வரை பேசிக்கொண்டே வந்தார். எங்கள் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி என்னை இறக்கிவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் மனத்தில் பதிந்துள்ளன.

“நான் கூப்பிட்டேன் என்று உடனே நீ காரில் ஏறிவிட்டாய். இது சரிதான். ஆனால் வேறு யாரும் கூப்பிட்டால் ஏறக்கூடாது!” என்று, ஒரு தந்தைக்கே உரிய வாஞ்சையுடன் அவர் கூறினார். இதை என் தந்தையார் திரு. பூ.கக்கன் அவர்களிடம் நான் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

ஈங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்!”

என்னும் விடுதலைக் கவிஞர் பாரதியாரின் பாட்டு என் நினைவுக்கு வந்தது.

பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்கள் என்னுடைய தந்தையைப் பொதுவாழ்வில் எல்லா நிலைகளிலும் முன்னிலைப்படுத்தி,அமைச்சராகவும் அறிமுகப்படுத்தியவர்.எனவே, அந்த மாமனிதர் ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இக்கட்டுரையைக் காணிக்கையாகப் படைக்கிறேன்.