ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.
காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான். அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான். பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். ’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான். "இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்
படித்ததில் பிடித்தது
இலக்கணம் பாராமல் கருத்தில் மட்டும் கவணம் கொள்ள வேண்டிய பக்கம் இது!! சுட்டிகாட்டப்படும் பிழைகள் கவணத்தில் கொள்ளப்படும். கருத்துக்கள் என்னுடையதே. பயணிப்போம்!!!
Friday, 8 January 2016
கடவுளை தேடி
Wednesday, 21 October 2015
நாயின் வாலா,கரடியின் வாலா??!
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’
ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’
கரடியை பற்றுகிறவர்கள்
காணாமல் போகிறார்கள்
தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.
இந்த கதையை சொன்னவர் மறைந்த பிரபல பேச்சாளர் "இன்று ஒரு தகவல்" புகழ் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள்.
இதில் நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால்....
ஒவ்வொரு தேர்தலிலும் நாயின் வாலை பற்றிக் கொண்டிருந்த நாம், இந்த முறை கரடியின் வாலை பற்றியாகிவிட்டது! முடிவு கரடியின் கையில்!!
Sunday, 11 October 2015
மதவாதிகளிடம் இருந்து தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மத சச்சரவுகளை பார்க்கும் போது வானொலியில் வெகு நாட்களுக்கு முன்னர் மறைந்த சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், வானொலியின் "இன்று ஒரு தகவல்" புகழ் மறைந்த தென்கச்சி கோ. சுவாமுநாதன் அவர்கள் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வந்தது!
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.
டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளிடம் இருந்து தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
Sunday, 17 May 2015
நம்பிக்கை
இது ஒரு தன்னம்பிக்கை கதை மட்டுமே. கருத்தை மட்டும் கவனிக்க வேண்டும் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டாம்...
கலிகாலத்தில் மனிதர்களின் அட்டூழியங்களையும் அதர்மங்களையும் பார்த்த கடவுள் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் பற்றும் அற்றுப் போய் விடுகிறார். கொத்து கொத்தாய் இனப் படுகொலைகள், மதப் படுகொலைகள், வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என மனிதர்களின் அட்டூழியங்களை கண்ட கடவுள் வெறுத்துப் போய் விடுகிறார்! விவேகானந்தர், அன்னை தெரசா என நல்லவர்களை அனுப்பியும் இவர்கள் திருந்தவில்லை!
கடைசியில் வெறுத்துப் போனவர் இனி இவர்களுக்கு மழை பொழியும் மந்திரம் உச்சரிக்கப் போவதில்லை என முடிவெடுத்து விடுகிறார்! பூமியில் மழை பொழிவு நின்று விடுகிறது! பூமி முழுக்க வறட்சி பஞ்சம் என கோரம் தாண்டவமாடுதிறது. குளிக்க தண்ணியில்லை, குடிக்க தண்ணியில்லை விவசாயத்துக்கு வழி இல்லை என ஆகிறது.
ஒரு வழியாக குளிக்காமல் கழுவாமல் வாழப் பழகிவிடுகிறார்கள் மக்கள். யாருமே விவசாயம் பண்ணுவதில்லை. சும்மாவே காவேரியும் பெரியாறும் வருவதில்லை இதில் பல வருடமாக மழை இல்லையென்றால் எப்படி? மழை இல்லை விவசாயம் இல்லை என்பதால் மக்கள் சோம்பேறி ஆகி விடுகின்றனர்.
கடவுள் பிற்பாடு பூமியில் என்ன நிலமை என மனிதர் வேடத்தில் சுற்றிப் பார்க்க வருகிறார். பூமியில் நிலமை இன்னும் மோசமாக மக்கள் படு சோம்பேறியாக விவசாயம், வேலை வெட்டி எதுவும் பார்க்காமல் சோம்பேறியாக சுத்துகி்றனர். கடவுள் பாரத்துக் கொண்டே வரும் பொழுது ஒரே ஒரு மனிதர் மட்டும் வெடித்து பாலம் பாலமாக இருக்கும் அவரது வறண்ட நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்!
அதை பார்த்த கடவுளுக்கு இவன் லூசாக இருப்பானோ என சந்தேகம். அவனையே கூப்பிட்டுக் கேட்கிறார். ஏம்பா பல வருடமாக பூமியில் எங்கும் மழையே பொழிவதில்லை, நீ என்னடாவென்றால் உழுது கொண்டிருக்கிறாய்? எந்த நம்பிக்கையில் உழுகிறாய் என கேட்கிறார். அதற்கு அந்த மனிதர் ,"ஐயா, நீங்களோ நானோ என்ன கடவுளா மழையே பொழியாது என முடிவு பண்ண? என்றாவது ஒரு நாள் கடவுள் மனமிறங்கி மழையை பொழிய வைத்து விட்டால் விவசாயம் பார்க்க வேண்டுமே! அப்பொழுது நான் உழுவது, விதைப்பது போன்ற விவசாய கடமைகளை எப்படி செய்வது என மறந்து விட்டால் கஷ்டமல்லவா? அதனால்தான் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்!
இதை கேட்ட உடன் இப்பொழுது கடவுளுக்கு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது! நாம் மழை பொழிய வைத்து பல வருடங்களாகி விட்டதே, மந்திரம் நினைவில் இருக்கிறதா இல்லையா என தெரியவில்லையே, எதற்கும் ஒரு முறை சொல்லிப் பார்த்துவிடுவோம் எனக் கருதுகிறார். அந்த இடத்திலேயே மந்திரத்தை உச்சரித்தும் பார்க்கிறார். உடனே மழை பொழிந்து விடுகிறது. மற்றவர் நிலமெல்லாம் தரிசாகக் கிடக்க உழுத அந்த ஒரு விவசாயியின் நிலத்தில் மட்டும் விவசாயம் பார்த்து அறுவடை செய்கிறார்! இதைப் பார்த்த கடவுளும் மனம் மாறி விடுகிறார்!
நம்பிக்கை அவசியம் மக்களே....
