Monday 9 May 2016

நடிகர் சி.எல்.ஆனந்தன்

அட... அந்த ஹிட்டான பாடல் ஆனந்தன் படத்திலா வருகிறது என்று நாம் வியக்கும் அளவுக்கு அருமையான பாடல்கள் இவர் நடித்த படங்களில் இடம் பெற்றன. இவர் சான்றோர சமூகத்தவர் எனபது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் இவரது சொந்த ஊர் மற்றும் பெற்றோர் உடன் பிறந்தோர் விபரங்கள் கிடைக்கவில்லை! யாருக்கும் தெரியுமா? தகவல் குடுத்தால் உதவியாக இருக்கும். வாள் வீச்சில் புது லாவண்யத்தை கொண்டு வந்தவர் இந்த வாள் வீச்சு வீரர்.

தமிழ்த் திரையில் எம்.ஜி.ஆர், ரஞ்சன், ஸ்ரீராம் ஆகியோருக்கு அடுத்து வாள்வீச்சில் வல்லவராக இருந்தார் சி.எல்.ஆனந்தன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவருடனும் பல படங்களில் நடித்தவர் சி.எல்.ஆனந்தன். விஜயபுரி வீரன் ஆனந்தன் என்றே ஊடகங்களாலும் மற்றவர்களாலும் இவர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்.
படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும் கோஷ்டி நடனக்காரராகவும் நடித்து வந்த சி.எல்.ஆனந்தனை நாயகனாக்கி, THREE MUSKETERS படத்தை தமிழில் விஜயபுரி வீரன் என்ற பெயரில் தயாரித்தார் சிட்டாடல் ஃபிலிம்ஸின் அதிபர் ஜோசப் தளியத். ஆனந்தன் பெயரே அவர் நடித்த வேடத்தின் பெயராகவும் இப்படத்தில் அமைந்துள்ளது. டி.கே.எஸ்.நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா என்பவரை இப்படத்தின் நாயகியாக நடிக்க வைத்தனர். இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தில் ஆனந்தனின் வாள் வீச்சைக் கண்டு தமிழ்த் திரையுலகமே சற்று பிரமிக்கத்தான் செய்தது.

குடும்பக் கதைகளையே தயாரித்த ஏவி.எம். நிறுவனத்தின் முதல் சண்டைப் படமாக வீரத்திருமகன் படம் அமைந்தது. ஏவி.எம். நிறுவனத்திற்காக ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய முதல் படம் இது. இப்படம் ஏவி.எம். என்ற பெயரில் வராமல், முருகன் பிரதர்ஸ் என்ற பெயரில் திரையிடப்பட்டது. தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக மெüண்ட் ரோடில் நியான் ûஸன் விளம்பரம் செய்யப்பட்டதும் இப்படத்திற்குத்தான். முதன் முதலில் தண்ணீரில் செட்டிங் போட்டு எடுத்த படமும் இதுவாகத்தானிருக்கும். நீலப் பட்டாடை கட்டி பாடல் காட்சிக்காக சென்னைக்கருகிலுள்ள துரைப்பாக்கத்தில் தண்ணீர் சூழ்ந்த பகுதியில், ஒரு தாமரைப் பூவும் அதைச் சுற்றிலும் 24 தாமரை இலைகளும் அமைக்கப்பட்டு படமாக்கப் பட்டது.

இப்படியான பலவிதங்களில் முதன்மையான வீரத்திருமகன் படமானது, விஜயபுரி வீரன் படத்தைப் போல வெற்றி பெறவில்லையென்றாலும் சுமாரான வெற்றியைத் தொட்டது.
நானும் மனிதன்தான் என்ற படத்தை ஆனந்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்தார். இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், ஆனந்தன் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை அவருக்கு பெற்று தந்தது. விஜயபுரி வீரன் படத்தில் நடித்த பாண்டி செல்வராஜ் என்பவர், இப்படத்தில் நடித்ததுடன் இப்படத்தின் கதை வசனத்தையும் எழுதியுள்ளார். பஞ்சு அருணாசலம் முதன் முதலாக எழுதிய திரைப் பாடல் இப்படத்தில்தான் இடம்பெற்றது.

இவர் பெண் வேடமிட்டு நடித்த ஒரே படம் வீரத்திருமகன் படம் மட்டுமே. இப்படத்தில் வரும் வெத்தல போட்ட பத்தினி பொண்ணு என்ற பாடல் காட்சியில் டி.எம்.எஸ். குரலில் பாடலை பாடி நடித்துள்ளார் ஆனந்தன்.
சண்டைக் காட்சிகளில் மட்டுமின்றி, மிருகங்களுடன் நடிக்கும் காட்சிகளிலும் (டூப் போடாமல்) இவரே துணிவுடன் நடித்தார். காட்டு மல்லிகை (புலி), செங்கமலத் தீவு (சிறுத்தை), குபேரத் தீவு (கரடி) போன்ற படங்களில் மிருகங்களுடன் நடித்தபோது, மிருகங்கள் தந்த வீர விருதுகளென, இவர் உடலில் காயத்தழும்புகள் இருந்தன.

தனிப் பிறவி படத்தில் நாயகி ஜெயலலிதாவுக்கு சித்தப்பாவாக நடித்துள்ளார் ஆனந்தன். நீரும் நெருப்பும் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஆனந்தனுக்கும் நடக்கும் நகைச்சுவையான வாள் சண்டையில், இடது கரத்தாலேயே வாளை வீசி ஆனந்தனை வெற்றி கொள்வார் எம்.ஜி.ஆர்.
கல்யாண மண்டபம் படத்தில் ஆனந்தன் நாயகன், ரவிச்சந்திரனுக்கு துணை வேடம். நினைவில் நின்றவள், எதிரிகள் ஜாக்கிரதை ஆகிய படங்களில் ரவிச்சந்திரன் நாயகன், ஆனந்தனுக்கு துணை வேடம்.
அடுத்த வாரிசு படத்தில் விரல் நகத்தை கடிக்கும் வீரய்யன் வேடத்தில் நடித்தார் ஆனந்தன். இந்த வீரய்யன், படத்தின் நாயகனைப் (ரஜினியைப்) போல் முகமாஸ்க் போட்டு (ரஜினியாக) நடிப்பார். வில்லத்தனம் வெளிப்பட்டு முகமாஸ்க் எடுக்கப்பட்ட பிறகு வீரய்யன் (ஆனந்தன்) முகத்திலேயே நடிப்பார்.

அந்த ஒரு நிமிடம் படத்தில் நாயகன் கமலுக்கும் வில்லன் ஆனந்தனுக்கும் நடக்கும் வாள் சண்டையில் கமல் ஜெயித்து விடுவார். அப்பொழுது உடனிருக்கும் மகேந்திரன், இதுக்கு விஜயபுரியில இருந்து ஒரு வீரன கொண்டாந்துட்டாங்க என்று நையாண்டி பேசுவார்.

ஆனந்தன் கதாநாயகனாக 11 படங்களிலும், துணை வேடங்களில் 14 படங்களிலும் ஆக மொத்தம் 25 படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்த 11 படங்களும் கருப்பு வெள்ளை படங்களாகும். துணை வேடங்களில் நடித்த 14 படங்களில் நீரும் நெருப்பும், அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப்பூவே, யானை வளர்த்த வானம்பாடி மகன் ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்களாகும்.

ஆனந்தன் கதாநாயகனாக நடித்த 11 படங்களில் கொங்கு நாட்டு தங்கம், செங்கமலத் தீவு, நீயா நானா, குபேரத் தீவு, நானும் மனிதன்தான், லாரி டிரைவர் ஆகிய 6 படங்கள் சமூகக் கதையமைப்பு கொண்ட படங்களாகும், விஜயபுரி வீரன், வீரத் திருமகன், காட்டு மல்லிகை, கல்யாண மண்டபம், தாயின்மேல் ஆணை ஆகிய 5 படங்கள் சரித்திர ராஜா ராணி கதையமைப்பு கொண்ட படங்களாகும்.

சி.எல்.ஆனந்தன் துணை வேடங்களில் நடித்த படங்களும் அப்படங்களின் நாயக நடிகர்களும் 1.எம்.ஜி.ஆர். தனிப் பிறவி, நீரும் நெருப்பும் 2. ஜெமினி கணேசன் பொற்சிலை, மலைநாட்டு மங்கை, யானை வளர்த்த வானம்பாடி மகன் 3. ஜெய்சங்கர் அத்தை மகள், யார் நீ, நான்கு கில்லாடிகள் 4. ரவிச்சந்திரன் நினைவில் நின்றவள், எதிரிகள் ஜாக்கிரதை, 5. ரஜினிகாந்த் அடுத்த வாரிசு 6. கமல் ஹாசன் அந்த ஒரு நிமிடம் 7. விஜயகாந்த் - செந்தூரப்பூவே
நாகேஷ் உடன் 6 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் ஆனந்தன்.

ஆனந்தன் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பதற்கு, ஸ்டண்ட் சுவாமிநாதன் என்பவர் பயிற்சியளித்தார். விஜயபுரி வீரன், வீரத்திருமகன், குபேரத் தீவு, செங்கமலத் தீவு, நானும் மனிதன்தான் ஆகிய படங்களில் இவ்விருவரும் இணைந்துள்ளனர். இன்றைய ஸ்டண்ட் மாஸ்டர் பெப்ஸி விஜயனின் தந்தைதான் இந்த ஸ்டண்ட் சுவாமிநாதன்.

எம்.ஜி.ஆர். மீது மிகப் பற்று கொண்டவராக ஆனந்தன் இருந்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க. தொடங்கிய போது அ.தி.மு.க. வில் இணைந்த முதல் நடிகர் ஆனந்தனேயாவார். அ.தி.மு.க. வுக்காக கட்சி பிரச்சாரங்களும் இவர் செய்துள்ளார்.

சி.எல்.ஆனந்தன் மனைவியின் பெயர் லட்சுமியம்மாள். லட்சுமியம்மாள் பொறுமையும், துணிவும் கொண்டவராக இருந்து, குடும்பச் சுமையை கணவருக்குத் தராமல் தானே நிர்வகித்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். சி.எல்.ஆனந்தன் லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 3 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். சி.எல்.ஆனந்தன் எந்தவொரு விஷயத்தையும் மனம் திறந்து பேசக்கூடியவர். எனது வாரிசுகள் படத்தில் நடிப்பது கலைச் சேவைக்காக அல்ல, வயிற்றுப் பிழைப்புக்காகவே ஆகும், எனது பிள்ளைகள் என்னை காப்பாற்றுகின்றன என்று மனம் திறந்து பேசியவர் இவர்.

இவரின் மகள்கள் டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி, மகன் ஜெயராமன் ஆகியவர்களும் படங்களில் நடித்துள்ளார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ் முதலில் மணந்தது லலிதகுமாரியைத்தான். ஆந்திர படவுலக நாயக நடிகர் ஸ்ரீஹரி, டிஸ்கோ சாந்தியின் கணவர்.
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ஆனந்தன் 25.03.1989 அன்று அதிகாலையில் தமது 56 ஆம் வயதில் காலமானார்.