Monday 9 January 2017

சதுப்பு நிலக் காடுகள் அல்லது அலையாத்தி காடுகள் (Mangrove Forests)

இதை ஆரம்பிக்கும் முன் எனக்கே ஒரு அதிர்ச்சித் தகவல்! தமிழகத்தில் மொத்தம் 39 அலையாத்தி காடுகளும் அதில் 13 அடர் காடுகளாகவும் உள்ளனவாம்!

அது என்ன அலையாத்தி காடுகள்? இவை கடல் அலைகளின் வீரியத்தை குறைத்து திருப்பி அனுப்புவதால் இவற்றிற்கு இந்தப் பெயர். இவை கடலும் நிலமும் சேரும் நதிகளின் முகத்துவாரங்களிலேயே பெரிதும் அமைந்திருக்கும். ஆழம் குறைவான சதுப்பு நிலங்களாக இருப்பதால் இவை சதுப்பு நிலக்காடுகள் என அழைக்கப் படுகின்றன. இவற்றில் வளரும் தாவரங்களே அலையாத்தி தாவரங்கள். இவை ஆக்சிஜன் குறைவான உப்பு நீர் கலந்த மண்ணில் வளரும் தன்மை உடையவைகள். இவை அனைததுமே பல்லுயிர் பெருக்கிகள். அலையாத்தி தாவரங்களில் பல நூறு வகைகள் உண்டு. ஆனாலும் இவை பொதுவாக அலையாத்தி மரங்கள் அல்லது அலையாத்தி தாவரங்கள் என அழைக்கப் படுகின்றன.

இவற்றின் வேர்கள் சுவாசிக்க மண்ணுக்கு வெளியே நிற்பதால் இவை மண்ணரிப்பை தடுப்பவைகள். சுனாமியை பெருமளவில் தாங்கியவை இந்த அலையாத்தி காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது! நிலத்தடி நீரை தக்க வைப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்தி காடு இந்தியாவின் மேற்கு வங்கத்திலும், பங்களாதேசிலும் பரந்திருக்கும் சுந்தரவனக் காடுகள் (Sundarbans). உலகில் புலிகள் வசிக்கும் ஒரே அலையாத்தி காடும் இவையாக மட்டுமே இருக்க முடியும்! மிகப் பெரிய புலிகள் சரணாலயமும் கூட. கங்கையின் செழிப்பான முகத்துவாரங்களில் அமைந்துள்ளவை சுந்தரவனக் காடுகள்! சுந்தரவனக் காடுகள் குறித்து தனி பதிவாகவே பார்க்க வேண்டும். தமிழகத்தின் மிகப் பிரபலமான அலையாத்தி காடுகள் பிச்சாவரம், முத்துப்பேட்டை, முட்டுக்காடு, வேதாரண்யம், பள்ளிக்கரனை போன்றவை.

தமிழகத்தின் மிகப்பெரிய அலையாத்தி காடு பிச்சாவரமே ஆகும். தமிழகத்தின் அலையாத்தி காடுகள் பெரும்பாலும் காவேிரியின் கிளை நதிகளின் முகத்துவாரங்களிலேயே அமைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அலையாத்திக் காடுகள் குறித்து தனி பதிவாகவே பார்க்க வேண்டும்!