Tuesday 30 June 2015

பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும். (பாகம் மூன்று)


புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஜலிங்கப்பாவுடன் பெருந்தலைவர்

இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக் கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல் தவிக்கவைத்தன. காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால், அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை. முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.

அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத் தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார். எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை. காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா, நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும், பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச் செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும் நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர் டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ், இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.

தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத் தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது. தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது, இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா, நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான் கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள் 'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச் சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.

''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால் மிகவும் மனம் நொந்துபோன நேரு, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேரு, என்னையும் சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள் 'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது'' என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (ஐந்தாம் பாகம்)


ஐம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி  நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது. மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் மாண்டனர். வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.


அதில், முன்னால் பிரதமர் இன்றைய பாரதரத்னா வாஜ்பாயும் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டதும், உடல் நலம் கருதி, இறுதிவரை மருத்துவமனை சிகிச்சை யில் தான் இருந்தார். ஏறக்குறைய இருபது மாதம் நெருக்கடி நிலை அமுலில் இருந்த காலத்தில், பெரும்பான்மை மாதங்கள், வாஜ்பாய் பரோலில் வெளியில் இருந்தார். அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடு வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, வாஜ்பாய் வெளியில் இருந்தார். இவ்வாறு நான் சொல்லவில்லை; இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கூறியதைத் தான் நான் மேற்கோள் காட்டுகிறேன்.  இதோடு அவர் நிறுத்தவில்லை. அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, அதன் அன்றைய  தலைவர் பாலாசாகிப் தியோரஸ், ஏர்வாதா சிறையில் இருந்தார். அங்கிருந்து இந்திரா காந்திக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.க்கும், ஜெயபிரகாஷ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து பாடுபடும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத்துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டுவோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளலாம். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார். இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசியல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.

இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங்களால் சுதந்திர போராட்ட தியாகி என பொய்யாக வர்ணிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு எதிராகவே, அன்றைய வாஜ்பாய் அரசால் 2003-இல் படமாக வைக்கப் பட்டுள்ள சவார்க்காரின் வீரத்தையும் சற்று பார்ப்போம். இந்த சவார்க்கர், காந்தி கொலையில் தொடர்புண்டு என்று கைது செய்யப் பட்டவர். முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் விடுதலை ஆனவர். சவார்க்கர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதாக அந்தமான் சிறையில் இருந்தவர்; அவர் சிறையில் இருந்து வெளிவர பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். என்னை பிரிட்டிஷ் அரசு, இரக்கத்தோடும், கருணையோடும் விடுதலை செய்தால், இந்த அரசுக்கு வலி மையான ஒரு விசுவாசியாக இருப்பேன்; அரசு என்ன மாதிரி விரும்புகிறதோ, அந்த வகையில் நான் சேவை செய்ய சித்தமாக இருக்கிறேன். என்மீது கருணையை மேன்மை தாங்கிய தங்களால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இந்த ஊதாரித்தனமான மகன் பிரிட்டிஷ் அரசான பெற்றோரிடம் செல்லாமல் எங்கு செல்ல முடியும். இப்படி எழுதி, வெளியில் வந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் காலத்தை கழித்தவர்தான், இந்த சவார்க்கர். இவர் தான் நாடாளுமன்றத்தில் படமாக வைக்கப்பட் டுள்ளார். இதைவிட அவமானம் நாடாளு மன்றத்திற்கு எதுவாக இருக்க முடியும்? இந்த குறிப்புகளை சதாத்ரு சென் எழுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில், உள் துறை அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து அதன் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இதே போல், நெருக்கடி நிலை பற்றி மூச்சு விடாமல் இருந்த கட்சி புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆரின் அதிமுக!

நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாததினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள்.

Monday 29 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (நான்காம் பாகம்)


அறுபதுகோடி வயிறு நிறைந்திட இருபதம்சத் திட்டம் வந்ததம்மா என்ற பாட்டு ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமா? துர்க்மான் கேட் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதல்களை மறக்க முடியுமா? இறை நம்பிக்கையின் காரணமாக இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மறுக்கின்றனர் என்று இந்துத்துவவாதிகள் சொல்கிற அதே பொய்யை சொல்லிக் கொண்டு, திருமணமாகாத இஸ்லாமிய இளைஞர்களையும் தூக்கிப்போய் இனவிருத்தி நரம்பை அறுத்துவீசிய கொடுமையும் நடந்தது. இது சஞ்சய் காந்தியின் கன்ணசைவிலேயே நடந்தது.

அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. உயிர் வாழ்தலும் கூட அரசின் கருணையின்பாற்பட்டதாய் மாற்றப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. பேச்சைக் குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர் எனச் சொல்லி உழைக்கும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டன. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. அமெரிக்க விமான நிலையத்தில் அண்டர்வேருடன் நிற்க வைக்கப்பட்டபோதும் அவமானப்படாத அளவுக்கு தோல் தடித்துப்போன இன்றைய ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரோஷத்தோடும் போர்க்குணத்தோடும் வாழ்ந்த காலம் அது. ரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்மிக்கத் தலைவராய் அப்போதிருந்த அவரை கேட்டுப் பாருங்கள், தொழிலாளிகள் மீது நடந்த ஒடுக்குமுறைகளின் வன்மையை அவர் கூறக்கூடும்.

 இந்த கும்பலின் அட்டூழியங்களுக்கு எதிரான தலைவர்களையும் அமைப்புகளையும் கண்காணிக்கவும் உளவுசொல்லவும் பணிக்கப்பட்டிருந்த உளவுத்துறை, அந்த வேலையையும் செய்யாமல் சஞ்சய்காந்தியின் பைஜாமாவுக்கு நாடா கோர்த்துக் கொண்டிருந்த விசயத்தை நாடறியும். மாருதி கார் ஊழல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சஞ்சய் காந்தியின் விரலசைப்புக்கு பணிந்து போகுமளவுக்கு உளவுத்துறை துணிச்சலற்றுக் கிடந்தது. அவசரநிலை எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், உயிர்ச்சேதம் விளைவிக்காத டம்மி குண்டுகளை ரயில்பாதைகளின் நெடுகவும் வெடிக்க வைத்து அரசை எச்சரித்தார்கள். இந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒன்றைக்கூட, அப்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தாங்கள் பாராட்டும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை தெரியுமா? குண்டுசத்தம் கேட்டபின் குறட்டையிலிருந்து விழித்துக்கொண்ட அந்த உளவுத்துறை பரோடா டைனமைட் வழக்கு என்ற ஒன்றை நடத்தியது. அதிலும் இன்னார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை.

உளவுத்துறையால் இந்திய மக்களுக்கு விளைந்த நன்மை என்று ஏதேனும் இருக்குமானால், அது, சட்டத்தையெல்லாம் வளைத்து ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் என்பதை ஆறாண்டுகாலமாக மாற்றிக்கொண்ட இந்திராவிடம் தவறான அறிக்கை கொடுத்து அவரை ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தத் தூண்டியதுதான். இப்போது தேர்தல் நடத்தினால் ஜெயித்துவிடுவீர்கள் என்று இந்த உளவுத்துறை கொடுத்த அறிக்கையை நம்பித்தான் எமர்ஜென்சியை விலக்கிக்கொண்டு இந்திரா தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்வினார் என்பதையாவது தாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கருணாநிதி மீதான தனிப்பட்ட விரோதகுரோதங்களுக்காக எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஆதரித்த தவறைச் செய்தார். எமர்ஜென்சியைக் கொண்டுவந்ததற்காக இந்திய மக்கள் தனக்கு வழங்கிய தண்டனையை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் இந்திரா.

பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும். (இரண்டாம் பாகம்)


''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான் நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா அப்படி நடந்துகொள்ளவில்லை.

சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை. முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார். இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார் என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக் குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது. இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம் நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை 35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. 'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு, சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல் எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.

நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப் படுகிறது. அதுவும் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்'' என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா, மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான்  இந்திராவுக்கு லேசான விழிப்பு ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு விழிப்பு இந்திராவுக்கு வந்தது.

''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா அந்தத் தவறை ஒப்புக்கொண்டார். ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில் விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில் நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார். காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது... அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.

''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார் காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம் பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம். பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர் பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில் அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.

Sunday 28 June 2015

சாமான்யன் சக்கரவர்த்தியான வரலாறு - நெப்போலியன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த  மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல்முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்' என்று நெப்போலியனின் வாழ்க்கையை விவரிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய். 



1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே  Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812. 

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது. 

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது. 

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது.  “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது. 

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.


(தகவல் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

Saturday 27 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (பாகம் மூன்று)


ஜூன் 25 பின்னிரவு தொடங்கி 26 அதிகாலைக்குள்ளாக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், மதுதந்தவதே, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய், அத்வானி, முலயாம் சிங், லாலு என நாடு முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது விவகாரமோ நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட விஷயமோ ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும்பாலான செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்பட்டு வந்த பகதுர் ஷா சபர் மார்க் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தில்லியில் 34 அச்சகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. செய்தித்தாள்களை கடைகளுக்கு விநியோகிக்கும் ஏழாயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் கருத்து சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்குள்ளானது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகள் மனம்போன போக்கில் செய்திகளை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றிருந்தனர். எதிர்த்து எழுதும் பத்திரிகைகளுக்கு அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் உருது இதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், அமெரிக்காவின் நியூஸ்விக் ஆகிய இதழ்களின் செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கருத்துரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு 1966ல் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வானொலியும் தொலைக்காட்சியும் இந்திராவின் ஜால்ராக்களாக மாறிவிட்டிருந்தன.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணாக கொண்டாடப்படுகிற நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரத்திற்கும் முறைகேடுகளுக்கும் துணை போகாதிருக்கும் ஜக்மோகன்லால் சின்ஹாக்களும் வி.ஆர்.கிருஷ்ணய்யர்களும் இருக்கிற நீதித்துறை இந்திராவைப் பொறுத்தவரை அநீதித்துறையே. எனவே அதை வெறுக்கவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் அத்துறையை வீழ்த்தவும் இந்திராவுக்கு நூறு நியாயங்களிருந்தன. அதன்பொருட்டு அவர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மனசாட்சியோடு செயல்பட்ட நீதிபதிகள் கடும் அச்சுறுத்தலுக்காளாயினர். மொத்தத்தில் சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுவிக் கொண்டார் இந்திரா.

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக பத்திரிகையாளர் வி.கிருஷ்ணா ஆனந்த் தெரிவிக்கிறார். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். 24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இப்படியான கைதுகளும் சித்திரவதைகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, எந்தவொரு இயக்கத்திலும் தொடர்பு கொண்டிராத எளிய மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் என்பதற்கு உதாரணம்தான் கேரள மாணவர் ராஜன், மங்களூர் மாணவர் உதயசங்கர் ஆகியோரின் மரணம். கடும் சித்திரவதை காரணமாக கன்னட நடிகை சிநேகலதா, திமுக தலைவர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ராபின் கலிதா, போன்றவர்கள் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் பூமிய்யா, கிஸ்தே கவுடு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் உயிர் குடிக்கும் எமனாய் இந்த மண்ணை ஆக்கிரமித்திருந்தது.



தொடரும்...

பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும் (முதல் பாகம்)


ஆரம்ப காலத்தில் பிரதமர் நேரு அவர்கள் பொதுவாக படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது. அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.  அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.

இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.

மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது. இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார். 'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக். மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.

காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜர் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் எந்த அளவுக்கு பெருந்தலைவரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்திருக்கிறது என்று பாருங்கள். இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.

''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.

இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.

தொடரும்...

Friday 26 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (இரண்டாம் பாகம்)

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.

ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்திருக்கிறார். வேறு ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெக்கார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.

ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரண ஆள் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் அவரை இவர், இவர் குடும்பத்தினர் பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் ஒரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுவதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. ராஜனை கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்ற அதிகாரிகளுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.

தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.

இதில் மிகப்பெரிய கொடுமை, இந்த நிகழ்வை நியாயப்படுத்தி எடுக்கப்பட்டு, சக்கை போடு போட்ட திரைப்படங்கள்தான்! இந்த சம்பவத்தை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற மலையாள படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்]மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ்நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என நடிகர் கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிடப்பட்டது.

தொடரும்...

Thursday 25 June 2015

பெருந்தலைவர் - சமூக சீர்திருத்தப் போராளி

  9 ஆண்டுகளே தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த காமராஜரின் புகழை எவராவது மறைத்து விட முடியுமா?   அவர்  ஒரு முதலமைச்சரைப் போல செயல்படவில்லை. சமூக சீர்சிருத்தப் பேராளியாகத்தான் செயல்பட்டார். சாதி ரீதியாக அடிமைப் பட்டவர்களை கல்வி மூலம் மேலே கொண்டு வந்தார். அப்படித்தான் பெரியார் காமராஜரை பாராட்டினார்.

பசியினால் பள்ளி வர முடியாதவர்களை, விரும்பாதவர்களை பல திட்டங்கள் மூலம் வரவழைத்தார்.

ஊழல் என்பதை அண்டவிடவில்லை என்பது ஆச்சரியமல்ல. அவரே அதற்கு முன் உதாரணமாக இருந்து அவர் இறந்த பிறகு அவரின் இரண்டு வேஷ்டி இரண்டு சட்டைகளைத்தான் தமிழ்நாட்டிற்கு சொத்தாக விட்டுச் சென்றார்.

இன்று வரையிலும்  தமிழ்நாட்டில் அவர்  உருவாக்கிய மாற்றங்களைப் போல செய்ய வாய்ப்புள்ளதா? இல்லை எவருக்கேனும் செய்யத்தான் மனம் வருமா?

ஆரம்ப பள்ளிக்கூடங்களை  இனி எந்த கிராமத்திலும் திறக்க தேவையதில்லை.  வேண்டிய அளவுக்கு திறந்தாகி விட்டது. அந்த எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது.  இனி அடுத்த கட்ட கல்விக்கூடங்களை திறக்க நாம் பாடுபட வேண்டும் என்றாரே? 

சாதிகளை ஒழிக்க பெரியார் பேசிக்கொண்டிருந்த போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்ட அத்தனை மனிதர்களையும் கல்வி மூலம் மேலே கொண்டு வந்து நிறுத்தினாரே பெருந்தலைவர். 

தமிழ்நாட்டில் திமுக முதல் முதலாக ஆட்சியைப் பிடித்தது.

"நாம் வெற்றிவிழா கொண்டாடக்கூடாது. மாபெரும் தலைவர் காமராஜர். அவர் தோற்ற நேரத்தில் நான் விழா கொண்டாடுவது முறையல்ல" என்று அண்ணா விழா கொண்டாட்டங்களை  நிறுத்தினார்.

இதற்கு மேலும் காமராஜர் குறித்து அண்ணா தன் தம்பிமார்களுக்கு சொன்ன வார்த்தை  "நான் உங்களைத் தான் வளர்த்தேன். ஆனால் காமராஜர் தான் தமிழ்நாட்டை வளர்த்தார்" என்றார்.

நேரு இறந்த போது "அவர் சவ ஊர்வலம் முடியும் வரைக்கும் எவரும் அடுத்த பிரதமர் குறித்து பேசக்கூடாது" என்று அனைவரையும் அடக்கி வைத்தவர் காமராஜர். இந்திரா காந்தி இது குறித்து பேசிய போது கூட "உனக்கு ஒன்னும் தெரியாது. நீ பேசாமல் வீட்டில் போய் இரு" என்றார்.

இந்திராவை பிரதமராக கொண்டு வந்ததும் காமராஜர் தான்.

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்திரா காந்தி கைது செய்ய ரொம்பவே பயந்து யோசிக்க வைத்த ஆளுமை கொண்டவர் காமராஜர்.

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (முதல் பாகம்)


எமர்ஜென்சி பின்னணி: 
1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார்
நான்கு ஆண்டுகள் நடைபெற்ற  வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்திரா பதவி விலக வலியுறுத்தி ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த தொடங்கின. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து 1975 ஜூன் 25-26 நள்ளிரவில் நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி  இந்திராகாந்தி உத்தரவிட்டார்.

எமர்ஜென்சிக்கு வழிவகுத்த தீரப்பு:
தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது:_ "மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திரா மனு தீர்ப்புக் கூறப்பட்ட அரை மணி நேரத்திற்கெல்லாம், "தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்" என்று கோரி இந்திரா காந்தி சார்பில் நீதிபதி சின்கா முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பை அமுல் நடத்துவது இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்த இருபது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.
இந்திரா காந்தி மந்திரிசபையில் மூத்த மந்திரிகளாக இருந்த ஜெகஜீவன்ராம், சவான், உமாசங்கர், தீட்சித், பிரமானந்த ரெட்டி, சங்கர் தயாள் சர்மா, இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர், "அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா காந்தி அப்பீல் செய்ய இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இந்திரா காந்தி தலைமையில் நாங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் அவர் தலைமை அவசியமானது" என்று அறிக்கை வெளியிட்டனர்.
அப்போதைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய், காஷ்மீரில் தங்கியிருந்த ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து, "கோர்ட்டு தீர்ப்புக்குத் தலைவணங்கி இந்திரா பதவி விலக வேண்டும்" என்று வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிரபல வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23_ந்தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:_ "அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், இந்திரா காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

எமர்ஜென்சி வருது டும் டும் டும்:
இந்திரா காந்தி மத்திய மந்திரிகளையும், இ.காங்கிரசைச் சேர்ந்த முதல்_மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். 
"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.
இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே.
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார்.
தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.
"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

மக்கள் நலனுக்கான எமெர்ஜென்சி!
நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-
"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்

தொடரும்....

Monday 22 June 2015

எனது பேருந்து பிரயாணங்கள் (ஆரம்பம்)!

அது என்னவோ தெரியவில்லை சிறு வயதிலிருந்து இன்று வரை எனக்கு தனியாக பிரயாணிப்பது என்றால் ரயில் பயணத்தை விட பேருந்து பயணத்தையே விரும்புவேன். குழந்தை பிராயத்தில் பயணித்த அனுபவங்கள் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனது பள்ளிப் படிப்பின் ஆரம்பமே பள்ளிப் பேருந்தில்தான் தொடங்கியது. மதுரையில் 1976ல் தவிட்டு சந்தைக்கும்  தெற்குவாசலுக்கும் இடைப்பட்ட ஒரு திருப்பத்தில் (சரியாக இந்திராகாந்தி தாக்கப்பட்ட இடம்) அரசமரத்து நிழலில் பள்ளிப் பேருந்தின் நிறுத்தம் உண்டு. எதிர் சந்தில்தான் வீடு என்றாலும் பேருந்து வருவதற்கு அரை மணி நேரம் முன்பு அங்கு இருக்க வேண்டும் என்பது வீட்டு பெரயவர்களின் உத்தரவாக இருக்கும். இப்பொழுது போலெல்லாம் பெரியவர்கள் உத்தரவை அப்பொழுது உதாசீனப்படுத்தி விட முடியாது. பெரியவரகள் யாராது வந்து ஏற்றி விடுவார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி அரைநாள். வீட்டுக்கு வரும்பொழுதே துணிகள் எல்லாம் பிரயாணத்திறகு கட்டி வைக்கப்பட்டிருக்கும். விருதுநகர்தானே பாட்டி வீடு சனிக்கிழமை மதியானம் கிளம்பி போனால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்தில் விருதுநகர் போய் விடலாம்! மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தான் அப்பொழுது அனைத்து பேருந்துகளும் கிளம்பும். அரசு பேருந்து என்றால் ஒரு மணி நேரம், தனியார் பேருந்து என்றால் முக்கால் மணி நேரம்! (இப்பொழுது தான் கொடுமைக்கென்று ஒன்றரை மணி நேரம் ஆக்குகிறார்கள்!) இரண்டாவது சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி சாயந்திரமே கிளம்பி விடுவோம். ஞாயிறு இரவுதான் வீடு திரும்பல்! இது வாராவாரம் நடக்கும் கூத்து! அந்த சமயங்களில் சன்னல் இருக்கைக்கு அண்ணன் தம்பிகளுடன் சிறு யுத்தமே நடக்கும். சில நேரங்களில் சன்னல் இருக்கைகள் ரத்தக்காவு குடுத்த பின் தான் கிடைக்கும். பெரிய கொடுமை என்னவெனில் அவ்வளவு சிரமப்பட்டு சன்னல் இருக்கை வாங்கி பேருந்து கிளம்பிய சில நிமிடங்ளில் தூங்கி விடுவோம்!

ஐந்தாம் வகுப்பிலிருந்து பள்ளிப்பேருந்து வசதி வீட்டில் மறுக்கப்பட்டு மிதிவண்டி வாங்கி குடுக்கப் படட்து. ஆனால் வெளியூர் பேருந்துகளில் செல்லும் போதெல்லாம் சன்னல் இருக்கை தகராறு தொடர்ந்து கொண்டு தானிருந்தன! ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஒபபந்தங்கள் போடப்படும். அதாவது போகும்போது பாதி தூரம் எனக்கு மீதி தூரம் உனக்கு என்று! அதன் பிறகு +1 முடிக்கும் வரை பள்ளிக்கு சைக்கிள் பயணம்தான். +2 சென்ற பிறகு மோட்டார்சைக்கிள் வாங்கிக் குடுத்தார்கள். (ஒரு பெரிய போராட்டததிற்கு பின்னர்!) சில மாதங்கள் அதில் சென்றது பெருமையாக இருந்ததென்றாலும் நகரப் பேருந்துகளில் வந்த உடன் படித்த மாணவர்கள் அதில் பயணம் செய்யும் பிற பள்ளி மாணவிகளைப் பற்றி பேசுவதைக் கேட்ட பொழுது " ஆகா குமரா மிக அருமையான அனுபவங்களை இழந்து கொண்டிருக்கிறாயடா" என இளமனது அடித்துக் கொண்டது! மறுபடி சிறு போராட்டத்திற்கு பின் புது வண்டியை வீட்டில் நிறுததி விட்டு தினம் நகரப் பேருந்து  பிரயாணம்.

தினம் திருவிழாவாக கொண்டாடிய பேருந்து அனுபவங்கள் அவை! சரியாக சொல்வதென்றால் 1991-92 காலக்கட்டம். அண்ணா நகர் டெர்மிணல்சிலிருந்து கிருத்துவ மிஷன் மருத்துவமனை வரை. மதுரையின் பிரபல பெண்கள் காண்வென்டான புனித ஜோசப் பள்ளியின் பேருந்து நிறுத்தமும் எங்கள் பள்ளி பேருந்து நிறுத்தமும் ஒன்றாக இருந்தது சத்தியமாக எங்கள் தவறில்லை! தினம் தினம் தினம் தீபாவளி என்று பாடாத குறைதான். பெண்களிடம்எல்லை மீறியதில்லை ஆனால் அவரகள் ரசிக்கும் விதத்தில் சேட்டடைகள் கண்டிப்பாக செய்திருக்கிறோம்! மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்த பேருந்துக் காலங்கள் அவை! வீடு இருந்தது அண்ணா நகராக இருந்தாலும் பள்ளி முடிந்தபின் கே.கே நகர், தபால் தந்தி நகர், மகாத்மா காந்தி நகர் என்று தினமும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வீட்டில் விட்டு வரவேண்டிய தலையாய கடமை எங்களுக்கு இருந்தது! எல்லாருடைய பெயர், பிறந்த தேதி சாதகங்கள், மனப்பாடமாய் மனதில் இருந்தன!! 1990கள் வரை 25 பைசாவில் இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணங்கள் இன்று 5 அல்லது 6 ரூபாய் ஆகி விட்டன! தனியார் நகரப் பேருந்து வசதி உள்ள ஊர்களி்ல் மட்டும் 3 ரூபாய் கட்டண வசதி உள்ளது!

அதன் பிறகு கல்லூரி காலம் மூன்று வருடங்கள் வேறு வழியில்லாமல் மோட்டார் சைக்கிளில் கடந்தது! படிப்பு முடிந்த பின் திருப்பூரில் வேலை மூன்று வருடங்கள் ரயில் பயணங்களிலும், மோட்டார் சைக்கிளிலும் கடந்தன. அதன் பிறகு 1997ல் மறுபடியும் மதுரையில் குடும்பத் தொழில். அப்பொழுதெல்லாம் வாரத்தில் நான்கு நாட்கள் வெளியூர் வசூலுக்கு அனுப்பி விடுவாா்கள். அதற்கு பெயர் லையணுக்கு செல்வதென்று சொல்வார்கள். பழங்காநத்தம், ஆரப்பாளையம், அண்ணா பஸ்நிலையம் என மூன்று பேருந்து நிலையஙகள் மதுரையில் அப்பொழுது. பெரும்பாலும் தினம் ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற வேண்டியிருக்கும். அப்பொழுது காலையிலேயே மனதில் அழுத்தம் ஏறியிருக்கும் முதல் நாள் இரவே வீட்டில் பெரியவர்கள் சொல்லி விடுவார்கள் இவ்வளவு வசூல் ஆகியிருக்க வேண்டுமெனறும், இவ்வளவு ஆர்டர் பெற்றிருக்க வேண்டுமென்றும். போட்டி வியாபாரிகளும் சில நேரம் நம்முடன் பயணிப்பார்கள். சிரித்து பேசி டீ, காபி, வடை, சில நேரம் பிரியாணி கூட வாங்கி கொடுத்து நமது வாடிக்கையாளர்களைப் பற்றிய ரகசியங்கள், அவர்களுக்கு நாம் போடும் விலை போன்ற விசயங்களை நம் வாயிலிருந்து கறந்து விடுவார்கள் அண்ணாச்சிகள்! உளறிக் கொட்டிவிட்டு கடையில் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொளவதுமுன்டு!

தொழில் அனுபவங்கள் எப்படி இருந்தாலும் பேருந்தில் வழக்கமாக வரும் கல்லூரிப் பெண்களைப் பார்த்த உடன் மனதுக்குள் வெள்ளை தேவதைகள் இறக்கை கட்டி பறப்பதை தவிர்க்க முடியாது. மதுரையிலிருந்து கிளம்பும் போது ஒவ்வொரு திசையில் பிரயாணிக்கும் போதும் ஒவ்வொரு கலரில் தேவதைகள் மனதில் நாட்டியமாடும். பின்னர் முக்கியமாக சிவகாசி வசூல் முடித்து ஸ்ரீவில்லிபத்தூருக்கு மாலையில் பேருந்து ஏறுவது, திருச்சி வசூல் முடித்து மாலையில் திண்டுக்கல் பேருந்து ஏறுவது, உடுமலை வசூல் முடித்து பொளளாச்சி, பொள்ளாச்சி முடித்து பாலக்காடு என எல்லாமே மாலையில் கல்லூரி விடும் நேரங்கள் தான்! அது ஒரு சேரனின் "ஆட்டோகிராஃப்" காலம் என்றுதான் சொல்ல வேண்டும்!

இன்றும் பேருந்தில் பிரயாணித்துக் கொண்டுதானிருக்கிறேன் ஆனால் பழைய அளவுக்கு சுவாரஸயங்கள் இல்லை. காரணம் பல! முதல் விசயம் குடும்பஸ்த்தனாகிப் போனது! பிறகு சாலையோரப் புளிய மரங்கள் அகற்றப்பட்டது! பிறகு அவசர மனிதர்கள். முனபெல்லாம் பேருந்தில் சுவாரசியமாக மக்கள் பேசுவார்கள். நாம் பேசும் கருத்து அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மறுத்துப் பேசுவார்களேயன்றி கோபப்படமாட்டார்கள். இன்று பக்கத்து இருக்கை மனிதர்களிடம் பேசவே பயமாய் இருக்கிறது. இருக்கையை பகிர்ந்து கொள்ளவே மக்களுக்கு விருப்பமில்லை தற்பொழுது! உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இடத்திலும் சேர்த்து நாம் அமர்ந்து விடுவோமாம். நிறைய பேர் அருகில் இருப்பவரிடம் பேசுவதற்கு கவுரம் பாா்க்கிறார்கள். சிலர் இவர் பேசுவாரோ மாட்டாரோ என சந்தேக்த்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். அதையும் மீறி பேசினால் சினிமா, விளையாட்டு, சாமி, சொந்த ஊர், நாட்டு நடப்பு என எதைப் பற்றி பேசினாலும் சன்டை வந்துவிடுகிறது.

பல நாட்களுக்கு பின்னர் சமீபத்தில் மதுரையிலிருந்து கமுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. மானாமதுரை மட்டும் வித்தியாசமாக புதுமையாக இருந்தது. அபிராமத்திலிருந்து கமுதி வரை பேருந்து பயணமும், பயணிகளும் பழைய மாதிரியே இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. சாலையோர புளிய மரங்களை எண்ணுவதும், பறவைகளை வேடிக்கை பார்ப்பதும், குளம் குட்டைகளை பார்ப்பதும், காட்டு வேலை நடப்பதை பார்ப்பதும் தான் பேருந்து பிரயாணத்தின் சுவாரசியங்கள். தற்பொழுது பொட்டல் காடுகளில் நிறைந்து கிடக்கும் பாலிதீன் பைகளையும், சீமைக் கருவேலைகளும் தான் உள்ளன. முன்னர் எல்லாம் நாட்டுக் கருவேல மரங்கள் குடை போல் அழகாக காட்சி அளிக்கும். பிரயாணத்தின் போது நல்ல நிழல், குளிர்ந்த காற்று தரும். இப்போதுதான் இவைகளை எல்லாம் பார்க்க முடியவில்லையே! பிளாட் போட்டவர்களின் விளம்பரங்களும், பிளாட் போட்ட கல்லும்தான் உள்ளன! பிரயாணிகளைப் போலவே பஸ் ஊழியர்களும் அவசர கதியாகிப் போயினர். மரியாதையான பேச்சு மட்டுமல்ல, கணிவான பேச்சு கூட கிடையாது. பயணிகளை இலவசமாக பயணிப்பவர்கள் போலவே நடத்த ஆரம்பித்து விட்டனர்.

முன்னரெல்லாம் பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் இருந்தன. இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு பேருந்து பிரயாணம் என்பது சிம்ம சொப்பனமாகவே உள்ளது! இருப்பினும் இன்றளவும் பேருந்துகளையும், பிரயாணிகளையும், சாலைகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். முன்பு போல் பட்டாம் பூச்சிகள் பறப்பதில்லை, தேவதைகள் நடனமாடுவதில்லை, சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறார்களின் குறும்புப் பேச்சுகளையும், கல்லூரி மாணவ, மாணவிகளின் இளமைப் பேச்சுகளையும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதிகளின் புலம்பல்கள், கணவர்களின் பெறுமல்கள் என இப்பொழுதும் பேருந்து பிரயாணங்கள் எனக்கு சவராசியமாகத்தான் போய்க் கொண்டிருக்கி்ன்றன. கைபேசி உரையாடல்களை கேட்டுக் கொண்டு வந்தாலே கலகலப்பாக இருக்கத்தான் செய்யும்.

ஆனால் பேருந்து பயணங்கள் எப்பொழுதுமே எனக்கு இப்படி கலகலப்பாக இருந்ததில்லை! நான் பார்த்திருக்கும் பல கோர விபத்துக்கள் இன்று வரை என் மனதை விட்டு அகன்றதில்லை. இரண்டு முறை பர்சை பறி குடுத்திருக்கிறேன். பல முறை சன்டை போட்டிக்கிறேன். பெண்களிடம் கேலமாக நடந்து கொள்ளும் ஆண்களையும் பார்த்திருக்கிறேன், ஆண்களிடம் தவறாக நடக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். வசூலுக்கு போகும்போது வழக்கமாக ஒரே பேருந்தில் ஏறக்கூடாதென்பது வீட்டு பெரியவர்கள் போட்ட முதல் சட்டம். மீறியதால் பண்த்தை பறி கொடுக்கவேண்டிய சூழலுக்கு ஆளானதும் உண்டு! பிறிதொரு சமயம் வயதான பெண்மணியிடம் தங்கச் சங்கிலியை பறித்து ஓட முயன்றவரை பிடித்ததால் தோளில் கத்தி வெட்டுப் பட்ட தழும்பும் உண்டு!

முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் சுடப்பட்டது தெரியாமல் விருதுநகரில் இருந்து பேருந்து ஏறி திருமங்கலம் கடந்து இறக்கி விடப்பட்டு ரயில் பாதையோடு மதுரைக்கு வீடு வரை நடந்தது ஒரு அனுபவம்! கமுதியில் கடைசி பேருந்தை தவற விட்டு பணப் பையுடன் மாட்டு வண்டியில் மானாமதுரை வரை பிரயாணம் செய்தது! பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தீபாவளி சமயத்தில் பேருந்து கிடைக்காமல் உறங்கியது! அதே போல் கண்ணனூரில் ஒரு முறை! மனிதனின் உண்மை முகத்தை பேருந்தில் அவன் தனியாக பிரயாணிக்கும் போது கண்டுவிடலாம் என்பது என் அபிப்பிராயம்! பலதரப்பட்ட தொழிலாளிகள், கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்கள், திருவிழாவிற்கு பலூன் விற்க செல்பவர், முறுக்கு விற்பவர், வடை விற்கும் மூதாட்டி என பலரின் கதையை கேட்கும் அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கின்றன!

சபலமில்லாத மனிதர்களே உலகில் இல்லை என்பதே பேருந்து பிரயாணங்களில் நான் கண்டது. சிலருக்கு பெண் சபலம், சிலருக்கு மண், சிலருக்கு பண சபலம், சிலருக்கு உணவில் சபலம்! தின் பண்டங்களை கூட வீட்டுக்கு தெரியாமல் வாங்கி அவசர அவசரமாக பேருந்தில் முழுங்குபவர்களையும் கண்ட பாக்கியம் உண்டு. பேருந்து பயணத்தின் மிகப் பெரிய இம்சை தூங்கி தோளில் விழுபவர்களும், குறட்டை விடுபவர்களும் தான். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள் தமிழகத்ததை போல் மூலை முடுக்குக்கெல்லாம் பேருந்து வசதி வேறு மாநிலங்களில் கிடையாது. வேறு மாநிலங்களில் போல் நமக்கு ரயில் வசதி கிடையாது. இனி அடிக்கடி பேருந்து பிரயாணங்களில் சந்திப்போம் மக்களே!!