Saturday 27 June 2015

பெருந்தலைவரும் - இந்திராவின் துவேசமும் (முதல் பாகம்)


ஆரம்ப காலத்தில் பிரதமர் நேரு அவர்கள் பொதுவாக படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது. அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.  அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.

இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.

மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது. இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார். 'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக். மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.

காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜர் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் எந்த அளவுக்கு பெருந்தலைவரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்திருக்கிறது என்று பாருங்கள். இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.

''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.

இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.

தொடரும்...

No comments: