Tuesday 19 July 2016

கடவுள் வாழ்த்துக்கு பதிலாக பெருந்தலைவர் வாழ்த்துப்பா

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப்பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், அதைக் கொண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை கர்மவீரர் காமராசரையே சாரும். 1954 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி முறையை கைவிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டப் பள்ளிகளை திறந்ததுடன், தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27 ஆயிரமாக உயர்த்தினார்.

கல்விக்காக குழந்தைகள் அதிக தூரம் அலையக்கூடாது என்பதற்காக அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை தொடங்கினார். குழந்தைகள் கல்விக்கு பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போது மதிய உணவு வழங்கப்படுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் அவர். கல்வி முன்னேற்றம் தான் அவரது முதன்மை பணியாக இருந்தது.

காமராஜரின் காலத்தில் தரமான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுத்தப்பட்டது. சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தவரும் காமராசர் தான். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகளும், நீர்ப்பாசனத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஒரு மாநிலமும், அதன் மக்களும் முன்னேற்ற என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் காமராஜர் திட்டமிட்டு செயல்படுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை வேறு எந்த தலைவருக்கும் இல்லை.

ஆனால், தமிழகத்தில் இன்று கல்வியின் தரம் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் மட்டமானவை, தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் வழிக் கல்வி முடக்கப்பட்டு, சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் ஆங்கில வழிக் கல்வி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

காமராசர் விரும்பிய சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வியை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கல்விக்கு காமராஜர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்க அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல.

கல்விக்கு அவர் ஆற்றிய பணிகளைப் பற்றி தந்தைப் பெரியார் குறிப்பிடும் போது,"கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராஜர் வாழ்த்துப் பாட வேண்டும். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர் தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர்கள் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை எவரேனும் மறுக்க முடியுமா?" என்று வினா எழுப்பியிருந்தார்.

தந்தை பெரியாரின் வினா அர்த்தமுள்ளது. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப் பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday 18 July 2016

பெருந்தலைவரும் - புரட்சித் தலைவரும் (எம்.ஜி.ஆர் பிறந்த தின பதிவு)

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.

1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?

‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.

‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!

அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.

ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.

வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.

‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.

இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

Friday 15 July 2016

நண்பர்களுக்கும், அன்பர்களுக்குமான பெருந்தலைவர் 114வது பிறந்த நாளில் சுய விளக்கம்....

பெருந்தலைவர் மீதான எனது பாசம் அனைவரும் அறிந்ததே... ஆனால் பலரும் எண்ணுவது போல் அது அவரது சாதி மீதான பற்றால் அல்ல. காமராசரது திட்டங்களால் கல்வியறிவும், வேலை வாய்ப்பும், பாசன வசதியும் பெற்ற மக்கள் அனைவருமே அவரை சொந்தம் கொணடாட வேண்டும் என்பதே என் விருப்பம். அன்னை தெரசாவைப் போல் சாதி மதம் இனம் மொழி கடந்த தேசியவாதி பெருந்தலைவர். அவரை நாம் சிறிய சாதி எனும் கூட்டுக்குள் அடைத்து விட வேண்டாம்.

இவ்வளவு வியாக்கியானம் பேசும் நான் காமராசரை பற்றி மட்டுமே பதிவுகள் பதிந்து வருவதன் காரணம் சாதி அல்ல! உண்மையில் பெருந்தலைவரை விட நான் வியக்கும் ஒரு மாமனிதர் உண்டு. அவர்தான் தும்பைப்பட்டி தூயவர் கக்கன் அவர்கள். அவரைப் பற்றிய தகவல்கள் சரிவர கிடைக்காத காரணங்களினாலேயே அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் பகிர முடியவில்லை. காமராசர், கக்கன் இருவர் மட்டுமே தமிழ்நாட்டு அரசியலில் பதவியின் உச்சங்களை தொட்டும் வெறுஙகையோடு வீடு திரும்பியவர்கள். கக்கன் பதவி விலகி திரும்பும் போது அரசுப் பேருந்தில் திரும்பியவர். வயதான காலத்தில் உடல் நலமில்லாமல் மதுரை பெரியாசுபத்திரிக்கு சிகிச்சை எடுக்க வந்தவரை படுக்கை தராமல் தரையில் படுக்க வைத்த போதும் தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதை வெளிக்காட்டாதவர்!

இவர்களது வாழ்க்கை சம்பவங்களை படிக்கும் போதும், பகிரும் போதும் என்னை அறியாமல் கண்களில் நிசமாகவே நீர் கோர்க்கும். இவர்ளைப் பற்றி சமூக பக்கங்களில் பதிவது அவர்களது சமூக இளைஞர்கள் இவர்ளைப் பற்றி எல்லாம் தெரிந்து சாத்வீக வழி முறைகளைப் பின் பற்றி அவர்களைப் போன்ற நேர்மையான தலைமுறையை உருவாக்கட்டும் என்ற பேராசையினால் தான்.

பெருந்தலைவராலும், கக்கனாலும் அவரவர் சாதிக்கு பெருமையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் இருவருமே எந்த சூழலிலும் தங்கள் சாதியை வெளிப்படுத்தி அதனால் பிரதி பலன் அடந்தவர்கள் அல்ல. அதனால் அவர்களை அவர்களது சமூத்தவர்கள் அவர்களது பெருமைகளைக் கூறியும், பகிர்ந்தும் கொண்டாடலாம் ஆனால் தங்கள் சாதி தலைவர்களாகவோ, தங்கள் சாதிக்கு மட்டுமே உரியவர்களாகவோ கூறிக் கொள்ள முடியாது, கூடாது.

இருவருமே தமிழகம் கண்டெடுத்த மாமணிகள், தன்னலம் கருதாத அரசியல் தியாகிகள், உண்மையான எளிமையை ஊருக்கு உணர்த்திய வைரங்கள். இருவம் தமிழகத்தின் பொக்கிசங்கள். இவர்களை தமிழகம் மறப்பதோ சாதியின் அடிப்படையில் வெறுப்பதோ தமிழர்களுக்கும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல!

என்றும் அன்புடன்
Phoenix Tholandi

தயாபரனே....

இருந்திருந்த  காலமெல்லாம் இந்தியாவாய் வாழ்ந்திருந்தாய்!
விருந்துவைத்தே பசியாற்றி  வறுமைபோக்கிக் கல்விதந்தாய்!
பெருமணைகள்  கட்டிவளம்  பெருக்கிவைத்தாய்! பாரதத்தின்
தருமத்தாய்  ஆகிநின்றாய்!  தயாபரனே!  நீவாழ்க!!

-நாஞ்சில் நாட்டு இளைய கம்பர்
Selvaraj Thangaswamy

பெருந்தலைவரது 114வது பிறந்தநாள் விழா பதிவு

முன்னால் முதல்வர் குமாரசாமிராசாவின் திருவுருவப்படத்தை திறப்பதற்காக பாரத பிரதமர் நேரு ராஜபாளைய்த்திற்கு வந்திறுந்தார். முதல்வர் காமராசரும் உடன் வந்திருந்தார். நேருவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு தரபட்டது. யார் யார் நேருவுக்கு மாலை அணிவிப்பது என பட்டியளிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரால் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
விடுதலை போராட்ட வீரர் ஏ.கே.பெருமாள்ராஜா என்ற பேச்சி ராஜா அவர்கள் வீட்டின் வழியாகவும் பிரதமர் நேரு போவதாக பயணத்தில் இருந்தது.

எனவே, தன் தெருவிற்கு வருகின்ற நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்க தியாகி ஏ.கே.பெருமாள் ராஜா விரும்பினார். ஆனால் அதற்கான முன் அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. எனவே, தியாகியாக இருந்தாலும் , பிரதம்ர் நேருவுக்கு மாலை அணிவிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.
அவருடன் இருந்தவர்களும், "அனுமதி இல்லை, எனவே மாலை அணிவித்து மாட்டிக்கொள்ள வேண்டாம்" என அவரை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். விடுதலைக்காக பாடுபட்ட அந்த தியாகி கட்டாயம் மாலை அணிவித்தே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார்.

அதற்க்கான எச்சரிக்கைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.
பாரத பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் இருவரும் ஊர்வலமாக் வந்து கொண்டிருந்தனர். தொலைவிலிருந்தே தியாகி பெருமாள்ராஜா தனது வீட்டில் மாலையுடன் காத்திருப்பதை காமராசர் பார்த்துவிட்டார். உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தை தியாகி பெருமாள் ராஜா வீட்டருகே கொண்டு செல்ல கட்டளையிட்டார். பெருமாள்ராஜாவை கூப்பிட்டு பிரதமர் நேருவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெருமாள் ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு நேருவிற்க்கு மாலை அணிவித்தார். இதன் வழியாக நாட்டிற்க்கு பாடுபட்ட ஒரு தியாகிக்கு நேர்ந்திருக்க கூடிய கசப்பான உணர்வுகளை தவிர்த்து விட்டார்.

இதற்க்கு அடிப்படை காரணம், மாட மாளிகையில் இருந்து ஆட்சி செய்யாமல் மக்களோடு மக்களாக இருந்த காரணத்தால் அவர்களுடைய உண்ர்வுகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடிய தன்மையை பெருந்தலைவர் பெற்றிருந்தார்.

Wednesday 13 July 2016

காமராஜருக்கு நிகரான தலைவரில்லை

காமராஜருக்கு நிகரான தலைவரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பண்புகளை நினைவு கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது.

உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர்

“உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால் நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'’

என்றார்.

அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள் சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.

இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன் முதலாக ஏற்ற முக்கிய பதவி.

நூறு ரூபாயும் பெருந்தலைவரும்

ஒரு முறை சிவகாமி அம்மையார் நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் கட்சிக்கு நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். இதைப்பார்த்த காமராஜர் அந்த ரூபாய் நோட்டை அவரிடமிருந்து பிடுங்கி, நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.

மற்றொரு முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜரைப் பார்த்து நண்பர் ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே காமராஜர்,”தாயாருக்கு செலவுக்கு பணம்அனுப்பி வைக்கிறேன். எனது சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று பதில் அளித்துள்ளார் பெருந்தலைவர்.

அரசையும், கட்சியையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றோடொன்று கலக்காதவர் காமராஜர், மட்டுமே.