Sunday 23 August 2015

யதார்த்தம் மீறாத பெருந்தலைவரின் நகைச்சுவை!

கூட்டத்தைச் சிரிக்க வைக்க காமராஜர் எப்போதும் முயன்றதில்லை. அதுவும் கீழ்த்தரமான கேலி, கிண்டல் என எதிலும் ஈடுபடாததால்தான் இன்று ஈடு இணையற்ற தலைவராகத் திகழ்கிறார்.

அதற்காக நகைச்சுவை உணர்வே இல்லாதவர் என்று நம்பிவிட வேண்டாம். நாட்டு எண்ணமும் நாடு பற்றிய சிந்தனையுமாகவே இருந்ததால், கூட்டத்தை நகைச்சுவையால் ருசிப்படுத்த வேண்டும் என்ற நாட்டமே இல்லாமல் இருந்தார் எனலாம்.

ஆனாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை அவரைப் போலவே காலங்கடந்து வாழும் வயது பெற்றவை எனலாம். அவரது நகைச்சுவை சிந்தனை முடிச்சாக இருக்கும்.

சொல்லும்போது சிரிக்க வைத்துச் சொல்லி முடிந்ததும் சிந்திக்க வைக்கும் செய்திகள் அதற்குள் அடங்கியிருக்கும்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் பெருந்தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர். வந்தவர்கள் அவரிடம் ‘ ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

சாதாரண நகைச்சுவை என்றால் சிரித்துவிடுவார்கள். இதை அவ்வாறு விட்டுவிட முடியுமா?

ஒரு அரசியல்வாதி என்றால், அவன் வாழ்பவனுக்கு வழி தேடுபவனாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்திவிட்டார்.

உள்ளத்தில் இல்லாதது உதட்டில் உலா வராது. தலைவரின் சிந்தனையெல்லாம் வாழும் மனிதனுக்கு வாழும் வழிதேடும் ‘சிந்தனை’ என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அது ஒரு தேர்தல் காலம். நாடெல்லாம் அரசியல் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேடைதோறும் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் மேடைகளிலும் சின்னச் சின்ன பிரச்சார வெடிகள் சில நேரம் வாக்குறுதிகளை வெடித்து மேடையை சிவகாசியாக்கிவிடும்.

ஒருமுறை தலைவர் மேடையில் இருக்கும்போதே ஒருவர், ”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.

இப்போது பெருந்தலைவர் பேச வருகிறார். பேச்சின் தொடக்கமே உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனும்னு நீங்க கேட்கறீங்க. சரி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே தந்துவிடுவதா வச்சிக்குவோம். அப்புறம் அறுக்கிறவன் அறுக்கிறவனுக்கு நெல் சொந்தம் என்பான். அப்புறம் அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கு அரிசி சொந்தம் என்பான்?”

கூட்டம் பலமாகச் சிரித்தது. நடக்காததை நாடக வசனமாக நாவினிக்கப் பேசுவதை நம்பக் கூடாது என்றும், பேசுகிறவர்களும் சிந்திக்க வேண்டும், பேச்சைக் கேட்கிறவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதை யதார்தமான நகைச்சுவைக்குள் ஏற்றிப் பேசும் கலை காமராஜர் அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாகும்.

கேட்பவன் சிந்திக்க தொடங்கிவிட்டால் பேசுபவனும் சிந்தித்துப் பேசத்தொடங்கிவிடுவான்.

எனவே வாக்காளர்களை நோக்கி வாயினிக்க வாக்குறுதிகளை வாரி வீசும் அரசியல்வாதிகள் எப்படியாவது படிக்க வேண்டிய பாடம் இதுவாகும்.

வாழ சூத்திரம் Formula to Live

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்
சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம்
சிவ‌ ச‌ம்போ!

நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம்
நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம்
சிவ‌ ச‌ம்போ!

ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் என்னாளும் ந‌ன்னாளாம்
ம‌றுநாளை எண்ணாதே இன்னாளே பொன்னாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு

உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு 

அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌ எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள் த‌ப்பாக‌ நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்ப‌த்தைத் த‌ள்ளாதே!

க‌ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே தின்னாதே என்பார்க‌ள்.

இதை விட சிறப்பாக மனிதன் வாழ வழி சொல்ல முடியாது! கவியரசரின் வைர வரிகள்!!

Thursday 20 August 2015

சான்றோர் அறியாத சான்றோர் பிரபலம் அசோக் அமிர்தராஜ்.

அசோக் அமிர்தராஜ், இவர் நாம் முன்னர் பார்த்த விஜய் அமிர்தராஜ் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். இவரை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும்படி சொல்லவேண்டும் என்றால், ரஜினிகாந்த 1988ல் நடித்து வெளி வந்த "பிளட் ஸ்டோன்" திரைப்படத்தையும், முதன் முதலில் ஐஸ்வர்யா ராய் நடித்து, இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த "ஜீன்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்! ஹாலிவுட்டில் நூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் ஹாலிவுட் பிரபலம் இவர். தமிழ்நாடு சென்னையில் பிறந்த இவர் தனது 9 ஆண்டு கால சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வாழ்க்கையில்  இந்தியாவிற்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் விளையாடி உள்ளார். விம்பிள்டன் அமெரிக்க ஓபன் விளையாட்டுக்களிலும் விளையாடி உள்ளார். 1976 ஆம் ஆண்டில், விம்பிள்டன் இரட்டையர் போட்டியில், இவரும், இவரது சகோதரர் விஜய் அமிர்தராஜும் அரை இறுதி வரை வந்தனர்.

என்னுடைய விஜய் அமிர்தராஜ் அவர்கள் பற்றிய பதிவை படிக்கத் தவறியவர்களுக்காக: இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காவல் கிணறு. இவர் பிறந்தது (1956 பிப்ரவரி 22) வளர்ந்தது எல்லாம் சென்னையில். இவரது தந்தை ராபர்ட் அமிர்தராஜ் நாடார் மற்றும் தாயார் மேகி (தைரியம்) அமிர்தராஜ் இருவருமே டென்னிஸ் வீரர்ர்கள். இவரது மனைவி பெயர் சித்ரா. இவர்களுக்கு பிரியா என்ற மகளும் (20 வயது), மிலன் என்ற மகனும் (வயது 16) உள்ளனர். நேஷணல் ஜியாகிரஃபிக் நிறுவணத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (CEO) இவர்தான்! இவரது பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவணமான Hyde Park Entertainment நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களை தயாரித்திருந்தாலும் நமக்கு பரிச்சயமான் படங்கள் என சொன்னால்
Bloodstone (1988) ரஜினிகாந்த்
Double Impact (1991) வான் டாம்
Inferno (1998)
The Double (2011)  ரிச்சர்ட் கீர்
Ghost Rider: Spirit of Vengeance (2012) நிக்கோலஸ் கேஜ்
Night Eyes (1 to 3)

2013ல் இவரது சுயசரிதை புத்தகத்தை கூட அவர் வெளியிட்டுள்ளார். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். இஷ்டப்பட்டு கஷ்டப்படாமல் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்பதை இவர் சுயசரிதை மூலம் அறியலாம். சர்வதேச விளையாட்டு முதல் ஹாலிவுட் வரை தமிழர்கள் புகழ் பரப்பிய இந்த நாடார்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே...

Tuesday 18 August 2015

சான்றோர் அறியாத சான்றோர் பிரபலம் விஜய் அமிர்தராஜ்.


விஜய் அமிர்தராஜ், இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும்.ஆனால் இவர் பிறந்தது (1954 டிசம்பர் 14), வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். லயோலாவில் கல்லூரி படிப்பை முடித்தார் இவர். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ் நாடார்; தாயார் மாகி (தைரியம்) அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.

டென்னிஸ் வீரர்களான ஆனந்த் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ் ஆகிய இருவரும் இவரது சகோதரர்கள் ஆவர். ஆனந்த், அசோக் இணை 1976 இல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறினர்.

1970களில், தனது டென்னிஸ் ஆட்டத்தைத் துவங்கிய விஜய் அமிர்தராஜ், அதிக பயிற்சியாளர்கள், உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்கள், உடல் திறமை காக்கும் நிபுணர்கள், இதற்கென தனித்தன்மையுடன் தயாரிக்கப்படும் டென்னிஸ் மட்டைகள் போன்ற எந்தவித நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அளவிற்கு உயர்ந்தவர் ஆவார். 1976 ஆம் ஆண்டில், விம்பிள்டன் இரட்டையர் போட்டியில், இவரும், இவரது சகோதரர் ஆனந்த் அமிர்தராஜும் அரை இறுதி வரை வந்தது, சிறப்பாகக் கருதப்படுகின்றது.

Cystis fibrosis என்ற நுரையீரல் பாதிப்பால் மூச்சிறைப்பு நோயினால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டினால் அந்த நோயை வென்றதாக சொல்கிறார். இவர் 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார்.
1974லும் 1987லும் இறுதிப் போட்டியை அடைந்த இந்திய டேவிஸ் கிண்ண குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1973 மற்றும் 1981 விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறி வந்தார். அவருடைய உச்சத்தில் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். ப்ஜோர்ன் போர்க், ஜிம்மி கோனர்ஸ், மற்றும் இவான் லெண்ட்ல் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி கவனமும் எதிர்பார்ப்பும் பெற்றார்.

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை மணந்தார். தம்பதியினருக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். இவரது குடும்பம் பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில், லோஸ் ஆஞ்சலிஸ் நகரத்தில் செலவிடுகிறது. இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐநா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.

பிரபல ஜேம்ஸ் பான்ட் படமான "ஆக்டபசி"யில் ரோஜர் மூருடன் இணைந்து துணை கதாநாயகனாக பிரிட்டிஷ் உளவாளியாக நடித்தார், பிரபல விண்வெளி திரைப்படமான "ஸ்டார் டிரெக்" நான்காம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இவரது சகோதரரான ஆனந்த் அமிர்தராஜும் பல ஹாலிவுட் படங்களை தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த ஆங்கில படமான "பிளட் ஸ்டோணை" தயாரித்தவர் இவர் சகோதரர் ஆனந்த் அமிர்தராஜே!

1983ல் பத்மஷ்ரீ பட்டம் குடுத்து இந்தியா அவரை கவுரவித்தது. 2013ல் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான விருதினை இவர் பெற்றார். அவ்விழாவில் உரையாற்றும் போது நான்கு தோசைகளைச் சாப்பிட்டுவிட்டு, நான்கு மணி நேரத்திற்கும் மேல் விளையாடிய காலங்களை விஜய் அமிர்தராஜ் நினைவு கூர்ந்தார். டென்னிஸ் விளையாட்டில் தான் முழு நேரமும் ஈடுபடப் போவதாக அறிவித்ததும், சம்பாதிக்கும் வழி அதுவல்ல என்று பலர் தனக்கு அறிவுரை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆடுபவருடைய திறமையைவிட எதிராளியின் தவறுகளே டென்னிஸ் ஆட்டத்தில் 80 சதவிகித வெற்றிகளைத் தீர்மானிப்பதாகவும் அவர் கூறினார்.

போதை பொருட்கள், எச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்றவை குறித்த விழிப்புணர்வு, அவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு போன்றவைக்காக அறக்கட்டளை ஒன்றை 2006ல் தொடங்கி சிறப்பான முறையில் சேவை செய்து வருகிறார் விஜய் அமிர்தராஜ். அமெரிக்காவின் உலக அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட முதல் ஆசிய நாட்டுக்காரர் என்ற பெருமையைப் பெற்றவர் விஜய் அமிர்தராஜ்.

Saturday 15 August 2015

சாதிகள் தூக்கிப் பிடிக்கும் தலைவர்கள்!!

மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்து கோன் ,வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரெல்லாம் அந்தந்த சாதி மக்களால் தூக்கிப் பிடிக்கபட்டதைக்  கண்டு இவர்கள் இப்படி சாதித் தலைவர்கள் ஆக்கப் பட்டு விட்டனரே என்று பலமுறை மனம் வெம்பி இருக்கிறேன்....

ஆனால் காங்கிரசின் மார்க்கெட்டிங் திறமையினால் முன் நிறுத்தப்பட்ட ஆரியர்களான காந்தி, நேரு இருவரைத் தவிர பலரும் கால வெள்ளத்தில் அழித்து ஒழிக்கப் பட்டு விட்டனர்! காந்தி என்ற பெயரையே "பிராண்ட் நேம்" ஆக்கிய பெருமை நேரு குடும்பத்தையே சாரும்! (இன்னிக்கு வரைக்கும் அதை வைத்துதான் அவங்க கஞ்சி குடிக்கிறதே!!)

 திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா, காயிதே மில்லத் என்ற முகம்மது இசுமாயில், திரு.வி.க, கக்கன் போன்றோர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை காணும்பொழுது இந்த சாதி சமுதாயமும் அந்தந்த தலைவர்களை முன்னெடுத்து செல்லவில்லை என்றால் அவர்களும் சரித்திரம், பாடப்புத்தகம், வருங்கால சந்ததிகள் என அனைத்திலிருந்தும் அரசியல் ஆதாயம் பார்க்கும் ஆட்சியாளர்களால் துடைத்தெடுக்கப் பட்டிருப்பார்கள்!!

சுதந்திர வரலாற்றில் கூடவா அசிங்கம் பிடித்த அரசியல்!!

எங்க இருந்து "வந்தது மாதரம்"??!!

இந்தியாவையே கலக்கிய தூக்கு மேடை காசிராஜன், தூக்கு மேடை ராஜகோபாலன்!! மற(றை)க்கப்பட்ட வரலாறு!!

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு 

ஏற்கனவே இதை மறைக்கப்பட்ட வரலாறு என்ற பெயரில் 25-03-2015ல் தூக்குமேடை ராஜகோபால் அவர்களைப் பற்றி சுருக்கமாக பதிவிட்டிருந்தேன். அதன் விரிவாக்கம் ஆகஸ்டு 15ஆன இன்று!

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரம் இந்திய நாடு முழுவதையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுதந்திரப் போரில் தமிழ்நாடு தனது வீரப்புதல்வர்களின் தியாகத்தை வெளியுலகுக்குத் தெரிவித்த நிகழ்ச்சி இது. தூக்குமேடைக்கு அருகில் சென்று மீண்ட இரு பெரும் தியாகிகளின் வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்ட சம்பவம் இது. இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம். 1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம்தான் புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம். இந்தத் தீர்மானத்தின் மீது நேருஜி பேசும்போது ஆங்கிலேயார்கள் தாமாகவே முன்வந்து மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்று உறுதிபட தெரிவித்தார். காந்தி பேசுகையில் இந்தப் போரில் இந்திய சுதந்திரப் போர் வீரர்களுக்கு விடுத்த செய்தி "செய் அல்லது செத்து மடி" என்பதாகும்.

1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அன்றிரவே மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மெளலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் போன்றவர்கள் மாநாடு நடந்த ஊரிலேயே கைதாகினர். உடல் நலம் கெட்டு பாட்னாவில் இருந்த பாபு ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, மகாதேவ தேசாய் போன்றோரும் கைதாகினர். கைதான தலைவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியினர். இவர்கள் ஒரே இடத்துக்குக் கொண்டு செல்லப்படாமல் வெவ்வேறு ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.                                                     

 இந்த ரகசிய நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பம்பாய் முதலான இந்திய நகரங்கள், ஊர்கள், கிராமங்கள் தோறும் மக்கள் திரண்டு பொதுவிடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, ரயில்வே தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன, தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அரசாங்க உயர் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர்.                                                                     
 நாடெங்கும் பெரும் கிளர்ச்சி உண்டாகியது. பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சஞ்சீவி ரெட்டி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைதாகினர். பெருந்தலைவர் காமராஜர் சிறிது காலம் தலைமறைவாகத் திரிந்து போராட்ட உத்திகளை வகுத்துத் தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டுத் தாமாகவே போலீசில் சரணடைந்தார்.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கோவையில் சூலூர் விமான நிலையம் தீப்பற்றி எரிந்தது. புகளூரில் ரயில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டது. தேவகோட்டையில் தியாகிகள் கைதாகி அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சிறை உடைக்கப்பட்டது. திருவையாற்றில் முன்சீப் கோர்ட், பதிவாளர் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது, சீர்காழியில் உப்பனாறு பாலத்துக்கு வெடிவைக்க முயன்றதாக இளைஞர்கள் சிலர் கைதாகினர்.

 காங்கிரஸ் தொண்டர்கள் தவிர, இந்தப் போரில் பொதுமக்களும் பெருமளவில் பங்கு கொண்டனர். கட்சிகளுக்குள் இருந்த வேற்றுமைகள் மறைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடே அல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போரில் முன்னிலை வகித்த திருநெல்வேலியின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு "சுதந்திர சேனை" என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.                         
1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.

ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் "அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது. அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர். 

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர். நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. 

ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர். கை விரலில் ஊசியால் குத்தி ரத்தக் கையெழுத்திட்ட பலரில் குறிப்பாக ஜி.மகராஜன், அமலிபுரம் எஸ்.பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு டி.சிவந்திக்கனி, பரமன்குறிச்சி டி.நாகமணி வாத்தியார், செட்டியார்பத்து எம்.அருணாசலம், வாழவல்லான் டி.பச்சப்பெருமாள், கொழுவைநல்லூர் வி.இரமலிங்கம் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.         

புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர். மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர். செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று 'வந்தேமாதரம்' என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். 

ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர். கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார். சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர். புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர். ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. 

அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார். தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர். மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீச்சில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். 

இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன். 1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 

1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி குடிபோதையில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இவர்களை எதிர் கொண்டான். கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பி.எஸ்.ராஜகோபாலன் எனும் இளைஞரின் நெஞ்சைக் குறிபார்த்து அந்த லோன் துரை தன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுவிட முயற்சி செய்தான். அவன் இருந்த நிலை, துப்பாக்கியைப் பிடித்திருந்த சூழல், இவன் ராஜகோபாலனைச் சுட்டுவிடுவானோ என்று அனைவரும் பதறினர். அப்போது உடன் வந்த பல தொண்டர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வேல்கம்பை உயர்த்தி அந்த லோன் துரையின் மார்பில் பாய்ச்சினார். 

அதே நொடியில் உடன் வந்த தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர். லோன் துரை கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது. லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது. குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து "குரும்பூர் சதி வழக்கு" பதிவாகியது. லோன் துரையின் கொலை "குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யர், ஐ.சி.எஸ். பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர். 1942 அக்டோபர் மாதம் வழக்கு தொடங்கியது. 1943 பிப்ரவரி ஆறாம் தேதி முடிவடைந்து, எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யருக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் அப்படி கோபமோ தெரியவில்லை. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். 

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை! ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை. மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

 நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், "நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?" என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது. இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், "இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்" என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை. மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று. 

அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர முத்துராமலிங்கத் தேவர் ஒரு முயற்சியில் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர். தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார். காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார். 

இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. 'தினமணி' பத்திரிகையும் வேறு பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன.

 உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார். ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி. லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும். அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது. அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

 கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர். இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் "தூக்குமேடை ராஜகோபாலன்", "தூக்குமேடை காசிராஜன்" என்று வழங்கலாயினர். இந்தச் சுதந்திரப் பொன்னாளில் இவர்கள் போன்ற மாவீரர்களைப் போற்றி வணங்குவோம். அப்போதுதான் இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் இந்த மண்ணில் தோன்றுவார்கள். வாழ்க குலசேகரப்பட்டினம் தியாகிகள் புகழ்!!

Friday 14 August 2015

காலத்தால் கரைந்து போன "கல்லா மண்ணா?"

பாழாய் போன கிரிக்கட்டாலும் இன்னபிற மேற்கத்திய விளையாட்டுக்களாலும் கரைந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல உண்டு அவற்றில் கபடி, கில்லி தாண்டு, குதிரை தாண்டு, பம்பரம், சில்லாக்கு, கோலி குண்டு என்று வரும் வரிசையில் நானே மறந்து போன விளையாட்டு ஒன்று உண்டு. அதன் பெயர் "கல்லா மண்ணா?"! விருதுநகரில் எங்கள் சிறுவர் பருவத்தில் பெரும்பாலான வீடுகளில் கண்டிப்பாக பெரிய திண்ணைகள் உண்டு, வீடுகளும் மிக விஸ்தாரமாக இருக்கும். தலைவாசல் ஒரு தெருவிலும், கொல்லைப்புற (பின்புற) வாசல் இன்னொரு தெருவிலும் இருக்கும். பெரும்பாலும் ஒரு தெருவில் ஒரே வகையறாக்கள் எனப்படும் பங்காளிகளே இருப்பர். எனது பெயரில் இருக்கும் "தோலாண்டி" என்பதும் ஒரு வகையறா எனப்படும் விருதுநகர் நாடார் குடும்பப் பெயரே. தோலாண்டிகள் அனைவரும் பங்காளிகள். இவர்களைப் போல் ஒரே வகையறாக்களுக்குள் பெண் எடுத்தல் குடுத்தல் இருக்காது. ஒரு வகையறாக்கள் அனைவரும் ஒரு குலசாமி கும்பிடுவர். அனைவருக்கும் மூதாதையர் ஒருவராக இருப்பார்! தலைப்பை விட்டு வெகுதூரம் செல்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்வதில் என் பள்ளிப் பருவம் திரும்பியது போன்ற ஒரு மகிழ்ச்சி, அதனால் தொடர்கிறேன்!

ஒரு தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் அங்காளி பங்காளிகள் என்பதால் விடுமுறை காலங்களில் அவரவர் வீட்டு பேரப் பிள்ளைகளால் அந்தந்த வீதிகள் அல்லோலப்படும். யார் வீட்டு பேரன் எவர் வீட்டில் விளையாடுகிறார், எவர் வீட்டில் உண்கிறார் என்ற கணக்கெல்லாம் கிடையாது! இவர் வீட்டு பிள்ளையை இவர்தான் கண்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அதனால் தான் சின்ன தாத்தா, பெரிய தாத்தா என அனைவர் வீட்டு பேரப்பிள்ளைகளும் ஒன்றாக விளையாட முடிந்தது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் இன்று போல் கிடையாது! ஆண் பிள்ளைகள் விடுமுறை தினங்களில் வீடு தங்கினாலே "ஆம்புள பயலுக்கு பொட்டைப் பிள்ள மாதிரி வீட்ல என்னடா வேலை?" என்று திட்டி வெளியில் பத்தி விடுவார்கள்! சாபாட்டு நேரத்துக்கு வீடு வந்தால் போதும்! வீதிகளும், வீட்டு படிகளும் பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் பெரிய செவ்வக வடிவ கற்கலாலேயே வேயப்பட்டிருக்கும்! அதிலும் சந்துக்கள் ஒரு கார் போகுமளவுக்கு குறுகலாகவே இருக்கும். பெருமாபாலான சந்துக்கலில் கார் உள்ளே புகாத அளவுக்கு குத்துக்கல் நட்டிருப்பர். கார் அல்லது வேறு பெரிய வண்டிப் போக்குவரத்து இல்லாததால் அந்த சந்துக்களில் விளையாட்டுக்களுக்கு பஞ்சமிருக்காது. அதில் முக்கியமானது "கல்லா மண்ணா?" இந்த விளையாட்டு ஊர் ஊருக்கு வேறு விதங்களில் இடங்களின் சூழல் பொருத்து விளையாடப் பட்டிருக்கும்!

முதலில் "சாட் பூட் திரி!" போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவரே அனைவரையும் அவுட் ஆக்க வேண்டியவர். படிகள் "கல்" எனவும் தெருவே "மண்" எனவும் உருவகப் படுத்தப் பட்டுவிடும்! பெரும்பாலும் அவர் மண் என கருதப்படும் தெருவில் நின்று கொள்வார். மற்றவர் அனைவரும் படிகளில் நின்று கொள்வர். தெருவில் இறங்கும் எவரும் அவரால் தொடப்பட்டால் "அவுட்' என கருதப்படுவர். பின்னர் அவர் மண்ணில் நிற்பார், கல்லிலிருந்து மண்ணுக்கு வருபவர்களை பிடிக்கும் பொறுப்பு அவரது. வீதியில் இறங்கினால் பிடிபடுவோம் என தெரிந்தே நாம் நிற்கும் படிக்கட்டிலிருந்து எதிர் வீட்டு படிக்கட்டுக்கு ஓடுவதே இதில் உள்ள திரில்! படிகளை தாண்டாவிட்டால் நாம் அவுட் ஆகப்போவதில்லை என்றாலும் அவற்றை தான்டி மன்ணில் நிற்பவரை நம்மை பிடிக்க தூண்ட வேன்டும் என்ற ஆவலும் ஆர்வமுமே நம்மை விளையாடத் தூண்டும்! இந்த விளையாட்டு பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் கருங்கல் மீதான் விளையாட்டு என்பதால் கீழே விழும்போது மண்டை பிளப்பதும், பல் உடைவதும் சகஜமாகும்! கடும் வெயிலிலும், வெயிலின் தாக்கம் அறியாமல் ஆடுவோம். மழை பெய்தால் கூடுதல் ஆனந்தமே. இப்பொழுது போல் வெயிலில் ஆடக்கூடாது, மழையில் ஆடக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத காலம்.

தங்கை பிள்ளைகளை அக்கா திட்டுவதும், அக்கா பிள்ளைகளை தங்கச்சி திட்டுவதும் பெரிதாக்கப் படாத காலம்! அதே போல் அண்ணன் பிள்ளைகளை தம்பி கண்டிக்கலாம், தம்பி பிள்ளைகளை அண்ணன் கண்டிக்கலாம். தன்டனைகள் பெரும்பாலும் தீய பழக்கவழக்கங்களை கண்டிப்பதற்காக இருக்குமே ஒழிய படிப்பு சம்பந்தமாக இருக்காது. படிப்பை விட ஒழுக்கம் மட்டுமே பெரிதாக வீட்டிலும் பள்ளிகளிலும் கருதப்பட்ட காலமது! மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் "கல்லா மண்ணா!" போன்ற மண்ணோடு இணைந்த விளையாட்டுக்கள் எப்படி கல்லறைக்கு போனதோ, அதே போல் நல்ல பழக்க வழக்கங்களும் மண்ணுக்கு போய்க் கொண்டிருக்கின்றன! ஓடி விளையாண்ட காலம் மலையேறிப் போய், ஜிம்மில் ஒடும் காலக்கட்டதில் வாழ்கிறோம்.

இந்த தலைமுறை மண்ணுடன் தொடர்பறுந்து போய் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் விண்ணில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றது! கல்லா மண்ணா விளையாட அன்று எதிரெதிர் வீட்டில் இருந்த படிக்கட்டுகளும், உறவுகளும் கூட தொலைதூரம் விலகிப் போய்விட்டன!! கணினியில் நம் சந்ததியினர் 'கேண்டி கிரஷ்" விளையாட ஆரம்பித்து விட்டனர். மிகப் பெரிய பேரிழப்பை நாம் இந்த தலைமுறைக்கு கொடுத்திருக்கிறோம்!! மலரும் நினைவுகள் தந்த ஆனந்தத்துடன், இந்த தலைமுறையின் இழப்புக்கள் தரும் வருத்தத்துடன்!!!

Wednesday 12 August 2015

பெருந்தலைவர்-காவியத் தலைவர்

நினைத்தாலே பிரமிப்பாகத் தான் இருக்கிறது - கர்மவீரர் காமராஜரைக் குறித்து! 

தன்னைத் தானே கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்த மனிதன் இந்த நாட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு காமராஜர் தான்!

பற்றுகள் இல்லாமல் அவர் வாழ்ந்த பத்திய வாழ்வு தான் அவரை பெருந்தலைவராக்கியது. இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு பொற்கால ஆட்சியை சாத்தியமாக்கிற்று.

பதவிகள் இருந்தும் பற்றற்று வாழ்வது துறவிலும் உன்னத துறவாகும்! 

அதிகார பலங்கள் அபரிமிதமாய் வாய்த்திருந்த போதிலும் ஆத்மபலத்தை மட்டுமே பயன்படுத்தி வாழ்வதற்கு பெரிதும் பக்குவம் தேவை.

அவர் காந்திய யுகத்தால் கட்டமைக்கப்பட்ட தலைவரல்லவா...?

மெத்தப்படித்த மேதாவியான பண்டித ஜவஹர்லால்நேருவே காமராஜரின் யோசனைகளை கேட்டுப் பெற்றார் என்றால், சமூகத்தை படித்ததில், மனிதர்களை மதிப்பீடு செய்வதில், பட்டறிவில், அனுபவஞானத்தில் காமராஜர் ஓர் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார் என்பதுவன்றோ உண்மை!

வாராது போல் வந்த மாமணியாய் தமிழகத்தின் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்று அவர் ஆட்சி செய்த ஒன்பதே ஆண்டுகளில் ஒப்பற்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்.

அந்த காலகட்டத்தில் தமிழகம் கல்வி எனும் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பெற்றது. தமிழகத்தை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நீராதாரத்திட்டங்களான பல அணைகள் கட்டப்பட்டன. வைகை. மணிமுத்தாறு, கீழ்பவானி, அமாரவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, நொய்யாறு, ஆழியாறு... என்ற அணைகள் தான் இன்று தமிழகத்தை வாழவைத்துக் கொண்டுள்ளன, அவர் காலத்திற்குப் பின் இது போன்ற அணைகள் ஏன் உருவாக்கப்படவில்லை?

சில நூறு கோடிகளே அரசு வருவாயிருந்த ஒரு காலகட்டத்தில் நிகழ்த்த முடிந்த சாதனைகளை இன்று ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வரிவருவாய் பெறுகின்ற அரசுகளால் நிகழ்த்த முடியவில்லை.

குறைந்த பட்சம் ஏரி குளங்களைக் கூட தூர்வாறத் துப்பற்ற நிலைமைகளையே காண்கிறோம் - இத்தனைக்கும் ஆண்டுக்காண்டு ஏரி குளங்களைத் தூர்வாற பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டும் பலன் காண இயலவில்லை!

இது மட்டுமா? என்.எல்.சி உள்ளிட்ட எத்தனையெத்தனை மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன... அதற்கு பின் வந்தவர்களால் ஏன் முடியவில்லை?

பெரம்பூரில் ரயில்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை, மணலியில் ஆயில்சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் போட்டோபிலிம் தொழிற்சாலை... போன்றவை லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த திட்டங்களல்லவா?

இவ்வளவு சிறந்த நல்லாட்சியை தந்து கொண்டிருந்தவர் தானே விரும்பியல்லவா பதவியைத் துறந்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் பலர் அதிகார போதையில் சிற்சில தவறுகளை செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், காங்கிரசின் நற்பெயருக்கு ஒரு களங்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது எனத் தெரியவந்தவுடனேயே காமராஜர் அவர்கள் அகில இந்திய அளவில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் துறந்து களப்பணிகளில் ஈடுபட முன்வரவேண்டும். அதன் மூலம் மட்டுமே மீண்டும் மக்களிடம் நம் நற்பெயரை மீட்டெடுத்து தக்க வைக்க முடியும் என்றார்.

இது சாதாரணத்திட்டமா? அதிகாரத்தை துறப்பது என்பது எவ்வளவு சிரமமானது. கர்நாடகத்தில் எடியூரப்பாவை பதவி இறங்க வைக்க பா.ஜ.க மேலிடம் எவ்வளவு பகிரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் காமராஜரோ ஏதோ செருப்பை கழட்டுவதை போல தன் பதவியை மிக இயல்பாகத் துறந்தார். அது அகில இந்தியாவின் அனைத்து முன்னணி தலைவர்களின் மனசாட்சியையும் உலுக்கியது.

காமராஜர் செயலின் எதிர்வினையாக ஒரிசா முதல்வர் பி.ஜூபட்நாயக், காஷ்மீர் முதல்வர் பக்ஷிகுலாம்முகமது, உத்தரபிரதேச முதல்வர் பி.ஏ.மண்டலாய் ஆகியோரும் முதலமைச்சர் பதவியைத் துறந்தனர். இதோடு முடியாமல் மத்திய அமைச்சர்களாயிருந்த மொரார்ஜிதேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம், பி.கோபால்ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகியோறும் பதவியைத்துறந்தனர்.

இறுதியாக பிரதமர் நேருவும் தன் பதவியை துற்க்க முன்வந்தபோது காமராஜர் அதனை உறுதியாகத் தடுத்துவிட்டார். 'அது இட்டுநிரப்பமுடியாத வெற்றிடம் எனவே நிச்சயம் நீங்கள் தொடரவேண்டும' என நேருவுக்கே கட்டளையிட்டார்.

உண்மையில், காமராஜர் இடத்தையும் அதற்குபின் இட்டு நிரப்பக்கூடிய யாரும் இல்லை என்பதே நிதர்சனமாயிருந்தது என்றாலும், அடுத்தவருக்கு அதிகாரம் செய்ய வழிவிட்டு கர்மமே கண்ணாய் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மகத்தான கர்மவீரர் காமராஜரே!

காமராஜர் ஓர் ஆபூர்வதலைவர். இனி இப்படியொரு தலைவன் கிடைக்க தமிழகம் நூறாண்டுகள் தவம் கிடக்க வேண்டுமோ? 

Thursday 6 August 2015

பெருந்தலைவர் பதவியாலா முன்னுக்கு வந்தனர் சான்றோர்கள்?!

நாடார் சமுதாயம் முன்னுக்கு வந்தது காமராசர் பதவிக்கு வந்த பின்னர் தான் என்று சில சிறு பிள்ளைகள் வரலாறு தெரியாமலும், சிலர் தீராத வயித்தெரிச்சலாலும் முகநூலிலும் பிளாக்கிலும் புலம்பி தீர்க்கின்றனர் பாவம்! பொய்யை எத்தனை தடவை கூறினாலும் உண்மையாகப் போவதில்லை! பெருந்தலைவர் கல்வி கொடுத்துதான் நாடார் சமுதாயம் கற்க வேண்டும் என்ற நிலையில் நாடார் சமுதாயம் அன்று இல்லை. ஏனென்றால் காமராசர் கல்வி பயின்றதே விருதுநகர் இந்து நாடார் மகமைக்கு பாத்தியப்பட்ட விருதுநகர் சத்திரிய வித்தியா சாலையில் தான்! பெருந்தலைவர் உண்மையில் பாடுபட்டதே ஆடு மேயத்துக் கொண்டும், ஆடுகளை களவாடிக் கொண்டும், அரிவாள், வேல் கம்பு என வெட்டியாக சுற்றிக் கொண்டு திரிந்த மாற்று சமுதாய கல்வியறியாத பாவப்பட்ட மக்களுக்காகத்தான்!

ஆணடிப்பட்டி கணவாய் பகுதிகளில் திருட்டுக்களும், கொள்ளைகளும் அதிகம் நடக்கின்றன என கேள்விப் பட்டபோது அந்தப் பகுதியில் ஒரு அணையும் பள்ளியும் இருந்தால் போதும் என செயல் படுத்தியவர் பெருந்தலைவர். ஆண்டிப்பட்டியில் நாடார்களா பெரும்பான்மை? வரலாறு தெரியாதவர்கள் "கருவாச்சி காவியம்" படைத்த திரு,வைரமுத்து அவர்களிடமும், இயக்குனர் பாரதிராசாவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!! தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களையும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களையும் என்ன செய்வது? இருப்பினும் மேலும் சில ஆதாரங்களை கீழே கொடுக்கிறேன்! (ஏற்கனவே பல முறை சொல்லி ஓய்ந்து போயாகிவிட்டது!)

பெருந்தலைவர் அவனியிலே அவதரித்த நாள் 15-07-1903 இல். அவர் ஆட்சிக் கட்டிலில் அமரந்தது 1954 சித்திரை 1 இல்!

1885ல் விருதுநகரில் முதன் முதலாக விருதுநகர் நாடார் உறவின் முறையால் சத்திரிய வித்தியாசாலை பள்ளி உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட போதே ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப் பட்ட முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளி இதுவே ஆகும்.  இது நாடார் சங்கங்களின் முதல் பள்ளியுமாகும். இதில் கல்வி பயின்றவர்களே காமராசர், சௌந்திரபாண்டியன் நாடார் போன்றோர்.

ஆக காமராசர் பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு காமராசருக்கே கல்வி வழங்கிய பள்ளி இது!

1889ல் கமுதியில் சத்திரிய வித்தியாசாலை உருவாக்கப் பட்டது.

இதுவும் காமராசர் பிறப்பதற்கு முன்னரே தொடங்கப்பட்ட பள்ளியாகும்.

1909ல் திருமங்கலத்தில் சத்திரிய வித்தியாசாலை தொடங்கப்பட்டது.

இது பெருந்தலைவருக்கு 6 வயது இருக்கும் போது தொடங்கப்பட்டது!

1921ல் நாடார் வங்கி உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் "தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி"யானது!

அப்போது பெருந்தலைவருக்கு வயது 18! 51 வயதில்தான் அவர் முதல்வரானார்! 

நாடார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த அன்று பெருந்தலைவர் அங்கு ஆற்றிய உரை இதோ:

நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இனைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம் என்றார்.

அவர் நினைத்தால் தன் சமுதாய மக்கள் நிரம்ப வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி ஓர் உரை ஆற்றாமல், அங்கு பிரத்யேகமாக முன்னேற்றப் பனிகளை முடுக்கி விட்டிருக்கலாம்! இப்படிப்பட்ட நேர்மையான மனிதரா நாடார்களுக்கென்று பிரத்தியேகமாக உதவினார் என புலம்பித் தீர்க்கிறீர்கள்! இதற்கு மேலும் நீங்கள் புலம்பினால், முட்டாள்களுக்கு பாடம் எடுக்க என்னால் முடியாது. நேரமும் கிடையாது!!

Monday 3 August 2015

தாயைத் துறந்த தனையன் - அரசியல் துறவி

பூர்ணா நதியில் குளித்துக்கொண்டு இருந்தான் அந்தச் சிறுவன். கரையில் அவனைப் பெற்ற தாய் ஆர்யா காத்துக்கொண்டு நின்றாள். உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த அவனை, முதலை ஒன்று பற்றி இழுத்தது. மெல்ல ஆற்றுக்குள் மூழ்கினான். கரையில் நின்று ஆர்யா கதறினாள். அவன் சொன்னான் “ சந்நியாசம் என்பது இன்னொரு பிறவி. எனக்கு துறவு நிலை தந்தால், இந்த முதலை என்னை விட்டுவிடும். குருகுலத்தில் எனக்குச் சொன்னார்கள்” என்றான். பிள்ளைப்பாசத்தில் “தந்தேன்” என்றாள். சாமான்ய சங்கரன், ஜெகத்குரு ஆதிசங்கரராக அவதரித்தார். முதலை காலை உமிழ, வெளிவந்த சங்கரனைக் கட்டிப்பிடித்தாள் ஆர்யா. விலக்கிவிட்டு மெல்ல வேறுதிசை நடந்தார் ஆதிசங்கரர்!

“என்ன கொண்டுவந்திருக்கிறான் இவன்?. அத்தனையும் உமி மூட்டைகள், இந்த தொழிலைத்தான் படித்தானா இத்தனைக் காலமாக?”, மகன் வெளிநாட்டு வியாபாரத்துக்கு சென்று கொண்டுவந்திருந்த பொருட்களை பார்த்துக்கொண்டே, கோபத்தில் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார் சுவேதாரண்யச்செட்டியார். வாய்பிளந்த மூட்டையில் இருந்து வைரமும், வைடூரியமும் கொட்டியது. விரிந்த கண்களும், மருங்கிய மனமுமாக மகனைத் தேடினார் செட்டியார். “எங்கே மருதவாணன்?, என் ஆசை மகன், ஆத்தா.... உன் பேரனை பார்த்தாயா, அப்பனை விஞ்சி விட்டான் தொழிலில், அத்தனையும் மின்னும் பொற்குவியல், எனக்கு உடனே அவனைக் கட்டித்தழுவ வேண்டும் போலிருக்கிறது ஆத்தா... எங்கே அவன்?”. ஞானக்கலை மெல்ல சொன்னாள், இந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, “அப்பச்சி கேட்டால் நான் போய்விட்டேன் என்று சொல், என்று சொல்லிவிட்டு போய்விட்டான்” என்றாள். ஏற்கனவே அவன் கொண்டு வந்த பொருளில் மிரண்டு போயிருந்த திருவெண்காடர், இன்னொரு அதிசயத்துக்கு ஏங்கும் மனதுடன் அதைத் திறந்தார். உள்ளே ஒரு காதறுந்த ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தது.காதற்ற ஊசியும் வாராதுகாண்  கடைவழிக்கே  என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. இந்த ஒற்றைச்சொல் உண்டாக்கிய மயக்கத்தில், காவேரிப்பூம்பட்டினத்தின் கணக்கற்ற சொத்துக்களை, விட்டுவிட்டு கோவணாண்டியாக வீட்டைவிட்டு புறப்பட்டது ஒரு ஞானப்பிழம்பு. அவர்பெயர்தான் பட்டினத்தார்.

உலகம் போற்றும் இந்த இரண்டு துறவிகளும், துறக்காத ஓர் உறவு உண்டு. அதுதான் தாய் எனும் உறவு. மரணம் நெருங்கும் தருவாயில், சங்கரா.... என்று ஆர்யாம்பாளும், சுவேதாரண்யா... என்று ஞானகலையாச்சியும் ஈனஸ்வரத்தில் முனங்கிய ஒலி, எத்தனையோ யோசனை தூரத்தில் இருந்த இருவருக்கும் கேட்டு, கால் நடக்கவும், மனம் பறக்கவும், காலடிக்கும், புகாருக்குமாக வந்துசேர்ந்தார்கள். துறவிகள் செய்யக்கூடாத ஈமக்கிரியைச் சடங்குகளை அன்றைக்குச்  செய்தார்கள். அப்போது சங்கரர் புலம்பிய மாத்ருகாபஞ்சகம் கல்நெஞ்சையும் கரைக்கும். அன்னையின் சிதையைத் தீக்குத் தந்துவிட்டு, அதன் முன்னின்று பட்டினத்தார் அழுது தீர்த்த அருட்புலம்பல் உள்ளத்தை உருக்கும். இவ்விருவரும் துறவிகள். உலகின்பம் அத்தனையையும் துறந்த துறவிகள்கூட, துறக்கமுடியாமல் நின்ற உறவு தாயின் உறவு. 

அந்த தாயையே துறந்துநின்ற ஒரு தவமுனிவனைத் தெரியுமா உங்களுக்கு?. அவருக்கு பெயர்தான் காமராசர். தள்ளாதவயதில் விருதுப்பட்டி வீட்டின் ஒரு மூலையில் துவண்டு போய்க்கிடக்கிறார் சிவகாமி அம்மாள். நாட்டை ஆளும் அரசரைப் பெற்ற தாய். “ஏம்பா மெட்ராசுல நீ இருக்க வீட்டுல, ஒரு ஓரத்தில ஒதுங்கிக் கிடந்துக்குவனே....என்னிய கூட்டிட்டுப் போயேன் காமராசு”. பொக்கை வாய்திறந்து புலம்பிய தாய்க்கு பதிலேதும் சொல்லாமல், வாகனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்கிறார். முருகதனுஷ்கோடி சொல்கிறார் “ பெரியவரே....அம்மா பாவந்தான....”. யார் என்ன சொல்லத் தொடங்கினாலும், முதலடியிலேயே அவர்கள் சொல்ல வந்த பொருளைப் புரிந்துகொள்ளும் அறிவு அந்த மாமேதைக்கு இருந்தது. விழிகளில் நீர் அரும்ப அந்த அரசியல்துறவி சொன்னார் “ எனக்கு மட்டும் என்ன பாசம் இல்லாமலா இருக்குன்னேன்... என்ன பண்ணட்டும்....அத்தைய பாக்க வாறேன், சித்திய பாக்க வாறேன்னு வரிசையா வந்து நிப்பான்னேன்.....அதுல எவனாவது ஒருத்தன் நம்ம வூட்டு போன எடுத்து நான் முதலமைச்சர் வூட்டுல இருந்து பேசுறேன் னு சொன்ன அன்னைக்கி, என் அத்தனை நேர்மையும் அடவுக்கு போயிருமா இல்லையான்னேன்.... இங்கேயே  இருக்கட்டும்..அப்பப்ப வந்து பாப்போம்னேன்....”. 

என் எழுத்துக்களில் இதை படிக்கும் போதே என் கண்கள் பணிக்கின்றன! இனி எங்கே காண்பேன் நாட்டுக்காக தாயை துறந்த இப்படி ஓர் அரசியல் துறவியை. உங்களையும் தோற்கடித்த எங்களை சும்மா விடுமா தமிழ்த்தாயின் சாபம்! அதனால்தான் நீங்கள் கல்வியாளர்களாய் பார்க்க நினைத்த சமூகம் சாராயக் கடையில் முடங்கி கிடக்கிறதோ?!