Monday 3 August 2015

தாயைத் துறந்த தனையன் - அரசியல் துறவி

பூர்ணா நதியில் குளித்துக்கொண்டு இருந்தான் அந்தச் சிறுவன். கரையில் அவனைப் பெற்ற தாய் ஆர்யா காத்துக்கொண்டு நின்றாள். உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த அவனை, முதலை ஒன்று பற்றி இழுத்தது. மெல்ல ஆற்றுக்குள் மூழ்கினான். கரையில் நின்று ஆர்யா கதறினாள். அவன் சொன்னான் “ சந்நியாசம் என்பது இன்னொரு பிறவி. எனக்கு துறவு நிலை தந்தால், இந்த முதலை என்னை விட்டுவிடும். குருகுலத்தில் எனக்குச் சொன்னார்கள்” என்றான். பிள்ளைப்பாசத்தில் “தந்தேன்” என்றாள். சாமான்ய சங்கரன், ஜெகத்குரு ஆதிசங்கரராக அவதரித்தார். முதலை காலை உமிழ, வெளிவந்த சங்கரனைக் கட்டிப்பிடித்தாள் ஆர்யா. விலக்கிவிட்டு மெல்ல வேறுதிசை நடந்தார் ஆதிசங்கரர்!

“என்ன கொண்டுவந்திருக்கிறான் இவன்?. அத்தனையும் உமி மூட்டைகள், இந்த தொழிலைத்தான் படித்தானா இத்தனைக் காலமாக?”, மகன் வெளிநாட்டு வியாபாரத்துக்கு சென்று கொண்டுவந்திருந்த பொருட்களை பார்த்துக்கொண்டே, கோபத்தில் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார் சுவேதாரண்யச்செட்டியார். வாய்பிளந்த மூட்டையில் இருந்து வைரமும், வைடூரியமும் கொட்டியது. விரிந்த கண்களும், மருங்கிய மனமுமாக மகனைத் தேடினார் செட்டியார். “எங்கே மருதவாணன்?, என் ஆசை மகன், ஆத்தா.... உன் பேரனை பார்த்தாயா, அப்பனை விஞ்சி விட்டான் தொழிலில், அத்தனையும் மின்னும் பொற்குவியல், எனக்கு உடனே அவனைக் கட்டித்தழுவ வேண்டும் போலிருக்கிறது ஆத்தா... எங்கே அவன்?”. ஞானக்கலை மெல்ல சொன்னாள், இந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, “அப்பச்சி கேட்டால் நான் போய்விட்டேன் என்று சொல், என்று சொல்லிவிட்டு போய்விட்டான்” என்றாள். ஏற்கனவே அவன் கொண்டு வந்த பொருளில் மிரண்டு போயிருந்த திருவெண்காடர், இன்னொரு அதிசயத்துக்கு ஏங்கும் மனதுடன் அதைத் திறந்தார். உள்ளே ஒரு காதறுந்த ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தது.காதற்ற ஊசியும் வாராதுகாண்  கடைவழிக்கே  என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. இந்த ஒற்றைச்சொல் உண்டாக்கிய மயக்கத்தில், காவேரிப்பூம்பட்டினத்தின் கணக்கற்ற சொத்துக்களை, விட்டுவிட்டு கோவணாண்டியாக வீட்டைவிட்டு புறப்பட்டது ஒரு ஞானப்பிழம்பு. அவர்பெயர்தான் பட்டினத்தார்.

உலகம் போற்றும் இந்த இரண்டு துறவிகளும், துறக்காத ஓர் உறவு உண்டு. அதுதான் தாய் எனும் உறவு. மரணம் நெருங்கும் தருவாயில், சங்கரா.... என்று ஆர்யாம்பாளும், சுவேதாரண்யா... என்று ஞானகலையாச்சியும் ஈனஸ்வரத்தில் முனங்கிய ஒலி, எத்தனையோ யோசனை தூரத்தில் இருந்த இருவருக்கும் கேட்டு, கால் நடக்கவும், மனம் பறக்கவும், காலடிக்கும், புகாருக்குமாக வந்துசேர்ந்தார்கள். துறவிகள் செய்யக்கூடாத ஈமக்கிரியைச் சடங்குகளை அன்றைக்குச்  செய்தார்கள். அப்போது சங்கரர் புலம்பிய மாத்ருகாபஞ்சகம் கல்நெஞ்சையும் கரைக்கும். அன்னையின் சிதையைத் தீக்குத் தந்துவிட்டு, அதன் முன்னின்று பட்டினத்தார் அழுது தீர்த்த அருட்புலம்பல் உள்ளத்தை உருக்கும். இவ்விருவரும் துறவிகள். உலகின்பம் அத்தனையையும் துறந்த துறவிகள்கூட, துறக்கமுடியாமல் நின்ற உறவு தாயின் உறவு. 

அந்த தாயையே துறந்துநின்ற ஒரு தவமுனிவனைத் தெரியுமா உங்களுக்கு?. அவருக்கு பெயர்தான் காமராசர். தள்ளாதவயதில் விருதுப்பட்டி வீட்டின் ஒரு மூலையில் துவண்டு போய்க்கிடக்கிறார் சிவகாமி அம்மாள். நாட்டை ஆளும் அரசரைப் பெற்ற தாய். “ஏம்பா மெட்ராசுல நீ இருக்க வீட்டுல, ஒரு ஓரத்தில ஒதுங்கிக் கிடந்துக்குவனே....என்னிய கூட்டிட்டுப் போயேன் காமராசு”. பொக்கை வாய்திறந்து புலம்பிய தாய்க்கு பதிலேதும் சொல்லாமல், வாகனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்கிறார். முருகதனுஷ்கோடி சொல்கிறார் “ பெரியவரே....அம்மா பாவந்தான....”. யார் என்ன சொல்லத் தொடங்கினாலும், முதலடியிலேயே அவர்கள் சொல்ல வந்த பொருளைப் புரிந்துகொள்ளும் அறிவு அந்த மாமேதைக்கு இருந்தது. விழிகளில் நீர் அரும்ப அந்த அரசியல்துறவி சொன்னார் “ எனக்கு மட்டும் என்ன பாசம் இல்லாமலா இருக்குன்னேன்... என்ன பண்ணட்டும்....அத்தைய பாக்க வாறேன், சித்திய பாக்க வாறேன்னு வரிசையா வந்து நிப்பான்னேன்.....அதுல எவனாவது ஒருத்தன் நம்ம வூட்டு போன எடுத்து நான் முதலமைச்சர் வூட்டுல இருந்து பேசுறேன் னு சொன்ன அன்னைக்கி, என் அத்தனை நேர்மையும் அடவுக்கு போயிருமா இல்லையான்னேன்.... இங்கேயே  இருக்கட்டும்..அப்பப்ப வந்து பாப்போம்னேன்....”. 

என் எழுத்துக்களில் இதை படிக்கும் போதே என் கண்கள் பணிக்கின்றன! இனி எங்கே காண்பேன் நாட்டுக்காக தாயை துறந்த இப்படி ஓர் அரசியல் துறவியை. உங்களையும் தோற்கடித்த எங்களை சும்மா விடுமா தமிழ்த்தாயின் சாபம்! அதனால்தான் நீங்கள் கல்வியாளர்களாய் பார்க்க நினைத்த சமூகம் சாராயக் கடையில் முடங்கி கிடக்கிறதோ?!

No comments: