Thursday 30 April 2015

தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்

இந்திய அரசியலில்
தமிழனின் ஒரே ஒரு
தலைக்கிரீடம்!
கருப்பு மனிதன்
ஆனால்
வெள்ளை மனம்!
கதர்ச் சட்டை அணிந்து வந்த
கங்கை நதி!
செங்கோட்டை வரை பாய்ந்த
திருநெல்வேலி தீ!
ஆறடி உயர
மெழுகுவர்த்தி!
பாமரன்தான்
ஆனால் இந்தப் பாமரனின்
ஆட்காட்டி விரலுக்குள்
பிரதமர்களை உருவாக்கும்
பிரவாகம் இருந்தது.!
படிக்காதவர் தான்!
ஆனால் இந்தப் பட்டமில்லாதவரின்
அகத்துக்குள் இருந்தது
ஒரு பல்கலைக் கழகத்தின்
அறிவு!
இந்த நூற்றாண்டில்
சராசரி மனிதனாலும்
சந்திக்க முடிந்த
ஒரே ஒரு முதலமைச்சர்!
இந்திய அரசியல் கப்பல்
கரை தெரியாமல்
கதிகலங்கிய போது
தமிழகத்தில் தோன்றிய
கதர்ச்சட்டை
கலங்கரை விளக்கம்!
காமராஜர்!
கடவுளுக்காக வாதம் நடந்த
காலகட்டத்தில்
மக்களுக்காக வாதம் செய்த
முதல் வக்கீல்!
முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த
காவல் துறை மத்தியில்
பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த
முதல் போலீஸ்!
ஓட்டு வேட்டைக்காக
உழைத்த
அரசியல் வாதிகளுக்கு மத்தியில்
மக்களின்
ஓட்டு வீடுகளுக்காக உழைத்த
முதல் அரசியல்வாதி!
மூன்று வேட்டி சட்டை
முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும்
வாழ்ந்து முடித்து விட்ட
முதல் ஏழை!
எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

கவிதை - திருவேங்கடம் முனுசாமி

Wednesday 29 April 2015

தமிழர் காமராஜர்

தமிழ்த் தாயார்  ஈன்றெடுத்த  காமராஜர்
          தாய் நாட்டைக்  காக்க வந்த  பீமராஜர்
     அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
          அகிலமெல்லாம்  தமிழ்  கொணடு சென்ற ராஜர்
     வட புலத்தில்  காங்கிரஸின் தலைவராகி
          வாயாடி நின்ற தன்புத்  தமிழிலேதான்
     கடல் கடந்து  ரஷ்ய நாட்டில்  நின்ற போதும்
          கனித் தமிழே  பேசி நின்ற தனித் தமிழர்

     தான் பெறவே இயலாமல்   போன  கல்வி
          தமிழ்  ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
     ஊன் உடம்பு  உயிர் தந்த தாய்க்குக் கூட்
          உண்மைக்குப் புறம்பாக உதவாத்  தேவன்
     ஏன்  என்று  எதனையுமே கேட்டுக் கேட்டு
          ஏழைகட்காய்ச்  செய்து நின்ற  மாமனிதன்
     வான்  சென்றான்  என்கின்றார்  இல்லையில்லை
          வாழ்கின்றான்  எம்மோடு  இன்றும்  இங்கே

     ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
          ஏழையென்றே வாழ்ந்தான்  காண்  தோல்வி தந்தார்
     கோழையென  அழுதானா  இல்லை என்னைக்
          கூப்பிடுங்கள்  என்றெல்லாம்  குமுறினானா
     வாழையடி  வாழையென  காந்தி  பேரை
          வாழ்விக்க வந்தவன் காண்  செல்வனான்
     கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
          கொடை அளித்தான்  அதனாலே செல்வனான்

     ஏழையென்று  சொல்லாதீர்  அவனை  எங்கும்
          ஏற்றங்கள்  அவனாலே பெற்ற  நீவிர்
     வாழையடி  வாழையென  கல்வி  இன்று
          வந்ததுங்கள்  வீட்டிற்குள்  அவனால்ன்றோ
     பேழையென  நெய்வேலி  திருச்சியிலே
          பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
     வாழ்வதற்கு  அனைவருக்கும்  உணவளிக்கும்
          வயற்காட்டுத்  தோழருக்காய் அணைகள் தந்தான்

     ஊழை  வெல்ல  முடியாராய்  ஒடுக்கப் பட்டோர்
          ஒய்ந்திருந்த  நேரத்தில்  எழுந்து  வந்தான்
     கோழை மனம்  விட்டவரும்  கொடிகள் ஏந்தி
          கொள்கை கண்டு  வெற்றி பெற வழிகள் செய்தான்
     ஏழையல்ல செல்வன்  அவன்  என்றே  சொல்வேன்
          ஏனென்றால்  செழுங் கிளையைத்  தாங்கி  நின்றான்
     நாளை  வரும்  இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
          நல்கி நிற்பீர்   ந்ன்றி  கொல்லா நற்றமிழீர்

-கவிஞர் நெல்லை கண்ணன்

Monday 27 April 2015

பெருந்தலைவர் - சட்டம் சனங்களுக்கே

சட்டங்களை இயற்றுவதும், அந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நிறைவேற்றுமவதும், மாற்றவதும் அரசாங்கத்தின் அன்றாடச் செயல்கள்தான்.
ஆட்சியாளர்களின் தேவைக்கேற்றவாறு சட்டங்கள் போடுவதும் உத்தரவுகள் பிறப்பிப்பதும் ஜனநாயகத்தைப் படுகுழிக்குள் தள்ளும் முயற்சியாகும்.

சட்டப்படிதான் நாடு செல்லவேண்டும் என்றாலும் சில நேரங்களில் சனங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப சமுதாய மாற்றங்களுக்கேற்ப சட்டங்களை அப்ப்டியே நடைமுறைப்ப்தடுத்துவதும் சரியல்ல.
ஒரு முறை தமிழக அரசு பொட்டலமாகப் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி என்று அறிவித்தது. உடனே மிகச் சிறிய வணிகர்கள் காமராஜர் அவர்களைச் சந்தித்து ”சினிமா தியேட்டர்களில் விற்கும் பகோடா, சுண்டலுக்கும் வரி கேட்கிறார்கள்.” என்று முறையிட்டனர்.
அன்றே தலைவர் அத்தகைய தனி வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
ஏழைகளைப் பாதிக்கும்படி ஒரு வரி உருவாகக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்தான் அவரை ஏழைப்பங்காளன் என்றழைத்தார்கள் மக்கள்.

ஒரு முறை மாணவர் ஒருவர் கோட்டைக்குச் சென்று தலைவரைப் பார்த்து அழுது முறையிட்டார்.
அவன் ஒரு பி.எஸ்.ஸி. பட்டதாரி மூன்றாமாண்டு மாணவன். வாங்கிக் கொண்டிருந்த ஸகாலர்ஷிப் நிறுத்தப்பட்டதால் காமராஜ் அவர்களை நேரில் பார்த்து முறையிடவே வந்துள்ளான்.
தலைவரும் அம்மாணவரை அழைத்து அன்போடும் அனுபவத்தோடும் அவனது குறையைக் கேட்டறிந்தார்.
அவனது குறை இதுதான்!
அவன் பிற்படுத்தப்பட்டவருக்கான அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி இருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டவருக்கான ஸ்காளர்ஷிப்பையும் வாங்கியிருக்கிறான்.
திடீரென அரசு, அவன் பிற்படுத்தப்பட்ட மாணவர் இல்லை என்றும் எனவே இதுவரை அரசிடம் பெற்ற ஸகாலர்ஷிப் பணத்தை திரும்ப கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கட்டினால் மட்டுமே மூன்றாமாண்டுத் தேர்வுக்கு உரிய நுழைவுச் சீட்டு கொடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் உடனே சம்ம்பந்தப்பட்ட துறை அதிகார்களை அழைத்து விசாரணை நடத்தினார்.
”அவன் பிறந்த சாதியில் சில உட்பிரிவுகள் உள்ளன என்றும், அவன் பெற்றிருக்கும் சான்றிதழ்படி அவனுக்கு ஸகாலர்ஷப் கிடையாது’ என்றும் அலுவலர்கள் கூறிவிட்டனர்.
”அது சரி. அப்படியானால் அவனுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியது அலுவலர்களின் தவறா? வாங்கியவன் தவறா? நாமே கவனமின்றி வழங்கிவிட்டு உடனே கட்டு என்றால் எப்படி முடியும்ண்ணேன். படிப்பு பாழாகக் கூடாதுண்ணேன்!” என்று கூறி அந்த அதிகாரிகளைக் கொண்டு உடனே தொடர்ந்து அம்மாணவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவினார் அவர்.
சட்டம் சனங்களுக்கு என்பதில் கவனமாக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தலைவர் அவர்களின் இத்தகைய பாடங்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடமாகும்.

Sunday 26 April 2015

செந்தமிழுக்கு உழைத்த 'மனோன்மணியம்' சுந்தரனார்!

அன்னைத் தமிழுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாங்குற அணி செய்தவர்! நிறை தமிழ்ச் சான்றோராய் நின்று நிலைபெற்றவர்! தமிழக அரசின் நிகழ்ச்சிகள் துவங்கும்போது, “நீராரும் கடலுடுத்த நிலமட‌ந்தைக்கு எழில் ஒழுகும்” என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்! கடின உழைப்பு-விடாமுயற்சி-பிறர்க்கு உதவும் பாங்கு – நன்றி மறவாமை, உண்மையை யாரிடத்தும் எவ்விடத்தும் துணிந்து கூறி நிலைநிறுத்தும் நேரிய கொள்கை – ஆகிய உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்! தாய் மொழிப் பற்று, தாய் நாட்டுப்பற்றுடன் நெஞ்சமெலாம் நிறைந்த மனிதப்பற்றாளர்! தத்துவஇயல், மொழிஇயல், வரலாற்றியல், தொல்லியல் ஆகிய பல்துறை அறிஞர்! அவர்தான் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்.

                கேரள மாநிலம் ஆலப்புழைத் துறைமுகப்பட்டினத்தில், பெருமாள்பிள்ளை- மாடத்தி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 05.04.1855 ஆம் நாள் பிறந்தார்.

                சுந்தரனார் ஐந்தாம் வயதில் ஒரு தமிழ்ப் பள்ளியில் பாதம் பதித்தார். பள்ளிக் கல்வியுடன், அவரது தந்தை மூலம் ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் போன்ற நீதி நூல்களையும், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி நூல்களையும், திருக்குறள், நாலடியார் போன்ற அறம் உரைக்கும் நூல்களையும் கற்றுத் தெளிந்தார்! பன்னிரெண்டாம் வயதிலேயே சிறந்த தமிழ்மொழி அறிவு பெற்றவராய் விளங்கினார்.

                ஆலப்புழையில் ஓர் ஆங்கிலப் பள்ளியில் பயின்று நன்கு தேர்ச்சியடைந்ததுடன், ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்றார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் சேர்ந்து உயர்நிலைக் கல்வி கற்று முதல் மாணவராக வெற்றி பெற்றார். இதன் மூலம் அரசின் உதவித் தொகையினை இளங்கலை படிப்புவரை கிடைக்கப் பெற்றார். இளங்கலைப் பட்டப்படிப்பிலும், திருவனந்தபுரத்தில், முதல் மாணவராகத் தேர்ந்தார்!

                நாகை நாராயணசாமிப் பிள்ளையிடம் யாப்பருங்கலக்காரிகையைத் தெளிவுபெறக் கற்றார்.

                தத்துவத்துறையில் 1880 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். திருவிதாங்கூர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சட்டக் கல்வியும் பயின்று முடித்தார்.

                தான் பயின்ற திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார். மாணவர்களுக்கு வரலாறும், தத்துவஇயலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் போதித்தார்.

                சிவகாமி என்னும் மங்கையை 1877 ஆம் ஆண்டு மணம்புரிந்தார். சுந்தரனார், ஆராய்ச்சியும் கல்வியும் இரு கண்களாகக் கருதிச் செயல்பட்டார்.

                திருநெல்வேலி ஆங்கிலக் கலாசாலைக்குத் தலைவர் ஆனார். அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். சிறந்த முறையில் பாடங்களைக் கற்பிக்குமாறு ஆசிரியர்களை உற்சாகப்படுத்தினார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகியவை பற்றி ஒப்பியல் நெறியில் உரை நிகழ்த்தினார்.

                திருவனந்தபுரம் மாமன்னர் கல்லூரியில் மீண்டும் 1879 ஆம் ஆண்டு தத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். இவர் திறமையை அறிந்த மாமன்னர் தன் அரண்மனையிலேயே, ‘பிறவகை சிரஸ்ததார்’ எனும் உயர்பதவியை வழங்கினார்.

                சுந்தரனார்யின் ஆராய்ச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிட இன ஆராய்ச்சியாகும். தென்னாட்டில் திராவிட இன உணர்வுக்கு வித்திட்டவர் என்று திராவிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                பழந்தமிழ் இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் ஆராய்ந்தவர் பேராசிரியர் சுந்தரனார். அவர் மொழிப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்தார்.

                மனோன்மணியம் என்னும் நாடகத்தை 1891 ஆம் ஆண்டு படைத்தார். ‘அது ஒரு பொழுதுபோக்கு நாடகமல்ல; வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு உரிய தத்துவக் கருவூலமாக மிளிர்கிறது’- என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

                ‘மனோன்மணியம்’ என்ற நாடகத்தினைப் படைத்ததால் ‘மனோன்மணியம் சுந்தரனார்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இந்நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்களால் ‘மனோன்மணி’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

                திருவனந்தபுரம் பூர்வீக அரசியல் வரலாறுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து ‘திருவிதாங்கூர் பண்டை மன்னர்கள் வரலாறு’ என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.

                அந்த நூல் அந்நாட்டு வரலாற்றை உரைக்கும், இன்றியமையாத ஆதாரங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. இந்நூலின் பொருட்டு, திருவிதாங்கூர் மாமன்னர், இவர் குடும்பத்தினர் திங்கள்தோறும், ஒரு நன்கொடை தொகையை பரம்பரையாகப் பெற்றுவர ஆணையிட்டார்.

                திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையைத் தொடங்கியது. பேராசியர் சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

                புரவசேரி ஆழ்வார் கோயில், சோழபுரம் சோழராஜாகோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், திருவல்லம் பரசுராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை அவர் தேடிக் கண்டுபிடித்து அவை தரும் தகவல்களை வெளியிட்டார். கல்வெட்டுத் துறையில் சுந்தரனார் முன்னோடியாக விளங்கினார் என்று வரலாற்று அறிஞர் கே.கே. பிள்ளை தமது ‘சுசீந்திரம் கோயில்’ என்ற ஆய்வுநூலில் குறிப்பிட்டுள்ளார்.

                இவரின் தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி, இவரை இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் ஏஷியாடிக் கழகம்’ தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது. பிறகு, லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் F.R.H.S. என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு ‘ராவ்பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கியது. ஜெர்மன் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்று 1896 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

                சென்னைப் பல்கலைக்கழகம் இவரை, ‘உயர்கலைக் கழக உறுப்பினர்’ பொறுப்பில் நியமித்தது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, தத்துவம் ஆகிய துறைப் பாடங்களின் தேர்வு நிலை உறுப்பினராகவும் விளங்கினார்.

பேராசிரியர் பெ.சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் நாடகக் காப்பியத்திலுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், தமிழக அரசு விழாக்களில் பாடப்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி 1970 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                திருவனந்தபுரத்தில் ‘சைவப் பிரகாச சபை’ என்ற சபையை சுந்தரனார் 1885 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் போற்றி வளர்த்தல் – தமிழ்ச் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்துதல்- தமிழ் மக்களின் பொருளாதார நிலையை மேன்மையுறச் செய்தல்-தமிழ்ச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்-தமிழ் மக்களின் உயர்தரக் கல்வி, தொழிற் கல்வி ஆகியவற்றிற்குரிய வசதிகள் அளித்தல் ஆகிய சீரிய நோக்கங்களுடன் சபையை நிர்வகித்தார். மேலும் இச்சபையின் மூலம் தமிழ்ப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சபையின் சார்பில் கேரளப் பல்கலைக் கழகத்தில், “பேராசிரியர் சுந்தரனார் அறக்கட்டளை” நிறுவப்பட்டுள்ளது.

                வீரத்துறவி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு ஆன்மீகப் பயணமாக திருவனந்தபுரம் வந்திருந்தார். அப்போது, சுந்தரனார்யின் விருந்தினராக அவர் இல்லம் வந்தார். விருந்திற்குப் பின்பு விவேகானந்தரும், சுந்தரனார்யும் உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில், விவேகானந்தர், சுந்தரனார்யைப் பார்த்து, ‘தங்கள் கோத்திரம் என்ன’? என்று கேட்டார். சுந்தரனார் ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் இவ்வாறு குறித்துள்ளார்: “உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர், ‘தங்கள் கோத்திரம் என்ன?’ என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த, அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், ‘எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது- தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்” என்பதே அக்குறிப்பு!

                பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார், ‘மனோன்மணியம்’, ‘நூற்றொகை விளக்கம்’, ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள்’, ‘பண்டைய திருவிதாகூர் முடிமன்னர்களின் காலம்’ ஆகிய நூல்களையும், ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களையும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களையும், ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் படைத்து தமிழுலகுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

                பேராசிரியர் சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள் இளமை முதிராத தன் நாற்பத்திரெண்டாவது வயதில் இயற்கை எய்தினார். அன்றே – ‘தமிழ் உலகம்’, தன் தலைமகனை இழந்ததாய்க் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது. தென்னகத்தின் முக்கடலும், கண்ணீர் சூழ உப்புக் கடலாய் உருமாறி ஓலமிட்டது.

                இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, ‘அவர், ‘பொதுமறையாம் திருக்குறளோடு ‘மனுநீதி சாத்திரத்தை’ ஒப்பிட்டும், ‘திருவாசகத் தேனோடு’, ‘வேதத்தை ஒப்பிட்டும்’ தீந் தமிழின் உயர்வு பேசுகிறார்’ என்று கருத்துரைத்துள்ளார்!

                பாவேந்தர் பாரதிதாசன், சுந்தரனார்யின் புகழைத் தன் கவிதை நூலில் ‘தேனருவி’ யாய் இப்படிக் கொட்டிப் பாடியுள்ளார்.

                “நான் பெற்ற மக்களிள் சுந்தரன் சிறந்தவன்!

                நற்றமிழ் காக்கத் தன்னலம் துறந்தவன்!

                தேன்போன்று தமிழை வளர்க்கப் பிறந்தவன்!

                செந்தமிழுக்கு உழைத்தே இறந்தவன்!”

                பேராசிரியர் பெயரில், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது.

                தத்துவப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராக – வரலாற்று ஆராய்ச்சி அறிஞராக–கல்விக் கடலாகத் திகழ்ந்தவர்! அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியவர். தமிழ் மொழி உள்ளவரை, மனோன்மணியம் சுதந்திரனார்யின் பெயரும் நின்று நிலைத்திருக்கும் !

                மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் உருவம் பொறித்த ‘அஞ்சல் தலை’யும், ‘நாணயமும்’ நடுவரணரசு வெளியிட வேண்டும் என்பது நானிலமெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பமாகும்.

- பி.தயாளன்

வெள்ளைக் கதருக்குள் கருப்பாய் ஒரு பச்சைத் தமிழன்.

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.

அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

கவிதை-ஈரா

Friday 24 April 2015

பெருந்தலைவரின் பொது நூலக இயக்கம் பற்றி உலக புத்தக தினத்தில் .

அறிவு பரவலாக்குதல், கால மாற்றத்திற்கு ஏற்ப அறிவை புதுப்பித்தல், இரண்டிற்கும் கற்றறிந்த சான்றோர்கள் கருத்துக்களை தாங்கிய நூல்கள் வழி வகை செய்கின்றன. அது தவிர, சில நேரங்களில் பொது மக்களுக்குப் பொழுது போக்கும் நல்ல முறையாக நூல்களை படிப்பதும் வளர்ந்துள்ளது. ஆனால், பல நூல்களை வாங்கி, பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள பணம் படைதவர்களாலேயே இயலாத அளவுக்கு நூல்களின் விலை இருக்கும்போது, சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு பல நூல்களை வாங்கிப் பயன்படுத்துவது என்பது கனவாகவே முடிந்து விடும். ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜர் அரசு, தொடக்கக் கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது.

தங்கள் தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்கு இடம், கட்டிடம், நூல்கள், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நாலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாக தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயற்பட்டன.

நூலக இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண்கள் குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக என்று சிறப்பு நூலகம் ஒன்று மேற்கு தாம்பரத்தில் திறக்கப்பட்டது. சென்னை, கோவை, தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் பெண் ஆசிரியர்கள் மூலகமாக நூல்களை வீட்டிலேயே பெண்களுக்கு அளித்து திரும்பப் பெறுதல் முறை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சென்னை புதுப்பேட்டையில் பெண்களுக்கு என்று கிளை நூலகம் திறக்கப்பட்டது. இப்படி பல வழிகள் மூலமாக நூலக இயக்கம் காமராஜர் ஆட்சியில் சிறப்புற்றது.

Thursday 23 April 2015

ஆலயப் பிரவேசமும் அறநிலையத்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்டவரும்



தாழ்த்தப்பட்டவர்களைத் தீண்டாதவர்ளாக்க் கருதி, ஆலயங்களில் நுழைவதையே அனுமதிக்காத காலத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் நுழையக் கூடாதென்று சட்டம் இருந்தது. சட்டம் மட்டுமல்ல, சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடத்திலும், தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலில் அனுமதிப்பை விரும்பாத எண்ணம்தான் தழைத்தோங்கி இருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கும், மக்களின் மனங்களை தூய்மைப்படுத்தவும் மதுரை ஏ. வைத்தியநாத அய்யர் தலைமையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள், நாடார்கள் என அனைவரும் கோயிலில் நுழைவதற்கு வழிவகை காணும் சட்டம் இயற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சட்டம் வருவது காலதாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில், 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும், நாடார்களும் கோயிலில் நுழையும் போராட்டம் செய்வார்கள் என்று மதுரை வைத்திய நாத அய்யர் அறிவித்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு எதிர்ப்பான சிலர், மதுரை மீனாட்சி கோயிலுக்கு நுழைந்தால் மிரட்டினர். மதுரையில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஒரு பதில் அறிக்கை வெளியிட்டு நாங்கள் அரிசன ஆலயப் பிரவேசத்தை ஆதரிக்கிறோம். நாங்களும் உடன் வருவோம் வேண்டுமானால் தடுத்துப் பாருங்கள் என்று ஆதரவுக்கரம் நீட்டினார். கூறியபடியே, குறிப்பிட்ட நாளில் அம்மன் சன்னதி வாசல் முற் தன் ஆட்களையும் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாக அனுப்பியும் வைத்தார். வைத்திய நாதர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டக்குழு வந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஆட்கள்மட்டுமே அங்கிருந்தனர். எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லை. அந்த ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவராக சமுதாயப் பணியிலும், தேசப்பணியலும் தீவிரமாக ஈடுபட்ட, 1951-ல் காமராஜர் அமைச்சரவையில் இருந்த கக்கனும் கலந்து கொண்டார். ஆலய நுழைவுப் போராட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன் பின்னர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழைவதற்கு வழி செய்திடும்சட்டத்தை அன்றைய ராஜாஜி அரசு வெளியிட்டது. கோயில் நுழைவுச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னரும், தாழ்த்தப்பட்டவர்கள் முழுமையாக்க்கோயிலில் அனுமதிக்கப்படாத்து சில ஆலயங்களில் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வந்தது.

இந்நிலையில், 1954-ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப்பொறுப்பேற்ற காமராஜர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை பரமேஸ்வரனை நியமித்தார். ஆலயங்களின் நுழைவிற்கே அல்ல்ல்பட்டு அஞ்சிய மக்களின் தாழ்வு நிலைக்கு விடை கொடுக்கவும், மக்கள் அனைவரும் சம்ம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலும் பரமேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட இந்து அறநிலையத்துறையின் பொறுப்பின் மூலம் எடுத்துரைத்தார்.

இதன் வழியாக சமூக நீதிக்கான தனது உணர்வுகளைத் தேவையான நேரத்தில் செயலில் வெளிக்காட்டிய உத்தமர் தான் காமராஜர்.

மேடையில் சமூக நீதியை முழங்கிவிட்டு திரைமறைவில் தமது சாதியை வளர்த்துக்கொள்ள விரும்புவோரையே இன்று காண முடிகிறது. “கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி -கிளியே” நாளில் மறப்பாரடி” என்று பாரதியார் பழித்துரைத்த வாய்ச்சொல் வீர்ர்கள் பேசும் சமூக நீதி போலியானது. காமராஜர் சமூக நீதியைத் தமது உயிர் மூச்சான கொள்கையாகவே கருதிக் கடையனுக்கும் கடைத்தேற்றம் கிடைத்திட உழைத்தார். இதனை வரலாறு என்றென்றும் எடுத்துரைக்கும்.