Thursday 16 April 2015

பெருந்தலைவரும் தேசியமும் பாகம் - 1

 கூட்டணி என்கிற பிரயோகமே தவறு. கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் கட்சிகள் தொகுதிகளில் வாக்குகள் சிதறாமல் தமது வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்பதற்கான உத்தியாக மேற்கொள்ளும் சுயலாபத் தொகுதி உடன்பாடு தானேயன்றி மக்கள் நலன் கருதித் தமது நலன்களை விட்டுக்கொடுத்துக் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற பொதுநலன் அல்ல. இது அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த சுயநலமே தவிர வேறு ஏதுமில்லை. கூட்டணி என்ற பெயரில் இப்படியொரு சுயலாப வேட்டையில் காங்கிரஸை ஈடுபடுத்தி அதன் சுயமரியாதையைக் குலைக்க காமராஜர் என்றுமே விரும்பியதில்லை.

1967 தேர்தலின்போது அண்ணா மிகச் சாமர்த்தியமாக நவக்கிரகங்களாக இருந்த கட்சிகளையெல்லாம் அவரவர் செல்வாக்கிற்கு ஏற்பக் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சிரமப்படாமலேயே வெற்றி பெறலாம் என ஆசை காட்டி, தொகுதி உடன்பாடு என்ற பெயரில் எல்லாக் கட்சிகளையும் காங்கிரசுக்கு எதிராக ஒன்று திரட்டியபொழுது காமராஜர் எவ்வித மாற்று வியூகமும் வகுக்காமல் போனதற்குக் காரணம் மிதமிஞ்சிய நம்பிக்கை மட்டுமல்ல; மாறுபட்ட கொள்கைகள் உள்ள கட்சிகளுடன் வெறும் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது ஒரு தவறான முன்மாதிரி என்றே அவர் கருதினார் (தேர்தல் சமயத்தில், “படுத்துக் கொண்டே ஜயிப்போம்”என்று காமராஜர் சொன்னது என்னவோ நிஜமே. அதற்கு அண்ணா, “படுக்கலாம் ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று சொன்னதும் அதற்கு இணங்க காமராஜர் விபத்துக்குள்ளாகி கால் முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே இருக்க நேரிட்டதுங்கூட நிஜமே. ஆனால் காமராஜர் ஒரு வழக்கமான தேர்தல் பிரசாரப் பேச்சாகத்தான் அவ்வாறு கூறினாரேயன்றி மிதமிஞ்சிய நம்பிக்கையினால் அல்ல.



அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை. அக்கால கட்டத்தில் அவர் வலதுசாரி கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், ஃபார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளைத் தம்பக்கம் இழுத்து மாற்றுத் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்திருந்தால் 1967தேர்தலில் காங்கிரஸ் அத்தனை மோசமாக வீழ்ச்சியடைந்திருக்காது.
எவ்விதக் கொள்கை அடிப்படையும் இன்றி பல்வேறு உதிரிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்வதில் காமராஜருக்குச் சம்மதம் இல்லாமற் போனமைக்கு, பாரம்பரியமான தேசிய நலன் என்கிற தேசிய உணர்வின் பாற்பட்ட விழுமியங்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டிருந்ததுதான் காரணம் எனலாம்.

ஆகவே, காமராஜர் தேசிய உணர்வில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டுடன் இருந்தார் என்பதற்கு மேலும் இரு சம்பவங்களைச் சொல்கிறேன்.

No comments: