Friday 31 July 2015

பெருந்தலைவர் - தன்னிகரில்லா தலைவர்

உலகின் மிகச் சிறந்த, மிக நேர்மையான, மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் நினைக்காத, கடைசி நாள் வரை தனக்கென ஒரு குடும்பமே வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லா காமராஜரை தலைவராக, முதல்வராக வாய்க்கப் பெற்றது இந்த தமிழ்ச் சமூகம்தான். காமராஜர் எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் நிறையப் படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். மூட நம்பிக்கை, சாதி ஒழிப்பு பற்றிய கருத்துக்களை மக்கள் நலன் சார்ந்த அக்கறையோடு காமராஜரைப் போல வேறு யாராலும் சொல்லியிருக்க முடியுமா தெரியவில்லை. இதோ பெருந்தலைவரின் வார்த்தைகளில்..

 "நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா?
 ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.
 கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?

 அதையெல்லாம் செய்யமாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்? கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்! கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், ஜாதி வித்தியாசம் தன்னாலே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டராகிவிட்டால், 'நான் உயர்ந்த சாதி ஆகையால் நான் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்' என்று யாரும் கூற முடியாதுன்னேன். உயர்ந்த சாதின்னு கூறிக் கொள்பவன் தானாவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்யறான். ஆகவே, கல்வியே இந்த ஜாதிய கொடுமைய போக்க வழிவகுக்கும்ன்னேன்!" என்றவர் பெருந்தலைவர்.

 பேச்சுதான் செயல்.. செயல்தான் பேச்சு என வாழ்ந்தவர் காமராஜர். அதனால்தான், கல்வியின் முக்கியத்துவத்தைச் சொன்னதோடு நில்லாமல், ராஜாஜி காலத்தில் குலக்கல்வி திட்டத்துக்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். இருபத்தேழு ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்துவைத்தார். இன்று உயர்வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் ஐஐடி நிறுவனத்தை, அனைத்து வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடங்கிய புண்ணியவான் காமராஜர்.

Thursday 30 July 2015

லஞ்ச லாவண்யங்களும் மரண தண்டனையும்!!

லஞ்ச லாவன்யமும், ஊழலும் நிறைந்த இந்நாட்டில் காவல்துறை விசாரனைகள் எந்த அளவில் இருக்கும் என்பது உலகறிந்தது! சங்கர்ராமன் கொலை வழக்கு, தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு போன்றவை நகைச்சுவையாகிப் போன கதைகள்! திருச்சியில் நேருவின் தம்பி் ராமஜெயம் கொலை வழக்கில் காவல்துறை இன்னும் குற்றவாளிகளை பல வருடங்களாக நெருங்கிக கொண்டேதான் இருக்கின்றன! லஞ்சமும் பணமும் பாதாளம் வரை பாயும் இந்த தேசத்தில் மரண தண்டனை தீர்ப்புகளில் எந்த அளவு நேர்மையை எதிர்பார்க்க முடியும்?!

///பெரும்பாலான மரண தண்டனை தீர்ப்புகளில் சாட்சிகள் உண்மையாய் இல்லாமல் காவல்துறையால் உண்டாக்கப் பட்டவையாகவே இருக்கின்றன!!\\\
///கொலை நடந்த இடங்களில் திரட்டப்படும் பெரும்பாலான பொருட்கள் கூட காவல்துறையினரால் வேண்டுமென்றே அந்த நேரங்களில் வைக்கப் பட்டவையாகவே இருக்கின்றன!!\\\

மேற்கண்ட இரண்டும் நான் என் கற்பனையால் கூறியவை அல்ல! சென்னை மற்றும் தில்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பனியாற்றிய முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் கூறியது!! ஒரு முன்னால் நீதிபதியே பரிகசிக்கும் இந்த நாடடில் மரண தன்டனை தீர்ப்புகள் பெரும்பாலும் யாரோ ஒருவரால் யாரையோ பழிவாங்கும் நோக்காகவோ அல்லது அப்பாவியை சிக்க வைக்கும் படியாக இருக்கப் போகின்றனவே ஒழிய வேறென்ன?

கேவலம் 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் சட்டங்கள் எளிதாக வளைக்கப்படும் இந்த நாட்டில் மரண தண்டனைகளில் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்??! போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கொலைக்கருவி என்கினறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். போதையில் வண்டி ஓட்டுபவர்களுக்கு என்ன விதமான தண்டனை வழங்கப்படுகின்றன நம் நாட்டில் என்பது உலகறிந்த விசயம்! 50 ரூபாயோ அல்லது அதிக பட்சம் 100 ரூபாயோதான் அந்த சட்டத்திற்கான விலை! இதில் மிகவும் வேதனையான சமாச்சாரம், காசு வாங்கியவுடன் அதே நபரை மீண்டும் அதே நிலையில் வாகணம் ஓட்ட அனுமதிப்பது!!

பல உயிர்களுடன் விளையாடும் இன்னொரு சமாச்சாரம் RTO அலுவலகங்களில் கேவலமாக மிக சொற்ப தொகை லஞ்சத்திற்கு வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்கள். கேவலம் 500க்கும் 1000த்திற்கும் எந்த ஒரு சாலை விதிகளும் கற்பிக்கப்படாமல், தகுதி அறியப்படாமல் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்களால் ஒருவருடத்தில் லட்சக்கணக்கில் உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன! மிக முக்கியமாக டாஸ்மாக்! இத போல் பகிரங்கமாகவே தனது மக்களின் உயிருடன் விளையாடும் அரசுக்கும், அதன் அதிகார வர்க்கத்திறகும் எங்கே தெரியப் போகிறது உயிரின் மதிப்பு!!

மரண தண்டனைகள் தேவையா நம் நாட்டில்?!

Tuesday 28 July 2015

ராமநாதசுவாமியும் கலாமும்! மதம் கடந்த மனிதம்!!

நாட்டுக்கென இருந்த ஒரே ஒரு மத நல்லிணக்க சின்னமும் நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தது! தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம்நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது அவர் எழுதியுள்ள 'எனது பயணம்' நூல். இதில் இளைய தலைமுறை அறிந்துகொள்ள நிறைய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.

நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கு பகிரப்படுகிறது:
எங்கள் ஊரின் சிறிய மக்கட்தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் குறைவான எண்ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

வெளியுலகின் பிரிவினைகளும் மாற்றங்களும் எங்கள் ஊருக்குள் அரிதாகவே நுழைந்தன. மற்ற இடங்களில் ஏற்பட்ட சமூக வன்முறைகள் மற்றும் வகுப்புப் பிரிவினைவாதம் பற்றிய செய்திகளை தினசரிச் செய்தித்தாள்கள் சுமந்து வந்தன.

ஆனால் இங்கு, வாழ்க்கை அதன் பழங்கால அமைதி நிலையிலேயே தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த அமைதியான மத இணக்கம் பல தலைமுறைகளாக இங்கு நிலவி வந்திருந்தது. ராமநாதசுவாமி கோயிலின் சிலையை ஒருமுறை காப்பாற்றிக் கொடுத்த எங்களுடைய முப்பாட்டனின் கதையை அவ்வப்போது கூறுவதை எங்கள் தந்தை பெரிதும் விரும்பி வந்தார்.
அக்கதை இவ்வாறு அமைந்திருந்தது:

ஒரு குறிப்பிட்ட திருவிழா நாளன்று, ராமநாதசுவாமி விக்கிரகம் கருவறையைவிட்டு வெளியே எடுக்கப்பட்டு, ஊரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்படும். கோயிலைச் சுற்றிலும் பல குளங்கள் இருந்தன. கோயில் சிலை இந்தக் குளங்களைச் சுற்றியும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அப்படிப்பட்ட ஓர் ஊர்வலத்தின்போது, சுவாமி விக்கிரகம் திடீரென்று குளத்திற்குள் விழுந்துவிட்டது.

சிலை குளத்திற்குள் விழுவதற்கு முன்பு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்துப் பல விஷயங்கள் நடந்துவிட்டிருந்ததால், துல்லியமாக என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் இப்போது தெளிவாக நினைவிருக்கவில்லை. ஒரு பெரும் குழப்பம் உருவானது. கடவுள்களின் சீற்றத்திற்கு விரைவில் தாங்கள் ஆளாகப் போவதாகக் கற்பனை செய்தபடி மக்கள் பீதியோடு அசைவின்றி நின்றனர்.

ஆனால் அக்கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் நிதானமாக இருந்து சமயோசிதமாகச் செயல்பட்டார். எனது முப்பாட்டனார்தான் அவர். அவர் அக்குளத்திற்குள் குதித்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அச்சிலையை மீட்டுக் கொண்டு வந்தார்.

அது குறித்து அக்கோயில் அர்ச்சகர்களும் கோயிலின் மற்ற அதிகாரிகளும் பெரிதும் நன்றியுடையவர்களாக இருந்தனர். அவர் ஓர் இஸ்லாமியர் என்பது உண்மைதான். கோயிலின் மிகப் புனிதமான விக்கிரகம், அதைக் கையாள்வதற்கு அனுமதிக்கப்படாத ஒருவரால் தொட்டுக் கையாளப்பட்டது குறித்து சாதி மற்றும் மதத் தூய்மைவாதிகள் பெரும் அதிர்ச்சியடைவார்கள் என்றாலும், இத்தகைய எந்த உணர்வுகளும் அங்கு வெளிப்படுத்தப்பட வில்லை.
மாறாக, என முப்பாட்டனை அவர்கள் ஒரு கதாநாயகனைப்போல நடத்தினர். இனிமேல் அந்தத் திருவிழாவின்போது, கோயிலின் முதல் மரியாதை அவருக்குத்தான் கொடுக்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் பிரகடனம் செய்தனர்.

முற்றிலும் வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு மட்டுமன்றி, எவரொருவருக்கும் அரிதாகவே வழங்கப்படுகின்ற ஒரு மாபெரும் கௌரவம் இது. அதன்படி, ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்டத் திருவிழா நாளன்று, அக்கோயில் என் முப்பாட்டனுக்குத் தொடர்ந்து முதல் மரியாதை கொடுத்து வந்தது. இந்த சம்பிரதாயம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. பின்னாளில் என் தந்தைக்கும் அந்த மரியாதை கொடுக்கப்பட்டது.

புத்தகம்: எனது பயணம், நூலாசிரியர்: ஏ.பி.ஜே.அப்துல் கலாம், தமிழில்: நாகலாட்சுமி சண்முகம்
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Sales & Marketing Office: 7/32, Ground Floor, Ansari Road, Daryaganj, New Delhi-110 002, விலை: ரூ.150/- பக்.170.

Monday 27 July 2015

காலம் வென்ற கலாம்...

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Friday 24 July 2015

பனை மரத்தடியில் அம்பானி பிரதர்ஸ்!!!

ஏன் தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்கிற உண்மை நிலையை விளக்கும் ஒரு பதிவு.

ஏப்ரலும் மேயும் அதிக அளவில் கள் (கள்ளதனமாக) இறக்கப்படும் மாதங்கள். ஒரு லிட்டர் கள்ளின் விலை பத்து ரூபாய் மட்டும் தான். ஆனால் அதே அளவு மதுபானத்தின் விலையோ குறைந்தது 240 ரூபாய்.

கள் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானதென்றால் டாஸ்மாக் மதுபானம் மட்டும் ஆரோக்கியமானதா?

கள்ளைத் தடை செய்யும் அரசு மதுபானத்தை தடை செய்யாமல் இருப்பதன் பொருள் என்ன?

கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதா..? கெட்டதா..? என்ற விவாததிற்கு நாம் செல்லும் முன் டாஸ்மாக்கில் விற்கும் மதுபானங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கிராமவாசியின் ஒரு நாள் சராசரி வருமானம் 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட இருபது முதல் முப்பது ரூபாய் கள்ளிற்காக செலவு செய்ததுபோக மீதமுள்ளதைக் குடும்பத்திற்குச் செலவிட முடியும். ஆனால் கள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதே 100 ரூபாயை மற்ற மதுபானங்களுக்காக செலவிட அரசு அனுமதிதுள்ளது. அதன் மூலம் அரசு வருமானம் 2000 கோடி என்று கூறி புளகாகிதம் அடைகிறது.

இதன் பொருளென்ன? கள் விற்பனையை பெரும் முதலாளிகள் நடத்த விரும்பினால் நிச்சியம் அதற்கான் தடை நீங்கும். அதாவது ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் நிறுவனங்கள் கள் விற்க ஆசைப் படும்போது அரசு தன் விதிகளைத் தளர்த்தி கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கும். சில அறிவு ஜீவிகளை விட்டு கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று அறிக்கை விடச் செய்யும். தவறானதாகக் கருதப்பட்ட ஒரு பொருள் புனிதம் பெரும். ஷேர் மார்க்கெட்டில் பங்கு விற்பனை சூடு பிடிக்கும்.

5 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் கள்ளின் விலை ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் RS.100/- only. Shake before drink ன்ற வாசகங்களுடன் அழகாக பேக் செய்யப்பட்ட பாட்டிலில் விற்பனை செய்யப்படும். ஷாரூக் கானும், அமீர் கானும் நம்மை கள் குடிக்க சொல்லி சிபாரிசு செய்வார்கள். ஆனால் நாம் பனை வளர்க்க மரங்களை தடை விதிக்கப்படும்.

கள்ளைத் தடை செய்த அரசினால் ஏன் மற்ற மதுபானங்களைத் தடை செய்ய இயலவில்லை? Votka, signature, Mc Dowell, போன்ற மதுபானங்களை பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் பனை மரங்களை வளர்ப்பவர்களோ சாதரண கீழ்த்தட்டு மக்கள். கள்ளின் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கினால் ஓர் இனத்திற்கான் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசு தனக்கு நட்டமேற்படுமே என்பதற்காக கள் மீது தடை விதிக்கவில்லை. மாறாக வோட்கா, சிக்னேச்சர் போன்ற பகாசுர மதுபான கம்பெனி முதலாளிகள்க்கு நட்டமேற்படக் கூடாது என்பதற்காகவே கள் மீது தடை விதித்திருக்கிறது.

அரசுக்கு குடிமக்களின் உடல்நலனைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அரசின் கவலையெல்லாம் மைடாஸ் போன்ற திமிங்கில நிறுவனங்கள் நட்டமடையக் கூடாது என்பது தான்.

2000 ஆண்டுகள் தொன்மையான ஒரு தொழிலை அழித்துவிட்டு ஓர் இனத்தின் வேலை வாய்ப்பைப் பறித்துவிட்டு பெரு முதலாளிகளின் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்க அரசே துணை போகலாமா?

சாராம்சம்: Niyas Ahmed

Thursday 23 July 2015

நாடார்களின் "அச்சம் அகற்றிய அண்ணல்" ஊ.பு.ஆ.சௌந்திரபாண்டியன் நாடார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை எப்படி முக்குலத்தோர் சமூகம் அவர்களின் சாதி தலைவராக போற்றுகிறதோ அப்படி நாடார்களால் போற்றப் பட வேண்டிய தலைவர் ஒருவர், நாடார் மக்களால் முகநூலில் புறக்கணிக்கப் பட்டு வருகிறார். சான்றோர் குல மக்களே நாடார் குலத்தின் ஆதர்ச தலைவராக நாம் போற்ற வேண்டியவர், நமது சாதிக்காக பாடுபட்டவர், பிராமன எதிர்ப்பு, நாடார் மகாஜன சங்கம், நாடார்கள் எழுச்சி, நாடார்கள் ஒருங்கிணைப்பு என அனுதினமும் சான்றோர் சமூகத்திற்காக பாடுபட்ட ஊ.பு.ஆ.பட்டிவீரன்பட்டி. சௌந்திரபாண்டியன் அண்ணாச்சிதான். 
பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார். நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் நாடார் சமூகத்திற்குப் பெரிதும் பெருமை சேர்த்த அவர்களின் செயல்கள் பற்றி அறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 15 செப்டம்பர், 1892
பிறப்பிடம்: பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: 22 பிப்ரவரி, 1953
பணி: நாடார் மகாஜன சங்க தலைவர், சென்னை சட்ட சபை உறுப்பினர்
வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் சொந்தமான காபி தோட்டங்கள் வைத்திருந்த முக்கிய பண்ணையாள் குடும்பத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார்.
சிறு வயதிலிருந்தே சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், பிராமண ஆதிக்கத்தைப் பார்த்து வளர்ந்தார். நாடார் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது இளம் பருவத்திலிருந்தே அவரது மனதில் விதையாய் அரும்பி, வளர்ந்து வந்தது. அப்போது சுதந்திரப் போராட்ட சூழலே நிலவியதால், அதன் தாக்கமும் அவரைப் பெரிதும் பாதித்தது.
நாடார் மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உறுதியாக செயல்பட்ட அவர், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கியத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர், அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டு, அவரது மக்களுக்காக பல நலத்திட்டங்களும், உதவிகளும் செய்து வந்தார். 1920 ஆம் ஆண்டில், பி. டி. ராஜன் அவர்கள் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களை சட்டப் பேரவைக்குப் பரிந்துரைத்ததால், அவ்வாண்டில் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றிய அவர், நாடார் சமூகத்தின் நலன்களை நீதி கட்சி மற்றும் கவுன்சிலில் எடுத்துரைக்கும் நபராக செயல்பட்டார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக 1928 முதல் 1930 வரை பணியாற்றினார். 1943 முதல் 1947 ஆம் ஆண்டு வரை, அவர் மதுரை மாவட்ட சபைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தான் ஒரு சிறுவனாக இருந்து போதே, சமுதாயத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை தனது மானசீக குருவாகக் கருதி, அவர் சென்ற வழியைப் பின்தொடர்ந்தார். ஆகவே, அவர் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் தீவிர பக்தனாக உருவெடுத்தார். இதன் வெளிப்பாடாக அவர், புனித கயிறு புறக்கணிப்பு மற்றும் பிராமண பூசாரிகள் நிராகரிப்பு போன்ற மாறுதல்களை மக்களிடம் கொண்டுவந்தார். மேலும் அவர், சுய மரியாதை திருமணம் மற்றும் சாதிமத வேறுபாடின்றி உணவருந்தும் பழக்கத்தையும் அவரது சமூக மக்களிடம் வலியுறுத்தினார். அவரது இந்தப் புரட்சிகரமான செயல்களைக் கண்ட பெரியார் அவர்கள், 1929ல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார்.
சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களது நிதிக் கட்சியின் செல்வாக்கு நாளடைவில் நலிவடைந்தது. மேலும், இந்திய தேசிய காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் அதில் நாடார் சமூகத்தை சேர்ந்த காமராஜர் போன்ற தலைவர்கள் வளர்ந்து வந்ததால், சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, அவரது உடல் நலம் குன்றி, அவர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், ஆட்சியில் இருந்த போது, பட்டிவீரன்பட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளை நிறுவினார். மேலும் பல கல்வி நிறுவனங்கள் அவரது பெயரில் செயல்பட்டு வருகிறது. ‘நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாக’ இருந்த அவர், பட்டிவீரன்பட்டியில் காஃபி கூட்டுறவு பதன்படுதல் பணிகளை அமைக்கும் கருவியாகவும் இருந்தார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள முக்கியக் கடைத்தெருவான பாண்டி பஜாருக்கு, ‘சௌந்தரபாண்டிய  நாடார்’ அவர்களின் பெயரிடப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். அண்மையில், அந்தக் கடைத்தெருவின் நுழைவு வாயிலில், தலைவர் சௌந்தரபாண்டிய  நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, ‘சௌந்தரபாண்டியன் அங்கத்’ என்றும் ஒரு பேர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சௌந்திரபாண்டியன் தொடர்ந்து 12 ஆண்டுகள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையின்போது, இவர் ஆளும்கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகப் பதவிவகித்து அமைச்சரவை தொடர வழி வகுத்தார்.

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் மதுரை மாவட்டத்தில் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) பட்டிவீரன் பட்டியில் அய்ய நாடார் – சின்னம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகச் சௌந்திரபாண்டியன் பிறந்தார். தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டிலும், மேல்நிலைக் கல்வியை மதுரையிலும் கலை இளையர் கல்வியைச் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் பயின்றார்.

சௌந்திரபாண்டியன் திராவிட இயக்கங்களான சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். பல பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். குறிப்பாகத் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார். நாடார் சமூகத்தில் அரசியலில் ஈடுபட்டுத் தலைவராக முதன் முதல் உயர்ந்தவர் சௌந்திரப்பாண்டியனார் அவர்களே.

1921 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 4 ஆம் நாள் சென்னை சட்டமன்றத்தில் “தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச்சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும்'' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அரசின் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். இத்தீர்மானத்தின் மீது பல தலைவர்களைப் பல மணிநேரம் உரையாடும் நிலையை உருவாக்கினார். இறுதியில் அமைச்சர் ராமராய நிங்கார் (பனகல் அரசர்) அவர்கள் தடை செய்வோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.

1925 ஆம்ஆண்டு மே திங்கள் 2 ஆம் நாள் “குடிஅரசு'' எனும் தமிழ் இதழைத் தந்தை பெரியார் தொடங்கினார். இயக்கத்துக்கு ஆங்கில இதழ் வேண்டும் என உணர்ந்து "ரிவோல்ட்' எனும் இதழ் 1928 நவம்பர் திங்கள் 7 ஆம் நாள் ஈரோட்டில் சௌந்திரபாண்டினார் தலைமையில் வெளியிடப்பட்டது.

1928 முதல் 1930 வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்தபோது பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடை இருந்ததைக் கண்டித்ததோடு தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடைசெய்யும் பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும் என ஆணை பிறப்பித்துத் தாழ்த்தப்பட்டோரும் சமமாகப் பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 நாட்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குச் சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார்.
1930 மார்ச்சுத் திங்கள் 16 ஆம் நாள் தலைச்சேரியில் (கேரளம்) தீயர், நாடார், பில்லவர் மகாநாடு நடைபெற்றது. சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார். அங்கே தீண்டாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்களைத் தனது தலைமையில் அருகிலிருந்த கோயிலுக்குள் எதிர்ப்புகளையும் மீறி அழைத்துச் சென்றார்.

1936 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் “பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும், பின்னர் “வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும் சௌந்திரப்பாணடியன், தந்தை பெரியார் இருவரும் கையொப்பமிட்டு “குடிஅரசு'' இதழில் வெளிவந்தது. இதன் மூலம் பாண்டியன் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் எந்த அளவுக்கு இணைந்து பார்ப்பனரல்லாத மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

நீதிக்கட்சியின் 16 ஆவது மாநாடு சேலத்தில், 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 26 ஆம்நாள் கூடியது. தந்தை பெரியாரும் தளபதி சௌந்திரபாண்டியனாரும் பெரிய சாரட் வண்டியில் ஊர்வமாக அழைத்துவரப்பட்டனர். கி.ஆ.ப. விசுவநாதன், அறிஞர் அண்ணா முதலியோர் ஊர்வலத்தில் வந்தனர்.
நாம் அச்சம் அகற்றிய அன்ணலின் புகழ் தினம் பாடுவோம்!

Tuesday 21 July 2015

நாசமாகும் விவசாயம்! சாமான்யனின் வயித்தெரிச்சல்!!

தமிழகத்துக்கு அளப்பறியாத வேலை வாய்ப்பை தரக்கூடிய ஒரே தொழில் மற்றும் ஒரே துறை விவசாயம் மட்டுமே! இதை உணர்நதிருந்த ஒரே தலைவர் பெருந்தலைவர் மட்டுமே. வைகை அனை கட்டப்படுவதற்கு முன் முதல்வராயிருந்த பெருந்தலைவர் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார்! அப்போது அப்பகுதிகளில் கொள்ளை திருட்டுக்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் கூறியபோது, "அவனுக்கு வேலை வாய்ப்பு இருந்தா ஏன் திருடப் போறான்னேன்... இந்தப் பகுதியில் அணை கட்ட ஏற்பாடு செய்யுங்கள். நான் ஆவன செய்கிறேன்!" என்றார் பெருந்தலைவர். அதுவே வைகை அணை உருவான சரித்திரம்.

அவருக்கு பிறகு விவசாய உற்பத்தியை பெருக்குவது பற்றி எந்த முதல்வரும் சரி, எந்த கட்சியும் சரி உண்மையாக கவலைப்படவில்லை! கண்துடைப்பு வேலைகளே நடக்கின்றன! இன்றைய பண வீக்கத்திற்கும், தொழில்களின் மந்த நிலைக்கும் இது முக்கிய காரணம். இது புரியாமல் ரியல் எஸ்டேட் சரிவே காரணம் என சில அறிவாளிகள் கூறுவது நகைப்பிற்குறியது. விவசாயம் செழித்தால் நகரப்புறத்திற்கு வேலை வாய்ப்பிற்காக வருபவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறையும். இதை கண்கூடாக கண்டு வருபவன் நான். இப்பொழுதும் கூட சில நேரங்களில் மழை செழித்து கிராமங்களில் காடு வேலைகள் துவங்கி விட்டால் கிராமத்து இளைஞர்கள் தத்தம் காடுகளில் வேலை பார்க்க சென்று விடுவதை காண முடியும்.

விவசாயத்தை சார்ந்தே நம் பொருளாதாரம் என்பது நம் போன்ற படித்த மரமன்டைகளுக்கு உறைக்கும் போது, பொட்டு நிலம் கூட மீதம் இருக்குமா என்பது சந்தேகமே! மதுரையிலேயே எனக்கு தெரிந்து அவணியாபுரம் கண்மாய், சின்ன கண்மாய் போன்ற கண்மாய்களை ஒட்டிய பகுதிகள் எல்லாம் நெல் விளைந்த பகுதிகள், இப்போது அதற்கான சுவடே இல்லாமல் அந்த கண்மாயகளே அழிந்து விட்டன. இவற்றில் அவணியாபுரம் கண்மாயை அழித்து அதில் தொகுப்பு வீடுகள் கட்டியது மாநில அரசின் ஹவுசிங் போர்டு!

மதுரை மாட்டுத்தாவணியை ஒட்டிய வண்டியூர் கண்மாயும், செல்லூர் கண்மாயும், திருப்பரங்குன்றம் கண்மாயும் அழிவின் விளிம்பில் உள்ளன. விவசாயம் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று மணல் மாஃபியாக்களும், ரியல் எஸ்டேட் சிண்டிகேட்களும் அரசியல்வாதிகளின் துணையோடு விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் அபகரித்து அழித்து வருகின்றன. வழக்கம் போல் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்னை போல சில இளிச்சவாயன்கள் மட்டுமே எங்கள் விவசாய நிலங்களை சார்ந்து சில குடும்பங்கள் இருப்பதால், கடன்பட்ட சூழல்களிலும் விற்க மறுத்து வருகிறோம்.

விவசாய நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் நாம், வீட்டை விற்று அரிசி வாங்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

பெருந்தலைவரும்-சிறை வாழ்க்கையும்

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்காக சிறைக்கு செல்ல வேண்டி இருந்தால், ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொள்கிறார்கள். ஆனால் காமராஜர் நாட்டு நன்மைக்காக குடும்ப பாச உணர்வுகளை விலக்கி வைத்தவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதை அறிந்த காமராஜரின் பாட்டி பார்வதியம்மாள் படுத்த படுக்கையாகி விட்டார். காமராஜர் வந்து பார்த்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. காமராஜரும் பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்.

இதனால் காமராஜரை பரோலில் கொண்டு வர அவரது அரசியல் குருநாதர் சத்திய மூர்த்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டியின் உடல் நிலை பற்றி கூறி பரோலில் வெளிவருமாறு அவரை சிறையில் சந்தித்த தாய்மாமா கேட்டுக் கொண்டார். ஆனால் தண்டனை முடியும் வரை சிறையை விட்டு வெளியே வர மாட்டேன் என்று நெஞ்சுரத்துடன் கூறி விட்டார்.

இப்படிபட்ட பெருந்தலைவரை இனி எங்கு காண முடியும்?. தனது வாழ்நாளில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களுக்காகவும் போராடி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ 8½ ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். அப்போது சிறைக் கொடுமைகளை அவரே சொல்லியிருக்கிறார். சிறையில் வெப்பத்தின் கொடுமை தாங்காமல் நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் நின்றதை அவர் குறிப்பிடும்போது நமது கண்கள் குளமாகிவிடுகின்றன. இதேபோல் ஒரு பெருந்தலைவர் இனி பிறப்பாரா?.

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் போதாது. இது தான் பெருந்தலைவர் பிறப்பின் பெருமை. எளிமை, நியாயம், நேர்மை, வீரம், விவேகம் என்று அவரது குணநலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னலம் அற்றவர். இத்தனை நற்குணங்களை கொண்ட பெருந்தலைவர் படித்தது 6–வது வகுப்பு மட்டுமே. ஆனால் அவரை பற்றி இன்று உலகமே படித்து கொண்டு இருக்கிறது.

Monday 20 July 2015

பெருந்தலைவர்-நடிக்க தெரியாத அரசியல்வாதி

ஊரையே அடித்து உலையில் போட்டு விட்டு நல்லகுடி நாணயமாக நடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இப்படியும் வாழ்ந்திருக்கிறார் ஒரு அப்பாவி! நிஜவாழ்க்கையில் என்றுமே நடிக்க தெரியாத அவருக்கு நாடகத்தில் கூட நடிக்க தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்தும் விட்டது.

காமராஜர் சிறுவயதில் ‘மார்கண்டேயன்’ நாடகத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு மார்க்கண்டேயனை காப்பாற்றும் சிவபெருமான் வேடம். பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்து விடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் விதித்திருந்த கட்டளை. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயன் சிவபெருமான் கால்களை பிடித்து கொண்டு இறைவா.. என்னை காப்பாற்று என்று மன்றாடுகிறான்... அப்போது எமனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்கவில்லை. இது நாடகம் என்பதையும், தான் சிவபெருமான் வேடம் போட்டிருப்பதையும் காமராஜர் மெய் மறந்து விட்டார்.

‘‘இந்த பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறயே’’ என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கி விட்டார். கூட்டம் இந்த காட்சியை கண்டு ஆரவாரம் செய்தது. கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராஜரின் உள்ளத்தை, அப்போதே அனைவரும் பாராட்டினர். உயிர் மூச்சு இருக்கும் வரை, இது தான் அவரது போராட்ட குணமாக அமைந்து விட்டது.

Sunday 19 July 2015

பெருந்தலைவரும் - காரும்


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பயன்படுத்தியது கருப்பு நிற செவர்லே கார். தொழிலதிபர் டிவிஎஸ். சுந்தரம் அய்யங்காரால் வழங்கப்பட்டது. இப்போதைய அரசியல்வாதிகள், பதவிக்காலம் முடிந்தும் அரசு வீடு, காரை திருப்பி தராமல் இழுத்தடிக்கும் வேளையில், முதல்வராக பதவி வகித்தபோது அரசு காரை பயன்படுத்தாமல் இந்த காரையே பயன்படுத்தினார்.

1975ம் ஆண்டு பெருந்தலைவர் மறைந்தார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக காமராஜர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்தனர். அதில், இந்த செவர்லே காரும் அடக்கம். மேலும், காரை விற்பதற்காக ரூ.2,000 முன்பணமாகவும் பெற்றுவிட்டனர். ஆனால், கவியரசு கண்ணதாசன் வெளியிட்ட கவிதையால் அந்த காரை திரும்பவும் பெற்றனர். மேலும், முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள்.

அவ்வாறு பெறப்பட்ட அந்த கார் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருப்பது காமராஜரை அவமதிப்பது போலாகும்! பெருந்தலைவரின் விசுவாசிகள் ஒருங்கிணைந்தால் எதாவது செய்யலாம்!

Wednesday 15 July 2015

பெருந்தலைவர் பிறந்த தினம் நாடார் தினமா?!

சாதி பாகுபாடில்லாமல் தமிழ் சமூகத்திற்கும், ஏழைப் பாட்டாளிக்கும், தேசத்தின் நலனுக்கும் உழைத்த உத்தமருக்கு சாதி சாயம் வேண்டாம். ஊருக்கு உழைத்த உத்தமர் அவதரித்த நாளை நாம் ஏன் சாதி தினமாக கொண்டாட வேண்டும்? அவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும், கல்வி தினமாக கொண்டாடுவதற்கும் அனைத்து சமூகத்தை போலவே நாடார் சமூகத்திற்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது பிறந்தநாளை சாதி தினமாக அறிவித்து அவரை கலங்கப் படுத்துவதோடு, அவரை குறுகிய சாதி வட்டத்திற்குள் அடைக்க நாடார் மக்களுக்கு உரிமை இருப்பதாக எனக்குப் படவில்லை!

உண்மையிலேயே நாடார்கள் தினம் கொண்டாட வேண்டியது முதன் முதலில் நாடார் சங்கம் அமைத்த ராவ் பகதூர் பொறையார் ரத்தினசாமி நாடார் அவர்களின் பிறந்த தினத்தையோ அல்லது அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி W.P.A.சௌந்திரபாண்டியன் நாடார் அவர்களின் பிறந்த தினத்தையோதான்! இவர்கள் இருவருமே நாடார் சமுதாய ஒற்றுமைக்கும் நன்மைக்கும் பாடு பட்டவர்களாவர். பெருந்தலைவர் பிறந்த குலத்தில் பிறந்ததற்கு நாம் பெருமைப் பட வேண்டும். ஆனால் அதற்காக அவர் பிறந்த நாளை நாடார் தினமாக்கி அவருக்கு சாதிச்சாயம் பூச வேண்டியதில்லை! அதனால் அவர் மீது பிற சமுதாய மக்களுக்கு சாதி வெறுப்பை உருவாக்குமே ஒழிய வேறு நன்மை பயக்கப் போவதில்லை என்பதே என் அச்சம்!

பெருந்தலைவரின் பக்தனாக அவர் மீதுள்ள மரியாதையாலும், நாடாராக சமுதாயத்தின் மீதுள்ள பற்றாலும் பதியப்படும் பதிவு இது!

உழைப்பு, உண்மை, உயர்வு!
பெருந்தலைவர் புகழ் வாழ்க!

பெருந்தலைவர் - மலர்ந்த நாள்

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.

அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

- ஈ ரா 

Tuesday 7 July 2015

பெருந்தலைவர் - இரு கை வேழத்து கர்ம வீரன்


கம்பன் இராமனை ‘இரு கை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்து பேசுவான்.
வேழம் என்றால் யானை. யானையின் கை நீளமானது. பொதுவாகவே ஆள்பவர்ளுக்கு கை நீளம்தான்.
ஆள்பவரின் கைகள் நீளமாயிருக்கலாம். அவை நீளுமானால் ஆட்சிக் காலம் நீளாது.
காமராஜரின் கைகளும் நீளமாயிருக்கலாம். முழங்கால்கள்வரை நீண்டு இருக்கும்.
கம்பன் இராமனை நீண்ட கரங்களை உடையவன் என்று மட்டும் கூறியிருக்கலாம். நமக்கும் புரியும்தான். அதன் பின் ஏன் யானையின் தும்பிக்கை போன்று நீளமான கை என்றான்?
இராமருக்கு பொருந்தியது அப்படியே பெருந்தலைவர் காமராஜருக்குக்கும் பொருந்துவமைக் காணுங்கள்.
யானையின் தும்பிக்கை பாகனை மேலே தூக்கிவிடப் பயன்படும்.
அதுபோல் இராமன் கிஷ்கிந்தையில் வாழ்ந்த சுக்கிரிவனுக்கு முடிசூட்டு மன்ன்னனாக்கி சிம்மாசனத்தின் மேல் அமர வைத்தான். அது மட்டுமன்றி இலங்கை முடியை வீடணனுக்கு சூட்டித் தம்பியைத் தலைவனாக்கினான்.
யானை தன் நீண்ட கரத்தால் பாகனைத் தூக்கித் தன் தலைமேல் அமர்த்துவதைப்போல், இராமனும் இருவருக்கு பலைமைப் தவி பந்து சிறப்பித்தான்.
எனவேதான் கம்பன், இராமனை ‘இருகை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்தான்.
ஆகவேதான் இரமனுக்கும் காமராஜருக்கும் பொருத்தமுண்டு என்பது.
இராமனும் பதவியைத் துறந்து வந்தான். காமராஜரும் பதவியைத் துறந்துவந்தார்.
இராமன் காலத்தின் சூழ்நிலையால் சுக்கிரிவனுக்கும், வீடணனுக்கும் முடிசூட்டி மன்னனாக்கினான். காமராஜரோ அரசியல் சூழ்நிலையால், பாரதத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக்கி நிலை நிறுத்திக் காட்டினார்.
இவ்வாறு அரசர்களை உருவாக்க வேண்டுமானால் அவரிடம் பேரரசர்க்கு உரிய தகுதி இருக்கிறதென்று அர்த்தம். அதனால்மான் தலைவர்களை உருவாக்கியவரை பெருந்தலைவர் என்றனர்.
எவ்வளவு பொருத்தம்!
பட்டங்கள் பலருக்கும் வந்து சேரும்; நின்று பொருந்தாது. ஆனால் காமராஜரைப் ‘பெருந்தலைவர்’ என்றது என்றென்றும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் அஸ்திவாரத்தோடு உருவாக வேண்டும் அத்தகையவர்களால்தான் பலரை உருவாக்க முடியும் என்னும் உயர்ந்த பாடத்தை பெருந்தலைவரிடமிருந்துதான் படிக்கவேண்டும்.
வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.
இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.
இதில் தோற்றவர்கள் எதிர் கட்சியாக இருந்தாலோ, ‘ அரசு நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தப்ட்டதே என் தோல்விக்குக் காரணம்’ என்பதும், ‘தவறான வாக்காளர் பட்டியலை வைத்து நடந்த தவறான தேர்தல்’ – என்பதும், ‘கள்ள ஓட்டுக்களே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும், தேர்தல் நேரத்தில் போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். – என்பதும், ‘இந்தத் தேர்தல் செல்லாது, நான் கோர்ட்டுக்கு போவேன்’ – என்பது எல்லா தேர்தல்களிலும் எதர்த்தமாகப் பார்ப்பதுதான்.
எல்லாவற்றையும்விட பேசுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் மக்கள்.
முழுமையான ஜனநாயக நாட்டில் வாழுகின்றோம். மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் வாக்கை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
மிசாவும், பின் இ. காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வியம், ஜனதா அடைந்த அமோக வெற்றியும், அதன்பின் மாற்றாக ஆளின்றி மறுபடியும் இ. காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் சிந்தித்துப் பார்த்தால், மக்கள் முடிவுகளை மாற்றிப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.
எனவே, அரசியலில் தோல்வி என்பது அவ்வப்போது வருவதுதான். ஆனால் அரசியல் ஞானம் உடையவர்கள் மட்டும்தான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.
அந்த வரிசையில் தலைமை தாங்கி நிற்பவர் பெருந்தலைவர்தான். தோல்வியை ஏற்கும் துணிவுடைய தூயவர் அவர்.
1971 அகில இந்திய அளவில் இ. காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றது. காமராஜின் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
நாடெங்கும் வெளியாகும் பேர்தல் முடிவுகள் நேர்மாறாகவே வந்து கொண்டிருக்கின்றன. சிந்திக்கத் துவங்கினார். தனது ஆதரவாளர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் இருப்பதை தலைவர் அறிகிறார்.
தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போய், பெருந்தலைவரைப் பார்த்தனர்.”ஐயா, அவர்களின் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச் சீட்டில் தடவிய ரஷ்ய மைதான் காரணம்” என்றனர்.
தலைவர் நிதனமாக சொன்னார், ”ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்களின் பேச்சா இது? நாம் தோற்றதற்கு காரணம் ரஷ்ய மை என்கிறீர்களே… அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை”
இவ்வாறு தன்னை அல்லது தனது தலைமையை அல்லது தனது கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த குணம்தான் அவரது உயர்வுக்கு காரணம்.
தோல்வியை சமதானத்தோடு, அமைதியாக நிதானமாக அணுகினால் அதற்குள் அடுத்த வெற்றி அடங்கியிருக்கும்.
ஆம், நிதானமாக தோல்வியை அணுகும்போது தோல்விக்கான உண்மையான காரணங்கள் தெரிந்துவிடும். அப்படியானால் மறுமுறை தோற்பது தவிர்க்கப்படும்.
முழுமையாக ஜனநாயகவாதி என்பதால் தோல்வியை முதலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியுடையவராக இருந்தார் காமராஜர்.
எனவேதான் அவர் வெற்றியில் மகிழ்வதும் இல்லை; தோல்வியில் வருந்துவதும் இல்லை; மனதை எப்போதும் எதார்த்த நிலையிலே வைத்திருந்தார்.
வெற்றியால் துடிக்காமலும், தோல்வியால் துவளாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணுபர்கள் காமராஜரைப் படிக்கவேண்டும்.
பொது நலத்தில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியைச் சந்திக்காமலே இருக்கமாட்டார்கள்.
அவ்வாறு தோல்வியை ஏற்கும் துணிவை படிக்காத மேதையிடம்தான் படிக்க வேண்டும்.