Thursday 2 July 2015

அம்மாவின் கைமனம்...

என்அம்மாஇறந்து மூன்றாம் நாள் கருமாதி அன்று என் அண்ணன் என்னிடம் சொன்னது "வாய்க்கு ருசியான சாப்பாட இன்னிக்கோட மறந்துரு" என்பதே! அம்மாவை இழந்த பிள்ளைகள் அனைவரும் இதை உணர்ந்திருப்பார்கள்!

ஆனால் இனி மேற்கொண்டு இந்த பதிவு என் அம்மாவைப் பற்றி அல்ல. என் பிள்ளைகளின் அம்மாவைப் பற்றியது! மேலே உள்ள கூற்று என் மனைவியின் சமையல் மோசம் என குறிப்பிடுவது அல்ல. அவளது கைமனம் என் அம்மாவின் கைமனத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாதது தான். (பயத்துல உளர்றேன்னு நெனச்சு சிரிக்கக் கூடாது!) கல்யாணம் ஆகி பிரசவத்திற்கு அம்மா வீடு போகும் வரையிலும் சரி, அதன் பிறகு என் மகள் சாப்பாடு சாப்பிட தொடங்கிய வரையிலும் சரி. "என்னாங்க உங்க அம்மா எப்படி வைப்பாங்கன்னு சொல்லுங்க அப்படியே சமைக்கிறேன்" என அசத்தியவள்தான்! ஆனால் என் மகள் சாப்பிட ஆரம்மபித்த உடனேயே, அவள் போக்கு மாறியது.

"ஏங்க அவளுக்கு காரம் பிடிக்காது அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க"ன்னு ஆரம்பிச்சது, இப்போ "நீங்க சாப்பிடறது தான் இப்ப ரொம்ப முக்கியம்! பிள்ளைங்களுக்கு பிடிக்க வேணாமா? வச்சத சாப்டுட்டு பேசாம போங்க" லெவல்ல வந்து நிக்குது!! ஆனால் இதில் ஒரு விசயம் சொல்லியாக வேண்டும். நான் இன்னும் எனக்கு பிடித்த உணவு வகைகளை நாடிக் கொண்டிருக்கும் போது, அவளுக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது என்பதையே நானும் மறந்து விட்டேன், அவளும் மறந்து விட்டாள்! என மகளை அவள் கருவுற்ற போதே தன் விருப்ப உணவுகளையும், விருப்பங்களையும் உதறி விட்டாள் அவள்.

இதை சாப்பிட்டா வயித்துல வளரும் குழந்தைக்கு நல்லது, இப்படி படுத்தால்தான் நல்லது, இந்த புத்தகங்கள் படித்தால்தான் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மனநிலையோடு வளரும் என குழந்தைக்காக எல்லா சுய விருப்பங்களையும் மகிழ்ச்சியோடு விட்டால் அவள். என் சிறு வயதில் என் அம்மாவின் தியாகங்களை நான் கண்டதில்லை, ஆனால் இவள் மூலம் என் அம்மாவை காண்கிறேன். இன்றும் வீட்டுக்குள நுழைந்தவுடன் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்கும் சுயநலக் கைகள் எனது. ஆனால் எனது கடைக்குட்டியின் பிறப்புக்கு பிறகு கடந்த இரண்டு வருட காலமாக அவள் தொலைக்காட்சி பார்த்ததாக நினைவில்லை! குழந்தைகளுக்கு பிடித்த சில உணவு வகைகள் அவளுக்கு மிகவும் பிடித்த உணவாகவே இருந்தாலும், அதிகமாகவே சமைத்து இருந்தாலும் குழந்தைகள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவள் வாயில் வைப்பதில்லை! குழந்தைகள் சாப்பிட்டு மிகுதியானவற்றை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சில வேளைகளில் குழந்தைகள் கேட்டு விடுவதுன்டு. அவள் வாயிலிருப்பதையும் எடுத்து குழந்தைகளுக்கு குடுத்து விடுவாள். இதையே எங்கள் அம்மா செய்த்தாக என் பாட்டி கூறியது எனக்கு நினைவில் உள்ளது.

அவள் தினம் உட்கொண்டு வரும் மருந்தின் காரணமாக, தினம் குறைந்த பட்சம் 8-10 மணி நேரம் உறக்கம் கொள்ள வேண்டியவள், உண்மையில் உறங்குவது 5 மணி நேரமே. சாதாரண உருளைக்கிழங்கை கூட முன்று பிள்ளைகளுக்காக ஒரே நாளில் மூன்று விதமாக வைத்து விடுவாள். அசைவ உணவு வகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அன்று அவளுக்கு ஓவர் டைம்தான்! "மனைவி அமைவதெல்லாம் கடவுள் குடுத்த வரம்" என்பார்கள். நம் பிள்ளைகளுக்கு நல்ல அம்மா அமைவதே கடவுள் குடுத்த வரம். எங்கள் வீட்டு இரண்டு வயது கடைக்குட்டியை மேய்க்கவே ஓவர் டைம் பார்த்தாக வேண்டும். ஒரு பெண் நல்ல மனைவியாக இருப்பது முதல் குழந்தை கருவுரும் வரைதான். அதன் பிறகு அவர் நல்ல தாயாக பரிணாம வளர்ச்சியடைந்து விடுகிறார்.

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்" என் மனைவி வாழ்வதெல்லாம் குழந்தைகளின் எதிர்காலம் கருதிதான். தொலைக்காட்சியில் ஒரு முறை தன் குட்டியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து 400கிலோ எடையுள்ள ஆண் கிரிஸ்லீ கரடியுடன், கடுமையாக போரிட்ட 200கிலோ தாய் கரடியை பார்த்தேன். ஐந்தறிவு கரடிக்கே இந்தளவு தாய்மையுணர்வு இருக்கும் போது, நம்மை போன்ற மனிதர்களுக்கு? "கற்பு" என்பதைக் கூட நாகரிக பெண்கள் மதிக்காமல் போலாம். ஆனால் தாய்மை என்பது அவர்களை அறியாமல் அவர்கள் உணர்வில் கலந்துள்ளது.

"அம்மாவின் கைமனம்" ஏன் நம்மை விட்டு அகலுவதில்லை என்பது புரிந்திருக்குமே. அதில் ருசி மட்டுமா? அக்கறை, பாசம், நேசம், தியாகம், தாய்மை என எத்தனை உட்பொருட்கள்? அதனால்தான் அம்மா அரைத்த சட்னியின் மனமும் கூட மனதை விட்டகலாமல் உள்ளது!

No comments: