Tuesday 21 July 2015

நாசமாகும் விவசாயம்! சாமான்யனின் வயித்தெரிச்சல்!!

தமிழகத்துக்கு அளப்பறியாத வேலை வாய்ப்பை தரக்கூடிய ஒரே தொழில் மற்றும் ஒரே துறை விவசாயம் மட்டுமே! இதை உணர்நதிருந்த ஒரே தலைவர் பெருந்தலைவர் மட்டுமே. வைகை அனை கட்டப்படுவதற்கு முன் முதல்வராயிருந்த பெருந்தலைவர் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார்! அப்போது அப்பகுதிகளில் கொள்ளை திருட்டுக்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் கூறியபோது, "அவனுக்கு வேலை வாய்ப்பு இருந்தா ஏன் திருடப் போறான்னேன்... இந்தப் பகுதியில் அணை கட்ட ஏற்பாடு செய்யுங்கள். நான் ஆவன செய்கிறேன்!" என்றார் பெருந்தலைவர். அதுவே வைகை அணை உருவான சரித்திரம்.

அவருக்கு பிறகு விவசாய உற்பத்தியை பெருக்குவது பற்றி எந்த முதல்வரும் சரி, எந்த கட்சியும் சரி உண்மையாக கவலைப்படவில்லை! கண்துடைப்பு வேலைகளே நடக்கின்றன! இன்றைய பண வீக்கத்திற்கும், தொழில்களின் மந்த நிலைக்கும் இது முக்கிய காரணம். இது புரியாமல் ரியல் எஸ்டேட் சரிவே காரணம் என சில அறிவாளிகள் கூறுவது நகைப்பிற்குறியது. விவசாயம் செழித்தால் நகரப்புறத்திற்கு வேலை வாய்ப்பிற்காக வருபவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறையும். இதை கண்கூடாக கண்டு வருபவன் நான். இப்பொழுதும் கூட சில நேரங்களில் மழை செழித்து கிராமங்களில் காடு வேலைகள் துவங்கி விட்டால் கிராமத்து இளைஞர்கள் தத்தம் காடுகளில் வேலை பார்க்க சென்று விடுவதை காண முடியும்.

விவசாயத்தை சார்ந்தே நம் பொருளாதாரம் என்பது நம் போன்ற படித்த மரமன்டைகளுக்கு உறைக்கும் போது, பொட்டு நிலம் கூட மீதம் இருக்குமா என்பது சந்தேகமே! மதுரையிலேயே எனக்கு தெரிந்து அவணியாபுரம் கண்மாய், சின்ன கண்மாய் போன்ற கண்மாய்களை ஒட்டிய பகுதிகள் எல்லாம் நெல் விளைந்த பகுதிகள், இப்போது அதற்கான சுவடே இல்லாமல் அந்த கண்மாயகளே அழிந்து விட்டன. இவற்றில் அவணியாபுரம் கண்மாயை அழித்து அதில் தொகுப்பு வீடுகள் கட்டியது மாநில அரசின் ஹவுசிங் போர்டு!

மதுரை மாட்டுத்தாவணியை ஒட்டிய வண்டியூர் கண்மாயும், செல்லூர் கண்மாயும், திருப்பரங்குன்றம் கண்மாயும் அழிவின் விளிம்பில் உள்ளன. விவசாயம் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று மணல் மாஃபியாக்களும், ரியல் எஸ்டேட் சிண்டிகேட்களும் அரசியல்வாதிகளின் துணையோடு விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் அபகரித்து அழித்து வருகின்றன. வழக்கம் போல் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்னை போல சில இளிச்சவாயன்கள் மட்டுமே எங்கள் விவசாய நிலங்களை சார்ந்து சில குடும்பங்கள் இருப்பதால், கடன்பட்ட சூழல்களிலும் விற்க மறுத்து வருகிறோம்.

விவசாய நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் நாம், வீட்டை விற்று அரிசி வாங்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

No comments: