Saturday 4 July 2015

என்னை கவர்ந்த நான்கு எளிமை சக்கரவர்த்திகள். (நான்காமவர் பெருந்தலைவர்)

பெருந்தலைவரைப் பற்றி நான் ஏற்கனவே நிறைய சொல்லியிருக்கிறேன். அத்தனையும் மறுபடியும் எழுத வேண்டுமானால் பிளாக் பத்தாது மக்களே! காமராஜரின் எளிமை, நேர்மை பற்றி எல்லோருக்குமே தெரியும். கக்கனையும் காமராஜரையும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று வர்ணிக்கிறது இன்றைய சமூகம். ‘காமராஜ்’ படம் கமர்ஷியல் ஹிட் இல்லை; ‘போக்கிரி’தான் ஹிட்!

சரி, விடுங்க! சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. காமராஜரைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை மட்டும் சொல்லி இந்த தொடரை முடிச்சுக்கறேன்.

வாரியாரின் சொற்பொழிவிற்கு மிகப் பெரிய ரசிகர் காமராஜர். ஒருமுறை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வாரியாரின் ராமாயணச் சொற்பொழிவு. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த அந்தச் சொற்பொழிவுக்குத் தினமும் அப்படி ஒரு கூட்டம்! ஒரு நாள் பெருந்தலைவரும் வாரியாரின் சொற்பொழிவை கேட்க வந்திருந்தார்.

அன்று வாரியார் மும்முரமாகச் சொற்பொழிவு செய்துகொண்டு இருந்தார். ஹனுமானுடைய வீரம், ஆற்றல், நேர்மை, எளிமை, தியாகம், கடமை உணர்வு பற்றியெல்லாம் விவரித்துக்கொண்டு இருந்தபோது, காமராஜர் அங்கே வந்தார். கூட்டத்தில் சிறு சலசலப்பு. வாரியார் தமது பிரசங்கத்தைத் தொடர்ந்தார்... “அவர் ஒரு பிரம்மசாரி! பிரம்மசாரிகளுக்கே தனியொரு ஆற்றல் இருக்கும். பிரம்மசாரிகள் மாபெரும் காரியங்களைச் சாதிக்க வல்லவர்கள். தங்கள் செயலில் உறுதியானவர்கள். திடமான முடிவுகளை விரைந்து எடுக்கக் கூடியவர்கள். நான் யாரைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று சொல்லியபடியே காமராஜரைப் பார்த்தார். கூட்டம் புரிந்துகொண்டு கரவொலி எழுப்பியதில், தேனாம்பேட்டையே அதிர்ந்தது.

தொடர்ந்து வாரியார், “நான் இவ்வளவு நேரமும் ஹனுமானைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆமாம், நீங்கள் யாரையென்று நினைத்தீர்கள்?” என்று கேட்டார், கண்களை இடுக்கி, தமது வழக்கமான குறும்புச் சிரிப்போடு.

இந்த முறை சென்னையே அதிர்ந்தது.

No comments: