Wednesday 15 July 2015

பெருந்தலைவர் - மலர்ந்த நாள்

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.

அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

- ஈ ரா 

No comments: