Saturday 5 December 2015

பிணந்தின்னிகள்.....

பிணந்தின்னி கழுகுகள்
****************************

இயற்கையைப் பாதுகாப்பாக பேணுவதற்கான வழிமுறைகளை இயற்கையே வகுத்தளித்திருக்கிறது. உயிரினங்களின் பழக்க வழக்கங்களும் இதுபோன்ற இயற்கை நெறிகள்தாம்.
நீண்டநேரம் பறக்கவல்லவை பிணந்தின்னிக் கழுகுகள். இறந்த உயிரினங்களின் உடல்களை அழிப்பதற்கான இயற்கையின் அற்புதப் படைப்பு பிணந்தின்னிக் கழுகு.

இவற்றை நேச்சுரல் ஸ்காவன்ஜெர்ஸ் அல்லது இயற்கைத் துப்புரவாளர்கள் என்கிறார்கள். வேட்டையாட விலங்குகளோ அல்லது இரையோ கிடகை்காத பட்சத்தில் எளிய உணவாக இறந்த விலங்குகளை உண்பதால், இந்தப் பெயர் வந்திருக்கிறது. இரை கிடைக்காத தருணங்களில் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளைக் கொன்று தின்கிறது இந்தப் பறவையினம்.

பிணந்தின்னி மனிதர்கள்
******************************

இங்கே நான் பிணந்தின்னி அகோரிகள் பற்றி பேசவில்லை! பிணந்தின்னி கழுகுககள் நோய்வாய்பட்ட மற்றும் இறந்த உணவுகளை மட்டுமல்ல சமயத்தில் வேட்டையாடியும் உண்பவை! ஆனால் பிணந்தின்னி மனிதர்கள் இழவு எங்கே விழும், எப்போ ஆதாயம் பார்க்கலாம் என சுற்றுபவர்கள். எரியும் வீட்டில் பிடுங்கி தின்பவர்கள்.

இந்த வகை பிணந்தின்னிகள் அரிசயல் மற்றம் அதிகார வர்க்கத்தில் நிறைய உண்டு. சமீபத்தில் ஊடகத்துறையும் இணைந்துள்ளது. கடந்த முறை சுனாமி நிவாரண நிதியிலும், நிவாரணப் பணிகளிலும் முடிந்த வரை வாய்க்கரிசி அள்ளியவர்கள் இவர்கள்!

இந்த முறையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் வாய்க்கரசி அள்ளுகிறார்கள். இவர்களுக்கு தாய் தந்தை அண்ணன் அக்கா என எந்த உறவும் தெரியாது. பிணம் மட்டுமே இவர்கள் கண்ணுக்கு தெரியும்! ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி ஊடகங்களும் பிணம் தின்பது அதை விட வேதனை!!

தூ..... தூ.... பிணந்தின்னிகள்...

தூ.... தூ.... தூ..... என்னை போன்ற கையாலாகாத ஜெண்மங்கள்....

ஏரி காத்த பனைகள்....

பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம்.

பனைகள் நம் ஏரிக் கரைகளிலும் குளங்கரைகளிலும்  நின்றிருந்த வரையில் ஆக்கிரமிப்பு, கரை உடைப்பு ஆகியவை நிகழவில்லை. இப்பொழுதும் பனைகள் ஏரிக்கரையில் காத்து நி்ன்றால் அவற்றின் வேர்கள் கரைகளை பலப்படுத்தி அரனாக இருந்திருக்கும்.

பனைகளை அழித்ததன் பயனை நாம் இன்று வட மாவட்டங்களில் மிக மோசமாக அனுபவித்து வருகிறோம். கண்மாய் கரையில் இருக்கும் பனைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காகவே பனையில் முனி இறங்கியிருப்பதாகவும், கருப்பு இருப்பதாகவும் தென் மாவட்டங்களில் கூறுவார்கள்!

கரை உடைந்து கிராமங்களும் நகரங்களும் வெள்ளக்காடாவதை பனைகள் தடுக்கும், இன்றும் இருந்திருந்தால் தடுத்திருக்கும். குளம், கண்மாய், ஏரி மட்டுமல்ல வெள்ள காலத்தில் ஆறுகளிலும் கரை உடைப்பு ஏற்பட்டு ஆறுகள் திசைமாறுவதையும் தடுக்க வல்லவை பனைகள்.

தாங்க முடியாத பஞ்ச காலத்திலும் தானும் தாக்குப்பிடித்து நம்மையும் வாழவைக்கும் திறன் கொண்டது! 

ஆனாலும் நாம் அவற்றை அழிப்பதைவிடத் தற்கொலைத் தனமான செயல் ஒன்றும் இருக்காது! 

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பனைமரங்கள் நிறைந்திருந்தால் எந்தப் பஞ்சமும் வறட்சியும் எதுவும் செய்யாது. 

செலவே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அனைத்து வழிகளிலும் காக்கும் திறன்கொண்ட பனைமரத்தைக் காப்போம்! 

அது பனைமரத்துக்கு நாம் செய்யும் உதவி அல்ல! நமக்கு நாமே செய்து கொள்ளும் மாபெரும் உதவியாகும்!....

அரசுகளும், தொண்டார்வ நிறுவனங்களும், கட்சிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும், பொதுமக்களும் விழிப்படைவார்களா?......

Sunday 22 November 2015

பனையும் - சான்றோரும்!

நம்மில் பலர் நினைப்பது போல் பனையேறுவது மட்டுமே சான்றோர் தொழிலாக இருந்ததில்லை! பனையேறுதலும் ஒரு தொழிலாய் இருந்து வந்தது என்று கூறலாம். சான்றோர்களை கடல் வணிகத்திலும், கடல் தாண்டிய வணிகத்திலும் புகழ் பெற்றிருந்த பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சான்றுகள் கூறுகின்றன. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழகம் எங்கும் வணிக பேட்டைகளை நிறுவியவர்கள் நிறுவி சிறப்பாக வணிகம் செய்தவர்கள் சான்றோர்கள்.

அது மட்டுமல்ல பனையை வைத்திருந்த சான்றோர்களும் பனை ஏறுவதை கூலிக்காக செய்யவில்லை. பனையை வைத்து விவசாயம் செய்தனர், பனம் பொருட்களை வண்டியில் கொண்டு சென்று வணிகமும் செய்தனர். அதே போல் உப்பு, கருவாடு என பல பொருட்களை கொண்டு வணிகம் செய்தனர் சான்றோர்கள். பனையை கொண்டு கைவினை பொருட்களையும் தயாரித்தவர்கள் சான்றோர்கள். இவ்வாறு தொழிலில் பன்முகத்தன்மை காட்டியவர்கள் சான்றோர்கள்.

 சான்றோர்கள் என்றும் அடுத்தவர் வீட்டு கொல்லையில் பனை ஏறவில்லை. தான் விவசாயம் செய்த மண்ணில், தன் சொந்த பனை மரங்களில் தான் ஏறினார்கள். என்றுமே கூலிக்கு மாரடித்தவர்கள் இல்லை சான்றோர்கள். சொந்த தொழில் செய்தே வாழ்ந்து வந்திருக்கின்றனர். தங்கள் விளை பொருட்களை உள்ளூரில் மட்டுமே சந்தைப் படுத்தி பிற சமுதாயத்தினர் வாழ்ந்து வந்த காலத்தில், தங்கள் விளை பொருட்களை அடுத்த ஊர்களுக்கும் வன்டி கட்டி கொண்டு சென்று சந்தைப் படுத்தியும், வணிகப்படுத்தியும் வாழ்ந்து வந்தனர் சான்றோர்கள்.

தங்களது இந்த வண்டி கட்டி செய்யும் வணிகத்தின் பாதுகாப்புக்காக நாடார்கள் அமைத்துக் கொண்டதே பேட்டைகள். முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர்.

வண்டிகளைப் பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்க புத்தியால் தான் திருநெல்வேலி தொடங்கித் தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் நாடார் இன மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர்.

Saturday 21 November 2015

இப்படியும் ஓர் அரசியல்வாதி? கக்கன் அவர்கள்!

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிய அவனிடம் அதிகாரத்தை குடுத்துப் பார் என்பர்!

ஆனால் கடைசி வரை பெரியார் அதிகாரத்திற்கே வராமல் விமர்சனங்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை தள்ளிவிட்டார்! 

துக்ளக் பத்திரிக்கை நடத்தும் சோவுக்கும் அவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை!

பதவி, அதிகாரங்கள் கைக்கு வந்த பின்னர் தீரா வியாதி (திராவிட) குஞ்சுகள் சம்பாதித்த சொத்துக்களும் , பண்ணிய, பண்ணிக் கொண்டிருக்கும் அட்டூழிங்களும் நாம் அறிந்ததே!

(விருதுநகரில் கூட்டங்களுக்கு பேச வரும் போதெல்லாம் கா. காளிமுத்துவும், கருணாநிதியும் டீக்கு காசில்லாமல் தெப்பத்து மேட்டை சுற்றி வந்ததாக எங்க ஐயா சொல்வார்!)

ஆனால் பதவியும், அதிகாரமும் கையில் இருந்தும் அனுபவிக்க குடும்பம் இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்ந்த கக்கன் போன்றோரை தமிழ் சமூகம் எப்படி மறக்கின்றது?

ஒரு வேளை அவரை போல் மறந்தும் யாரும் இருந்து விடக்கூடாது என்று நாம் நினைக்கிறோமா?! அவரை நினைவூட்டினால் நாம் பிழைப்பு நடத்த முடியாது என அதிகார வர்க்கம் நினைக்கிறதோ??!

அவரை எல்லாம் தமிழக காங்கிரசும் மறந்து விட்டதே... அது சரி தமிழே தெரியாத நடிகைகளை வைத்து கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்துவிட்ட தமிழக காங்கிரசுக்கு எங்கே தெரிய போகிறது அவர்கள் வரலாறு!!

பதவி கையை விட்டு போன அடுத்த நொடியே, அரசு குடுத்த காரை அலுவலகத்திலேயே விட்டு விட்டு, சொந்த காசில் நகர பேருந்தில் வீட்டுக்கு சென்றவர் தும்பைபட்டி தூயவன்.

வயதான காலத்தில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கக்கன் அவர்களை, அடையாளம் தெரியாமல் கீழே படுக்க வைத்தது நிர்வாகம். அப்போது தற்செயலாக வந்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் அவரை அடையாளம் கண்டு எது வேன்டுமானாலும் செய்து தர தயாராக இருந்தார். அதுவும் வேண்டாம் என்றாராம் கக்கன். நல்லபடியாக அவரை கவணிக்க சொல்லி மருத்துவமனை நிர்வாகத்தை திட்டி விட்டு சென்றாராம் எம்ஜியார்!

இவரை போன்ற நல்ல, நாணயமான, ஒழுக்க சீலர்களை எல்லாம் பற்றி எல்லாம் படிக்காமல், எட்டு கல்யாணம், பத்து கல்யாணம் பண்ணியவர்கள் பற்றியும், தொண்ணூறு வயதில் இருபது வயது பெண்ணை திருமணம் செய்தவர்கள் பற்றிய வரலாறையும் படித்தால் எப்படி சமூகத்தில் நல்ல சிந்தனை வரும்??!!

Friday 20 November 2015

சமூகப் போராளி - அய்ய வைகுண்டர் - நானறிந்த வரலாறு.

இந்த பதிவை அய்யாவின் அகிலத்திரட்டின் வழியில் தொகுப்பதை விட வரலாற்று நோக்கில் பதியவே விரும்பினேன். அய்யா வழி பக்தர்கள் ஏதும் குறையிருப்பின் சுட்டிக் காட்டி மண்ணிக்கவும்.

கிபி 18ம் நூற்றாண்டு

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். 

பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், 

திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது. இந்த மாதிரியா சூழலில்தான் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

கி.பி.1809-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார்வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது. இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார்.
முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறார். அவர் சிறந்த விஷ்ணு பக்தனாகிறார். அவர் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவருக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது. பின்னர் முத்துக்குட்டி பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

தென் திருவிதாங்கூரின் நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத்தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது.- இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது. அவருடைய 22-ம் வயதில் கடுமையான நோய் கண்டு, மரணத்தை எட்டிப் பார்த்திருக்கிறார். வேண்டுதலாக அவரது தாயாரும் உறவினர்களும், அவரைத் தொட்டில் கட்டித் திருச்செந்தூருக்குத் தூக்கிச் சென்றார்கள். திருச்செந்தூரில், தன் எதிர்காலம், ஆற்ற வேண்டிய பணி பற்றிச் சிந்தித்து, ஒரு முடிவோடு திரும்பி இருக்கிறார். அவர் வாழ்வில் இதை அற்புதம் என்பார்கள். மூன்று நாட்கள் காணாமல் போயிருந்து, தெளிந்த முடிவோடு திரும்பி வந்திருக்கிறார் அவர்.

அடுத்த ஆறு ஆண்டுகள் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் 1840-ல் தன் 32-ம் வயதில் சேவை, தொண்டு, கலக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் அவர். வைகுண்டர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. ஆனால், மதத்தின் பெயரால் உயர் சாதியினர், அவரையும் அவரது மக்களையும் புறம் தள்ளினர். இந்து மதத்தின் ரட்சகர்ககள் என கூறிக் கொண்ட உயர் சாதியினர் அவரையும், அவருடைய மக்களையும் தம் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.  தனக்கென்று தாழ்ந்து கிடக்கும் மக்கள் அனைவருக்குமாக ஒரு புது வழியைக் கண்டார். அதன் பெயர் அன்பு வழி இயக்கம். அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட பதினெட்டு தாழ்த்தப்பட்ட சாதியர்க்கும் ஆன இயக்கம் அது. இதைப் பின்னாளில் ‘அய்யா வழி’ என்று குறிப்பிட்டார்கள். இந்துமதக் கடவுளான விஷ்ணுவை அவர் துதித்தார். அந்த விஷ்ணு அன்பு மயமான, வைகுண்ட வாசன். எல்லாச் சாதிக்கும் பொதுவான ஈசர்.

அந்தக் காலத்தில் பொதுக்-கிணற்றில் எல்லாச் சாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்துச் சாதியரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் சாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன--. வைகுண்டர், இந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை சாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட சாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகை கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்யவேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப்பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும். 

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்-களில். இன்றும்கூட பல கோயில்-களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடிமுன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி சாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன்போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள். 

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்கா தீங்கோ’ என்றார் அவர். அய்ய வழியில் வழிபாட்டு தளங்களை கோவில் என அழைப்பதில்லை, பதி என்றே அழைத்தார்கள். அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன. அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.
அய்யா வைகுண்டரின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறாமையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன்மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது.

Tuesday 17 November 2015

ஏரல் சேர்மன் அருணாசல நாடார் சுவாமிகள்.

திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி கிராமத்தில் 1880 அப்டோபர் 2ம் நாள் ராமசாமி நாடார், சிவணைந்த அம்மையார் அவர்களுக்கு சேர்மன்  அருணாசல சுவாமி பிறந்தார் . அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி பயின்றார். அங்கும் அவர் மவுன விரதம் இருந்து பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து வந்ததால் நாளடைவில் பிரபலமானார். அவரைக் காண பொது மக்கள் திரள ஆரம்பித்தனர்.  அப்படி தன்னைக் காண வரும் மக்களுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும்  வைத்திய தொழில் செய்து வந்த தனது குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி சலக நோய்களையும் குணப்படுத்தினார்.சாதி மதம் பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும் தொண்டாற்றினார் அருனாசல சுவாமிகள்.

  அவரது நீதியும் நேர்மையும் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப் பணியாற்றினார். அதாவது அவரது 26ம் வயதிலேயே சேர்மனானார். இப்பணியை சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற பெயர் பெற்றார். சேர்மன் சுவாமி ஒரு நாள் தன் இளைய சகோதரர் கருத்தபாண்டி நாடாரை அருகில் அமர்த்தி பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில் (கலக வருடம் 1083ம் ஆண்டு) 1908 ஆண்டு ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம் தேதி)  செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று கூறினார்.


ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் தாமரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின்  அருகில் என்னை சமாதி செய்ய வேண்டும். சமாதி குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த நேரத்தில் மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும். கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாதி குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து மூடிவிடுங்கள் என்று கூறினார்.


சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது வயது 28! திருமணம் ஆகாமலேயே சமாதி ஆனார். அவர் சொன்ன வாக்கின்படியே நடந்தது. அன்று முதல் வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் ஆலமரத்தின் ஓரமாக சமாதி கொண்டார். இங்கு அவரை த்ரிசிக்க வரும் பக்தர்களுக்கு மண்ணும், தண்ணீரும் திருமருந்தாக கொடுக்கப்படுகிறது. அருணாசல சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஈரஉடையோடு வலம் வந்து, கொண்டு வரும் புனித நீரை லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தனர்.


இதனால் மண்ணால் செய்த லிங்கம் கரைந்து விடுமென்று கருதி கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும் என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால் மண்ணால் செய்து வைத்த லிங்கம் புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டு வருவதாக ஐதீகம் உண்டு.

இதனால் இன்றும் மண்லிங்கமே மூலஸ்தானமாக விளங்குகிறது. இது சுயம்பாக அமைந்த லிங்கமாகும். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள்.

 கோவில் நிர்வாகங்கள் அனைத்தும் நாடார்கள் வசமே உள்ளது.
தகவல் உதவி: இசக்கி அவர்கள்
                               தினமலர்
                               விக்கிபீடியா

நமக்கு எல்லாமே தற்காலிகம் தான்!!

கொஞ்சம் பெரிய பதிவுதான் தயவு செய்து படியுங்கள் மக்களே

1993ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்பு ஓடிய வெள்ள நீரின் காட்சி இது. மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் கள்ளந்திரி போன்ற ஊர்களில் பல ஊரணிகளும், கண்மாய்களும் நிறைந்து உடைந்து வந்ததால் மதுரைக்குள் இருந்த மிகப்பெரிய இரண்டு கண்மாய்கள் உடைந்தன. வண்டியூர் கண்மாய் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்க உடைக்கப்பட்டது! செல்லூர் கண்மாய் நள்ளிரவுக்கு பின்னர் உடைந்ததால், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே வீடுகளில் வெள்ள நீர் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து மிகப்பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் விளைவித்தது. செல்லூர் பகுதிகளில் இருந்த பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்களால் பெரிய ரப்பர் டியூப்கள் உதவியால் உடனடியாக மீட்கப் பட்டனர். பொது மக்கள் போர்வையில் சில சமூக விரோதிகள் மக்களை நடு தண்ணீரில் நிறுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்தன! மதுரையின் வடக்கு பகுதியே வெள்ளத்தில் மிதந்தது. கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், செல்லூர், பி.பி.குளம், ஐயர் பங்களா, தபால் தந்தி நகர், நரிமேடு, தல்லாகுளம், கரும்பாலை, அரவிந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள், குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், கோமதிபுரம், கே.கே.நகர், சதாசிவ நகர், தாசில்தார் நகர், வண்டியூர், புதூர் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

காரணம் வேறொன்றுமில்லை ஒரு கண்மாய் நிறைந்து அல்லது உடைந்து அடுத்த கண்மாய்க்கு நீர் பாய்ந்ததே தவிர எந்த கண்மாய்க்குமே முறையான வடிகால் இல்லை. இருந்த வடிகால்களும் முழுக்க ஆக்கிரமிக்க பட்டிருந்தன. முக்கியமாக வன்டியூர் கண்மாயிலிருந்து அண்ணாநகரையும் சதாசிவ நகரையும் பிரித்து வண்டியூர் கண்மாயின் உபரி நீரை வைகைக்கு கொண்டு செல்லும் வடிகால் இருபது அடி அகலத்தில் இருந்து மூன்று அடி அகலத்திற்கு சுருங்கி இருந்தது! கிருதுமால் நதியே காணாமல் போயிருந்தது. பற்றாக்குறைக்கு மதுரையை சுற்றி ஆங்காங்கே சிறு மலைகளில் பெய்த மழை நீர் காற்றாற்று வெள்ளங்களால் நிறைந்து வைகை நதியை நிறைத்து வெள்ளக்காடாக்கியது. மிகப்பெரிய பாதிப்பு என்னவென்றால் வைகையில் காடாக வளர்ந்திருந்த சீமைக்கருவேலைகள் பாலக்கண்களை அடைத்து, அவை வேறு நீரை ஊர்பக்கம் திருப்பிக் கொண்டிருந்தன.

மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அப்போதும் செ.செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசே ஆட்சியிலிருந்தது! ஆனால் சேதத்திற்கு பின்னர் அந்த அரசு எடுத்த பல நடவடிக்கைகள் அதிரடி. வைகையை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புக்கள் கட்சி பாகுபாடின்றி உடனடியாக அகற்றப்பட்டன, வைகையின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டன (இதை இன்றும் காணலாம்!). அதே போல் ஆக்கிரமிப்பை தவிர்க்க மதுரை நகருக்குள் வைகையின் இரு புறமும் சாலைகள் போடப்பட்டன! கண்மாய்களின் வடிகால்களின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் அகலப்படுத்தப் பட்டன. கிருதுமால் நதியும் அகல்ப்படுத்தப்பட்டது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை! ஆம்!! 1993ல் கடும் வெள்ள பாதிப்பு. 1999ல் அதே வன்டியூர் கண்மாய் ஆக்கிரமிக்கப் பட்டு நவீன ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது, மிகப்பெரிய மலர் சந்தை, நெல் பேட்டை என எல்லாமே கண்மாய் ஆக்கிரமிப்புகள். இப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உண்டாக்கப்பட்டிருப்பதும் கண்மாய் ஆக்கிரமிப்புதான். தமிழக அரசுகளுக்கு மிகப்பெரிய திட்டத்திற்கு நிலம் தேவை என்றால் அவர்கள் கண்ணுக்கு அகப்படுவது எல்லாம் கண்மாய்களும் ஏரிகளும் தான்! உதாரணம் பல வருடங்களுக்கு முன்பே அவணியாபுரம் கண்மாயும், அனுப்பானடி கண்மாயும் அரசு ஆக்கிரமிப்புக்குள்ளானது!

1993 வெள்ள பாதிப்புக்கு பின்னர் அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளை 1996ல் வந்த தி.மு.க அரசு காற்றில் பறக்க விட்டது. அதற்கு பின்னால் மீண்டும் 2001ல் வந்த அ.தி.மு.க அரசும் அதை காற்றில் விட்டதுதான் மிகப்பெரிய சோகம். நாமும் இது போல் ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு ஒரு முறை இது போல் அதிக மழை பொழியும் போது தான் இதை பற்றி எல்லாம் சிந்திக்கிறோம். நம் வீடுகளில் முன்பிருந்த கிணற்றடிகளும் தோட்டங்களும் மாயமாகிவிட்டன. நம் வீட்டு கிணற்றில் ஊற்றுக் கண்ணாக வேண்டிய மழை நீரை, கூவத்தில் கலந்து கடலுக்குள் வீணாக்கிய பாவம் நம்மையும் தான் சேரும். மழை நீரை சேமித்து, கிணற்றுக்கு ஊற்று குடுக்க வேண்டிய மண் தரையை, சிமெண்ட் தரை போட்டு மூடியாகி விட்டது, கிணற்றை முழுக்க மூடி சாந்தி செய்தாகி விட்டது. இப்போது அரசுக்கு எதிராய் ஒப்பாரி வைத்து என்ன நடக்கப் போகிறது. வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப் பட்ட பொழுது, எத்தனை பேர் முறையாக செய்தோம் இப்போது அரசை தூற்ற. மழை நீர் சேகரிப்பை முறையாக செய்தவர்களை தவிர அரசை தூற்றும் அனைவரது எச்சிலும் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து துப்பிய கதைதான்!!

Sunday 15 November 2015

சவார்க்கர் இ.ஆ.ப - காமராஜர் - தமிழர்

விருதுநகரை சேர்ந்தவர்கள் திரு. சவார்க்கர் இ.ஆ.ப (S.SAWARKAR  I.A.S) அவர்களை அறியாது இருக்க முடியாது. இவர் விருதுநகர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த பவளக்காரர்கள் வகையறாவை சேர்ந்தவர். எனக்கு இவர் ஒன்றுவிட்ட பெரிய மாமையா (பெரிய தாத்தா - அதாவது அம்மாவின் பெரிய தந்தை) பையனுமாவார். அதாவது எனக்கு மாமா முறை. அதே திரு.சவார்க்கர் அவர்களை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். திரு சவார்க்கர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (District Collector) 16-08-1993லிருந்து 30-10-1994 வரை இருந்தார். இவர் நாகப்பட்டினத்தில் இருந்த பொழுது அங்கு கடும் புயல் வெள்ளம் வந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மிகுந்த வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் பார்வையிட முடிவாகி இருந்தது.

அந்த நாளில் திரு.சவார்க்கர் அவர்கள் சாதாரன மேல் சட்டை, நாலு முழ வேட்டி மற்றும் சாதாரன ரப்பர் செருப்புடன் காரில் கிளம்பிவிட்டார், அதிகாரிகள் ஜீப்பில் பின் தொடர்ந்தனர்.. மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மேல் வாகனங்கள் செல்ல வழியில்லை. திரு.சவார்க்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெள்ள நீருக்குள் இறங்கி விட்டாராம். சுற்றி நின்ற அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி. கலெக்டர்கள் வந்தால் மேடான பகுதிகளில் நின்று பார்வையிடுவதுதான் வழக்கம். இவர் என்னடாவென்றால் கிடு கிடு வென வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ளத்திற்குள் இறங்கி விட்டாரே என்றுதான் அவர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை! அவர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் ஷூ அணிந்திருந்தனர், உள்ளே எப்படி இறங்குவது என்று தயங்கினர். திரு.சவார்க்கர் அவர்கள் "வெள்ள சேதத்தை பார்வையிட பேண்ட் மற்றும் ஷூ அணிந்து வந்தது உங்கள் தவறு. எல்லோரும் என் பின்னே வாருங்கள்" என கூறிவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டாராம். அதிகாரிகளும் வேறு வழி இல்லாமல் அவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனராம்! வாசர்கள் மண்ணிக்க வேன்டும் திரு.சவார்க்கர் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை!

இந்த சம்பவத்தை நினைவு கூறும்பொழுது, பெருந்தலைவர் நினைவுக்கு வருகிறார். இதே போன்றதொரு சம்பவத்தில் பெருந்தலைவரும் கயிற்றை பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தில் இறங்கி விட்டாராம். திரு.சவார்க்கர் அவர்கள் இறங்கியதாவது தேங்கி நின்ற வெள்ள நீரில். பெருந்தலைவர் இறங்கியது ஓடிக் கொண்டிருந்த வெள்ள நீரிலாம்! சேதம் பார்வையிட வந்த முதல்வரை அதிகாரிகள் வெள்ளத்தின் சீற்றத்தை காரணம் காட்டி, அச்சமூட்டி தூரமே நின்று பார்க்க சொன்னார்களாம். அதற்கு பெருந்தலைவர் "நான் என்ன கோட்டையிலிருந்து உத்தரவு பிறப்பிக்க மட்டுமா தேர்ந்தெடுக்கப் பட்டேன், தண்ணீரில் இறங்குவது எனக்கொன்றும் பழக்கமில்லாத விசயமில்லை" என கூறிவிட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கயிற்றின் உதவியுடன் மார்பளவு நீரில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, மீட்பு பணிகளை முடுக்கினாராம். வேறு வழி இல்லாமல் அதிகாரிகளும் உடன் சென்றனராம்!

முகநூலில் தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் என பலர் பதிந்து வருகின்றனர். தமிழர் ஆள வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் நான் மேற் கூறிய இருவர் போன்ற தமிழர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்பேன் நான்.

Friday 13 November 2015

நீர் மேலாண்மை என்பது ஒரு வேளை மூட நம்பிக்கையோ??!


பெருந்தலைவருக்கு பிறகு வந்த திராவிடர்களுக்கு கடவுள் (இந்து கடவுளகள் மட்டும்!) நம்பிக்கை அற்று போனது போல் நீர் மேலான்மையிலும் ஏனோ நம்பிக்கை போய் விட்டது போலும்! நம் முன்னோர்கள் ஏதோ மூட நம்பிக்கையில் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள் என வெட்டியாக வெட்டி வைத்துள்ளனர் என கருதி இருக்கின்றனர்! நாங்களும் குளம், கண்மாய் வெட்ட மாட்டோம், இருப்பதையும் அழிக்காமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டிக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர்!  இதற்கு மதுரையே மிகப் பெரிய உதாரணம்.

மழை பெய்யாவிட்டால் மழை இல்லாததால் வறட்சி என்றும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும் நமக்கு சகஜமாகி விட்டது. நீர் நிலைகள் குறித்த விழிப்புணர்வோ, அறிவோ, கல்வியோ நமக்கு வராத அளவிற்கு தெளிவாக் பார்த்துக் கொண்டுள்ளன தீராவிட அரசுகள். இருக்கும் நீர்நிலைகளை பராமரித்திருந்தாலே இன்று கர்னாடகத்திடமும், கேரளத்திடமும் கெஞ்சிக் கொண்டோ, வழக்காடிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை! அதை விட்டு விட்டு காமராஜர் விட்டுக் குடுத்தார், நட்டு குடுத்தார் என்று தவறாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன தீராவிட விச வித்துக்கள். ஒரு வேளை எனக்குதான் புத்தி குறைவா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

மதுரையில் மட்டும் கடந்த நாற்பது வருடங்களில் நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள கீழே படியுங்கள்.

1. வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.
2. அனுப்பானடி சின்ன கண்மாய்
3. சிந்தாமணி கண்மாய்
4. தூளிபத்திக் கண்மாய்
5. ஐவத்தான் கண்மாய்
6. அயன் பாப்ப்குடி கண்மாய் (மேல் கண்ட ஐந்துமே கழிவு நீர் தேக்கமாக உள்ளன.)
7. அவனியாபுரம் கண்மாய் ( திடக் கழிவு கிடங்காக உள்ளது.)
8. சிலையனேறிக் கண்மாய்
9. ஆனையூர்க் கண்மாய்
10. தத்தனேரி கண்மாய்
11. வில்லாபுரம் கண்மாய்
12. ஆ.கோசாக்குளம் கண்மாய் (மேற் கூறிய ஐந்து கண்மாய்களும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன .)
13. வண்டியூர் கண்மாய் (மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட் மற்றும் எஞ்சிய பகுதியும் குற்றுயிரும் குலையுமாக நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
14. செல்லூர் கண்மாய் (தென்னக இரயில்வே மற்றும் ஒரு பகுதி குடிசைகளும் உள்ளன. எஞ்சியுள்ள பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.)
15. பீ.பி குளம் கண்மாய் (வருமான வரி அலுவலகம், சுங்கத்துறை மற்றும் அஞ்சல் அலுவலகமாக உள்ளன. எஞ்சியுள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது.)
16. சொரிக்குளம் கண்மாய் (வானொலி நிலையம் மற்றும் அலுவலர் குடியிருப்பு, அரசு அலுவலர் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவை உள்ளன.)
17. தல்லாக்குளம் கண்மாய் (மதுரை மாநகராட்சி அலுவலகம், சட்டக்கல்லூரி, வணிகவரி அலுவலகம். எஞ்சியுள்ள இடத்தில் தமிழ் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.)
18. மானகிரிக் கண்மாய் (வக்பு வாரிய கல்லூரி மற்றும் அதன் விடுதி கட்டிடம்.)
19. செங்குளம் கண்மாய் ( மாவட்ட நீதிமன்றம்.)
20. உலகனேறிக் கண்மாய் ( உயர் நீதிமன்றம்.)
21. புதுக்குளம் கண்மாய் (செய்தியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகள் உள்ளன.)
22. கோச்சடை கண்மாய் (வீடுகட்டவும், செங்கல்லுக்காவும் மண் தோண்டப்பட்டு ஆழமாக உள்ளது. அறிவிக்கப் படாத குப்பைக் கிடங்காகவும் உள்ளது)
23. புதூர் கண்மாய் (மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.)
24. நாராயணபுரம் கண்மாய்
25. முடக்கத்தான் கண்மாய் (குடியிருப்புகளின் கழிவு நீர் இக்கண்மாய்களில் கலக்கிறது.)
26. ஆத்திக்குளம் கண்மாய் ( கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.)
27. அனுப்பானடி பெரிய கண்மாய்
28. விரகனூர் கண்மாய்
29. ஐராவதநல்லூர் கண்மாய் ( இவைகளின் பெரும் பகுதி குடியிருப்புகளாகும், எஞ்சியுள்ள பகுதிகள் கழிவு நீர் தேக்கமாகவும் உள்ளது.)
30. சம்பக்குளம் கண்மாய் (வடிவேலு நகைச்சுவை போல் இந்த கண்மாயையே காணவில்லை)
31. மாடக்குளம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)
32. திருப்பரங்குன்றம் கண்மாய் (விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்.)

இவற்றில் பெரும்பாலான் கண்மாய்கள் 1980கள் வரை ஒன்றோடொன்று தொடர்புடன் வடிகால்கள் நிறைந்த கண்மாய்களாகவும் என் பள்ளிபிராயத்தில் பார்த்திருக்கிறேன். இந்த காலத்து பிள்ளைகளுக்கு கண்மாய்கள் என்றால் காட்டுவதற்கு வண்டியூர் கண்மாய் மட்டுமே மாட்டுதாவனி பேருந்து நிலையம், பூ சந்தை என உள்ளாட்சி நிர்வாகமே ஆக்கிரமித்தது போக குற்றுயிருக் குலையுமாக உள்ளது! இதுவல்லாமல் என் கவணித்திற்கு வராமல் போன கண்மாய்கள் எத்தனையோ? என் தந்தை இன்றிருந்தால் கேட்டிருக்கலாம்!!

இது போக எனக்கறிய காணாமல் போன தெப்பக்குளங்களும் உள்ளன!

1. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் (ஞாயிற்று கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. தெப்பகுளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்த தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பகுளம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது)
2. எழுகடல் தெப்பக்குளம் (இங்கு தெப்பக்குளம் இருந்தது யாருக்குமே தெரியாது. எழுகடல் தெரு மட்டுமே உள்ளது!)
3. கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம்.
4.  இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெப்பக்குளம்
5. பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தெப்பக்குளம்
6. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் (தற்போதைய மதுரையின் பிரதான கிரிக்கெட் மைதானம்!)
7. பொற்றாமரைக்குளம் (இதில் இப்போது காண்கிரீட் தரை போட்டாகிவிட்டது)

இவற்றிலும் நிறைய விடுதல் ஆகியிருக்கலாம்!

அப்புறம் கிருதுமால் நதி. இப்படி ஒரு நதி இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதை நதியென்று கூறினாலும் உலகமே சிரிக்கும். இதுதான் தற்போதைய மதுரையின் பிரதான கழிவுநீர் கால்வாய்!!
இவ்வலவு நீர்நிலைகள் மதுரையில் இருப்பதோ அல்லது இருந்ததோ கூட அடுத்த தலைமுறை என்ன நம் தலைமுறைக்கே தெரியாமல் இருக்கலாம். இவ்வளவு நீர்நிலைகளை கட்டி அவற்றை பராமரித்து வந்த நம் முன்னோர்கள் கன்டிப்பாக் முட்டாள்கள் இல்லை.

எவ்வளவு நீர் செல்வங்களை நாம் இழந்து வருகிறோம், இழந்திருக்கிறோம் என்பதை இந்த பட்டியல்களை பார்த்த பிறகாது நாம் உணர்வோமா? இப்பொழுது சுதாரித்தால் கூட பத்து, இருபது கண்மாய்களை காப்பாற்றலாம்.

செய்வோமா?
நாம் செய்வோமா?
நாம் செய்வோமா??

Wednesday 11 November 2015

நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் கக்கன் அவர்கள்.

நான் பெருந்தலைவரை பற்றி பதிவுகள் போடும் போதெல்லாம் சாதிய அடிப்படையில் அவரை நான் கொண்டாடுகிறேன் என பலர் நினைத்திருக்கலாம். (என் சமூகத்தவர் உட்பட!) ஆனால் அவரை விட நான் மதிக்கும் நபர் ஒருவர் உண்டென்றால் அது மாபெரும் தலைவர் கக்கன் அவர்கள். பெருந்தலைவர் நாட்டுக்காக குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்தார், ஆனால் நாட்டுக்காக தன் குடும்ப நலனையே தியாகம் செய்தவர் கக்கன் அவர்கள். அவரை அவர் சமூகம் தூக்கி பிடிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்குன்டு!

சாதாரண மனிதர்களாய் இல்லாமல், சாதனை மனிதர்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர், 
எளிமையின் அடையாளம், கக்கன்!மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909ல் கக்கன் பிறந்தார். தந்தை பூசாரிக் கக்கன். தாயார் குப்பி. இவர், நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்.

25.01.1934ல் மதுரை வந்த காந்தியடிகள், 'மதுரை காந்தி' என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர்., சுப்பு
ராமனின் வீட்டில் தங்கினார். அங்கு தான் சுப்பராமனால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன்பின் காந்தியோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இதன்மூலம் காந்தியம் மற்றும் சர்வோதய கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் வைத்தியநாத அய்யருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 8.7.1939ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த ஆலயப்பிரவேசத்தில் கக்கனும் பங்கேற்றார்.

செல்லுமிடமெல்லாம் 'வந்தே மாதரம்...' சொல்லி நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார். இதை கண்காணித்த ஆங்கில அரசு, அவரை கைது செய்தது.விடுதலை போராட்ட காலங்களில் இரவு நேரத்தில் கூடுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு எடுப்பதும் வழக்கம். சில நேரங்களில் போலீஸ் கண்காணிப்பில் இருந்து பெண் வேடமிட்டு தப்பிப்பார். 
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து அவரை கைது செய்தது.மேலூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் எதையும் அவர் சொல்ல மறுத்தார். இதனால் ஐந்து நாட்கள் தொடர்ந்து கசையடி கொடுத்தனர். அதை பார்க்க அவரது மனைவி அழைத்துவரப்பட்டார். இக்கொடுமையை பார்த்து கண்ணீர் சிந்தினார். தம்மை இழந்து பிறரை காப்பாற்றும் மன வலிமையும் எந்த சூழலிலும் எவரையும் காட்டிக்
கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன்.

ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. தேசிய காங்கிரசின் 70வது ஆண்டு அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. அது 'திறன் மிக்க நிர்வாகி' என கக்கனை அடையாளம் காட்டியது. மாநாட்டுக்கு தலைமையேற்ற பிரதமர் நேரு, அவரை குறிப்பிடும் போதெல்லாம் 'கக்கன்ஜி..." என்றே அழைத்தார். அதன் பிறகு பிற தலைவர்கள் அனைவரும் அவரை அவ்வாறே அழைத்தனர்.
1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காமராஜரின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியை தொடங்கிட உத்தரவிட்டார். 'கல்வியே ஆன்மாவின் உணர்வு. அது இன்றேல் நம் ஆற்றல்கள் செயலற்று போகும்' என்பதை அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டு வசதி வாரியம் அமைத்து குடிசை வாழ் மக்களுக்கும் கிராம வாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார்.

பதவி மயக்கம் இல்லாதவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னறிவிப்பின்றி மதுரை வந்தார். எப்போதும் போல அரசு பயணியர் மாளிகைக்கு சென்றார். அப்போது இரவு 10 மணி. அங்கு யாரோ தங்கியிருந்தனர். "தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அதிகாரிகள் சமாளித்தனர். கண்காணிப்பாளரோ "அங்கு தங்கியிருப்பவரை காலி செய்ய சொல்கிறேன்" என்று விரைந்தார். ஆனால், "அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரும் நம்மை போல மனிதர்தானே" எனக் கூறி, ரயில்வே காலனியிலுள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிகப் பெரிய மரியாதையாக கருதினார்களோ அதை மிகச் சாதாரணமாக அன்று அவர் கருதினார்.
விளையாட்டு வீரரான தம்பி விஸ்வநாதனை பார்த்து அவரை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க செய்தார், அப்போதைய ஐ.ஜி., அருள். பணி நியமனத்திற்கான ஏற்பாடும் நடந்தது. 
இதை கேள்விப்பட்டு, "விஸ்வநாதனின் வலது கை விரல்கள் சரியாக செயல்படாது. அவனால் 
துப்பாக்கி சுட முடியாது. நாட்டின் பாதுகாவலர் பதவிக்கு எப்படி இவரை தேர்வு செய்யலாம்' என கேட்டு பணி நியமனத்தை நீக்க 
உத்தரவிட்டார்.மக்களால் வழங்கப்பட்ட பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காகவும், பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டிய அந்த நேர்மை விளக்கு, 1981, டிச., 23ல் அணைந்தது.

'ஒருவர் பிரிவால் நம் மனதில் சோகம் சூழ்ந்து அவரை பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது பொருத்தமானது தான்.

- முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 
98430 62817.