Tuesday 17 November 2015

நமக்கு எல்லாமே தற்காலிகம் தான்!!

கொஞ்சம் பெரிய பதிவுதான் தயவு செய்து படியுங்கள் மக்களே

1993ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்பு ஓடிய வெள்ள நீரின் காட்சி இது. மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் கள்ளந்திரி போன்ற ஊர்களில் பல ஊரணிகளும், கண்மாய்களும் நிறைந்து உடைந்து வந்ததால் மதுரைக்குள் இருந்த மிகப்பெரிய இரண்டு கண்மாய்கள் உடைந்தன. வண்டியூர் கண்மாய் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்க உடைக்கப்பட்டது! செல்லூர் கண்மாய் நள்ளிரவுக்கு பின்னர் உடைந்ததால், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே வீடுகளில் வெள்ள நீர் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து மிகப்பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் விளைவித்தது. செல்லூர் பகுதிகளில் இருந்த பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்களால் பெரிய ரப்பர் டியூப்கள் உதவியால் உடனடியாக மீட்கப் பட்டனர். பொது மக்கள் போர்வையில் சில சமூக விரோதிகள் மக்களை நடு தண்ணீரில் நிறுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்தன! மதுரையின் வடக்கு பகுதியே வெள்ளத்தில் மிதந்தது. கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், செல்லூர், பி.பி.குளம், ஐயர் பங்களா, தபால் தந்தி நகர், நரிமேடு, தல்லாகுளம், கரும்பாலை, அரவிந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள், குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், கோமதிபுரம், கே.கே.நகர், சதாசிவ நகர், தாசில்தார் நகர், வண்டியூர், புதூர் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

காரணம் வேறொன்றுமில்லை ஒரு கண்மாய் நிறைந்து அல்லது உடைந்து அடுத்த கண்மாய்க்கு நீர் பாய்ந்ததே தவிர எந்த கண்மாய்க்குமே முறையான வடிகால் இல்லை. இருந்த வடிகால்களும் முழுக்க ஆக்கிரமிக்க பட்டிருந்தன. முக்கியமாக வன்டியூர் கண்மாயிலிருந்து அண்ணாநகரையும் சதாசிவ நகரையும் பிரித்து வண்டியூர் கண்மாயின் உபரி நீரை வைகைக்கு கொண்டு செல்லும் வடிகால் இருபது அடி அகலத்தில் இருந்து மூன்று அடி அகலத்திற்கு சுருங்கி இருந்தது! கிருதுமால் நதியே காணாமல் போயிருந்தது. பற்றாக்குறைக்கு மதுரையை சுற்றி ஆங்காங்கே சிறு மலைகளில் பெய்த மழை நீர் காற்றாற்று வெள்ளங்களால் நிறைந்து வைகை நதியை நிறைத்து வெள்ளக்காடாக்கியது. மிகப்பெரிய பாதிப்பு என்னவென்றால் வைகையில் காடாக வளர்ந்திருந்த சீமைக்கருவேலைகள் பாலக்கண்களை அடைத்து, அவை வேறு நீரை ஊர்பக்கம் திருப்பிக் கொண்டிருந்தன.

மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அப்போதும் செ.செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசே ஆட்சியிலிருந்தது! ஆனால் சேதத்திற்கு பின்னர் அந்த அரசு எடுத்த பல நடவடிக்கைகள் அதிரடி. வைகையை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புக்கள் கட்சி பாகுபாடின்றி உடனடியாக அகற்றப்பட்டன, வைகையின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டன (இதை இன்றும் காணலாம்!). அதே போல் ஆக்கிரமிப்பை தவிர்க்க மதுரை நகருக்குள் வைகையின் இரு புறமும் சாலைகள் போடப்பட்டன! கண்மாய்களின் வடிகால்களின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் அகலப்படுத்தப் பட்டன. கிருதுமால் நதியும் அகல்ப்படுத்தப்பட்டது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை! ஆம்!! 1993ல் கடும் வெள்ள பாதிப்பு. 1999ல் அதே வன்டியூர் கண்மாய் ஆக்கிரமிக்கப் பட்டு நவீன ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது, மிகப்பெரிய மலர் சந்தை, நெல் பேட்டை என எல்லாமே கண்மாய் ஆக்கிரமிப்புகள். இப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உண்டாக்கப்பட்டிருப்பதும் கண்மாய் ஆக்கிரமிப்புதான். தமிழக அரசுகளுக்கு மிகப்பெரிய திட்டத்திற்கு நிலம் தேவை என்றால் அவர்கள் கண்ணுக்கு அகப்படுவது எல்லாம் கண்மாய்களும் ஏரிகளும் தான்! உதாரணம் பல வருடங்களுக்கு முன்பே அவணியாபுரம் கண்மாயும், அனுப்பானடி கண்மாயும் அரசு ஆக்கிரமிப்புக்குள்ளானது!

1993 வெள்ள பாதிப்புக்கு பின்னர் அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளை 1996ல் வந்த தி.மு.க அரசு காற்றில் பறக்க விட்டது. அதற்கு பின்னால் மீண்டும் 2001ல் வந்த அ.தி.மு.க அரசும் அதை காற்றில் விட்டதுதான் மிகப்பெரிய சோகம். நாமும் இது போல் ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு ஒரு முறை இது போல் அதிக மழை பொழியும் போது தான் இதை பற்றி எல்லாம் சிந்திக்கிறோம். நம் வீடுகளில் முன்பிருந்த கிணற்றடிகளும் தோட்டங்களும் மாயமாகிவிட்டன. நம் வீட்டு கிணற்றில் ஊற்றுக் கண்ணாக வேண்டிய மழை நீரை, கூவத்தில் கலந்து கடலுக்குள் வீணாக்கிய பாவம் நம்மையும் தான் சேரும். மழை நீரை சேமித்து, கிணற்றுக்கு ஊற்று குடுக்க வேண்டிய மண் தரையை, சிமெண்ட் தரை போட்டு மூடியாகி விட்டது, கிணற்றை முழுக்க மூடி சாந்தி செய்தாகி விட்டது. இப்போது அரசுக்கு எதிராய் ஒப்பாரி வைத்து என்ன நடக்கப் போகிறது. வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப் பட்ட பொழுது, எத்தனை பேர் முறையாக செய்தோம் இப்போது அரசை தூற்ற. மழை நீர் சேகரிப்பை முறையாக செய்தவர்களை தவிர அரசை தூற்றும் அனைவரது எச்சிலும் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து துப்பிய கதைதான்!!

No comments: