Wednesday 11 November 2015

நான் பெரிதும் மதிக்கும் மாமனிதர் கக்கன் அவர்கள்.

நான் பெருந்தலைவரை பற்றி பதிவுகள் போடும் போதெல்லாம் சாதிய அடிப்படையில் அவரை நான் கொண்டாடுகிறேன் என பலர் நினைத்திருக்கலாம். (என் சமூகத்தவர் உட்பட!) ஆனால் அவரை விட நான் மதிக்கும் நபர் ஒருவர் உண்டென்றால் அது மாபெரும் தலைவர் கக்கன் அவர்கள். பெருந்தலைவர் நாட்டுக்காக குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்தார், ஆனால் நாட்டுக்காக தன் குடும்ப நலனையே தியாகம் செய்தவர் கக்கன் அவர்கள். அவரை அவர் சமூகம் தூக்கி பிடிக்கவில்லை என்ற வருத்தமும் எனக்குன்டு!

சாதாரண மனிதர்களாய் இல்லாமல், சாதனை மனிதர்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர், 
எளிமையின் அடையாளம், கக்கன்!மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909ல் கக்கன் பிறந்தார். தந்தை பூசாரிக் கக்கன். தாயார் குப்பி. இவர், நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்.

25.01.1934ல் மதுரை வந்த காந்தியடிகள், 'மதுரை காந்தி' என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர்., சுப்பு
ராமனின் வீட்டில் தங்கினார். அங்கு தான் சுப்பராமனால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன்பின் காந்தியோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இதன்மூலம் காந்தியம் மற்றும் சர்வோதய கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் வைத்தியநாத அய்யருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 8.7.1939ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த ஆலயப்பிரவேசத்தில் கக்கனும் பங்கேற்றார்.

செல்லுமிடமெல்லாம் 'வந்தே மாதரம்...' சொல்லி நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார். இதை கண்காணித்த ஆங்கில அரசு, அவரை கைது செய்தது.விடுதலை போராட்ட காலங்களில் இரவு நேரத்தில் கூடுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு எடுப்பதும் வழக்கம். சில நேரங்களில் போலீஸ் கண்காணிப்பில் இருந்து பெண் வேடமிட்டு தப்பிப்பார். 
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து அவரை கைது செய்தது.மேலூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் எதையும் அவர் சொல்ல மறுத்தார். இதனால் ஐந்து நாட்கள் தொடர்ந்து கசையடி கொடுத்தனர். அதை பார்க்க அவரது மனைவி அழைத்துவரப்பட்டார். இக்கொடுமையை பார்த்து கண்ணீர் சிந்தினார். தம்மை இழந்து பிறரை காப்பாற்றும் மன வலிமையும் எந்த சூழலிலும் எவரையும் காட்டிக்
கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன்.

ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. தேசிய காங்கிரசின் 70வது ஆண்டு அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. அது 'திறன் மிக்க நிர்வாகி' என கக்கனை அடையாளம் காட்டியது. மாநாட்டுக்கு தலைமையேற்ற பிரதமர் நேரு, அவரை குறிப்பிடும் போதெல்லாம் 'கக்கன்ஜி..." என்றே அழைத்தார். அதன் பிறகு பிற தலைவர்கள் அனைவரும் அவரை அவ்வாறே அழைத்தனர்.
1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காமராஜரின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியை தொடங்கிட உத்தரவிட்டார். 'கல்வியே ஆன்மாவின் உணர்வு. அது இன்றேல் நம் ஆற்றல்கள் செயலற்று போகும்' என்பதை அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டு வசதி வாரியம் அமைத்து குடிசை வாழ் மக்களுக்கும் கிராம வாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார்.

பதவி மயக்கம் இல்லாதவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னறிவிப்பின்றி மதுரை வந்தார். எப்போதும் போல அரசு பயணியர் மாளிகைக்கு சென்றார். அப்போது இரவு 10 மணி. அங்கு யாரோ தங்கியிருந்தனர். "தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அதிகாரிகள் சமாளித்தனர். கண்காணிப்பாளரோ "அங்கு தங்கியிருப்பவரை காலி செய்ய சொல்கிறேன்" என்று விரைந்தார். ஆனால், "அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரும் நம்மை போல மனிதர்தானே" எனக் கூறி, ரயில்வே காலனியிலுள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிகப் பெரிய மரியாதையாக கருதினார்களோ அதை மிகச் சாதாரணமாக அன்று அவர் கருதினார்.
விளையாட்டு வீரரான தம்பி விஸ்வநாதனை பார்த்து அவரை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க செய்தார், அப்போதைய ஐ.ஜி., அருள். பணி நியமனத்திற்கான ஏற்பாடும் நடந்தது. 
இதை கேள்விப்பட்டு, "விஸ்வநாதனின் வலது கை விரல்கள் சரியாக செயல்படாது. அவனால் 
துப்பாக்கி சுட முடியாது. நாட்டின் பாதுகாவலர் பதவிக்கு எப்படி இவரை தேர்வு செய்யலாம்' என கேட்டு பணி நியமனத்தை நீக்க 
உத்தரவிட்டார்.மக்களால் வழங்கப்பட்ட பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காகவும், பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டிய அந்த நேர்மை விளக்கு, 1981, டிச., 23ல் அணைந்தது.

'ஒருவர் பிரிவால் நம் மனதில் சோகம் சூழ்ந்து அவரை பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது பொருத்தமானது தான்.

- முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. 
98430 62817. 

No comments: