Friday 20 November 2015

சமூகப் போராளி - அய்ய வைகுண்டர் - நானறிந்த வரலாறு.

இந்த பதிவை அய்யாவின் அகிலத்திரட்டின் வழியில் தொகுப்பதை விட வரலாற்று நோக்கில் பதியவே விரும்பினேன். அய்யா வழி பக்தர்கள் ஏதும் குறையிருப்பின் சுட்டிக் காட்டி மண்ணிக்கவும்.

கிபி 18ம் நூற்றாண்டு

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். 

பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், 

திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது. இந்த மாதிரியா சூழலில்தான் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

கி.பி.1809-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார்வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது. இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார்.
முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறார். அவர் சிறந்த விஷ்ணு பக்தனாகிறார். அவர் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவருக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது. பின்னர் முத்துக்குட்டி பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

தென் திருவிதாங்கூரின் நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத்தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது.- இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது. அவருடைய 22-ம் வயதில் கடுமையான நோய் கண்டு, மரணத்தை எட்டிப் பார்த்திருக்கிறார். வேண்டுதலாக அவரது தாயாரும் உறவினர்களும், அவரைத் தொட்டில் கட்டித் திருச்செந்தூருக்குத் தூக்கிச் சென்றார்கள். திருச்செந்தூரில், தன் எதிர்காலம், ஆற்ற வேண்டிய பணி பற்றிச் சிந்தித்து, ஒரு முடிவோடு திரும்பி இருக்கிறார். அவர் வாழ்வில் இதை அற்புதம் என்பார்கள். மூன்று நாட்கள் காணாமல் போயிருந்து, தெளிந்த முடிவோடு திரும்பி வந்திருக்கிறார் அவர்.

அடுத்த ஆறு ஆண்டுகள் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் 1840-ல் தன் 32-ம் வயதில் சேவை, தொண்டு, கலக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் அவர். வைகுண்டர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. ஆனால், மதத்தின் பெயரால் உயர் சாதியினர், அவரையும் அவரது மக்களையும் புறம் தள்ளினர். இந்து மதத்தின் ரட்சகர்ககள் என கூறிக் கொண்ட உயர் சாதியினர் அவரையும், அவருடைய மக்களையும் தம் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.  தனக்கென்று தாழ்ந்து கிடக்கும் மக்கள் அனைவருக்குமாக ஒரு புது வழியைக் கண்டார். அதன் பெயர் அன்பு வழி இயக்கம். அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட பதினெட்டு தாழ்த்தப்பட்ட சாதியர்க்கும் ஆன இயக்கம் அது. இதைப் பின்னாளில் ‘அய்யா வழி’ என்று குறிப்பிட்டார்கள். இந்துமதக் கடவுளான விஷ்ணுவை அவர் துதித்தார். அந்த விஷ்ணு அன்பு மயமான, வைகுண்ட வாசன். எல்லாச் சாதிக்கும் பொதுவான ஈசர்.

அந்தக் காலத்தில் பொதுக்-கிணற்றில் எல்லாச் சாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்துச் சாதியரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் சாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன--. வைகுண்டர், இந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை சாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட சாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகை கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்யவேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப்பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும். 

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்-களில். இன்றும்கூட பல கோயில்-களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடிமுன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி சாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன்போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள். 

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்கா தீங்கோ’ என்றார் அவர். அய்ய வழியில் வழிபாட்டு தளங்களை கோவில் என அழைப்பதில்லை, பதி என்றே அழைத்தார்கள். அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன. அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.
அய்யா வைகுண்டரின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறாமையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன்மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது.

No comments: