Friday 30 January 2015

சூர்ய வம்சம் (பாகம்-2)

வேலையில்லா இளைஞன் ஒருவன் "ஆபீஸ் பாய்" வேலைக்காக ஒரு நிறுவனத்திற்க்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறான். அங்கு எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பின் தரையை சுத்தம் பண்ண சொல்கின்றனர். அதிலும் சிறப்பாக செய்து தேர்ச்சி பெறுகிறான்.  நிறுவன அதிகாரி "தம்பி நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீர்கள், உங்கள் இ-மெயில் ஐடியை குடுங்கள், விண்ண்ப்பம் அனுப்புகிறேன், பூர்த்தி செய்து வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள்" என்கிறார். அந்த இளைஞன் "ஐயா, என்னிடம் இ-மெயில் ஐடியெல்லாம் இல்லை" என்கிறான். அதற்கு அதிகாரி இ-மெயில் ஐடி இல்லையென்றால் வேலை கிடைக்காது என்கிறார்.

தன்னை தானே நொந்து கொண்டே செல்கிறான் அந்த ஏழை இளைஞன்.  பையில் 20 ரூபாய் மட்டுமே இருந்தது.

போகிற வழியில் ஒரு பெரிய காய்கறி மொத்தவிலைக் கடையை பார்த்தவன் 20 ரூபாய்க்கு ஒரு கூடை தக்காளி பழம் வாங்குகிறான். அதை கொண்டு போய் தெருவில் விற்கிறான். அவனால் அதை இரண்டு மணி நேரத்தில் அன்று 40 ரூபாய்க்கு விற்க முடிகிறது! அன்றே மீண்டும் மீண்டும் மேலும் இரண்டு முறை விற்பனை செய்கிறான். வீட்டுக்கு போகும் பொழுது அவனிட்ம் ஏற்கனவே இருந்த 20 ரூபாயுடன் 60 ரூபாய் சேர்த்து 80 ரூபாய் கொன்டு செல்கிறான். தன்னால் இப்படி பிழைக்க முடியும் என்று தெரிந்து கொண்ட அவன், தினமும் இது போல் விற்பனை செய்து விட்டு தன் வீட்டுக்கு தாமதமாக செல்கிறான். இப்படியே அவன் பணம் தினமும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காகிறது!! சிறிது காலம் கழித்து ஒரு டிவிஎஸ் ஹெவி டியூட்டி ஒன்று வாங்கி சப்ளை செய்கிறான். காலம் செல்ல செல்ல ஹெவி டியூட்டி, குட்டி யானை ஆகிறது, குட்டி யானை டிரக் ஆகிறது. பின்னர் சீக்கிரமே "சூர்ய வம்சம் சரத்குமார்" போல் நிறைய வண்டிகளுடன் பெரிய வியாபாரி ஆகிறான்.




ஐந்து வருடத்தில் அந்த ஊரின் மிகப் பெரிய பணக்கார மொத்த வியாபாரி ஆகிவிடுகிறான். குடும்பம் குட்டி என கல்யாணம் செய்து கொண்டு வாழ்கிறான். தனக்கு பின்னர் தன் குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கருதுகிறான். தன் குடும்பத்து ஆயுள் காப்பீடு செய்ய முடிவு செய்கிறான். ஆயுள் காப்பீடு முகவர் ஒருவரை தொலைபேசியில் அழைக்கிறான். அவரை நேரில் அழைத்து நல்ல காப்பிடு திட்டம் ஒன்றை தேர்ந்து எடுத்துவிட்டு அவரை செயல் படுத்த கூறுகிறான். கடைசியில் முகவர் அவனது இ-மெயில் ஐடியை கேட்கிறார். அவன் தன்னிடம் இ-மெயில் ஐடி இல்லை என்கிறான்! 

அந்த முகவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு, ஒரு இ-மெயில் ஐடி இல்லாமல் இவ்வளவு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கிறீர்கள் என்கிறார்! மேலும் அவர்  "கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் ஒரு இ-மெயில் ஐடி மட்டும் வைத்து இருந்தால் என்னவாகி இருப்பீர்கள்??! என்கிறார். 

அந்த இளைஞன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு "ஆபீஸ் பாயாகி இருப்பேன்" என்கிறான்.

இன்று நடக்காத ஒரு விசயத்துக்காக வருந்தாதீர்கள். நாளை அதை விட பெரிய வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கலாம்!!!

கருமூலம்: Laughing Colours 
மொழிபெயர்ப்பு: குமரன் ந.பா தோலாண்டி.

'கத்தி' திரைப்படத்தின் மூல கதையான சூரியூர் கிராம மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!

'கத்தி' திரைப்படத்தில், எம்.என்.சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள் போராடுவதாக காட்டப்பட்டிருக்கும். அதே போல். நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல்.ஏ. பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக  பல வருடங்களாக போராடி வருகின்றனர். இதை பார்த்துதான் 'கத்தி' படமே எடுக்கப் பட்டது,

திருச்சி, பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது எல்.ஏ.பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தை, தற்போது அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் மற்றும் அவரது சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.




இந்த நிறுவனம் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துடன், இங்கு ஆரம்பித்தது. அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நிறுவனம் சூரியூர்  எல்லைக்குட்பட்ட கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்களையும் போட்டு ராட்சத போர்கள் மூலம் 24 மணி நேரமும் கணக்கில்லாமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கிட்டே இருப்பதாகவும், இதனால் அந்த பகுதி நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதாகவும், சூரியூர் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள சின்ன சூரியூர், கும்பகுடி, வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு காரணமான  கம்பெனியை மூடக்கோரி கடந்த  3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தை மூடமறுப்பதை கண்டித்து, அந்த கிராம பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை திருப்பி ஒப்படைக்க வந்தபோது போராட்டக்காரர்கள், தண்ணீர் இயக்கத்தின் அமைப்பாளர் வினோத் சேஷன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து சூரியூரில் போராட்டங்கள், தொடர்ந்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,  வழக்கறிஞர் பானுமதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்படி அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரவே, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். 

பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள், ''2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு தேவையான கட்டட வரைபட அனுமதி மற்றும் கட்டடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால், நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இதுவரை எவ்வித அனுமதியும் பெறவில்லை. எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது.



மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன்படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கோ, இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கோ ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, சுற்றுவட்டாரத்துல் இருக்கிற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது. இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது.

இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது .

இப்படி எந்த அனுமதியும் பெறாத ஒரு நிறுவனம்  இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் பொது மக்களும், தண்ணீருக்காக தவிக்கிறோம்'' என்றார்கள்.

மேலும், ''கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.  மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றும் கூறினர்.



இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை  எல்.ஏ.பாட்டிலர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்பொழுது ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஆலையை நிரந்தரமாக மூடும் விசயத்தை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு நீர் உறிஞ்சப்படும் போர் வெல் கிணறுகளை மட்டும் செயல்படாவண்ணம் சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு செல்லும் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடிய தண்ணீர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் ''இது முதல்கட்ட வெற்றிதான், அந்த  பெப்சி நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள மற்ற தண்ணீரை விற்பனை செய்யும் கம்பெனிகளையும் நிரந்தரமாக மூடும் வரை விடமாட்டோம்'' என்கிறார்கள்.


நன்றி: Vikatan EMagazine

பெருந்தலைவர் - துறவிக்கெல்லாம் துறவி

சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப் பாசத்தை துறந்தவர் பெருந்தலைவர். அம்மா அருகில் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனே ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர்.



ரேசனில் கேப்பை போடுறாங்க, அரிசி வாங்கி தாப்பா என்று முதல்வராக இருந்த காமராஜரிடம் சொந்த அம்மா கேட்ட பொழுது ,”ஊருக்கு ஒண்ணு உனக்கொண்ணா ? இதையே ஆக்கித்தின்னு !” என்றிருக்கிறார். அம்மா, விதவை தங்கை அவரின் பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதம் நூற்றிருபது ரூபாய் மட்டுமே அனுப்பி வந்திருக்கிறார். அதற்கு மேல் முப்பது ரூபாய் கேட்ட பொழுது கொடுக்க மறுத்திருக்கிறார் ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் அவர் ஆட்சியை இழந்தார். தான் முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கேட்க கூடாது என்பது காமராஜரின்  நிபந்தனையாக இருந்தது.  அப்படியே ராஜாஜி அவர்களின் அமைச்சரவையை வைத்துக்கொண்டார்.


யாரைப் பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை.

மதிய உணவுத்திட்டத்தை ஹரிஜன பள்ளிகளில் பின்பற்றுவது போல ஒப்பந்தாரர்களிடம் தரலாம், நிதியில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார் . அரசே செய்யும் என்று அழுத்தி சொல்கிறார் கர்மவீரர். மத்திய அரசு அகலக்கால் என்று அனுமதி தர யோசிக்கிறது. மத்திய அரசு நிதி குறைவாக வரவே குறைந்த எண்ணிக்கை பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தலாம் என்று சொன்ன பொழுது அதையும் புறக்கணித்து எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தி சாதிக்கிறார் கருப்பு  காந்தி. நிதி போதாது என்ற பொழுது ,"இந்த அரசாங்கம் கையேந்தியாவது பிள்ளைகளின் பசி தீர்க்கும்." என்று அவர் முழங்கினார்.


பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்று சொன்னவர். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது



காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தவறான தகவல். ஆங்கில நூல்களை வாசிக்கிற பழக்கம் அவருக்கு உண்டு. அதிகாரிகளின் கோப்புகளில் தவறு இருந்தால் அதை சரி செய்கிற அளவுக்கு அவர் ஆங்கிலம் அறிந்திருந்தார். சாஸ்திரி அவர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் இக்கட்டான சூழலில் தானே ஆங்கிலத்தில் பதிலளித்து அசத்தியிருக்கிறார்.


காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' "என்றவர். அப்பொழுது திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,"படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !" என்று பதில் போஸ்டர் ஒட்டினார்
இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவு தான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்

Wednesday 28 January 2015

தமிழரிடம் தமிழ் பெயர்கள் படும் பாடு!!!

இன்று தொலைக்காட்சியில் ஐயா படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பிரகாச்ராஜ் ஒரு துணை நடிகரிடம் பேசும் போது கூறுகிறார்:

பிரகாச்ராஜ்: டேய் என் ஆசை என்னான்னு தெரியுமா...?? எம்.எல்.ஏ ஆகனும், மந்திரி ஆகனும், சி.எம் ஆகனும், பி.எம் ஆகனும் அப்புறமா சனாதிபதி ஆகனும்!!

துணை நடிகர்: அண்ணே கருப்பசாமின்னு பெயர வச்சிகிட்டு எப்படின்னே சனாதிபதி ஆவீங்க??

பிரகாச்ராஜ்: நான் டெல்லிக்கு போனவுடனே கருப்பசாமிங்கிற பேரை கருப்பு சிங் னு மாத்திக்கிடுவேன்!!!






இந்த படத்தின் இயக்குனர் ஒரு பச்சை தமிழர். நாடாரினத்தை சேர்ந்த அரி அவர்கள்!! அட நொன்னைகளா "கருப்பசாமி"ங்கிற தமிழ் பேர்ல என்னையா இழிவை கண்டீங்க!! இந்த படத்தின் இயக்குனரின் குலதெய்வமும் ஒரு கருப்பசாமியோ அல்லது முனியசாமியாகவோதான் இருக்க வேண்டும். ஏன் இவர் தகப்பனார் பெயரே கூட அப்படி இருக்கலாம்!! பச்சை தமிழனான இவரை போன்றவர்களே நம் தமிழ் பெயர்களையும், குலதெய்வங்களையும் இவ்வாறு இழிவு படுத்தினால் எப்படி வடுகனும், ஆரியனும் நம்மை மதிப்பான்.

என் ஏழு தலைமுறை முன்னோரான தோலாண்டி (தொல்லைகாதாண்டி நாடார்) அவர்களின் பெயரை என் முகநூலில் மட்டுமல்ல என் அலுவலக தொடர்பு மின்னஞ்சலிலும் கூட அதே பெயரைதான் பயன் படுத்துகிறேன். வட நாட்டுகாரனுக்கு எங்கேயா கருப்பசாமிக்கும், குப்புசாமிக்கும் அர்த்தம் தெரிய போகிறது. வீரியம் காரியத்துலதான் இருக்கே ஒழிய பேரில் இல்லை நொன்னைகளா!!!

திருவள்ளுவர்தாசன்! - மு.தங்கவேலனார்

பொங்கலுக்கு மறுநாள்  மாட்டுப்பொங்கல் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அன்றுதான் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் என்பது சிலருக்குதான் தெரியும்.

அந்த சிலரில் சிறப்பானவர் மு.தங்கவேலனார்.

தற்போது 68 வயதாகும் இவர், தஞ்சாவூரை அடுத்துள்ள பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகில் டீ கடைவைத்திருக்கிறார்.



கடந்த திருவள்ளுவர் தினத்தன்று இவரது கடையில் வழக்கமாக ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் டீ, அன்று ஒரு நாள் மட்டும் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிடைத்தவரை லாபம் என்று ஒன்றுக்கு இரண்டாக டீ வாங்கிக்குடித்தவர்கள் அந்த அளவிற்கே பேறு பெற்றவர்கள். இன்று என்ன விசேஷம் எதற்காக டீ ஒரு ரூபாய்க்கு தருகிறீர்கள் என்று கேட்டவர்களே பெரும்பேறு பெற்றவர்கள்.

ஆம். அவர்களுக்கு டீ கொடுத்ததுடன் அன்றைய திருவள்ளுவர் தினத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லி கூடுதலாக இரண்டு திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லிவிளக்குகிறார். 

யார் இந்த தங்கவேலனார்?

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பள்ளிசெல்லமுடியாத சூழ்நிலை. தமிழ்பற்று கொண்ட தாத்தாவின் தோளிலும் தந்தையின் மார்பிலும் வளர்ந்த போதே தமிழால் வளர்க்கப்பட்டார். இதன் காரணமாக பள்ளி செல்லாமாலே சங்கத்தமிழ் துவங்கி பெரிய புராணம் வரை தமிழின் சுவை சொல்லும் அனைத்து புத்தகங்களையும் படித்தார். விவசாயம் பார்த்த நேரம் போக மீதிநேரம் முழுவதும் தமிழ் நுால்களை வாங்குவதிலும் படிப்பதிலுமே பணத்தையும் நேரத்தையும் செலவழித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வள்ளுவத்தை மேன்மைபடுத்தும் விதத்தில் நடந்த ஒரு பட்டிமன்றம் கேட்டவர் அதன்பிறகு திருக்குறளை ஊன்றி படிக்க ஆரம்பித்தார் படிக்க படிக்க அதிலேயே ஊறிப்போனார். வாழ்வியலையும் உயர்ந்த அரசியல்தன்மையையும் திருக்குறள் போல விளக்க எந்த நுாலும் இல்லை என்பதை உணர்ந்தவர், அதன் பிறகு தனது வாழ்க்கையை திருக்குறளின் பக்கம் திருப்பினார்.

இந்த நேரத்தில் விவசாயத்தை நம்பமுடியாத சூழ்நிலையில் டீ கடை ஆரம்பித்தார்.கடையின் பிற்பகுதியை நுாலகமாக மாற்றினார்.திருக்குறள் பேரவை என்ற அமைப்பை துவங்கி தினமும் காலை வேளையில் திருக்குறள் பாடவகுப்பு நடத்த ஆரம்பித்தார்.இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை வந்து கலந்துகொண்டு இப்போதும் பலன் அடைகின்றனர்.

இவரது இந்த திருக்குறள் பற்றைப்பற்றி கேள்விப்பட்ட சிலர் தந்த நன்கொடை முழுவதையும் திருக்குறள் புத்தகங்களாக வாங்கி தனது நுாலகத்திற்கு வரக்கூடியவர்களுக்கு இலவசமாக வழங்கினார் இது போக பள்ளிக்கூடங்களுக்கு தேடிப்போயும் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிலையில் தனது சக்திக்கு உள்பட்ட திருவள்ளுவர் தினம் கொண்டாடவேண்டும் என்று எண்ணியபோதுதான் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கலாம் என்ற எண்ணம் உதித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொண்டை செய்துவரும் இவரது மகள் காவல்துறையில் ஒரு உயரதிகாரியாக இருந்த போதும் யாரையும் சாராமல் சுயமாக வாழவேண்டும் அதைத்தான் திருவள்ளுவர் எனக்கு சொல்லித்தருகிறார் என்று சொல்லி வாழ்பவர்.

எளிய இனிய தமிழில் அழகாக பேசுகிறார் பேசும்போதே பல திருக்குறள்களை தனது பேச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கோள்காட்டுகிறார் அப்படி மேற்கோள் காட்டும் திருக்குறளுக்கான பொருளை மிக அழகாக விளக்குகிறார். இருந்தாலும் திருக்குறள் ஒரு கடல். இதில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் ஆகவே எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணவேண்டாம் முடிந்த வரை கற்றுள்ளேன். இன்னும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும் இவருடன் பேசுவதற்கான எண்: 9788181249.

-எல்.முருகராஜ்.

நன்றி: Dinamalar





Tuesday 27 January 2015

900 வருடங்களுக்கு முந்தைய ராஜேந்திர சோழன் காலத்திய கல்லூரி:


விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்ற கிராமத்தில் சுமார் 900 வருடங்களுக்கு முன் ராஜேந்திர சோழன் காலத்தில் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது, கைபடும்,கால்படும் இடம் என்ற ஒரு இடம் கூட இடைவெளி இல்லாமல் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படும் இந்த இடத்தில் இருநூற்று எழுபது பட்டபடிப்பு மாணவர்களும், எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும், அவர்களுக்கு கல்வி சொல்லித் தர தகுதி வாய்ந்த பண்ணிரெண்டு ஆசிரியர்களும் இருந்தனர்.



இவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐநூற்று ஆறு களம் நெல் மற்றும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ, பல்கலைக் கழகமோ, நகராட்சியோ மேற்கொள்ளவில்லை.
ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதை பராமரித்து வந்துள்ளது.
ஆண்டு தோறும் இந்த செலவை ஈடுகட்ட வாய்ப்பாக வருடம் தோறும் இந்த வருவாயை தரவல்ல 45 வேலி நிலத்தை இந்த கிராம சபையினர் இக்கல்லூரியை நடத்தி வந்த கோயிலுக்கு கொடையளித்தனர்.


இன்றைக்கு வங்கிக்கணக்கில் வைப்பு நிதி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொள்ளப்பட்டு, இந்த நிலத்தில் விளையும் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாக பெறப்பட்டுள்ளது!.
எல்லா கோவில்களை போல் இதுவும் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததை, தற்போது மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகின்றது.
புராதான வரலாற்று சின்னங்கள் அழிவிலிருந்து காக்கப்படவேண்டும்.

நடராசன் மற்றும் தாளமுத்து நாடார்-திராவிடர்கள் அல்ல தமிழர்கள்

இந்தியக் குடியரசில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,635 தாய்மொழிகளும் 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.பிரித்தானிய ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது.இந்திய விடுதலை இயக்கத்தினர் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரசு 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது. காந்தி மற்றும் நேரு இருவருமே இந்துஸ்தானியை இந்தி பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர். இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதியவர்களுக்கு, இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை.

முதலாம் இந்தி எதிர்ப்பு போரட்டம்
1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்குஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார். அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார். 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன. ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர்பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். மேலும் 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.


போராட்டத்திற்கு பேராதரவு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர். 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது. போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.
தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசிய இசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.[7]போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுனர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது".

நடராசனும் தாளமுத்துவும்

போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற தலித்து இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில்நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.

நடராஜன் தாளமுத்து
இவர்களின் இருவரின் மரணத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்து , இவர்கள் இருவரும் தான் முதலில் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள். இவர்கள் திராவிடர்கள் அல்ல தமிழர்கள்.
.

Monday 26 January 2015

தியாகி சங்கரலிங்க நாடார் என்ற மறக்கப்பட்ட கண்டன் சங்கரலிங்கனார்

இன்று மறக்கப்பட்ட ஒரு மொழித்தியாகியின் பிறந்த நாள்

தியாகத்தின் சுருக்கம்
மெட்ராஸ் மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1961-லேயே மதராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக, அன்று காமராஜர் தலைமையில் இயங்கிய அரசு, அரசின் முக்கிய ஆவணங்கள் தமிழில் அளிக்கப்படும்போது 'தமிழ்நாடு அரசாங்கம்’ என்று குறிப்பிடப்படும் என்றும், ஆங்கில மொழியில் பயன்படுத்தும்போது 'மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் இரட்டை நிலையை அறிவித்தது.அதுவே தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது.

 இந்த நிலையில்தான், சங்கரலிங்க நாடார் 'தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் உண்ணா​விரதம் தொடங்கினார்.'இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது’ என்று, காமராஜர் கூறினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல் நலிந்து சங்கர​லிங்க நாடார் பரிதாபமாக இறந்துபோனார். அதை, அன்றைய காங்கிரஸ்காரர்கள் கேலி செய்து எழுதினார்கள்.இது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டபோது, ஒரு தமிழ் உறுப்பினர் எழுந்து, தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம் என்று கோபத்துடன் கேட்டு இருக்​கிறார்.

''பாராளுமன்றத்தை ஏன் லோக்சபா என்கிறோம். அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைத்து​விட்டது. பிரசிடென்டை, ராஷ்டிரபதி என்று அழைக்கிறோமே... அதில் என்ன ஆதாயம் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர் மாற்றத்தின் மூலம் உணர்வுபூர்வமான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டு எடுக்கப்பட்டு, மக்கள் மனதில் பதியவைக்கப்படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்ற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா?'' என்று, பதில் அளித்த அண்ணா, தமிழ்நாட்டுக்கு 'சென்னை மாநிலம்’ என்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஹைதராபாத், குஜராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னபோதும், அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது.

 இறுதியில் அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தோற்​கடித்தார்கள்.சென்னை மாகானத்துக்கு 1967-ம் ஆண்டு அண்ணா முதல்அமைச்சர் ஆன பிறகே, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே ’தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமாக இருந்த சங்கரலிங்க நாடாரின் உயிர்த் தியாகம் இன்றுவரை முறையாக கௌரவிக்கப்படவே இல்லை.




 தியாகி சங்கரலிங்கனார்
தென்பாண்டியின் வணிகக்களமான விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி  - வள்ளியம்மை ஆசியோர்க்கு மகனாகப் பிறந்தார். சங்கரலிங்கனார் 1900இல் திருமால் நாடார் ஓலைப்பள்ளிலும், 1901 இல் சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளிலும், 1902 இல் சச்திரிய வித்தியா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. 1908 ஆம் ஆண்டு ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அப்போது பெருந்தலைவர் காமராசர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்தார்.
                சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.
                விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.
                சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.
                சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.
                அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.
                அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922 ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.
                காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.
                காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.
                திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.
                அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!
                தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
12 அம்சக் கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும். 
                உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.
                அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார்.
                உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
                சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் “நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
                அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
                இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.
                தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
                சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
                ஒரு மனிதனுடைய பிறப்பு எவ்வாறு அமைந்தது என்பது முக்கியமல்ல; அவருடைய இறப்பு எவ்வாறு அமைகிறது என்பதே ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. துனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு தியாகி சங்கரலிங்கனார் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
                சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது. மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன்,
                “புதிய நாடு (மாநிலம்) அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை போலும்.
                ‘தமிழ்நாடு’ – எனப்பெயர் மாற்றுவதற்கு ஆதிக்க சக்திகள் மறுத்தன. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் விடுதலை இதழில் (10.11.1956) “தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்க இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை……. நமது மொழி எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு, முளையிலேயே கிள்ளியெறியும்படியான முயற்சியில் ஈடுபடும்படி அனைத்து தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்”.
                அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
                தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.
                அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
                தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.
                'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு -கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.
                நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
                சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
                சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.
                ‘தமிழ்நாடு’ – பெயர் மாற்றத்திற்காக, தமிழ் உணர்வுடன் தமிழக அரசு 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இன்னுயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் நினைவகம் அமைக்க வேண்டும். இதுவே தமிழக முதல்வருக்கு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.

பணிகள் முடிந்து தயார் நிலையில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
இவருக்கு விருதுநகரில் மணிமண்டபம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த 2011-இல் சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன், வே. பொன்னுப்பாண்டி ஆகியோர் வலியுறுத்தினர்.
அதையேற்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனே மணிமண்டம் அமைப்பதாக அறிவித்தார். அதையடுத்து, 2012ல் ரூ.76 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.
விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகே இடம் ஒதுக்கி கட்டட பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 8 மாதத்திற்கு முன்பு மணிமண்டப பணிகள் அனைத்தும் முடிந்தன. மணிமண்டபம் திறப்புக்கு தயாராக உள்ளது. அதனால், இதனை விரைவில் தொடங்கி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில், தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டப பணிகள் முடிந்துள்ளன. தற்போது, வண்ண அலங்காரம் விளக்குகள் அமைப்பதற்காக மின்சார இணைப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் பார்வைக்காக மணிமண்டபம் திறக்கப்படும் என்றார்.

தமிழ் மொழி எங்கள் உயிர் மொழி

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்"
என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை, ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,
கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதல் மொழி" எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் "இலத்தின்", "கீரிக்" மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும்
அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானது
அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே
தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,
தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்
கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.
அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.
அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஓன்றே.
அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.
இவ்வுண்மையை "தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்
"அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு
முற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்
புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,
இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.
மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்
அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.
இதைக் கொண்டு ஆராய்வோம்..

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??
அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.
மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே...

நன்றி: எழில்நிலா