Sunday 31 May 2015

பெருந்தலைவர் - அரசியல் ஆசான்



                                        
யா பெருந்தலைவர் அவர்கள் எக்காலத்திலும் சாதி மதம் பார்த்து இயங்கியவர் இல்லை. கடமையே கண்ணென வாழ்ந்தவருக்கு சாதி மதங்கள் கண்ணுக்கு தெரியவில்லை! அதனால் தான் அவர் கர்ம வீரர். இதற்கு சாட்சி அவரது விருதுநகர் தோல்வி.

                                      பெருந்தலைவருக்கு எதிராக அணி திரண்ட பணக்காரர்களில் விருதுநகரை சேர்ந்த பணக்கார நாடார் வியாபாரிகள் அதிகம். இதன் காரணமாக ஐயா தோற்ற பின் சில வருடங்கள் விருதுநகரிலிருந்து வேம்பார் போன்ற தென் மாவட்ட ஊர்களுக்கு குல தெய்வம் கும்பிட சென்றவர்கள் அந்த ஊர் நாடார் பெருமக்களால் தடுத்து திருப்பி அனுப்பப் பட்ட கதைகளும் உண்டு. காமராஜர் மீது இன்றும் விருதுநகர் மக்களை விட அதன் தென் மாவட்ட மக்களுக்கு பாசம் அதிகம். அதே போல் ஐயாவை எதிர்த்து அரசியல் செய்தவர்களிலும் சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி. வி.வி.எஸ் போன்ற நாடார்களும் உண்டு. இது குறித்து ஐயாவே மேடையில் பேசியதாக நவசக்தி 13-7-1968ல் வந்த மேடைப் பேச்சின் சாராம்சம். கண்டிப்பாக இது யார் மனதையும் புண்படுத்த அல்ல! ஐயாவின் பெருமையை உலகறிய செய்யவே!

                                      அய்யா காமராஜரின் ஒரு மேடைப்பேச்சில் - நவசக்தி 13.7.68
" ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கிலங்கள் விரும்பவில்லை. எழைகள் என்றும் அடிமைகளாகவே தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களை பற்றிக் கவலைப்படக்கூடாது.
நம்மைச் சாதிச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள். என் ஜாதிக்காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்க்றார்கள். யார் மந்திரியாக இருப்பது பிரச்சனையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

                                        நான் கூடப் பத்து ஆண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக நாடார்களெல்லாம் "நாடார் மந்திரியாக இருக்கிறார், நாங்கள் எல்லாம் உழைக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம் என்று சொன்னால் முடியுமா என்ன"?
நான் மந்திரியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும், காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியை சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகி விடக்கூடாது.

                                         நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன், ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பண
க்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.

                                        நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களை சந்திக்க தவறமாட்டேன். வெற்றி, தோல்வியைக் கண்டு கவலைப்படாதவன் நான்."

- நவசக்தி 13.7.68
                                       வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகவே கருதிய மாபெரும் அரசியல் துறவி ஐயா அவர்கள். மாபெரும் துறவிகளுக்கு கூட சித்தமாகாத சித்து இது. இவர் குறித்த பாடங்களை தமிழக அரசு கூட தனது பாடத் திட்டங்களில் வைக்காதது நம் துரதிருஷ்டமே!!

Saturday 30 May 2015

பெருந்தலைவர் - மலேசிய கமிசனரை அசத்திய எளிமை


                                      1953ல் மலேசியா பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. மலேசியா நாட்டின் அப்போதைய கமிஷனராக இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார். அப்போது தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலேசியா அழைப்பு விடுத்திருந்தது. மலேசியா அப்போது மலாய் என்றே அழைக்கப் பட்டது.

                                         பெருந்தலைவர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலேயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார். வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்ளரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது என்று மனம் வருந்தினார். டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருந்தது.

                                             காமராஜர் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்! வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது. விமானத்தை விட்டு காமராஜர் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர். எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார். அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர் பாடு கமிசனர் பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். பெருந்தலைவர் என்றவுடன் ஆடம்பரமாக படோடாபமாக வருவார் என எதிர்ப்பார்த்த ஜெனரல், நம் தலைவரின் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார். காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது ’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.

                                                   இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள். அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்த கோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார். ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும் போல் யதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர். இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்களின் நினைவகங்களில் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது, உலகிலேயே நமது பெருந்தலைவரின் நினைவிடத்தில் மட்டுந்தான்.
வாழ்க நம் அய்யா காமராஜர் புகழ்...

Friday 29 May 2015

பெருந்தலைவர் - சமயோஜிதம்



காமராஜர் ஆட்சியில் எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்காணக்கான, இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது? இந்தக் கேள்வி எழுந்தது.
இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது என்ன?
”நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே. ‘அ’ – ‘ஆ’ ன்னா ‘அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடு’ ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை?” என்றார் காமராஜர்.

அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அந்தக் கால ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்தில் ,”அணில், ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார், எஃகு என்றுதான் தொடக்கக் கல்விப பாடங்கள் இருந்தன. ‘ப – ட – ம்’ படம் என்றும், ‘ம -ர – ம்’ மரம் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பதும் இருந்தன.
இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. 

Thursday 28 May 2015

பெருந்தலைவர் - வித்தியாசமான அமைச்சரவை

பெருந்தலைவர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

1. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8

பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.

2. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.


3. அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)
4. அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).

Saturday 23 May 2015

பெண்கள் கல்விக்கு விளக்கேற்றிய - மாங்கா மச்சு - சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், கல்விதான் நமக்கு சமூகத்தில் உயர்வும், மதிப்பும் தரும், கல்விதான் சமூக எழுச்சி தரும் என்பதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து செயல்பட்டவர்கள் சான்றோர்கள். அதிலும் மெத்தப் படித்தவர்கள் என்று கருதிக் கொள்ளும் பிராமணப் பெண்கள் கல்வியில் பின் தங்கியிருந்த காலக் கட்டத்திலேயே பெண்கள் கல்விக்கு வித்திட்டு பாடுபட்டவர்கள் சான்றோர்கள். அதில் ஒரு சிறு எடுத்துக்காட்டு இது! விருதுநகரில் மாங்கா மச்சு என்று அனைவராலும் செல்லமாய் அழைக்கப்படும் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்து பிரிவினை பாராமல் அனைத்து சமூகத்து பெண்டிருக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. என் தாயாரும் இதே பள்ளியில் கல்வி பயின்றவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பள்ளி ஒன்றும் ஒரே நாளில் கட்டடமாய் எழும்பவுமில்லை, பெண்கள் வளர்ச்சியும் ஒரே நாளில் வரவில்லை! அதற்காக உழைத்த நாடார் மாமனிகள் இவர்கள்.




தி.ஆ.திருவாலய நாடார்

பெண்கள் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய விருதுநகர் கொடைவள்ளல். திரு.தி.அ.திருவாலவாய நாடாரின் கல்வி திருப் பணியும்,கருணை திருவுள்ளமும் கல்விக்காகத் தன் உடல்,பொருள்,ஆவி அத்தனையும் பெண் கல்விக்காக கொடுத்து,கல்விக் கூடம்உருவாகும் அளவிற்கு ஊர் வளர்ந்திட,நல்ல விதை விதைத்து, நல் உரமும் போட்டவர் தான். திருவாலவாய நாடார்.1910 ஆம் ஆண்டு, வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தான் ஏராளம் சென்ற நூற்றாண்டில். அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு ???என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது.மாட்டு தொழுவத்திலும், காட்டு வேலைகளிலும், களங்கமில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பெண்டிரின் பெருமைகள் எல்லாம் சிதறடித்து சிறுமையாக்கிய கொடுங் காலமது. இதை கண்டு மனம் பொறுக்காத மனிதருள் மாணிக்கராம் திருவாலவாய நாடார், பெண்களே இன் நாட்டின் கண்கள்,பெண் கல்வி பெற்றால் நாடே வளம் பெறும் என்ற கருத்தை தலை மேற்கொண்டு கல்வி கற்க அனுப்பாத கயவர்களை கண்டித்து வீடு வீடாக சென்று வீணர்களிடம் வாதிட்டு கல்லடியும், சொல்லடியும், பெற்று விளக்கேற்றும் பெண்களின் வாழ்வில் விளக்கேற்றியவர். ஊரில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் கட்ட கடுமையாக உழைத்தவர்.தன் மனைவி மங்கம்மாளின் இருப்பிடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி,பண்போடு கொடுத்த கொடையாளர். 

மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே இப்பொழுது மருவி "மாங்கா மச்சி" என்று அழைக்கப் படுகிறது. பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை பள்ளி கட்டிட நிதிக்கு தயங்காமல் அளித்தவர்.கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்று சிறப்பு செய்தவர். இவ்வளவு சுமைகளின் நடுவே மலை போல எழுந்து,மலர் போல விருதுநகர் எங்கும் மணம் பரப்பி, அழியாப் புகழ் பெற்று,அரும் பெறும் திறமைகள் கொண்ட பெண்களை உலகமெங்கும் அனுப்பி,உன்னத வளர்ச்சியை அடைந்து,நூற்றாண்டுகளையும் தாண்டி, நூதனம் பல பெற்று விளங்குகிறது" சத்திரிய பெண்கள் பள்ளி" திருவாலவாய நாடாரின் கடும் உழைப்பாலும் கடும் முயற்சியாலும் கட்டப்பட்டது 3 குழந்தைகளில் தொடங்கியது சத்திரிய பெண்கள் பள்ளி இப்போது அது பல கிளைகளோடு 10000 குழந்தைகள் படிக்கும் deluxe வசதியுடன் நடக்கிறது விருதுநகரில் பல IAS,JUDGE என்று சாதனை பெண்களை உருவாக்கியுள்ளது பெண்கள் வாழ்வில் விளக்கேற்றியவர் அவருக்கு அந்த பள்ளியில் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. திருவாலவாய நாடார் புகழை போற்றி வணங்குவோம் காமராஜர்,சங்கரலிங்க நாடார் பிறந்த மண் விருதுநகர் இப்படி பட்ட நல்ல மனிதர்கள் வாழ்ந்ததினாலே விருதுநகர் மாவட்டம் இன்றளவும் படிப்பில் முதலிடம் வகிக்கிறது




பி.எஸ். சிதம்பர நாடார் 

பி.எஸ். சிதம்பர நாடார் அவர்கள்" விருதுநகர் பெண்களின் கல்வி தந்தை "என்று அழைக்கப்படுகிறார்.தன் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை எல்லாம் விருதுநகர் கல்வி நிலையங்களுக்கு கணக்கில்லாமல் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர். 1885 ஆம் ஆண்டு திரு. சிவனாண்டி நாடார் -பெரியாயி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். தன் 5 வது வயதில் தந்தையை இழந்து கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். மும்பையில் வேலை செய்து அதில் தொழில் தொடங்கி சிறப்பாக முன்னேறி கல்வியின் மேல் தனக்கிருந்த எல்லையில்லா ஆசையினால் கல்வி நிலையங்களில் தன் பெயரை கல்வி சேவையின் மூலம் பொன் எழுத்துக்களால் பதித்தார். 1921 முதல் 1934 வரை விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளியை நிர்வாகம் செய்தார்.மாணவிகளுக்கு கல்வியை ஊக்கத்துடன் கற்க பாடு பட்டார். இவரது காலம் விருதுநகர் கல்விக்கு" பொற்க்காலம்"என்று அழைக்கப் பட்டது.பள்ளி வளர்ச்சி நலனில் அக்கறை கொண்ட அன்னார் தன் சொத்துகள் பெரும் பகுதியை பள்ளிக்கு அளித்தார். பள்ளி குறைவில்லாமல் நன்கு நடை பெற "சென்னையில் உள்ள விருதுநகர் ஹிந்து நாடார் மேன்சன் " என்ற கட்டிடத்தை பள்ளிக்கு வழங்கி அதன் மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டு பள்ளி சீராக நடை பெறசெய்தார். 

ஆண்கள் மேற்கல்வி பெற ஆண்கள் கல்லூரியை உருவாக்கினார். நம் மக்கள் கல்வி அறிவு மட்டுமல்லாமல் பொது அறிவு பெற பல நூலகங்களை ஏற்படுத்தினார். பெண்களுக்கான பிரசவ விடுதியை எற்ப்படுதினார்"ராவ் சாஹிப் " என்ற பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டு இவரது கல்வி சேவையின் நினைவாக .விருதுநகரில் இவரது பெயரைக் கொண்டு "பி.எஸ். சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளி என்ற சி.பி.ஸ்.சி.பள்ளி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அப்பள்ளி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியாத அளவிற்கு உலக தரத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது ! விருதை பெண்கல்விக்கு வித்திட்டு உரமூட்டி உயிரூட்டிய உத்தமரே !!! கல்விபணிக்கு கர்ணனாய் வழங்கியவரே!!! காலந்தவறாமை கடமையென்ற இரண்டையும் கண்ணெனக் கொண்ட காவலரே!!! மண்ணுலகு உள்ளளவும் மங்காது மணம் வீசும் மன்னா உம் புகழ் !!! மகிழ்வோடு பணிகிறோம் உம் பாதம் !!! மணம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம் உம் நாமம். கல்விக்கு வித்திடுபவர்கள் நாடார்கள் என்பதை நிருபித்து காட்டியவர்களில் இந்த சிதம்பர நாடாரும் ஒருவர்

Thursday 21 May 2015

அவதார புருசர்!

பெருந்தலைவரை பற்றி படிக்கும்போது, கேட்கும்போது,  எழுதும்போதெல்லாம் எப்போதும் வியந்து கொண்டே இருந்திருக்கிறேன். அவரைப் போல் நேர்மையானவர்கள் யாரும் அரசியலில் அவர் உயரத்திற்கு வந்ததில்லை. அரசியலில் அவர் உயரத்திற்கு வந்தவர்கள் யாரும் அவரளவிற்கு நேர்மையாய் இருந்ததில்லை! நேர்மை மட்டுமா அவருக்கு இந்த உயரத்தை குடுத்தது? கக்கன் அவர்களும் நேர்மையாளர்தானே? பெருங்கல்வி கற்றவரா? இல்லை! அரசியல்வாதியின் வாரிசா? இல்லை! சாதிப் பின்புலமா? சிரிப்புதான் வரும்! அவர் காலத்தில் அவருக்கு எதிர்த்து பலமாய் அரசியல் செய்ததே அவர் சாதியை சார்ந்த அரசியல்வாதிகள்தான். அவரது ஆளுமையா அவருக்கு இந்த உயரத்தை குடுத்தது? ராசாசிக்கும் தான் ஆளுமை இருந்தது!

பலருக்கும் நேர்மை இருந்தது. அவரது நேர்மை பிறரது நேர்மையை போல் அல்ல! அவரது நேர்மையில் துணிவிருந்தது. (அதை இப்போது சகாயத்திடம் பார்க்கிறேன், ஆனால் அவர் அரசியலில் இல்லை!) தாய் பாசத்தை மீறிய நேர்மையும் ரத்த பாசத்தை மீறிய கடமை உணர்ச்சியும் இருந்தது பெருந்தலைவரிடம். அவர் நேர்மையை கடமையாக கருதவுமில்லை, செயற்கையாகவும் அவர் நேர்மையாக இருக்க முயற்சிக்கவில்லை! அது அவர் இயல்பிலேயே இருந்தது! பெருங்கல்வி அவர் கற்கவில்லைதான்! கல்வியாளர்களை மிஞ்சிய பூகோள அறிவும், சிந்தனா சக்தியும், ஆட்சித்திறனும் கொண்டிருந்தார்.  கல்வி என்பது திறனை அதிகரிக்கத்தான் எனும் பொழுது, இயல்பாகவே திறன் பெற்றவருக்கு கல்வி தேவைப்படவில்லை! மொழியை அவர் அனுபவத்தில் கற்றுக் கொண்டார்.

அரசியல்வாதியின் வாரிசோ, அரசியல் செல்வாக்கோ அவர் பெற்றிருக்கவில்லைதான். ஆனால் பதவி அவரை தேடி வந்தது. பதவியை அவர் சுமையாக நினைத்தாலும், மக்கள் சேவைக்கான களமாக விரும்பி ஏற்றுக்கொண்டார். முதல்வரான பின்னரும் அவர் காமராஜராகவே இருந்தார். முதல்வர் என்ற எண்ணத்தை அவர் வளர்த்துக் கொள்ளவில்லை, அதை ஒரு அரசுப் பணியாக நினைத்தே பணியாற்றினார்! செல்வாக்கை அவர் வளர்த்துக் கொள்ளவில்லை! பதவியும் செல்வாக்கும் அவரை தேடியே வந்தன. சாதிப் பிண்புலம் இல்லாதவரை இன்று அவரது சமூகமே தெய்வமாக போற்றி புகழும்படி செய்து விட்டார். என் சாதிக்கு என் துணை தேவையில்லை, அவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என நம்பினார். (அந்த நம்பிக்கை அவர் ஊர்க்காரர்களுக்கு இல்லாமல் போனது சோகம்!!) எங்கள் சாதியில் அவர் பிறந்தார் என கூறுவதை விட அவர் சாதியில் பிறந்தவர்கள் நாங்கள் என பெருமைப்படும்படி இயல்பாகவே வாழ்ந்து காட்டி விட்டார். அவரை தோற்கடித்த மக்கள் எந்நாளும் வருந்தும்படி வாழ்ந்துவிட்டார்!

இதை செய்யுங்கப்பா தில்லியில் கேட்டா நான் பேசிக்கிறேன் என்பார்! அது நேர்மையால் பிறந்த ஆளுமை! நேர்மையாய் மக்களுக்கு நல்லது செய்ய யாருக்கு அஞ்ச வேண்டும் என்ற துணிவு. எந்த அதிகாரியையும், அமைச்சரையும், அரசியல்வாதிகளையும் அவர் மிரட்டியதாக சரித்திரமில்லை ஆனால் அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். அவர் அனபுக்கு கட்டுப்பட்டனர் என சினிமா வசனமெல்லாம் நான் எழுதப் போவதில்லை! ஆனால் அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். அவர் சொல்வன்மை மிக்கவர் இல்லை ஆனால் சொல்வதை எளிமையாக சுருக்கமாக ஆளுமையுடன் சொல்பவராக இருந்தார். ஆளுமை அவர் பிறவிக் குணமாகவே இருந்திருக்கிறது! நேர்மை, கல்வியறிவு, அரசியல் ஆற்றல் சமூகப்பின்புலம், ஆளுமை எல்லாம் ஒருங்கே இயல்பாய் பெற்றவர்களை நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் தான் பார்த்திருக்கிறோம்!!

அந்த வகையில் பெருந்தலைவர் அவதார புருசர்தான்!!

Wednesday 20 May 2015

நாடார்கள் சுயம்புகள்...

காமராஜர் முதல்வரானதால் தான் நாடார் சமுதாயம் தொழிலிலும் கல்வியிலும் முன்னுக்கு வந்தது என்று வரலாறு தெரியாமல் இணையத்தில் புலம்பித் திரியும் வரலாறு தெரியாத சிறு பிள்ளைகளுக்கான பதிவு இது. பெருந்தலைவரால் கல்வியில் வளர்ந்தது பிற சமூகங்களே அன்றி நாடார்கள் அல்ல. நாடார்கள் சுயம்பாக வளர்ந்தார்கள் என்பதை புரிய வைப்பதற்கான சிறு பதிவு இது. நேரமின்மை காரணமாக சிறு பதிவாகவே தரப்படுகிறது.

காமராஜர்  பிறந்தது 1903ஆம் ஆண்டு சூலை 15, அவர் முதல்வர் ஆனது 1954ஆம் ஆண்டு சித்திரை முதல் நாள் முதல்வரானார்.

1831ஆம் ஆண்டு விருதுநகர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறையால்  மதுரை கீழ மாசி வீதியில் நாடார்களுக்காக இடம் வாங்கப் பட்டது. இதுவே இப்பொழுது விருதுநகர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை சங்கமாகவும், மொட்டை பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது.

1850களிலேயே விருதுநகர் நாடார்கள் ஏற்காடு, பட்டிவீரன்பட்டி போன்ற பகுதிகளில் எஸ்டேட்டுகளை நிறுவி காபி, ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர். காபி, சிக்கரி, ஏலக்காய் ஏற்றுமதியில் 19ஆம் நூற்றாண்டிலேயே விருதுநகர் நாடார்கள் முதலிடம் வகித்தனர்.

1885ல் விருதுநகரில் முதன் முதலாக விருதுநகர் நாடார் உறவின் முறையால் சத்திரிய வித்தியாசாலை பள்ளி உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட போதே ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தொடங்கப் பட்ட முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளி இதுவே ஆகும்.  இது நாடார் சங்கங்களின் முதல் பள்ளியுமாகும். இதில் கல்வி பயின்றவர்களே காமராசர், சௌந்திரபாண்டியன் நாடார் போன்றோர்.

1889ல் கமுதியில் சத்திரிய வித்தியாசாலை உருவாக்கப் பட்டது

1895ல் நாடார்களுக்காக சத்திரிய மகாசன சங்கம் தொடங்கப்பட்டது.

1910ல் அதுவே பின்னர் நாடார் மகாசன சங்கம் என பொறையார் இரத்தினசாமி நாடார் அவர்களால் தொடங்கப்பட்டது

1865 முதல் 1912 வரை வாழ்ந்து இராவ் பகதூர் இரத்தினசாமி நாடார் அவர்கள் அப்பொழுதே மிகப்பெரிய சாராய ஆலையின் சொந்தக்காரராக இருந்தார். இவரது முயற்சியேலேயே மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவரது இறப்புக்கு பிறகு 1926ல் சேவை தொடங்கியது.

1909ல் திருமங்கலத்தில் சத்திரிய வித்தியாசாலை துவக்கம்.

1912லேயே சிங்கப்பூரில் மிகப்பெரிய குத்தகைக்காரராகவும், பலசரக்கு வணிகராகவும், பெரும் தொழிலதிபராகவும் இருந்தவர் உ.ராமசாமி நாடார்.

1893ல் இருந்து 1953 வரை வாழ்ந்தவர் W.A.P சௌந்திரபாண்டியன் நாடார் அவர்கள். பட்டிவீரன்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலத்தில் நன்செய், புன்செய், தோட்ட, பணப்பயிர் வேளாண்மைகளை செளந்திரபாண்டியன் மேற்கொண்டிருந்தார். மேலும் மைசூர் மாநிலத்தில் இருந்த “அசோகா பண்ணை” என்னும் பண்ணையில் 1943ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகாலம் வேளாண்மை செய்தார். இப்பண்ணைகளில் புதிய புதிய வேளாண்மை உத்திகளைப் பயன்படுத்தி வேளாண்மை ஆய்விலும் பண்ணை மேலாண்மையிலும் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக
  1. மதுரை மாவட்ட கரும்பு விவசாயப் போட்டியில் ஐநூறு ரூபாய் பரிசை வென்றார்.
  2. கறம்பு நிலத்தில் கரும்பைப் பயிரிட்டதற்காக அரசின் பாராட்டுப் பதக்கம் பெற்றார்.
  3. 1951ஆம் ஆண்டில் சிறந்த நெல் வேளாண்மைக்கான பரிசு.
  4. 1953ஆம் ஆண்டில் சிறந்த நிலக்கடலை வேளாண்மைக்கான பரிசு.
வேளாண்மையின் நன்மைக்காக 1943ஆம் ஆண்டில் தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக 1943ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டில் தனது மரணம் வரை பதவி வகித்தார். 1941ஆம் ஆண்டில் காஃபி வாரியத்தின் (Coffee Board) உறுப்பினராக இருந்தார்.

1917ல் உசிலம்பட்டியில் பழனிக்குமார் நாடார் முயற்சியில் கே.கே.பி.டி என்ற பிஸ்கெட் கம்பெணி தொடங்கப்பட்டது. இதுவே சில ஆன்டுகளில் பெர்ரீஸ் பிஸ்கெட ஆனது. 1930லேயே சிறந்த குழந்தை உணவுக்கான பஞ்சாயத்து போர்டு விருதையும், ராணுவ ஆர்டரையும் பெற்றனர் இவர்கள்.

1919ஆம் ஆண்டு சூ.ஆ.முத்து நாடார் அவர்களால் நாடார் குலமித்திரன் மாதாந்திர பத்திரிக்கை தொடங்கப்பட்டது.

1920களிலேயே மார்ஷல் நேசமணி அய்யா போன்றோர் வக்கீலாக பதிவு செய்திருந்து வக்கீல் தொழில் பார்த்து வந்தனர்.

1921ல் நாடார் வங்கி தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது.

1923ல் சிவகாசி அய்யநாடார் அவர்களின் தீப்பெட்டி தொழிற்சாலை துவக்கம்.

1930லேயே மதுரையில் நாடாரான டாக்டர் வடமலையான் அவர்கள் மருத்துவமனை தொடங்கிவிட்டார்.

1942ல் விருதுநகர் V.V. வண்ணிய பெருமாள் அவர்களின் எண்ணை மில் துவக்கம். இதிலிருந்தே பின்னர் ஆனந்தம் நல்லென்ணை, இதயம் நல்லெண்ணை போன்ற நிறுவனங்கள் தொடங்கின.

1942ல் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் "தமிழன்" என்ற வார இதழை தொடங்கினார்.

1800களிலேயே சங்க கட்டிடங்கள்,

1800களிலேயே சொந்த முயற்சியில் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்,

1900களேலே ஏற்றுமதி,

1919லேயே பத்திரிக்கைகள்,


1920களிலேயே சொந்த முயற்சியில் வங்கி,

1920களிலேயே வக்கீல்,

1930களிலேயே மருத்துவமனைகள்,

1940களில் தொழிற் புரட்சி

என வாழ்ந்து கொன்டிருந்த நாடார் சமுதாயமா காமராஜரால் உயர்வு பெற்றது? வரலாறு தெரியாதவர்கள் பதிவுகள் போடாமல் இருப்பது நன்று.

Monday 18 May 2015

அறிவுச்சுடர் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி

மதுரையின் பிரபல நிறுவனமான சந்தோஷ் நாடார் கார்ப்பரேஷனுக்கு வாரிசாக பிரபலமானார் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி. 15 அக்டோபர் 1954ல் பிற்ந்த இவரை மதுரை வாழ் நாடார் மக்கள் காவல் தெய்வமாகவே அனுஷ்டித்தார்கள் என்றால் மிகையில்லை. மதுரை ஊர்க்காவல் படையின் (Home Guards) தலைவராக இருந்தார். இவரைப் போல் நாடார் குலத்தில் இவருக்கு முன்னரோ, இவருக்கு பின்னரோ, இவரது காலத்திலோ யாரும் இல்லை என்பது தனிச் சிறப்பு! அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளராகவும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவராகவும் நாடார் இனத்தின் காவலராகவும் விளங்கினார் இவர். மதுரை கீழ மாசி வீதி மற்றும் கடை வீதிகளில் நாடார்களை தலை நிமிர்ந்து அச்சமின்றி நடக்க வைத்த மாவீரன் இவர்.

மதுரையில் மாற்று சமுதாயத்தினரால் மிரட்டப் பட்டும், கந்து வட்டிக்காரர்களால் அவதிப்பட்டும் வந்த சிறு நாடார் வியாபாரிகளுக்கும் பலசரக்கு கடைக்காரர்களுக்கும் காவல் தெய்வமாகவே இருந்தார். மதுரை சந்தைப்பேட்டை பகுதி இன்றும் இவரது முயற்சியால் நாடார் கோட்டையாகவே விளங்குகிறது. ஊர்க்காவல் படை தலைவராக இருந்ததன் காரணமாக் இவருக்கு சைரன் வைத்த காரும் போலீஸ் பாதுகாவலரும் உண்டு. கம்பீரமான ஆதர்சமான உடல்கட்டும் உயரமும் கொண்டவர் இவர். கீழ மாசி வீதியில் லோடுமேன்களால் மிரட்டப்பட்டு அவதிப்பட்டு வந்தனர் நாடார் வியாபாரிகள். லாரிகளில் லோடு மேன்கள் லோடு இறக்கிவிட்டு பின்னர் தார்ப்பாயை சுருட்டி குடுத்து, லாரியை கூட்டி சுத்தம் பண்ணி குடுத்து வந்தனர். இதற்கு லாரி டிரைவர்கள் அவர்கள் முதலாளிகள் அனுமதியுடன் மாமூல் என்ற பெயரின் சிறு தொகையினை குடுத்து வந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இதை லோடு மேன்கள் கட்டாயமாக்க, இந்த தொகை சரக்கு இறக்கும் வியாபாரிகள் தலையில் வந்து விழுந்தது. அதாவது லோடு இறக்கிய கூலி போக இது உபரி தொகையாக லோடு மேன்களுக்கு வழங்கப் பட வேண்டும். 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என இருந்த இந்த தொகை 1990
களில் 5000 ரூபாய், 10,000 ரூபாய் என ஆகிப்போனது. இந்த தொகை லோடு மேன்களுக்கு எந்த உடல் உழைப்பும் இல்லாமல் கிடைத்ததோடு அவர்கள் கூலியை விட அதிக தொகையானது.

இதனால் லோடு மேன்கள் அட்டகாசம் அதிகமானது. அதிக மாமூல் குடுக்க மறுத்த வியாபாரிகள் மிரட்டப் பட்டனர். மாமூல் குடுக்க மறுத்த வியாபாரிகள் தாக்கப் பட்டனர். அதாவது நாடார்களிடமே பிழைப்பு நடத்திக்கொண்டு நாடார்களிடமே கூலியும் வாங்கிக் கொண்டு நாடார்களை மிரட்டியும் வைத்து வாழ்ந்து வந்தனர் மாற்று சமுதாய லோடு மேன்கள். இதற்கிடையில் மதுரை அவனியாபுரத்தில் பலசரக்கு கடை வியாபாரி ஒருவர் உள்ளூர் மாற்று சமுதாய ரவுடிகளால் மாமூல் குடுக்காத காரணத்தால் கொல்லப் பட்டார். இதையெல்லாம் கண்ட அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி கொதித்தெழுந்தார். மிகவும் ஆட்டம் போட்ட மாற்று சமுதாய ரவுடிகள் தட்டிக் கேட்கப்பட்டனர். தட்டி கேட்பது என்றால் பலமாக தட்டி கேட்பது அதாவது அடிதான்! வியாபாரிகளை மிரட்டி வந்த லோடு மேன்களும் தட்டிக் கேட்கப் பட்டனர். மதுரையில் நாடார்களுக்கு ஏதாவது தொல்லை என்றால் அறிவானந்த பாண்டியன் அன்ணாச்சி இருக்கிறார் என்ற பயம் மாற்று சமுதாயத்தினர்களுக்கும், நாடார் மக்களுக்கு தெம்பும் வந்தது. குறிப்பிட்ட சமூக தலைவருக்கு குரு பூசை என்ற பெயரில் அந்த தினத்தில் கட்ட்டாய கடையடைப்பு இல்லையென்றால் கடை உடைப்பு என மதுரை அட்டகாசம் பண்ணி வந்தவர்களுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டது.

அவரது காலத்தில் என்னை போன்ற இளைஞர்களுக்கு சமுதாய உணர்வு ஊட்டியவர் அவரென்பதில் எந்த ஐயமும் இல்லை. நாடார் மகாஜன சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்த நடிகர் ராஜ்குமார் அவர்கள் வீரப்பனால் கடத்தப்பட்ட போது அவரை மீட்க தான் தனியாக செல்லத் தயார் என அறிவித்தவர் அறிவானந்த பாண்டியன் அண்ணாச்சி அவர்கள். சமுதாய பணி காரணமாகவே மிகுந்த கடன் பட்ட போதும் இடைவிடாமல் சமுதாய் பனியாற்றினார். நாடார் சமுதாயப்பனி காரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த அண்ணாச்சி 29 நவம்பர் 2000 அதிகாலை 2.30 மணியளவில் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள வால்பட்டரை என்ற இடத்தில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அன்ணாச்சிக்கு வயது 40 தான். அவர் தொடங்கி வைத்து விட்டுச் சென்ற பணிகளும் அவரது இடமும் இன்னும் காலியாகவே உள்ளது. இன்றும் மதுரை வாழ் நாடார் மக்களின் காவல் தெய்வமாக மனதில் நிற்பவர் எங்கள் அறிவானந்த பான்டியன் அண்ணாச்சி. இன்னும் பல காலம் அண்ணாச்சி இருந்திருந்தார் என்றால் மதுரை நாடார் கோட்டையாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

Sunday 17 May 2015

நம்பிக்கை

இது ஒரு தன்னம்பிக்கை கதை மட்டுமே. கருத்தை மட்டும் கவனிக்க வேண்டும் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டாம்...

கலிகாலத்தில் மனிதர்களின் அட்டூழியங்களையும் அதர்மங்களையும் பார்த்த கடவுள் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் பற்றும் அற்றுப் போய் விடுகிறார். கொத்து கொத்தாய் இனப் படுகொலைகள், மதப் படுகொலைகள், வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என மனிதர்களின் அட்டூழியங்களை கண்ட கடவுள் வெறுத்துப் போய் விடுகிறார்! விவேகானந்தர், அன்னை தெரசா என நல்லவர்களை அனுப்பியும் இவர்கள் திருந்தவில்லை!

கடைசியில் வெறுத்துப் போனவர் இனி இவர்களுக்கு மழை பொழியும் மந்திரம் உச்சரிக்கப் போவதில்லை என முடிவெடுத்து விடுகிறார்! பூமியில் மழை பொழிவு நின்று விடுகிறது! பூமி முழுக்க வறட்சி பஞ்சம் என கோரம் தாண்டவமாடுதிறது. குளிக்க தண்ணியில்லை, குடிக்க தண்ணியில்லை விவசாயத்துக்கு வழி இல்லை என ஆகிறது.

ஒரு வழியாக குளிக்காமல் கழுவாமல் வாழப் பழகிவிடுகிறார்கள் மக்கள். யாருமே விவசாயம் பண்ணுவதில்லை. சும்மாவே காவேரியும் பெரியாறும் வருவதில்லை இதில் பல வருடமாக மழை இல்லையென்றால் எப்படி? மழை இல்லை விவசாயம் இல்லை என்பதால் மக்கள் சோம்பேறி ஆகி விடுகின்றனர்.

கடவுள் பிற்பாடு பூமியில் என்ன நிலமை என மனிதர் வேடத்தில் சுற்றிப் பார்க்க வருகிறார். பூமியில் நிலமை இன்னும் மோசமாக மக்கள் படு சோம்பேறியாக விவசாயம், வேலை வெட்டி எதுவும் பார்க்காமல் சோம்பேறியாக சுத்துகி்றனர். கடவுள் பாரத்துக் கொண்டே வரும் பொழுது ஒரே ஒரு மனிதர் மட்டும் வெடித்து பாலம் பாலமாக இருக்கும் அவரது வறண்ட நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்!

அதை பார்த்த கடவுளுக்கு இவன் லூசாக இருப்பானோ என சந்தேகம். அவனையே கூப்பிட்டுக் கேட்கிறார். ஏம்பா பல வருடமாக பூமியில் எங்கும் மழையே பொழிவதில்லை, நீ என்னடாவென்றால் உழுது கொண்டிருக்கிறாய்? எந்த நம்பிக்கையில் உழுகிறாய் என கேட்கிறார். அதற்கு அந்த மனிதர் ,"ஐயா, நீங்களோ நானோ என்ன கடவுளா மழையே பொழியாது என முடிவு பண்ண? என்றாவது ஒரு நாள் கடவுள் மனமிறங்கி மழையை பொழிய வைத்து விட்டால் விவசாயம் பார்க்க வேண்டுமே! அப்பொழுது நான் உழுவது, விதைப்பது போன்ற விவசாய கடமைகளை எப்படி செய்வது என மறந்து விட்டால் கஷ்டமல்லவா? அதனால்தான் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்!

இதை கேட்ட உடன் இப்பொழுது கடவுளுக்கு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது! நாம் மழை பொழிய வைத்து பல வருடங்களாகி விட்டதே, மந்திரம் நினைவில் இருக்கிறதா இல்லையா என தெரியவில்லையே, எதற்கும் ஒரு முறை சொல்லிப் பார்த்துவிடுவோம் எனக் கருதுகிறார். அந்த இடத்திலேயே மந்திரத்தை உச்சரித்தும் பார்க்கிறார். உடனே மழை பொழிந்து விடுகிறது. மற்றவர் நிலமெல்லாம் தரிசாகக் கிடக்க உழுத அந்த ஒரு விவசாயியின் நிலத்தில் மட்டும் விவசாயம் பார்த்து அறுவடை செய்கிறார்! இதைப் பார்த்த கடவுளும் மனம் மாறி விடுகிறார்!

நம்பிக்கை அவசியம் மக்களே....

பெருந்தலைவர் எனும் தன்மானச் சிங்கம்.

காமராஜா் பின்னாளில் அரசியலில் மிகவும் புகழும் செல்வாக்கும் பெற்ற காலத்திலும் முண்டியடித்துக்கொண்டு தனக்காகப் பதவிகளைத் தேடியலைந்ததில்லை இந்த இயல்பு சின்ன வயதிலேயே அவரிடம் பொருந்தியிருந்தது என்பதற்கு பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று சான்று பகர்கின்றது.

காமராஜா் கல்வி பயின்ற க்ஷத்திரய வித்தியாசாலையில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியை விமர்சையாக்க் கொண்டாடுவார்கள்.

விநாய சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம்மு ஐந்து காசு வசூலிக்கப்படும்.

பூஜை முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள்.

பிரசாதத்துக்காக அந்த மாதிரிப் போராட்டம் நடத்துவது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அதுமிகவும் கேவலமாகப்பட்டது.

அவசரப்படாமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தில் மிகவும் குறைந்து அளவே அவருக்குக் கிடைத்தது.

மற்ற மாணவர்கள் கை நிறையப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்திருக்கும்போது அவர் மட்டும் மிகவும் குறைவாகப் பிரசாதம் வாங்கி வந்திருப்பது பற்றி வீட்டில் கேட்டார்கள்.

மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க் எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடம் ஐந்து காசு வசூலித்தவர்கள் ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறுதான் என்றார் காமராஜர்.

Saturday 16 May 2015

விருதுநகர் நாடார் உறவுமுறை பெயர்கள்.

இன்று காலை மலேசிய அன்பர் கரு ரமேஷ்குமார் அண்ணாச்சியுடன் வாட்சப்பில் பேசும் போது எனது விருதுநகர் மலரும் நினைவுகள் சிலவற்றை நினைவுப் படுத்தினார். நன்றி அண்ணாச்சி. அப்போது உறவுகளை முறை சொல்லி அழைக்கும் விதம் குறித்து பேச்சு திரும்பியது. அண்ணாச்சி என்னை பழைய விருதுநகருக்கே அழைத்துச் சென்றார்.




விருதுநகரில் நாடார்கள் உறவுகளை முறை சொல்லி அழைக்கும் பெயர்கள்:

மாமம்மையா (பேச்சு வழக்கில் மாம்மையா) - தாயாரின் தந்தை
மாமம்மை (பேச்சு வழக்கில் மாம்மை) - தாயாரின் தாயார்
அய்யாப்பா (பேச்சு வழக்கில் அய்யப்பா) - தந்தையின் தந்தை
அய்யாம்மா (பேச்சு வழக்கில் அய்யம்மா) - தந்தையின் தாயார்
அய்யா - தந்தை
அம்மா - தாயார்
பெரியய்யா (பேச்சு வழக்கில் பெரியா)  - பெரிய தந்தை (தந்தையின் அண்ணன்)
பெரியம்மா (பேச்சு வழக்கில் பெரிம்மா) - பெரிய தாயார் (தாயாரின் அக்கா)
சின்னய்யா (பேச்சு வழக்கில் சினியா) - சிறிய தந்தை (தந்தையின் த்ம்பி)
சின்னம்மா - சின்ன தாயார் (தாயாரின் தங்கை)
மச்சான் - அக்காள் கணவர், அத்தை மகன் 
மதினி - அண்ணன் மனைவி, அத்தை மகள் 
அண்ணாச்சி - அண்ணன்,அக்காள் மருமகன் 

கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்த போதே இந்த உறவுமுறைகளும் அழியவும், உறவுமுறைகளுக்குள் இருந்த நெருக்கம் குறையவும் ஆரம்பித்தன. கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்து கிட்ட தட்ட சொந்தங்களும் விலகிப் போக ஆரம்பித்து விட்டன. ஒரு வார கல்யாணம், 16 நாள் கருமாதி எல்லாம் அவசர கதி ஆகிவிட்டன! சமூகம் என்ற அழைப்பே இப்போது இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது!

இப்போது கிட்ட தட்ட இந்த உறவுமுறை பெயர்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன என்றே கருதுகிறேன்.  மாமம்மை-ஆச்சி ஆகிவிட்டார், மாமம்மையா-ஆச்சிப்பா ஆகிவிட்டார், அய்யாப்பா, அய்யாம்மா தாத்தா பாட்டி ஆகிவிட்டனர், அய்யா டாடி எனவும், அம்மா மம்மி எனவும் ஆகிவிட்டனர். அதே போல் அக்காள் கணவர் மாமா எனவும், அண்ணன் மனைவி அண்ணி எனவும் அழைக்கப் பெற்றனர். பெரியய்யா, சின்னய்யா. அண்ணாச்சி போன்ற பெயர்களும் வழக்கத்தில் இல்லை.

இப்பொழுது பெரும்பாலும் பலர் ஒற்றைப் பிள்ளையும் சிலர் இரட்டை பிள்ளைகளையும் பெற்றுள்ளதால் உறவுக்கே வேலையில்லை, இதில் எங்கே உறவுமுறை பெயர்கள்!  என் பிள்ளைகளை இந்த உறவு சொல்லியே அழைக்க பழக்கியிருக்கிறேன். என் காலத்திற்கு பிறகு தெரியவில்லை!!

நாடார்கள் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரச வம்சத்தை சேரந்தவர்கள்...

உண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக இன குடிமக்கள் நாடார்கள்தான். குமரி மாவட்டம் தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழும் மாவட்டமாகும். அந்த மாவட்ட தமிழ் நாகரீகம் பற்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்கள் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பிறந்தனர்.

மேலும் திருவிதாங்கூர் மன்னர்களின் கொடூர ஆட்சியை எதிர்த்து குமரி மாவட்டத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் குரல் கொடுத்தார். பல்வேறு சமுதாய சீர்திருத்தப் பணிகளை செய்த அய்யா வைகுண்டர் மேலாடை புரட்சி எனும் தோள்சீலை புரட்சியை நிகழ்த்தி காட்டினார். அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களால் மாபெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது. முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது. அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது.

அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது. மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

இதையெல்லாம் குறிப்பிட்டது 2012ல் சாட்சாத் அன்றைய முதல்வர் செயலலிதா அவர்களேதான். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நாடார்கள் பற்றி இருந்த அவதூறு குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டவையே இவை.

Friday 15 May 2015

புறாவும் மனிதரும்!

ஒரு குட்டி கதை.....
ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,
திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேரு
இடம் தேடி பறந்தன வழயில் ஒரு தேவாலயத்தை
கண்டன அங்கு சில புறாக்கள்
இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும்
அங்கு குடியேறின,
சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது.
தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது
இங்கு இருந்து சென்ற பறவை களும் அங்கு
இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .
வழயில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில
புறாக்கள் இருந்தன. அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின
சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன. இப்போது மூன்று இடத்திலும்
உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.
கிழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர்
வெட்டி சாய்த்துக்கொண்டு
இருந்தனர்.
ஒரு குஞ்சி புறா தாய் புறாவுடன் கேட்டது
ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று.
அதற்க்கு அந்த தாய் புறா
சொன்னது நாம் இங்கு இருந்த
பொது புறா தான், சர்ச் கு
போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும்
புறா தான் ,
அனால் மனிதன் கோயிலுக்கு
போனால் "இந்து". சர்ச்க்கு போனால்
"கிறிஸ்த்தவன்", மசூதிக்கு போனால் "முஸ்லிம்"
என்றது.
குழம்பிய குட்டி புறா அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறாதானே அதுபோல தானே
மனிதர்களும் என்றது. அதற்க்கு தாய் புறா
இது புரிந்ததனால் தான் நாம் மேலே
இருக்கிறோம்,
இவர்கள் கிழே இருக்கிறார்கள் என்றது.
(மனிதனுக்கு மதம் பிடித்திருக்கிறது, அதனால்
அவனுக்கு மதம் பிடித்திருக்கிறது )

Thursday 14 May 2015

பெருந்தலைவரும் புகையும்!!

சென்னையில் காமராஜருக்கு திரைப்பட கலைஞர்களும், அதிபர்களும் விழா நடத்தினர். விழா முடிவில் விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்ததும் காமராஜரும், ஜெமினிஅதிபர் வாசனும் பேசிக்கொண்டிருந்திருக்கின்
றனர். அப்போது வாசன் ஒரு சிகரெட்டை எடுத்து "இது உயர்தர சிகரெட். சாப்பிடுங்கள்" என்றிருக்கிறார்.

காமராஜர் அதை பார்க்க வாங்கியபோது ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரர் அதை புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார்.

உடனே காமராஜர் அவரைப் பார்த்து, "நான் சிகரெட் பிடிக்கறதைப் படம் எடுத்துப் பத்திரிகையில் போட்டால் பரபரப்பாக இருக்குமென்று படம் எடுக்க வர்றியா? இந்தப் படத்தைப் பத்திரிகையில் போட்டால் ஒருநாள் பரபரப்பாக இருக்கலாம். ஆனால், அதனுடைய விளைவு எப்படி இருக்கும் தெரியுமா?

ஒரு தந்தை தனது மகனிடம் சிகரெட் சாப்பிடாதே என்று கண்டித்தால், மகன் காமராஜரே சாப்பிடறாரென்று சொல்வான். அதுற்குதான் இந்தப் புகைப்படம் பயன்படும். பத்திரிகையில் ஒரு செய்தியோ படமோ வரும்போது ஒருநாள் பரபரப்போடு அது முடிந்துவிடப் போவதில்லை. அதற்குப் பிறகு ஏற்படும் விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றாராம்.

பெருந்தலைவரும் பனங்கட்டை போஸ்ட்டும்!

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் சுற்றுப்பயணம் செய்யும்போது ஒரு கிராமத்து மக்கள் ஒன்றுகூடி காமராஜரின் காரை வழிமறித்திருக்கின்றனர். காமராஜர் கீழே இறங்கி என்ன விஷயம் எனக் கேட்டிருக்கிறார்.

"பக்கத்து ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் இன்னும் மின்சாரவசதி கிடைக்கவில்லை" என்று கூறியிருக்கின்றனர்.

காமராஜர் தன் அருகிலிருந்த மாவட்ட கலெக்டரைப் பார்த்து விபரம் கேட்டிருக்கிறார்.

"அதைப் பொருத்தும் போஸ்ட்டுக்குத் தேவையான சிமெண்ட் தூண்கள் இல்லை. அதனால் உடனே லைன் தர இயலவில்லை என்றிருக்கிறார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், "பனங்கட்டையை ஊன்றி ஒயரை இழுங்கள். சிமிண்ட் போஸ்ட் வந்ததும் அதை மாத்திக்கிடலாம்" என்றிருக்கிறார்.

உடனே காமராஜர் அந்த மனிதரை அழைத்து தட்டிக்கொடுத்து "இவர் யோசனை சரியாக இருக்கிறது. இதை உடனே செய்யுங்கள்" என்று கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தாராம்.

Tuesday 12 May 2015

பெருந்தலைவர்-மக்களின் மனதில் நிரந்தரமாய்

1954–ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார், காமராஜர். திருமலைப் பிள்ளை வீதி விழாக்கோலம் கொண்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார், காமராஜர்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” என்றார்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னாள் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி- -நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் ஒருவர் காமராஜர் சென்ற வண்டியை நிறுத்தி சிறிது நேரத்துக்கு பின் அவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். இதனால் காமராஜரின் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து போனார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். “முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே!” என்று பதறிப்போனார். “காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே!”  என கலங்கினார்.அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜர், அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தம் அடைந்தது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை, அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர், பொறுப்பேற்ற முதல்நாளிலேயே கோப்புகளைப் பார்க்க அமர்கிறார். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது என்ன இரண்டு வரிசை? என அவர் கேட்க அதற்கு அவரது உதவியாளர் சொல்லுகிறார், முதல் வரிசையிலே உள்ளவை முக்கியமானவை, அடுத்து உள்ளவை முக்கியமில்லாதவை.

இதனைக் கேட்டு அதிர்ந்து போகிறார்,   காமராஜர். முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானவைதான். நான் அன்றே உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். இது தான் முக்கியம் என்றார் காமராஜர். அதிகம் படிக்காதவர் தான். ஆனால் அவரது சிந்தனைகளும் செயல்களும் இது போல் விசித்திரமானது தான்.

“படிக்காத மேதை” என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள். அந்த வார்த்தைக்குச் சரியான இலக்கணமாகத் திகழ்ந்தவர், காமராஜர் தான். ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது? என்பதை நாடி பிடித்துப் பார்ப்பது போல அவர் சோதித்துப் பார்க்கும் முறையே வியப்பானது.

“கிங் மேக்கராக” விளங்கிய அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டுத் திரும்புவார். அவரைப் பார்க்க உயர் அதிகாரிகள் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவிலே போகிற மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளை அழைத்து வரச் செய்வார். அந்த அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களின் நலங்களை விசாரிப்பார்.

உங்களுக்கெல்லாம் அரிசி-பருப்பு ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி எல்லாம் எப்படி இருக்குது? என்றெல்லாம் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்பார். மக்களாட்சியின் தத்துவத்தை மிகச் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு ஆட்சி செய்தவர்.

பொய்மையும் போலித்தனமும் தன் மீது படிந்துவிடாமல் நேர்மையான அரசியலை மட்டுமே அவர் அரவணைத்துக் கொண்டார். சமூக நலனுக்காக சகலத்தையும் துறந்த சன்னியாசிகளாலும் கூட தாய்ப்பாசத்தை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், தன்னுடைய பொது வாழ்வில், எந்த நிலையிலும் களங்கம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த தாயின் உறவையே தள்ளி வைத்த மகத்தான மனிதர்,  காமராஜர்.

தான் ஈன்ற அன்னைக்கு மாதந்தோறும் 120 ரூபாய்க்கு மேல் தர மறுத்த தலைவர் காமராஜர், தான் தங்கியிருந்த வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால் வீட்டை ஒட்டி ஓரிடத்தை ரூ3,000 கொடுத்து விலைக்கு வாங்கி, கழிப்பறை கட்டிக் கொள்ள விரும்புவதாக காமராஜரின் தாய் சிவகாமி அம்மையார் தெரிவித்த போது, ‘நீ கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய்; ஊரில் உள்ளவர்கள் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்வார்கள். அதெல்லாம் வேண்டாம் போ’ என்று மறுத்தவர், காமராஜர்.

‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்னும் பொது வாழ்வின் இலக்கணத்தை காமராஜரைப் போல் கடைபிடிக்கும் அரசியல்வாதிகளைக் காண்பது அரிதினும் அரிதாகிவிட்டது. அமெரிக்கா அதிபர் கென்னடி மறைந்த போது வழங்கிய இரங்கல் செய்தியில், ‘சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள்’ என்று காமராஜர் குறிப்பிட்டார். ஆம்… உண்மை தான். அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே அழகாகப் பொருந்துகிறது.