Tuesday 5 May 2015

பெருந்தலைவர். அவர் போன்ற இன்னொரு தலைவர் தேவை.... இனி காண முடியுமா?

'நீதி, நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....' என்று தங்கள் கட்சி தலைவர்களைப்

பற்றி தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. மேடையில் தலைவரைப் பாராட்டும் பேச்சாளரின் புகழ்

மாலைக்கு பரிசாக உடனே கரகோஷம் கிடைக்கும். ஆனால்... மேடையில் முழங்கிய அந்த வார்த்தைகளுக்கும் அவர்

குறிப்பிட்ட தலைவருக்கும் கொஞ்சமாவது தொடர்பு இருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை...

இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட செயல்வீரர்

பெருந்தலைவர் காமராஜர். இது அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் உண்மை.

15-6-1903-ல் விருதுபட்டி என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த காமராஜர் 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின்

தொண்டர் ஆனார். பின்னர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை

செய்த இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை சிறை சென்றார். காமராஜர் தனது இளமை காலத்தின் 9 ஆண்டுகளை

சிறை கம்பிகளுக்குள்ளேயே கரைத்தார்.

செய்த குற்றத்துக்காக சிறை சென்றவர்களுக்கே 'தியாகச்செம்மல்' பட்டம் கொடுக்கும் இன்றைய அரசியலுக்கும்;

வெள்ளையர்களை எதிர்த்து கடுமையான தண்டனைகளை அனுபவித்த அன்றைய அரசியலுக்கும் எவ்வளவு நீளமான ஏணியை

வைத்தாலும் எட்டாது. அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு சிறை தண்டனையை பெருமையாக ஏற்றுக் கொண்ட

காமராஜர், சிறையில் இருந்த போதும் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்தார்.

கட்சித் தொண்டராக இருந்த காமராஜர் இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.

சிறு வயதில் வறுமை காரணமாக 6-வது வகுப்பு வரை மட்டுமே படித்தார். என்றாலும், சிறை வாழ்க்கையின் போது தனது

ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.

தான் படிக்க முடியாமல் போனது போன்ற நிலைமை, தமிழ்நாட்டில் யாருக்கும் வரக்கூடாது. அதற்கு ஏதாவது செய்ய

வேண்டும் என்ற ஏக்கம் காமராஜரின் மனதில் நிலைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதல்-அமைச்சர் பதவி

அவரைத் தேடி வந்தது. 13-4-1953 (தமிழ்ப் புத்தாண்டு) அன்று தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக காமராஜர் பதவி ஏற்றார்.

காமராஜர் 3 முறை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார். மொத்தம் 9 பேரை அமைச்சர்களாக கொண்ட இவரது

தலைமையிலான ஆட்சி தமிழ் நாட்டில் 9 ஆண்டு காலம் நடந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை குழந்தைகளும் படிக்க

வேண்டும் என்பதற்காக இவர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

இவர்

தனது ஆட்சிக்காலத்தில் 6000 பள்ளிகளைத் திறந்தார். 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்தார். தமிழகத்தில் பள்ளிகளின்

எண்ணிக்கை 27000 ஆக உயர்ந்தது. அதன் பலனாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 சதவீதத்தில்

இருந்து 37 சதவீதமாக அதிகரித்தது.  பள்ளிகளில் வேலை நாட்கள் 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு

முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை

நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் போது கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால்

அபிவிருத்தி திட்டம், புதிய அணைகளான மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9

முக்கிய நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவர் காலத்தில் தமிழகத்தில் பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு

நிலையம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனை

கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்

வெப்ப மின் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

முதல்-அமைச்சர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித்

தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி 'காமராசர்  திட்டம்' என்ற புதிய திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப் பணியாற்றச் செல்ல

வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த

கையோடு காமராஜர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தனது பொறுப்பினை 2-10-1963 அன்று பக்தவத்சலத்திடம்

ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார்.

அதே ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1964ல் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன்மொழிந்து காமராஜர் சொன்ன

கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல்

சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக்கினார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு அன்றைய தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்தார்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர்.

இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் 2-ந்தேதி

காந்தியின் பிறந்த நாளில் காமராஜர் மரணம் அடைந்தார்.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தையும் ஒரு சில வேட்டி, சட்டைகளையும் தவிர வேறு வங்கிக்

கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்தவித சொத்தோ வைத்திருக்கவில்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே

வசித்தார்.

இன்று கவுன்சிலர் பதவி கிடைத்தாலே கார், பங்களா, குடும்பங்களுக்கு 7 தலைமுறைக்கான சொத்து என்று இறங்கி

விடுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய பதவிகளை வகித்த பெருந்தலைவர் காமராஜர் தனக்காகவும் எதையும் சேர்க்கவில்லை.

குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக்கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்

கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார்

சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.

ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருதுநகருக்குச் சென்றிருந்தார்.

அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, 'என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல,

என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்த பிரமுகர். அதற்கு நிதானமாக பதில் சென்னார்

'அட போப்பா எனக்குத் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா

தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலு பேரு வருவான்.

அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்து பேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற

டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு

வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லேயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.

அவரது நேர்மைக்கு இது ஒரு உச்சகட்ட எடுத்துக்காட்டு. இப்படி எத்தனையோ சம்பவங்கள்.

கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்த காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன் வந்தபோது நாட்டிலே

எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு

வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

தன்னைப்பற்றி என்றுமே கவலைப்படாத காமராஜர் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், வருங்கால சந்ததியினரின்

எதிர்காலத்தையும் பற்றி மட்டுமே கவலைப்பட்டார்.

காமராஜரின் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் கல்வி, விவசாயம், தொழில், சாலைகள், மின்சாரம், நீர் பாசனம் என்று

அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றது. அவர் அமைத்த அடித்தளமே தமிழகத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக

அமைந்துள்ளது.

அவருக்குப் பின் எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். என்றாலும் காமராஜர் என்ற பெயரைச் சொன்ன உடனே

எழுந்து நின்று கும்பிடத் தோன்றுகிறது. யாரையும் பிரித்து பார்க்காத நேர்மையின் சிகரமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர்

காமராஜர். அவர் போன்ற இன்னொரு தலைவர் தேவை.... இனி காண முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நேர்மையை நேசிக்கும்

அனைவருடைய நெஞ்சத்திலும் ஏக்கமாக எழுந்து நிற்கிறது.

No comments: