Tuesday 12 May 2015

பெருந்தலைவர்-மக்களின் மனதில் நிரந்தரமாய்

1954–ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார், காமராஜர். திருமலைப் பிள்ளை வீதி விழாக்கோலம் கொண்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார், காமராஜர்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” என்றார்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னாள் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி- -நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் ஒருவர் காமராஜர் சென்ற வண்டியை நிறுத்தி சிறிது நேரத்துக்கு பின் அவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். இதனால் காமராஜரின் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து போனார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். “முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே!” என்று பதறிப்போனார். “காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே!”  என கலங்கினார்.அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜர், அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தம் அடைந்தது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை, அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர், பொறுப்பேற்ற முதல்நாளிலேயே கோப்புகளைப் பார்க்க அமர்கிறார். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது என்ன இரண்டு வரிசை? என அவர் கேட்க அதற்கு அவரது உதவியாளர் சொல்லுகிறார், முதல் வரிசையிலே உள்ளவை முக்கியமானவை, அடுத்து உள்ளவை முக்கியமில்லாதவை.

இதனைக் கேட்டு அதிர்ந்து போகிறார்,   காமராஜர். முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானவைதான். நான் அன்றே உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். இது தான் முக்கியம் என்றார் காமராஜர். அதிகம் படிக்காதவர் தான். ஆனால் அவரது சிந்தனைகளும் செயல்களும் இது போல் விசித்திரமானது தான்.

“படிக்காத மேதை” என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள். அந்த வார்த்தைக்குச் சரியான இலக்கணமாகத் திகழ்ந்தவர், காமராஜர் தான். ஒரு அரசாங்கம் எப்படி நடக்கிறது? என்பதை நாடி பிடித்துப் பார்ப்பது போல அவர் சோதித்துப் பார்க்கும் முறையே வியப்பானது.

“கிங் மேக்கராக” விளங்கிய அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டுத் திரும்புவார். அவரைப் பார்க்க உயர் அதிகாரிகள் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவிலே போகிற மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளை அழைத்து வரச் செய்வார். அந்த அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களின் நலங்களை விசாரிப்பார்.

உங்களுக்கெல்லாம் அரிசி-பருப்பு ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி எல்லாம் எப்படி இருக்குது? என்றெல்லாம் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்பார். மக்களாட்சியின் தத்துவத்தை மிகச் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு ஆட்சி செய்தவர்.

பொய்மையும் போலித்தனமும் தன் மீது படிந்துவிடாமல் நேர்மையான அரசியலை மட்டுமே அவர் அரவணைத்துக் கொண்டார். சமூக நலனுக்காக சகலத்தையும் துறந்த சன்னியாசிகளாலும் கூட தாய்ப்பாசத்தை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், தன்னுடைய பொது வாழ்வில், எந்த நிலையிலும் களங்கம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த தாயின் உறவையே தள்ளி வைத்த மகத்தான மனிதர்,  காமராஜர்.

தான் ஈன்ற அன்னைக்கு மாதந்தோறும் 120 ரூபாய்க்கு மேல் தர மறுத்த தலைவர் காமராஜர், தான் தங்கியிருந்த வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால் வீட்டை ஒட்டி ஓரிடத்தை ரூ3,000 கொடுத்து விலைக்கு வாங்கி, கழிப்பறை கட்டிக் கொள்ள விரும்புவதாக காமராஜரின் தாய் சிவகாமி அம்மையார் தெரிவித்த போது, ‘நீ கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய்; ஊரில் உள்ளவர்கள் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்வார்கள். அதெல்லாம் வேண்டாம் போ’ என்று மறுத்தவர், காமராஜர்.

‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்னும் பொது வாழ்வின் இலக்கணத்தை காமராஜரைப் போல் கடைபிடிக்கும் அரசியல்வாதிகளைக் காண்பது அரிதினும் அரிதாகிவிட்டது. அமெரிக்கா அதிபர் கென்னடி மறைந்த போது வழங்கிய இரங்கல் செய்தியில், ‘சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள்’ என்று காமராஜர் குறிப்பிட்டார். ஆம்… உண்மை தான். அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே அழகாகப் பொருந்துகிறது.

No comments: