Saturday 16 May 2015

விருதுநகர் நாடார் உறவுமுறை பெயர்கள்.

இன்று காலை மலேசிய அன்பர் கரு ரமேஷ்குமார் அண்ணாச்சியுடன் வாட்சப்பில் பேசும் போது எனது விருதுநகர் மலரும் நினைவுகள் சிலவற்றை நினைவுப் படுத்தினார். நன்றி அண்ணாச்சி. அப்போது உறவுகளை முறை சொல்லி அழைக்கும் விதம் குறித்து பேச்சு திரும்பியது. அண்ணாச்சி என்னை பழைய விருதுநகருக்கே அழைத்துச் சென்றார்.




விருதுநகரில் நாடார்கள் உறவுகளை முறை சொல்லி அழைக்கும் பெயர்கள்:

மாமம்மையா (பேச்சு வழக்கில் மாம்மையா) - தாயாரின் தந்தை
மாமம்மை (பேச்சு வழக்கில் மாம்மை) - தாயாரின் தாயார்
அய்யாப்பா (பேச்சு வழக்கில் அய்யப்பா) - தந்தையின் தந்தை
அய்யாம்மா (பேச்சு வழக்கில் அய்யம்மா) - தந்தையின் தாயார்
அய்யா - தந்தை
அம்மா - தாயார்
பெரியய்யா (பேச்சு வழக்கில் பெரியா)  - பெரிய தந்தை (தந்தையின் அண்ணன்)
பெரியம்மா (பேச்சு வழக்கில் பெரிம்மா) - பெரிய தாயார் (தாயாரின் அக்கா)
சின்னய்யா (பேச்சு வழக்கில் சினியா) - சிறிய தந்தை (தந்தையின் த்ம்பி)
சின்னம்மா - சின்ன தாயார் (தாயாரின் தங்கை)
மச்சான் - அக்காள் கணவர், அத்தை மகன் 
மதினி - அண்ணன் மனைவி, அத்தை மகள் 
அண்ணாச்சி - அண்ணன்,அக்காள் மருமகன் 

கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்த போதே இந்த உறவுமுறைகளும் அழியவும், உறவுமுறைகளுக்குள் இருந்த நெருக்கம் குறையவும் ஆரம்பித்தன. கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்து கிட்ட தட்ட சொந்தங்களும் விலகிப் போக ஆரம்பித்து விட்டன. ஒரு வார கல்யாணம், 16 நாள் கருமாதி எல்லாம் அவசர கதி ஆகிவிட்டன! சமூகம் என்ற அழைப்பே இப்போது இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது!

இப்போது கிட்ட தட்ட இந்த உறவுமுறை பெயர்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன என்றே கருதுகிறேன்.  மாமம்மை-ஆச்சி ஆகிவிட்டார், மாமம்மையா-ஆச்சிப்பா ஆகிவிட்டார், அய்யாப்பா, அய்யாம்மா தாத்தா பாட்டி ஆகிவிட்டனர், அய்யா டாடி எனவும், அம்மா மம்மி எனவும் ஆகிவிட்டனர். அதே போல் அக்காள் கணவர் மாமா எனவும், அண்ணன் மனைவி அண்ணி எனவும் அழைக்கப் பெற்றனர். பெரியய்யா, சின்னய்யா. அண்ணாச்சி போன்ற பெயர்களும் வழக்கத்தில் இல்லை.

இப்பொழுது பெரும்பாலும் பலர் ஒற்றைப் பிள்ளையும் சிலர் இரட்டை பிள்ளைகளையும் பெற்றுள்ளதால் உறவுக்கே வேலையில்லை, இதில் எங்கே உறவுமுறை பெயர்கள்!  என் பிள்ளைகளை இந்த உறவு சொல்லியே அழைக்க பழக்கியிருக்கிறேன். என் காலத்திற்கு பிறகு தெரியவில்லை!!

No comments: