Saturday 5 December 2015

பிணந்தின்னிகள்.....

பிணந்தின்னி கழுகுகள்
****************************

இயற்கையைப் பாதுகாப்பாக பேணுவதற்கான வழிமுறைகளை இயற்கையே வகுத்தளித்திருக்கிறது. உயிரினங்களின் பழக்க வழக்கங்களும் இதுபோன்ற இயற்கை நெறிகள்தாம்.
நீண்டநேரம் பறக்கவல்லவை பிணந்தின்னிக் கழுகுகள். இறந்த உயிரினங்களின் உடல்களை அழிப்பதற்கான இயற்கையின் அற்புதப் படைப்பு பிணந்தின்னிக் கழுகு.

இவற்றை நேச்சுரல் ஸ்காவன்ஜெர்ஸ் அல்லது இயற்கைத் துப்புரவாளர்கள் என்கிறார்கள். வேட்டையாட விலங்குகளோ அல்லது இரையோ கிடகை்காத பட்சத்தில் எளிய உணவாக இறந்த விலங்குகளை உண்பதால், இந்தப் பெயர் வந்திருக்கிறது. இரை கிடைக்காத தருணங்களில் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகளைக் கொன்று தின்கிறது இந்தப் பறவையினம்.

பிணந்தின்னி மனிதர்கள்
******************************

இங்கே நான் பிணந்தின்னி அகோரிகள் பற்றி பேசவில்லை! பிணந்தின்னி கழுகுககள் நோய்வாய்பட்ட மற்றும் இறந்த உணவுகளை மட்டுமல்ல சமயத்தில் வேட்டையாடியும் உண்பவை! ஆனால் பிணந்தின்னி மனிதர்கள் இழவு எங்கே விழும், எப்போ ஆதாயம் பார்க்கலாம் என சுற்றுபவர்கள். எரியும் வீட்டில் பிடுங்கி தின்பவர்கள்.

இந்த வகை பிணந்தின்னிகள் அரிசயல் மற்றம் அதிகார வர்க்கத்தில் நிறைய உண்டு. சமீபத்தில் ஊடகத்துறையும் இணைந்துள்ளது. கடந்த முறை சுனாமி நிவாரண நிதியிலும், நிவாரணப் பணிகளிலும் முடிந்த வரை வாய்க்கரிசி அள்ளியவர்கள் இவர்கள்!

இந்த முறையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் வாய்க்கரசி அள்ளுகிறார்கள். இவர்களுக்கு தாய் தந்தை அண்ணன் அக்கா என எந்த உறவும் தெரியாது. பிணம் மட்டுமே இவர்கள் கண்ணுக்கு தெரியும்! ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி ஊடகங்களும் பிணம் தின்பது அதை விட வேதனை!!

தூ..... தூ.... பிணந்தின்னிகள்...

தூ.... தூ.... தூ..... என்னை போன்ற கையாலாகாத ஜெண்மங்கள்....

ஏரி காத்த பனைகள்....

பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம்.

பனைகள் நம் ஏரிக் கரைகளிலும் குளங்கரைகளிலும்  நின்றிருந்த வரையில் ஆக்கிரமிப்பு, கரை உடைப்பு ஆகியவை நிகழவில்லை. இப்பொழுதும் பனைகள் ஏரிக்கரையில் காத்து நி்ன்றால் அவற்றின் வேர்கள் கரைகளை பலப்படுத்தி அரனாக இருந்திருக்கும்.

பனைகளை அழித்ததன் பயனை நாம் இன்று வட மாவட்டங்களில் மிக மோசமாக அனுபவித்து வருகிறோம். கண்மாய் கரையில் இருக்கும் பனைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காகவே பனையில் முனி இறங்கியிருப்பதாகவும், கருப்பு இருப்பதாகவும் தென் மாவட்டங்களில் கூறுவார்கள்!

கரை உடைந்து கிராமங்களும் நகரங்களும் வெள்ளக்காடாவதை பனைகள் தடுக்கும், இன்றும் இருந்திருந்தால் தடுத்திருக்கும். குளம், கண்மாய், ஏரி மட்டுமல்ல வெள்ள காலத்தில் ஆறுகளிலும் கரை உடைப்பு ஏற்பட்டு ஆறுகள் திசைமாறுவதையும் தடுக்க வல்லவை பனைகள்.

தாங்க முடியாத பஞ்ச காலத்திலும் தானும் தாக்குப்பிடித்து நம்மையும் வாழவைக்கும் திறன் கொண்டது! 

ஆனாலும் நாம் அவற்றை அழிப்பதைவிடத் தற்கொலைத் தனமான செயல் ஒன்றும் இருக்காது! 

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பனைமரங்கள் நிறைந்திருந்தால் எந்தப் பஞ்சமும் வறட்சியும் எதுவும் செய்யாது. 

செலவே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அனைத்து வழிகளிலும் காக்கும் திறன்கொண்ட பனைமரத்தைக் காப்போம்! 

அது பனைமரத்துக்கு நாம் செய்யும் உதவி அல்ல! நமக்கு நாமே செய்து கொள்ளும் மாபெரும் உதவியாகும்!....

அரசுகளும், தொண்டார்வ நிறுவனங்களும், கட்சிகளும், அதிகாரிகளும், ஊடகங்களும், பொதுமக்களும் விழிப்படைவார்களா?......