Thursday 3 March 2016

அமலா பால் புடிச்சிருக்கு...

காலைல குளிச்சுட்டு வந்து  கூடத்துல சாப்பிட உட்காரந்தேன். டிவிடில வேலையில்லா பட்டதாரி படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. என் பொண்ணு வேகமா சமையல் கட்டிலிருந்து ஓடி வந்து " ஐயா... அம்மா அமலா பால் புடிச்சிருக்குன்னு சொன்னாங்க!" என்றாள்!

நானும் "ஆமாடா தங்கம்... அமலா பால் சூப்பரா இருக்காங்கல்ல...? பாவம்... சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு!! " என்றேன். "அப்படியே உங்க அம்மா நல்ல மூடுல இருக்கும் போதே, இன்னொரு சப்பாத்தி வாங்கிட்டு வாடா செல்லம்!" என்றேன்!

டக்குனு சமையல் கட்டுக்கு ஓடுனா பொண்ணு. நானும் சப்பாத்தி வரும்னு ஆவலா இருந்தேன்... சப்பாத்தி வரல, சப்பாத்தி கட்டையோட வீட்டுக்காரம்மா தான் வந்தாங்க! "விவஸ்தை கெட்ட மனுசா... பிள்ளை கிட்ட என்னத்த பேசனும்னு விவஸ்தையே கிடையாதா?"னு கேட்டா.

ஆகா... எங்கேயோ வில்லங்கம் ஆயிடுச்சுன்னு புரிஞ்சிடுச்சு. "இல்லமா.. நீ சொன்னத தான நானும் கொஞ்சம் எக்ஸ்டராவா திரும்ப சொன்னேன்"னு பவ்யமா சொன்னேன்! "ஏய்... எருமை மாடே! (யாரன்னு தெரியல?!) என்னடி சொல்லி தொலைஞ்ச உங்கையன் கிட்ட?!"னு கேக்க! பயபுள்ள "இல்லம்மா... நான் அடுப்புல பால் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்! ஐயா தான் அமலா பால் சூப்பரா இருக்காங்கன்னு சொன்னாரு"ன்னு சொல்ல...

எனக்கு அப்பதான் புரிஞ்சுது, நேத்து ராத்திரி அடி வாங்குனதுக்கு இன்னிக்கு காலைல சூணியம் வச்சிருக்கு குட்டி சாத்தான்!!

கல்வி கற்றவர்கள் நாட்டுக்கு பயன்படவேண்டும்

”மாணவர்கள் கல்வி கற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்.
எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.”

இதை சொன்னவர் பொருளாதார நிபுணரோ, கல்வி மேதையோ அல்ல படிக்காத மேதை பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் வார்த்தைகள் இவை!

Tuesday 1 March 2016

நட்சத்திர விடுதி ஜெர்மானஸ் டே இன் உரிமையாளர் ஜெர்மானஸ் அந்தோணிமுத்து

மதுரையில் காளவாசல் பகுதியில் நீச்சல் குளம் சகிதம் பிரம்மாண்டம் காட்டி நிற்கும் ஜெர்மானஸ் ஓட்டலின் அதிபர் அடிப்படையில் ஒரு கொத்தனார் என்றால் நம்ப முடிகிறதா?

அல்லும் பகலும்

கோவில்பட்டி கொத்தனார் மரியசவரியாருக்கு ஆறு பிள்ளைகள். அதில் இரண்டாமவர் ஜெர்மானஸ் அந்தோணிமுத்து. ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோதே குடும்பத்தின் வறுமை ஜெர்மானஸை கமிஷன் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டது. காலையில் பழைய சாதம் சகிதம் மூன்று வேளை சாப்பாடு மட்டும்தான் சம்பளம். இதற்காக அதிகாலை 5 மணியிலிருந்து ஊரடங்கும்வரை உழைக்க வேண்டும்.

கடை வேலை மாத்திரமில்லாமல் முதலாளி வீட்டில் அனைத்து வெளி வேலைகளும் ஜெர்மானஸ் தலையில்தான். சில நேரங்களில் காலை சாப்பாட்டுக்குச் செல்ல தாமதமாகிவிட்டால், கஞ்சிக்குப் பதிலாக தோசையோ இட்லியோ கொடுத்துவிட்டு ‘ஸ்பெஷல்’ என்று கணக்கு எழுதிவிடுவார்கள். மாதக் கணக்கை முடிக்கும்போது ‘கறிச் சோறு சாப்பிட்டியளோ...’ என்று கமிஷன் கடை கணக்குப்பிள்ளை முறைப்பார்.

இப்படியே நாட்கள் நகர, பாபநாசம் அருகே விக்கிரமசிங்கபுரத்து பலசரக்குக் கடைக்கு வேலை மாறினார் ஜெர்மானஸ். அங்கே மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் 3 ரூபாய் சம்பளம். அங்கேயும் வேலை சக்கையாய்ப் பிழிந்ததால் மகனைத் தனக்குத் துணையாகக் கொத்தனார் வேலைக்கே அழைத்துக் கொண்டார் மரியசவரிமுத்து.

நம்பிக்கைப் பயணம்

“1956-லிருந்து மூணு வருஷம் அப்பா கிட்ட கொத்தனார் வேலை பார்த்தேன். ஒரு நாள் உறவுக்காரப் பாதிரியார் என்னை மதுரைக்குக் கூட்டிச் சென்றார். மதுரையில வாரத்துல ரெண்டு நாள் மட்டுமே வேலை. மத்த நாட்கள் கீழவாசல் பகுதியில் யாராச்சும் வேலைக்கு கூப்பிட மாட்டாங்களான்னு காலையிலேயே போயி காத்துக் கெடப்போம். இப்படியே பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தப்ப, நாகமலை புதுக்கோட்டையில இருக்கிற பாய்ஸ் டவுன்ல நிரந்தரமாகக் கொத்தனார் வேலைக்கு ஆள் வேணும்னு கூட்டிட்டுப் போனாங்க. அங்க போன பின்னாடிதான் படிப்படியா வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்” என்கிறார் ஜெர்மானஸ்.

டெல்லியிலுள்ள டூரிஸம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து ரூ 3.60 கோடி செலவில் 40 அறைகளுடன் தன் பெயரிலேயே 1999-ல் ஓட்டலைக் கட்டினார் ஜெர்மானஸ். தேனூரில் ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் செங்கற்களை உற்பத்தி செய்யும் செங்கல் சேம்பர் ஒன்றுக்கும் இவர் உரிமையாளர். கொடைக்கானலில் பத்துக் கோடி ரூபாய் செலவில் வளர்ந்துகொண்டிருக்கும் ஜெர்மானஸ் ஓட்டல் கிளை இன்னும் மூன்று மாதங்களில் திறப்பு விழா காணவிருக்கிறது.

77-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெர்மானஸ் அந்தோணி முத்து, தான் கடந்து வந்த பாதையை ‘எனது நம்பிக்கைப் பயணம்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். “சாதிக்க நினைக்கும் சாமானியர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டால், “கூலிக்கு வேலை பார்த்தபோது இருந்த சுறுசுறுப்பை நான் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்போதும் இரவு 12 மணிக்குத்தான் உறங்கப்போகிறேன். சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் கோடிகள் தொடும் தூரம்தான்” என தன்னம்பிக்கையின் அடையாளமாகச் சொன்னார் ஜெர்மானஸ் அந்தோணி முத்து.

நன்றி: தமிழ் தி ஹிந்து