Saturday 20 August 2016

சாவியைத் தொலைத்து நிற்கும் பூட்டு நகரம்!!

திண்டுக்கல்...! தென் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஊர் அப்போதே தண்ணீர் பஞ்சத்திற்குப் பிரபலம். இதனால் ‘செக்கிற்கு மாட்டை கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனால் திண்டுக்கல்காரனுக்கு பொண்ணைக் கொடுக்கக் கூடாது’ என்ற அன்றைய காலகட்டத்தில் வழக்குச்சொல்லாக கூறப்படுவது உண்டு. அப்போது விவசாயம் இல்லாததால் அதற்கு மாற்றுத் தொழிலாக உருவெடுத்ததுதான் பூட்டு. நேரம் காலம் பார்க்காமல் தினவெடுத்து உழைக்கத் துடித்த இந்த ஊர் மக்களுடன் இத்தொழில் இரண்டறக் கலந்து விட்டது.

சாதாரணமான பூட்டில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திண்டுக்கல்தான். உள்பாகங்கள் துத்தநாதத்தில் அமைக்கப்பட்டதால் உப்புக்காற்று, மாறுபாடான பருவநிலை போன்றவற்றையும் எதிர்கொண்டு காலம் கடந்து நின்றது. தரம் பிரதானமாக இருந்தது இத்தொழிலுக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தது. அதேவேளையில் இவர்களின் கற்பனைத் திறன் உலகத்தின் பார்வையை திண்டுக்கல்லை நோக்கித் திரும்ப வைத்தது.

பூட்டு என்றால் அது பாதுகாப்பிற்கு மட்டும்தான் என்ற நிலையில் இருந்து அதன் ‘அடுத்தகட்டத்திற்கு’ எடுத்துச் சென்றதில் திண்டுக்கல்லின் பங்கு அலாதியானது. திருடர்களைத் தாக்கும் பூட்டு, திருட முயல்பவர்களை குழப்பும் பூட்டு, மணியடித்து உரிமையாளர்களை எச்சரிக்கும் பூட்டு, திருட்டு சாவியை ‘லபக்’ செய்யும் பூட்டு, சாவித்துவாரம் இல்லாத பூட்டு என்று ஏகத்திற்கும் நம்மை அசர வைக்கும் தொழில்நுட்பங்கள் ஏராளம். தொழிலில் புரட்சி ஏற்படுத்தி பூட்டு வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த அந்தக்கால ‘பூட்டு விஞ்ஞானிகளின்’ ஆற்றலை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தண்ணீர்ப் பஞ்சத்திற்கு சுட்டிக் காட்டப்பட்ட இந்த ஊர் பின்பு பூட்டிக்கு அடைமொழியாக மாறிப்போனது. அது ஒரு வசந்தகாலம்.. வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகளின் வருகை, பூட்டுப் பட்டறைகளில் இரவும், பகலும் ‘பைலிங்’ செய்யப்படும் ஓசை, தினமும் ஆயிரக்கணக்கில் வண்டிகளில் வெளியூர்களுக்குப் பயணமாகும் பூட்டுகள், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆர்டர்கள் என்று அந்த இடைவிடாத பரபரப்பு... திண்டுக்கல்லிற்கே சற்று புதியதாகத்தான் இருந்தது.

உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டிருந்த திண்டுக்கல் பூட்டிற்கு பெரும் ஆபத்து உத்திரப்பிரதேசத்தில் இருந்து வந்தது. எதிர்காலத்தில் திண்டுக்கல்லில் இத்தொழிலை அழிக்கும் அசகாயசூரன்தான் அது என்று அப்போது சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

இயந்திரமயமாதல். இதற்குப் பலியான எத்தனையோ தொழில்களில் பூட்டும் பிரதானம். ஆம். 75 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசம் அலிகார் எனும் இடத்தில் இருந்து இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் ஏகத்திற்கு இந்தியா முழுவதும் படையெடுத்தன. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பூட்டுக்களை தயாரித்துத் தள்ளும் இந்த இயந்திர தொழில்நுட்பத்தால் அவ்வகை பூட்டுக்களின் விலை மிகவும் மலிவாக இருந்தது. இயந்திர வடிவமைப்பு என்பதால் பார்க்க அழகாகவும், மெல்லிய தன்மையுடன் இருந்தது. துவக்கத்தில் டைகர் பூட்டு என்ற பெயரில் அறிமுகமானது. அமுக்கு பூட்டு என்று நடைமுறையில் அழைக்கப்பட்டது. (பூட்டுவதற்கு சாவியைப் பயன்படுத்தாமல் அமுக்கினாலே இவ்வகை பூட்டு பூட்டிக் கொள்ளும்) இந்த இயந்திரப்பூட்டு தாக்குதல் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க... இரும்புப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு.. அதை பூட்டு விலையில் எதிரொலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டது. போதாக்குறைக்கு கனத்த பூட்டுகளையே பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் மாடர்னான கையடக்கப் பூட்டுக்களை நோக்கி புதுமை விரும்பிகள் செல்லத் துவங்கினர்.

இப்படி ‘பல பக்க தாக்குதலில்’ திண்டுக்கல் பூட்டு முழிபிதுங்கத் துவங்கியது. மலைப்பாம்பின் வாயில் சிக்கிய விலங்கின் தருணம் அது. அப்போது கூட வியாபாரிகளுக்கு அதன் விபரீதம் புரியவில்லை

உழைப்பாலும், தொழில்நுட்பத்தாலும் நூற்றாண்டுகளாக ஜெயித்த வியாபாரிகள் அவ்வளவு விரைவில் சோர்வடைந்து விடவில்லை. ஒருபுறம் முனைப்பு அதிகரித்தது. மறுபுறம் அரசிற்குக் கோரிக்கைகள், அலிகார் பூட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என்று களத்தில் குதித்தது. திண்டுக்கல் பூட்டு யுத்தம் துவங்கியது. பல ஆண்டுகள் இந்நிலை நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகளுக்கு அலிகார் பூட்டிற்கு மாதக்கணக்கில் கடன்.. (வித்த பிறகு பணம் கொடுத்தா போதும் அண்ணாச்சி...) பல்வேறு சலுகைகள்.. சன்மானங்கள், விளம்பரங்கள் என்று எதிரணியும் ‘திண்டுக்கல்லை’ பிடிக்க படாதபாடு பட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல.. மெல்ல.. திண்டுக்கல்லை விழுங்கத் துவங்கியது அந்த உத்திரப்பிரதேச இயந்திரம். அன்று ஏற்பட்டதுதான் சரிவின் தொடக்கம். தொடர்ந்து சரிவின் சாய்தளம் செங்குத்தாக மாறியது. தலைமுறை தலைமுறையாக வியர்வை வழிய உழைத்த உழைப்பு, பூட்டின் சரித்திரத்தில் ஏற்படுத்திய அதிரடிப் புரட்சி கொஞ்சம் கொஞ்சமாக மலரும் நினைவுகளாகவே மாறிப் போனது.

பின்னர் பல்வேறு கடைகளின் உள்சுவர்களில் அலிகார் பூட்டுகளின் ஆட்சியே பிரதானமானது. வெற்றியின் உச்சத்தைத் தொட்ட திண்டுக்கல் சற்றே இளைப்பாறுதலுடன் அங்கே தொங்கிக் கொண்டுள்ளன. எனினும் அடுத்தடுத்து தொடர் முயற்சி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் தலைமுறை இடைவெளி இதற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. பூட்டுத் தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என்ற கருதி ஆயிரக்கணக்கானோர் வேறு களத்திற்குச் சென்றனர். தொழில் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பாதையில் பயணிக்க வைத்தனர்.

இதற்கெல்லாம் மேலாக தொழில்நுட்பம் தெரிந்த பெரியவர்கள் தங்கள் மீது படும் வெளிச்சத்தை இழக்க விரும்பாமல் ‘விஷயஞானத்தை’ கடைசிவரை மறைத்தே வைத்தனர். பூட்டை உடைத்துப் பார்த்து நுட்பத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், உடைத்ததுமே உள்கட்டமைப்பே சிதைந்து போனது. வித்தையை முழுவதும் அடுத்தவர்களுக்கு கற்றுத் தராததால் பல அரிய விஷயங்கள் அவர்களுடனே மறைந்து போய் விட்டன. பூட்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு தொழில்நுட்ப சாகசப் பூட்டுகள் அருகிப்போகின.

இப்போதெல்லாம் சீனா பூட்டுக்கள் மிக மலிவாகவும், கண்ணை கவரும் வகைகளில் கிடைப்பதால் மக்கள் நமது திண்டுக்கல் பூட்டுகளை வாங்க விரும்புவதில்லை. அது போக தயாரிப்பிலும் பல சிக்கல்கள். ஒரு நாளில் ஒரு பூட்டு தொழிலாளி அதிகபட்சம் ஆறு பூட்டுக்கள் மட்டுமே செய்ய முடியும், அவருக்கு கூலி நூற்றி இருபது ரூபாய், ஆனால்  இப்போதெல்லாம் வீடு கட்டும் தொழிலில் சித்தாள் வேலை பார்பவருக்கே கூலி அதிகம், அதனால் பலரும் இந்த தொழிலை செய்ய விரும்புவதில்லை. இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் பூட்டு தயாரிப்பவர்களுக்கு வங்கியிலிருந்து பண உதவி கிடைப்பதில்லை, வங்கிகள் இதை நசிந்து வரும் தொழிலாக கருதுகிறார்கள். வெகு விரைவில் "திண்டுக்கல் என்றால் பூட்டு" என்னும் வழக்கம் அழிந்துவிடும், அடுத்து சிவகாசி, திருப்பூர் என வரிசை கட்டும்.... நம் சோகங்கள்!!

சில இந்திய திமிங்களுக்காக சீனர்களை வாழ வைப்பதே நம் அரசின் தாராளமய தாராள கொள்கை!!
வாழ்க அரசு கொள்கைகள்!
வாழட்டும் திமிங்கலங்கள்!
வந்தே மாதரம்!