Wednesday 24 February 2016

தித்திக்கும் பானம் பொவன்டோ - நூற்றாண்டு கால வெற்றிப் பயணம்!

பிவிஎஸ்கே பழனியப்பன் நாடார் விருதுநகரைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை காபி மற்றும் ஏலக்காய் வியாபாரம் செய்துவந்தார். அவர் ஒரு முறை குளிர்பானம் ஒன்றினைக் குடித்த போது அதன் ருசி மிகவும் பிடித்துவிட்டது. அதே போல ருசியுடைய பானத்தை நாமும் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 23 வயதான பழனியப்பன் தந்தையின் வியாபாரத்தை அப்படியே தொடர விரும்பாமல், புதிதாக ஏதாவது செய்ய ஆர்வமுடன் இருந்தார். இருவரும் குளிர்பானம் தயாரிப்பிற்கான நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தார்கள். அப்போது அவர்களால் துவக்கப்பட்ட நிறுவனம் தான் காளிமார்க். 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது நூற்றாண்டு காலமாக நிலைத்து, எளிய மக்கள் பருகி மகிழும் சுவையான பானங்களைத் தயாரித்து வழங்குகிறது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டின் முக்கியமான குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனமாக காளிமார்க் உயர்ந்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு , காளிமார்க் நிறுவனரின் கொள்ளுப் பேரன்கள் காலத்துக்கேற்ப நிறைய புதிய மாற்றங்களைச் செய்தனர். குடும்பத் தொழில் போன்று சிறு நிறுவனமாக இருந்த காளிமார்க்கை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக உயர்த்தியோடு இன்றி, மற்ற பெரிய குளிர்பான நிறுவனங்களுக்கும் போட்டியாக வளர்ந்து விட்டார்கள். இன்று தமிழ்நாட்டு வணிகச் சந்தையில் காளிமார்க் நிறுவன தயாரிப்புக்கள் 14 சதவிகிதம் பங்குகளை பெற்றுள்ளன.  இந்த வெற்றி மெதுவாகத் தான் நிகழ்ந்தது. ஆனால் நிதானமானதாக சீரான வளர்ச்சியுடன் கூடிய வெற்றி அது.

‘நாங்கள் நூறு வருட காலமாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். ஆனால் 2010-ம் வருடம் தான் எங்களுக்கான ஒரு தனி இடம் கிடைத்தது. அதுவரை காளிமார்க் மற்றும் காளி ஏரியேட்டர் வாட்டர் வொர்க்ஸ் என்ற எங்களுடைய இரண்டு நிறுவனங்களும் சிறு தொழிலாகத் தான் இருந்து வந்தது’ என்றார் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த நிறுவன இயக்குநர் ஜெயசந்திரன் தனுஷ்கோடி. காளிமார்க்கின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் 1959 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களுடைய தயாரிப்பான பொவண்டோ. அறிமுகப்படுத்தப்பட்ட விரைவிலேயே பொவன்டோ குளிர்பானம் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் விற்பனையானது. பொவன்டோவைத் தொடர்ந்து டிரியோ, சோலோ, கிளப் சோடா, பன்னீர் சோடா என பல்வேறு குளிர்பானங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தற்போது பன்னீர் சோடாவின் மற்றொரு வடிவமான ‘விப்ரோ’ எனும் பானத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று காளிமார்க் தயாரிப்புக்கள் நாளொன்றுக்கு 6000 பாட்டில்கள் விற்பனையாகி, 170 கோடி வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்றைய இளம் பழனியப்பனின் கனவு. அது அவரது திறமையாலும் உழைப்பாலும் நிஜமானது உண்மை. ‘என்னுடைய தாத்தா (பழனியப்பன் நாடார்) மற்றும் பாட்டி உண்ணாமலை அம்மாள் இருவரும்  கடை கடையாக ஏறி, தங்களிடம் இருந்த ஒரு சிறிய கையால் இயக்கப்படும் இயந்திரத்தைக் (நீரில் எரிவாயு புகுத்தி, அந்த அழுத்தம் கொடுக்கும்) எடுத்துக் கொண்டு அந்த பானத்தைத் தயாரித்து தருவார்கள். அது மிக விரைவில் அனைவருக்கும் பிடித்த பானமாகிவிட்டது’ என்றார் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கேபிஆர் சக்திவேல். இவர் தான் அக்குடும்பத்தின் மூத்த அங்கத்தினர். அப்படி தயாரித்த அந்த பானத்தின் தேவையும் வெற்றியையும் பார்த்த பழனியப்பன் தன்னுடைய முதல் தொழிற்சாலையை விருதுநகரில் 1916 ஆண்டு நிறுவினார்.

‘கலர்’ அல்லது ‘சோடா’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த குளிர்பானம் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்றன. அதன்பின் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், சென்னை மற்றும் காரைக்குடியில் காளிமார்க் தன்னுடைய கிளைகளை தொடங்கியது. இதன் வளர்ச்சி ஒவ்வொரு ஆறு வருடத்திற்கும் 25 சதவிகிதம் என நிதானமாக பயணமாகத் தான் இருந்தது’ என்றார் ஜெயந்திரன், நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் கழித்து தான் தங்களுடைய தயாரிப்பான பொவன்டோவால் தான் லாபம் அடைந்தது. ஆம் பொவண்டோ காளிமார்க்கின் ஆணிவேர். 95 சதவிகித வருமானத்தை பொவன்டோவின் விற்பனையால் தான் நிகழ்ந்தது.

தற்போது காளிமார்க் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், 2020 வருட இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர திட்டமிட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு பின் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்கள் காளிமார்க்குக்குப் பெரும் சவாலாக இருந்த போதும் அவற்றை எதிர்த்து வெற்றி நடைபோடுகிறது அவர்களது தரமான தயாரிப்பான பொவண்டோ. ‘போட்டி இல்லையெனில் வளர்ச்சி ஏது, தவிர அந்தக் குளிர்பானங்கள் இல்லையெனில் சோடா என்பது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர பானம் என்ற எண்ணத்தை மாற்றியிருக்க முடிந்திருக்காது’ என்றார் ஜெயச்சந்திரன்.

(கட்டுரை ஆசிரியர்  ஜோனாதன் அனந்தா, தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ். தமிழாக்கம்  - உமா ஷக்தி)

Sunday 14 February 2016

திருச்சி தென்னூரில் அரிய வகை திருவோடு மரம்!

நேற்று மாலை பிள்ளைகளை சும்மா வெளியே அழைத்துச் செல்லலாம் என நினைத்த பொழுது என் மனைவி உக்கிரமாகாளியம்மன் கோவிலுக்கு போகலாம், பிள்ளைகள் விளையாட நிறைய இடம் இருக்கும் என்றார்! ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை சென்றிருப்போம்! மூங்கில் மரம் மற்றும் மேலும் சில அரிய வகை மரங்களை அங்கு பிள்ளைகளுக்கு கண்பிக்கும் வாய்ப்பு கிட்டும் என நானும் கருதினேன்!

திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமாகாளியம்மன் கோவிலில் இந்த மரம் உள்ளது. இது என்ன மரம், இதன் பயன் என்ன என நான் கூறிய போது என் மனைவி திகைத்து விட்டார்.

முதலில் "மரத்துல யாரோ பந்து வச்சிருக்காங்க!" என கூறியவர், விசயம் தெரிந்து ஆச்சர்யப்பட்டார்!

திருவோடு மரம்
****************
இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையுள்ள பகுதிகள்.

இந்தியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஸ்ரீகாந்த்  இங்கல்ஹலிகர்,   மலர்களின் பல்வகை பெருக்கத்திற்காக ‘மெக்ஸிகன் காலாபேஷ்' மரத்தை வளர்க்க ஆரம்பித்தார். புனேவில் உள்ள 'ஆந்த்' என்னுமிடத்தில் இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் பல்வேறு மடங்களிலும் இதனை வளர்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்த மரத்தின் அறிமுகம் பற்றி பேசிய இங்கல்ஹலிகார், "முக்தா கிர்லோஸ்கர் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தார். பிறகு அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு 500 வகையான தாவர இனங்களோடு சேர்த்து புனேவில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது.

பூக்கள்
*******
இதுவொரு சிறிய மரம். 8 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இந்த மரம் பெரிய மலர்களை தண்டு மற்றும்கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டது. மாலை நேரத்தில் பூக்கள் பூத்து, நறுமணத்தை வீசும் தன்மை கொண்டது. இந்த வாசனைக்கு சிறிய வகை வௌவால்கள் வந்து, இந்த மலர்களிலிருந்து தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது.

மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை உமிழும் தன்மை ஆகியவற்றால் வௌவால்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மை இந்த பூக்களுக்கு உண்டு. அதிக நறுமணமுள்ள தேனை பூக்களிலிருந்து உமிழ்வதால், வெளவால்களின் கோடை கால தாகத்தை தீர்க்கும் தன்மை இம்மரத்தின் பூக்களுக்கு உண்டு.

ஓடு
****
முன்பெல்லாம் வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.

இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே.
கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு கூட மிகக்கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7-10 செ.மீ. நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போன்று தோற்றமுடையது. இந்த பழம் தன்னையே பாதுகாத்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டது. இருந்தாலும் மற்ற பழங்களை போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது. பழத்திற்குள் இருக்கும் விதைகளை (சி-அலாட்டா) குதிரையாலோ அல்லது மனிதர்கள் எவராலுமோ சாதாரணமாக பிரித்தெடுத்துவிட முடியாது. யானையை போன்ற விலங்குகளை வைத்து முயற்சி செய்யலாம்.

விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போடும்போது இது வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட பரந்து வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட குணாதிசயத்தோடும் இருந்து வருகின்றன.

மரத்திலிருந்து விழும் இந்த பழங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முளைக்கும் திறனை இழந்ததால், ஓரிடத்திலிருந்து இன்னொரு பரவுவதும் அரிதாகி போனது. உள்ளூர் குதிரைகள் தன்னுடைய கால் பாதங்களால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்று இதை கவனித்தவர்கள் சொல்கின்றனர். உள்ளூர் குதிரைகளால் இந்த மர இனம் காக்கப்பட்டு நாம் பார்க்கக்கூடிய அளவில் இருந்து வருகிறது.

விதைகள்
***********
இந்த மரம் ஒன்றும் அரிதான ஒன்று அல்ல. பல திறந்தவெளி இடங்கள், புல்வெளிகள், ஆடு, மாடுகள் மேயும் இடங்களில்  பார்த்திருக்கலாம். இதன் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாக பயன்படுத்தப்படுகிறது.

பழத்தின் கெட்டியான ஓடுகள் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தும் பாத்திரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த மரம் ‘திருவோடு மரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகளில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை வாய்ந்தது; சாப்பிடுவதற்கு ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன்-அமெரிக்கா நாடுகளில் ‘செமிலா டெ ஜிகாரோ’ என்ற பெயரில் உணவுபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Friday 5 February 2016

எங்க ஐயா கூட முடி வெட்டிய காலம்...

நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுது முடி வெட்ட போக வேண்டும் என்றால் முதல் நாள் இரவே பரபரப்பாக இருக்கும். "நாளைக்கு முடி வெட்ட போகனும், சீக்கிரம் படுத்து தூங்குப்பா, அப்பதான் காலைல வெள்ளன எந்திரிக்க முடியும்" என்பார் எங்க ஐயா!

அடுத்த நாள் விடியலில் சூரியன் உதிக்கும் முன்னர் 5:15 மணிக்கெல்லாம் எழுப்பி, தூக்கத்தோடே தர தரவென இழுத்துச் சென்றுவிடுவார். மதுரை புது மகாளிப்பட்டி மார்க்கெட் அருகில் தான் சலூன் கடை. 5:30 மணிக்கே சலூன் கடைக்கார் பெரிய மீசையுடன் டீயை உரிஞ்சிய படியே கத்திக்கு தோல் வாரில் சானை தீட்டிக் கொண்டிருப்பார்!

எங்களை பார்த்ததும் "வாங்க முதலாளி. டீ சாப்பிடுறீங்களா? சின்ன முதலாளிக்கும் வெட்டனுமா?" என்பார். "ஆமாண்ணே! முடி காடு மாதிரி வளர்ந்து போச்சு" என்பார் ஐயா. முடி உண்மையில் காது வரைக்கும் கூட வந்திருக்காது! அவருக்கு அதுவே அதிகபட்சமாக தெரியும்! "மொதல்ல உங்களுக்கு வெட்டிறவா முதலாளி?" என கேட்பார் கடைக்காரர். "இல்லண்ணே... அவனுக்கு வெட்டி விட்றுங்க. அவன் முன்னாடி வீட்டுக்கு போய், ஸ்கூலுக்கு கிளம்பட்டும்!" என்பார் ஐயா.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டமாக இருக்கும் என்பதால் மற்ற நாட்களிலேயே முடி வெட்டுவார் ஐயா! கடைக்காரரும் சேரின் மேல் ஒரு பலகையை போட்டு, உட்கார வைப்பார். "தம்பிக்கு ஸ்டெப் கட்டிங்கா?!" என கேட்பார். "அதெல்லாம் ஒன்னும் வேணாம்! மிலிட்டரி கட், ஒட்ட வெட்டி விட்றுங்க! ஒரு வாரத்துல வளர்ந்துரும்!" என விறைப்பு காட்டுவார் ஐயா! நம்மிடம் கருத்து கேட்புக்கு வேலையே இல்லை! பழைய சர்பத் பாட்டிலில் இரும்பு  பைப்பை சொறுகி சர்ரென்று தண்ணீர் பீச்சி, அந்த கால மிசின் கட்டிங் கத்திரி ஒன்றை எடுப்பார் கடைக்காரர். அது கத்திரி மாதிரியும் இல்லாமல், இப்போது உள்ள மிசின் போலவும் இல்லாமல் விநோதமாக இருக்கும். வெட்டும் போது முடியை பிடித்து இழுக்க வேறு செய்யும்.

முடி கையிலே சிக்காத அளவுக்கு வந்த போதும் ஐயாவுக்கு திருப்தி வராது. "இன்னும் கொறைச்சிருங்கண்ணே... பயபுள்ள ரொம்ப ஆடுவான், வேர்த்து கொட்டும்" என்பார். கடைக்காரர் இன்னொரு ரவுண்டு வருவார்! நானும் தூங்கி முழித்திருப்பேன்! கண்ணாடியை பார்த்த உடனே கடைக்காரரை முறைப்பேன். அவரோ என்னை பரிதாபமாய் பார்ப்பார் "எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிருச்சே?!" என!

இதுக்கு மொட்டையே போட்டிருக்கலாமே என தோண்றும். சொல்ல தைரியம் இருக்காது. "தம்பி... நீ பேப்பர் வாங்கிட்டு வீட்டுக்கு போய் குளி, ஐயா முடி வெட்டிட்டு வந்துர்றேன்" என்பார் ஐயா! மறு பேச்சு பேசாமல் வீடு வந்து விடுவேன்! இது எல்லாமே 6:15 மணிக்குள் முடிந்திருக்கும்!! அம்மா "டேய் வீட்டுக்குள்ள வராத... வீடெல்லாம் முடியாகிரும்! கொல்லை பக்கம் வந்து நேரா பாத்ரமூக்குள்ள போயிரு என்பார் அம்மா. 6:30க்கெல்லாம் குளித்து விட்டு பள்ளி சென்றால், அங்கு சுகமாய் தூக்கம் வருவதோடு, "கரிச்சான் மண்டை" என்று பெயரும் கிடைக்கும்!!

இப்போதெல்லாம் சலூன் கடைக்காரர் கடை திறக்கவே 7:00 மணி ஆகிறது! நம் பிள்ளைகளும் கடையில் ஏசி இல்லையென்றால் முகத்தை சுழிக்கிறார்கள். கேட்டலாக் பார்த்து முடி வெட்டும் காலமாகி விட்டது!

Thursday 4 February 2016

அன்பால் பகை வென்ற ஏழைப்பங்காளர்...

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு 1963 ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் உவரி துரைப் பாண்டியன் என்பவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க அன்றைய முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவரகள் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். 

குக்கிராமங்களில் நடந்தே சென்று ஓட்டு கேட்டார்.

ஊரில் உள்ளவர்களின் பெயரை சொல்லி அழைத்து நம்ம ஆள் நிற்கிறார், பார்த்துக்குங்க என்றுதான் சொல்வார். ஓட்டுப்போடுங்கள் என்று சொல்வதில்லை. அப்படி தான் ஒருமுறை மிகவும் குக்கிராமமான சங்கனாங்குளத்தில், காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட வாலிபால் மாடசாமி என்பவரை காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர் சேரச் சொல்லி அழைத்தார். மாடசாமி அவர்களோ பெருந்தலைவரை தனது வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்ல, காமராஜரும் தட்டாமல் அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டார்.

யாரையும் பகைவர் என்று எண்ணாதவர்தான் காமராஜர். யாரிடமும் அன்பாக பேசுவார். போட்டி வேட்பாளரின் வேண்டுகோளை ஏற்று அவர் வீட்டில் சாப்பிட அந்த கிராமத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பெருந்தலைவர் நடந்தே வந்தார். அன்பால் பகை வென்ற ஏழைப்பங்காளர் பெருந்தலைவர்.

Wednesday 3 February 2016

உலகுக்கே வழி காட்டிய பெருந்தலைவர்

நாட்டில் ஆயிரம் தலைவர்கள் பிறக்கலாம். ஆனால் காமராஜரை போல் ஒரு பெருந்தலைவர் பிறக்க முடியுமா?.

அந்த பெருந்தலைவர் 1903–ம் ஆண்டு ஜூலை மாதம் 15–ந் தேதி, விருது நகர் என்று அழைக்கப்படும் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி நாடார்– சிவகாமி அம்மையாருக்கு புதல்வனாக பிறந்தார். 16 வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து அரசியல் பிரவேசம் கண்டார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்–அமைச்சராக பணியாற்றினார்.

காமராஜர் நினைத்திருந்தால் நேருக்கு பிறகு நாட்டின் 2–வது பிரமராக பதவி ஏற்று இருக்க முடியும். ஆனால் பதவி சுகத்துக்கு மயங்காத அவர், நேருக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். இதனால் மன்னருக்கு முடிசூட்டிய ‘கிங்மேங்கர்’ என்ற கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது. கட்சி பணியாற்ற முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து காங்கிரசில் சிலரும் பதவி விலக நேர்ந்தது. இது ‘காமராஜர் திட்டம்’ என்றும், உலக அரங்கில் ‘கே–பிளான்’ என்றும் இன்னமும் புகழ்ந்து பேசப்படுகிறது.

இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் 1957–ம் ஆண்டிலேயே கொண்டு வந்து முதன் முறையாக உலகுக்கே வழிகாட்டினார், கல்வி கண் திறந்த காமராஜர். அன்றே அவர் கொண்டு வந்த இலவச கல்வி, மதிய உணவு திட்டம் தான் இன்று நமது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. எத்தனை தொலைநோக்கு பார்வை இருந்திருந்தால், இதையெல்லாம் அவரால் செய்திருக்க முடியும். நினைத்து பார்க்கவே மெய் கூசுகிறது.

நிஜவாழ்க்கையில் என்றுமே நடிக்க தெரியாத அவருக்கு நாடகத்தில் கூட நடிக்க தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்தும் விட்டது. காமராஜர் சிறுவயதில் ‘மார்கண்டேயன்’ நாடகத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு மார்க்கண்டேயனை காப்பாற்றும் சிவபெருமான் வேடம். பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்து விடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் விதித்திருந்த கட்டளை. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயன் சிவபெருமான் கால்களை பிடித்து கொண்டு இறைவா.. என்னை காப்பாற்று என்று மன்றாடுகிறான்... அப்போது எமனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்கவில்லை. இது நாடகம் என்பதையும், தான் சிவபெருமான் வேடம் போட்டிருப்பதையும் காமராஜர் மெய் மறந்து விட்டார்.

‘‘இந்த பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறயே’’ என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கி விட்டார். கூட்டம் இந்த காட்சியை கண்டு ஆரவாரம் செய்தது. கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராஜரின் உள்ளத்தை, அப்போதே அனைவரும் பாராட்டினர். உயிர் மூச்சு இருக்கும் வரை, இது தான் அவரது போராட்ட குணமாக அமைந்து விட்டது.

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்காக சிறைக்கு செல்ல வேண்டி இருந்தால், ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொள்கிறார்கள். ஆனால் காமராஜர் நாட்டு நன்மைக்காக குடும்ப பாச உணர்வுகளை விலக்கி வைத்தவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதை அறிந்த காமராஜரின் பாட்டி பார்வதியம்மாள் படுத்த படுக்கையாகி விட்டார். காமராஜர் வந்து பார்த்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. காமராஜரும் பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்.

இதனால் காமராஜரை பரோலில் கொண்டு வர அவரது அரசியல் குருநாதர் சத்திய மூர்த்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டியின் உடல் நிலை பற்றி கூறி பரோலில் வெளிவருமாறு அவரை சிறையில் சந்தித்த தாய்மாமா கேட்டுக் கொண்டார். ஆனால் தண்டனை முடியும் வரை சிறையை விட்டு வெளியே வர மாட்டேன் என்று நெஞ்சுரத்துடன் கூறி விட்டார்.

இப்படிபட்ட பெருந்தலைவரை இனி எங்கு காண முடியும்?. தனது வாழ்நாளில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களுக்காகவும் போராடி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ 8½ ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். அப்போது சிறைக் கொடுமைகளை அவரே சொல்லியிருக்கிறார். சிறையில் வெப்பத்தின் கொடுமை தாங்காமல் நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் நின்றதை அவர் குறிப்பிடும்போது நமது கண்கள் குளமாகிவிடுகின்றன. இதேபோல் ஒரு பெருந்தலைவர் இனி பிறப்பாரா?.

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்றால் வாழ்நாடு முழுவதும் போதாது. இது தான் பெருந்தலைவர் பிறப்பின் பெருமை. எளிமை, நியாயம், நேர்மை, வீரம், விவேகம் என்று அவரது குணநலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னலம் அற்றவர். இத்தனை நற்குணங்களை கொண்ட பெருந்தலைவர் படித்தது 6–வது வகுப்பு மட்டுமே. ஆனால் அவரை பற்றி இன்று உலகமே படித்து கொண்டு இருக்கிறது.

நன்றி: தினத்தந்தி
ஜூலை 25, 2015 இதழில்