Wednesday 24 February 2016

தித்திக்கும் பானம் பொவன்டோ - நூற்றாண்டு கால வெற்றிப் பயணம்!

பிவிஎஸ்கே பழனியப்பன் நாடார் விருதுநகரைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை காபி மற்றும் ஏலக்காய் வியாபாரம் செய்துவந்தார். அவர் ஒரு முறை குளிர்பானம் ஒன்றினைக் குடித்த போது அதன் ருசி மிகவும் பிடித்துவிட்டது. அதே போல ருசியுடைய பானத்தை நாமும் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 23 வயதான பழனியப்பன் தந்தையின் வியாபாரத்தை அப்படியே தொடர விரும்பாமல், புதிதாக ஏதாவது செய்ய ஆர்வமுடன் இருந்தார். இருவரும் குளிர்பானம் தயாரிப்பிற்கான நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தார்கள். அப்போது அவர்களால் துவக்கப்பட்ட நிறுவனம் தான் காளிமார்க். 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது நூற்றாண்டு காலமாக நிலைத்து, எளிய மக்கள் பருகி மகிழும் சுவையான பானங்களைத் தயாரித்து வழங்குகிறது. அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டின் முக்கியமான குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனமாக காளிமார்க் உயர்ந்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு , காளிமார்க் நிறுவனரின் கொள்ளுப் பேரன்கள் காலத்துக்கேற்ப நிறைய புதிய மாற்றங்களைச் செய்தனர். குடும்பத் தொழில் போன்று சிறு நிறுவனமாக இருந்த காளிமார்க்கை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக உயர்த்தியோடு இன்றி, மற்ற பெரிய குளிர்பான நிறுவனங்களுக்கும் போட்டியாக வளர்ந்து விட்டார்கள். இன்று தமிழ்நாட்டு வணிகச் சந்தையில் காளிமார்க் நிறுவன தயாரிப்புக்கள் 14 சதவிகிதம் பங்குகளை பெற்றுள்ளன.  இந்த வெற்றி மெதுவாகத் தான் நிகழ்ந்தது. ஆனால் நிதானமானதாக சீரான வளர்ச்சியுடன் கூடிய வெற்றி அது.

‘நாங்கள் நூறு வருட காலமாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். ஆனால் 2010-ம் வருடம் தான் எங்களுக்கான ஒரு தனி இடம் கிடைத்தது. அதுவரை காளிமார்க் மற்றும் காளி ஏரியேட்டர் வாட்டர் வொர்க்ஸ் என்ற எங்களுடைய இரண்டு நிறுவனங்களும் சிறு தொழிலாகத் தான் இருந்து வந்தது’ என்றார் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த நிறுவன இயக்குநர் ஜெயசந்திரன் தனுஷ்கோடி. காளிமார்க்கின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் 1959 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களுடைய தயாரிப்பான பொவண்டோ. அறிமுகப்படுத்தப்பட்ட விரைவிலேயே பொவன்டோ குளிர்பானம் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் விற்பனையானது. பொவன்டோவைத் தொடர்ந்து டிரியோ, சோலோ, கிளப் சோடா, பன்னீர் சோடா என பல்வேறு குளிர்பானங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தற்போது பன்னீர் சோடாவின் மற்றொரு வடிவமான ‘விப்ரோ’ எனும் பானத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று காளிமார்க் தயாரிப்புக்கள் நாளொன்றுக்கு 6000 பாட்டில்கள் விற்பனையாகி, 170 கோடி வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்றைய இளம் பழனியப்பனின் கனவு. அது அவரது திறமையாலும் உழைப்பாலும் நிஜமானது உண்மை. ‘என்னுடைய தாத்தா (பழனியப்பன் நாடார்) மற்றும் பாட்டி உண்ணாமலை அம்மாள் இருவரும்  கடை கடையாக ஏறி, தங்களிடம் இருந்த ஒரு சிறிய கையால் இயக்கப்படும் இயந்திரத்தைக் (நீரில் எரிவாயு புகுத்தி, அந்த அழுத்தம் கொடுக்கும்) எடுத்துக் கொண்டு அந்த பானத்தைத் தயாரித்து தருவார்கள். அது மிக விரைவில் அனைவருக்கும் பிடித்த பானமாகிவிட்டது’ என்றார் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கேபிஆர் சக்திவேல். இவர் தான் அக்குடும்பத்தின் மூத்த அங்கத்தினர். அப்படி தயாரித்த அந்த பானத்தின் தேவையும் வெற்றியையும் பார்த்த பழனியப்பன் தன்னுடைய முதல் தொழிற்சாலையை விருதுநகரில் 1916 ஆண்டு நிறுவினார்.

‘கலர்’ அல்லது ‘சோடா’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த குளிர்பானம் தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்றன. அதன்பின் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், சென்னை மற்றும் காரைக்குடியில் காளிமார்க் தன்னுடைய கிளைகளை தொடங்கியது. இதன் வளர்ச்சி ஒவ்வொரு ஆறு வருடத்திற்கும் 25 சதவிகிதம் என நிதானமாக பயணமாகத் தான் இருந்தது’ என்றார் ஜெயந்திரன், நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் கழித்து தான் தங்களுடைய தயாரிப்பான பொவன்டோவால் தான் லாபம் அடைந்தது. ஆம் பொவண்டோ காளிமார்க்கின் ஆணிவேர். 95 சதவிகித வருமானத்தை பொவன்டோவின் விற்பனையால் தான் நிகழ்ந்தது.

தற்போது காளிமார்க் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், 2020 வருட இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர திட்டமிட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு பின் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்கள் காளிமார்க்குக்குப் பெரும் சவாலாக இருந்த போதும் அவற்றை எதிர்த்து வெற்றி நடைபோடுகிறது அவர்களது தரமான தயாரிப்பான பொவண்டோ. ‘போட்டி இல்லையெனில் வளர்ச்சி ஏது, தவிர அந்தக் குளிர்பானங்கள் இல்லையெனில் சோடா என்பது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர பானம் என்ற எண்ணத்தை மாற்றியிருக்க முடிந்திருக்காது’ என்றார் ஜெயச்சந்திரன்.

(கட்டுரை ஆசிரியர்  ஜோனாதன் அனந்தா, தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ். தமிழாக்கம்  - உமா ஷக்தி)

No comments: