Wednesday 3 February 2016

உலகுக்கே வழி காட்டிய பெருந்தலைவர்

நாட்டில் ஆயிரம் தலைவர்கள் பிறக்கலாம். ஆனால் காமராஜரை போல் ஒரு பெருந்தலைவர் பிறக்க முடியுமா?.

அந்த பெருந்தலைவர் 1903–ம் ஆண்டு ஜூலை மாதம் 15–ந் தேதி, விருது நகர் என்று அழைக்கப்படும் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி நாடார்– சிவகாமி அம்மையாருக்கு புதல்வனாக பிறந்தார். 16 வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து அரசியல் பிரவேசம் கண்டார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்–அமைச்சராக பணியாற்றினார்.

காமராஜர் நினைத்திருந்தால் நேருக்கு பிறகு நாட்டின் 2–வது பிரமராக பதவி ஏற்று இருக்க முடியும். ஆனால் பதவி சுகத்துக்கு மயங்காத அவர், நேருக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். இதனால் மன்னருக்கு முடிசூட்டிய ‘கிங்மேங்கர்’ என்ற கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது. கட்சி பணியாற்ற முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து காங்கிரசில் சிலரும் பதவி விலக நேர்ந்தது. இது ‘காமராஜர் திட்டம்’ என்றும், உலக அரங்கில் ‘கே–பிளான்’ என்றும் இன்னமும் புகழ்ந்து பேசப்படுகிறது.

இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் 1957–ம் ஆண்டிலேயே கொண்டு வந்து முதன் முறையாக உலகுக்கே வழிகாட்டினார், கல்வி கண் திறந்த காமராஜர். அன்றே அவர் கொண்டு வந்த இலவச கல்வி, மதிய உணவு திட்டம் தான் இன்று நமது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. எத்தனை தொலைநோக்கு பார்வை இருந்திருந்தால், இதையெல்லாம் அவரால் செய்திருக்க முடியும். நினைத்து பார்க்கவே மெய் கூசுகிறது.

நிஜவாழ்க்கையில் என்றுமே நடிக்க தெரியாத அவருக்கு நாடகத்தில் கூட நடிக்க தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்தும் விட்டது. காமராஜர் சிறுவயதில் ‘மார்கண்டேயன்’ நாடகத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு மார்க்கண்டேயனை காப்பாற்றும் சிவபெருமான் வேடம். பதினாறு வயது ஆனதும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடிந்து விடும் என்பது அவனது பெற்றோருக்கு ஆண்டவன் விதித்திருந்த கட்டளை. மார்க்கண்டேயன் உயிரை பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயன் சிவபெருமான் கால்களை பிடித்து கொண்டு இறைவா.. என்னை காப்பாற்று என்று மன்றாடுகிறான்... அப்போது எமனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவபெருமான் எவ்வளவோ சொல்லியும் எமன் கேட்கவில்லை. இது நாடகம் என்பதையும், தான் சிவபெருமான் வேடம் போட்டிருப்பதையும் காமராஜர் மெய் மறந்து விட்டார்.

‘‘இந்த பையனை ஒண்ணும் செய்யாதேன்னு சொல்றேன், கேட்க மாட்டேங்கிறயே’’ என்றபடி எமனாக நடித்தவரை மேடையிலேயே அடித்து நொறுக்கி விட்டார். கூட்டம் இந்த காட்சியை கண்டு ஆரவாரம் செய்தது. கொடுமையை கண்டு கொதித்து எழும் காமராஜரின் உள்ளத்தை, அப்போதே அனைவரும் பாராட்டினர். உயிர் மூச்சு இருக்கும் வரை, இது தான் அவரது போராட்ட குணமாக அமைந்து விட்டது.

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் தவறுக்காக சிறைக்கு செல்ல வேண்டி இருந்தால், ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொள்கிறார்கள். ஆனால் காமராஜர் நாட்டு நன்மைக்காக குடும்ப பாச உணர்வுகளை விலக்கி வைத்தவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதை அறிந்த காமராஜரின் பாட்டி பார்வதியம்மாள் படுத்த படுக்கையாகி விட்டார். காமராஜர் வந்து பார்த்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. காமராஜரும் பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்.

இதனால் காமராஜரை பரோலில் கொண்டு வர அவரது அரசியல் குருநாதர் சத்திய மூர்த்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாட்டியின் உடல் நிலை பற்றி கூறி பரோலில் வெளிவருமாறு அவரை சிறையில் சந்தித்த தாய்மாமா கேட்டுக் கொண்டார். ஆனால் தண்டனை முடியும் வரை சிறையை விட்டு வெளியே வர மாட்டேன் என்று நெஞ்சுரத்துடன் கூறி விட்டார்.

இப்படிபட்ட பெருந்தலைவரை இனி எங்கு காண முடியும்?. தனது வாழ்நாளில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களுக்காகவும் போராடி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ 8½ ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். அப்போது சிறைக் கொடுமைகளை அவரே சொல்லியிருக்கிறார். சிறையில் வெப்பத்தின் கொடுமை தாங்காமல் நாளெல்லாம் தண்ணீர் தொட்டியில் நின்றதை அவர் குறிப்பிடும்போது நமது கண்கள் குளமாகிவிடுகின்றன. இதேபோல் ஒரு பெருந்தலைவர் இனி பிறப்பாரா?.

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்றால் வாழ்நாடு முழுவதும் போதாது. இது தான் பெருந்தலைவர் பிறப்பின் பெருமை. எளிமை, நியாயம், நேர்மை, வீரம், விவேகம் என்று அவரது குணநலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னலம் அற்றவர். இத்தனை நற்குணங்களை கொண்ட பெருந்தலைவர் படித்தது 6–வது வகுப்பு மட்டுமே. ஆனால் அவரை பற்றி இன்று உலகமே படித்து கொண்டு இருக்கிறது.

நன்றி: தினத்தந்தி
ஜூலை 25, 2015 இதழில்

No comments: