Friday 31 October 2014

ஏழை பங்காளன் எம் தலைவன் எளிமை முதல்வன்..!


1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன. சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.

தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.

தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். "கிருஷ்ணன் ஏறிட்டானா?" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.

தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.

"டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?" என்று அதிர்ந்து போய் கேட்டார். "ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல.." என்றேன். "என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ.." என்று சத்தம் போட்டார்.

எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு  வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.

அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். "அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.

இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, "என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.

கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.

நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, "டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி.." என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா.." என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.

நான் ஆடிப் போனேன். "ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா.." என்று பதறினேன். "டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே.." என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.

நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.

அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி

(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)

Tuesday 28 October 2014

தமிழர்களின் வானவியல் சி்ந்தனைகள்

தமிழர்களின் வானவியல் சி்ந்தனைகள்

தற்போது எந்த கிரகம் எங்கேயுள்ளது என்று பார்க்கவேண்டுமானால் கூகிளின் ஸ்கை மேப் துணைக்கொண்டு எங்கே இந்த கிரகம் உள்ளது என்று அறியலாம்.

ஆனால் இதே நேரத்தில் பஞ்சாங்கம் ஆட்களை அழைத்து கேட்டால் முழுமையான தகவல்களை சொல்வார்கள். எப்படி சாத்தியம் இது ? எதையும் காண முடியாது. ஆனால் அவர்கள் கூறும் தகவல்கள் மிகச்சரியாக இருக்கும்

ஆனால் செயற்கைகொள் எல்லாம் வராத ஆதிக்காலங்களில் மனிதன் எதைக்கொண்டு கணக்கினை அளந்தான் என்று பார்த்தால் தன் கணக்கால் வகுத்திருக்கிறான்.

பலங்காலத்தில் நேரத்தினை கணிக்கும் முறையினை வானத்தைக் கொண்டே கணித்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் கணித்தார்கள் என்பதற்கு என்ற தகவலை தேடி பயணதித்தபோது இன்னமும் நிறைய தகவல்கள் கிடைத்தது.

சென்னைப் புத்தக கண்காட்சியில்  வாங்கி புத்தகத்தில் உள்ள சில தகவல்கள்

எல்லாம் சங்ககாலங்களில் உள்ள இலக்கியங்களில் உள்ளன. இங்கே இன்னொரு உண்மையான தகவல்களை சொல்லியாகவேண்டும். அவையெல்லாம் என்னவெனில் இன்றைய வானிலை ஆராய்ச்சிகளுக்கு முன்பாகவே வெறும் கண்களாலேயே இப்போது இந்த கிரகம் எங்கே உள்ளது என்பதை கணிக்கும் திறன் நம்மாட்களிடம் உள்ளது. அதற்கென தனி கணித சூத்திரங்களே  வைத்திருக்கிறார்கள் நம்மாட்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், திருவாசகம் உள்ளிட்டவைகள் தன்னிடத்தே அக்கால தமிழர்களின் வான்வெளி அறிவையும் வெளியிட்டுள்ளனர். பொன்னியில் செல்வனில் கூட கல்கி அவர்கள் தூமகேது என்ற நட்சத்திரம் பற்றி கூறியிருப்பார்.

அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார்.

எண்ணிறந்த கோளங்களை உள்ளடக்கியது பேரண்டம் என்ற பொருளின் அடிப்படையில் மேற்கண்ட வரிகள் உள்ளன என்பதை காணவேண்டியுள்ளது.

20ம் நூற்றாண்டில்  எட்வின் ஹப்பிள் இந்த பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது,,  பலகோடி அண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்றை விட்டு ஒன்றை விளக்கமுறுகின்றன என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை ஒப்பிடும் வகையில் திருவாதவூராரின் திருவண்டப்பகுதியின் மூன்றாம், நான்காம் வரிகள்

ஒன்றனுக்கொன்று நின்றழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன
என்று கூறுகிறார்.
அதாவது விரவிச்செல்லும் அண்டங்கள் அவரது பார்வையில் சூரியனது ஒளிக்கதிர் இருண்ட அறையில் செல்லும்போது அவற்றில் அலைந்து திரியும் தூசுகள் போல் எண்ணிக்கையில்  பலவாக இருப்பது போல் தெரிகிறதாம் என்று கூறுகிறார்.

நமது வான்வெ ளி ஆராய்ச்சி பற்றி நமது இலக்கியங்களில் நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நமது வான் வெளியியல் பற்றி தகவல்களை

சிலப்பதிகாரம்நெடுநெல்வாடைதிருவாசகம்,புறநானுறுசீவகசிந்தாமணிசூளாமணிபரிபாடல்மலைபடுகடாம்சிறுபாணாற்றுப்படைபாலகாண்டம்கம்பராமாயணம்குறுந்தொகைகலித்தொகைமணிமேகலைதிருக்குறள்பட்டினபாலைபொருநராற்றுப்படைதொல்காப்பியம்

ஆகியவற்றில் வெளிரவந்துள்ளன.

எனவே இவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்தால் இன்னமும் நிறைய தகவல்கள் கிடைக்கும்

நன்றி!: 

தமிழிரின் வானவியல் சிந்தனைகள் : ஆசிரியர் ஐயம் பெருமாள். உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பதிப்பகம்

Monday 27 October 2014

பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி… அறிஞர் பெருமக்கள்


பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி… அறிஞர் பெருமக்கள்


திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு.
“மீண்டும் நான் பாரத நாட்டுக்கு வரும்போது சென்னைக்கு விஜயம் செய்யும்போது தாங்களே முதலமைச்சராக இருப்பீர்கள்.”
-இங்கிலாந்து நாட்டு ராணியின் கணவர் எடின்பரோ


“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”
காஞ்சி சங்கராச்சாரியார்
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?”
_பெரியார்.


“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”
_
இந்திரா காந்தி

சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்.
_ சுப்பிரமணிய அய்யர்

காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி
_ எம்.ஜி.ஆர்.


தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்.
_ கருணாநிதி


பள்ளிக் குழந்தைகளுக்குப பகல் உணவு அளிக்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமை. அதை இங்கேதான் (சென்னையில்) காணுகின்றேன். இதன் மூலம் ஏழைக்குழந்தைகளின் தற்குறித்தனம் அற்றுப்போகும் என்பது என்னுடைய நம்பிக்கை.
_ பிரதமர் ஜவஹர்லால் நேரு


தமிழ்நாட்டின் கிராமங்கள் முன்பு பார்த்ததுபோல் இல்லை. அவர்கள் இல்லங்களில் மின்சார ஒளியும், முகத்தில் அறிவு ஒளியும் வீசுகின்றன. குறிப்பாக பெண்கள் கல்வியில் சென்னை அதி உன்னதமாக வளர்ந்திருக்கிறது.
_பிரதமர் ஜவஹர்லால் நேரு


கல்வி, மின்சாரம் போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டியவைகளாகும்.
_குடியரசுத் தலைவர் திரு. ராஜேந்திரபிரசாத்


சமுதாய நலத்திட்டத்திற்கான மத்திய அரசின் மானியத்தப் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே (காமராஜர் அப்போது முதல்வர்) சென்னைதான்.
_குல்சாரிலால் நந்தா


பிற எல்லா மாநிலங்களையும் விட மின்சாரத் திட்டங்களை அதிக அளவில் (உற்பத்தி செய்து) உபயோகித்திருப்பது சென்னை மாநிலம் (காமராஜர் அப்போது முதல்வர்) ஒன்றே
_எஸ்.கே.பட்டீல்


அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும்பணியிலும் ஊழல்கள் குறைந்து, திறமை அதிகம் காணப்படும் ஒரே மாநிலம் சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்).
_பிரதமர் ஜவஹர்லால் நேருஜி


உணவு உற்பத்தி துறையில் சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்) தன் நிறைவு பெற்று விட்டது “இது என்றுமில்லாத இமாலயச் சாதனை'’
_ எம்.வி.கிருஷ்ணப்பா


விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதிலும், கூட்டுறவு இயக்க வளர்ச்சியிலும் முன்னணியில் நிற்பது சென்னை (காமராஜர் அப்போது முதல்வர்).
_மொரார்ஜி தேசாய்
காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
_மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
காமராஜ் அரசு மக்களைப் புரிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறது. இங்குள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது நல்ல நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மந்திரி சபையில் தகராறு கிடையாது. அரசியல் குமுறலுக்கு இடமில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அமைதியாகவும், திறமையாகவும் ஆட்சி நடக்கிறது.
_மத்திய அமைச்சர் ஏ.எம்.தாமஸ் சாத்தூரில் பேசியது)

Sunday 26 October 2014

கம்பீர வரலாறு: காங்கயம் காளைகள்

கம்பீர வரலாறு: காங்கயம் காளைகள்



வளைந்து நிமிர்ந்த கூரான கொம்புகள், முதுகுக்கு மேல் அடங்காமல் ததும்பும் திமில், நடையில் ராஜ தோரணை, பார்வையில் பற்றிக் கொள்ளும் நெருப்பு, நாசித் துவாரங்களில் புயலெனக் கிளம்பும் மூச்சுக் காற்று... இந்த ஆடையாளங்களோடு ஒரு காளையைப் பார்க்கிறீர்கள் என்றால்... கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம், இது காங்கயம் காளை.
“இந்தியாவில் மொத்தம் நாற்பத்து ரெண்டு வகையான மாடுகளின் இனங்கள் இருக்கின்றன’ என்கிறார் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி.
“தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் காங்கயம் இன மாடுகள், சோழ மண்டலம் மற்றும் நெல்லைச் சீமையில் உம்பளச்சேரி இனம், அந்தியூர்ப் பகுதியில் பங்கூர் இனம், தேனியில் மலை மாடு... போன்ற வகைகள் இருக்கின்றன. என் தாத்தா ராவ்பகதூர் நல்லத்தம்பி மன்றாடியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக அமிர்த மகால் என்ற இன மாட்டினை கொண்டு காங்கயம் காளைகளை அழகுபடுத்தினார். ஆனால், காங்கயம் கலப்பினம் அல்ல’ என்கிறார் இவர்!
“கடுமையான வெய்யிலில் தொடர்ந்து பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வேலை செய்யும் திறன் கொண்டவை காங்கயம் காளைகள். நான்கு டன்கள் வரைக்கும் எடைகளை இழுத்துச் செல்லும் திறனும், தெம்பும் இதன் வீர அடையாளங்கள். கழுத்தளவு தண்ணீரில் கூட இவை பாரங்களை அனாயாசமாக இழுத்துச் செல்வது ஆச்சர்யமான அதே நேரத்தில் அழகான காட்சி. எல்லாவற்றையும்விட எப்பேர்பட்ட வறட்சியையும் தாங்கும் சக்தி கொண்ட காங்கயம் இனம் மாடுகள், பஞ்சக் காலத்தில் பனையோலைகளைத் தின்றுகூட தன்னைத் தக்க வைத்துக் கொள்வதில் கில்லாடிகள். இவை இயல்பிலேயே அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. அதனால் அரிதிலும் அரிது, காங்கயம் காளைகள் நோய்வாய்ப்படுதல் அரிது!’ என்கிற கார்த்திகேய சிவசேனாபதி, “இந்தக் காங்கயம் இனக் காளைகளின் விந்தினை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று கலப்பினங்களை உற்பத்தி செய்வது தேசிய பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002ன்படி குற்றம்’ என்கிறார். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் நாட்டுக்குக் கொண்டு சென்று கலப்பின உற்பத்தி மாடுகளை உருவாக்கி இருக்கின்றனர். அதற்கு பிரம்மன் இன மாடுகள் என்று பெயராம்!
“மாடுகளில் இனக் கலப்பு செய்வதை சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் வரவேற்பதில்லை. இனக்கலப்பு செய்வதன் மூலம் பிறக்கும் கன்று தன் வீரியத் தன்மையை இழந்துவருகிறது. ஓர் இனம் உருவான, நிலத்தின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப அந்த இனத்தின் ஜீன் கூறுகள் அமைந்திருக்கும். அதை மாற்ற முயல்வது அறிவீனம் மட்டுமல்ல, இயற்கைக்கு எதிரானதும்கூட. 

உழவுக்கும், கிணற்றில் நீர் இறைக்கவும், வண்டிகளை ஓட்டவும் காங்கேயம் காளைகளையே விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். உழவு செய்ய டிராக்டர், தண்ணீர் இறைக்க பம்புசெட், போக்குவரத்துக்கு வாகன வசதி ஏற்பட்டு விட்டதால் காங்கயம் இன மாடுகளின் பயன்பாடு குறைந்தது. காங்கயம் மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி கூறியதாவது: 

40 ஆண்டுகளுக்கு முன்பு சிறு விவசாயிகளிடம் குறைந்தது 2 காங்கயம் மாடுகள், பெருவிவசாயிகளிடம் 100 காங்கயம் மாடுகள் வரை இருக்கும். காங்கயம் மாடுகளின் எண்ணிக்கையை வைத்து விவசாயிகளின் அந்தஸ்து மதிப்பிடப்படும். தற்போது கிராமத்தில் 1 அல்லது 2 காங்கயம் மாடுகள் இருந்தால் அதுவே அதிசயமாக உள்ளது.  விவசாயிகள் தற்போது பால் கறவைக்காக மட்டுமே மாடுகளை வளர்க்கின்றனர். காங்கயம் பசு மாடுகள் சராசரியாக 2 லிட்டர் மட்டுமே பால் கறக்கும் என்பதால் கறவைக்காக இந்த மாடுகளை வளர்ப்பதில்லை. 1990 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் எண்ணிக்கையில் இருந்த காங்கயம் இன மாடுகள் 2000 ஆண்டு 5 லட்சமாகக் குறைந்து தற்போது சுமார் இரண்டரை லட்சத்துக்குள் இருப்பதாகக் கூறுகின்றன கணக்கெடுப்பு. 

அழிவின் விழிம்பில்

**********************************
காங்கயம் காளைகள் கம்பீரத்தின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காட்டெருமையை வீழ்த்தும் திறன் உள்ளதாக காங்கயம் காளைகள் கருதப்படுகிறது. இந்த காளைகள் மாநில அளவில் சில ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இவை அதிகம் பால் தராது. எனவே, பால் வியாபார ரீதியாக யாரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்பவில்லை. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. இவை விரும்பிச் சாப்பிடும் கொலுக்கட்டை புல், செப்பு நெருஞ்சிங்காய், வேலங்காய் போன்றவை அழிந்து வருகின்றன. எனவே, காங்கயம் இன மாடுகளின் எண்ணிக்கையும் குறைகின்றன. இவை மாற வேண்டும். இந்த இனம் அழிவதைத் தடுக்கு 2005இல் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், இம்மாடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. ஆர்வமுள்ள ஏழைகளிடம் இந்த இனத்தின் கன்றுகள் கொடுக்கப்பட்டு எட்டு அல்லது பத்து மாதம் அவர்கள் வளர்த்துக் கொடுத்தால் அதனை விற்று வளர்த்தவர்களுக்குப் பாதி தொகை அளிக்கிறோம். இம்மாடுகளின் மேய்ச்சல் நிலமான கொறங்காடுகளை பட்டா நிலமாக்க அரசு ஆலோசித்து வருகிறது. அவற்றை மேய்ச்சல் நிலமாகவே விட்டுவிட அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். காங்கயம் மாடுகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறது’ என்கிறார் கார்த்திகேயசிவ சேனாபதி. முரட்டு திமிலுடன் வலம் வரும் இந்த காளைகளை பராமரிப்பது சவாலானது. தரமான உணவு இருந்தால் மட்டுமே இந்த காளைகளை நன்றாக வளர்க்க முடியும். சீறி பாய்வதில் வல்லமை கொண்ட காங்கயம் காளைகள் ஜல்லிகட்டுகளும், ரேக்ளா ரேஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 

பாரம்பரிய பெருமை மிக்க காங்கயம் இனத்தை பெருக்க சுமார் 5 லட்சம் உறை விந்து குப்பிகள் தயாராக இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கும் குறைவான விவசாயிகளே காங்கயம் காளைக்கான சினை ஊசி போட முன் வந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் காங்கயம் இனம் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.
வள்ளுவர் செல்வத்தைக் குறிப்பிட குறள்களில் “மாடு’ என்றுதான் குறிப்பிடுகிறார். மாடு என்றால் செல்வம், அதுவும் காங்கயம் மாடுகள் நம் பராம்பரிய பெருஞ்செல்வம்! 

நன்றி:தினமலர், தினகரன், தமிழ் முரசு

Saturday 25 October 2014

காமராஜர் காலைமுதல் மாலை வரை…


காமராஜர் காலைமுதல் மாலை வரை…

சின்னஞ்சிறு வயதில் பெருந்தலைவருடன் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் ஜவகர், மோகன் ஆகியோர் கூறியதாவது:_
காலையில் தன்னை எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் என்று உதவியாளரிடம் சொல்லி விட்டுதான் காமராஜர் படுக்கைக்குச் செல்வார். படுக்கை அறையை உட்புறமாகப் பூட்டிக் கொள்வதில்லை. அவரது உதவியாளர் அந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவார்.
படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு மிகவும் விருப்பம். இரவு 12 மணிக்கும் படுக்கச் சென்றாலும் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவது அவர் வழக்கம். (ரயில் பிரயாணத்தின் போதும் இரவு நெடு நேரம் படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவர் வழக்க மாம்.)
தூங்கும் போது குறட்டைச் சத்தம் பலமாக இருக்குமாம்.
காமராஜர் எழுப்பச் சொன்ன நேர த்தில் உதவியாளர் தாழ்ப் பாளைத் திறந்து கொண்டு அவர் அருகே சென்று அவரைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும்.
உடனே எழுந்து படுக்கையில் சம்மனமிட்டு அமர்ந்து கொள்வார். உதவியாளர் கொண்டு வரும் பில்டர் காபியைக் குடிப்பார். காலைச் செய்தித் தாள்கள் முழுவதையும் படுக்கையில் அமர்ந்தபடி படித்து முடித்து விடுவார்.
அதன்பின் கண்ணாடி முன் அமர்ந்து தானே முகச்சவரம் செய்து கொள்வார். இன்னொரு காபி அருந்தி விட்டு எதையாவது கொஞ்ச நேரம் படிப்பார். அப்போது அவரது நேர்முக உதவியாளர் அவர் அறைக்குச் சென்று அவரது அன்றைய அலுவல்கள் என்னென்ன என்பதை
நினைவூட்டுவார்.காலை 8.30க்கு மேல் 9 மணிக்குள் மாடியிலிருந்து இறங்கி கீழ்த்தளத்துக்கு வருவார். முன் அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருப்பவர்களை ஒவ் வொரு வராக அழைத்துப் பேசு வார். அதன் பின் முதலமைச்சரைக் காண்பதற் கென்றே (முன் அனுமதி மெறாமல்) வந்திருப்பவர்களையும் ஒவ்வொருவராக அழைத் துப் பேசுவார்.
அதன்பின் அவரது “கடித உதவி யாளர்” வந்து முதலமைச் சருக்கு வந்துள்ள கடிதங்களை ஒன்றொன்றாக எடுத்துப் படிப்பார். பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று காமராசர் சுருக்கமாகச் சொல்லுவார்.
வரவேற்பு அறையை விட்டு எழும் முன், தனது உதவியாளரை அழைத்து வெளியே மேலும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்க்கும்படி சொல்வார். பொது மக்கள் யாராவது வந்திருந்தால் அவர் களை ஒவ்வொரு வராகச் சந்திப்பார்.
அதன்பின் மாடிக்குச் சென்று விடுவார். குளித்து சலவை செய்த உடைகளை அணிந்து கொண்டு தயாராகி விடுவார். அவர் கையெழுத்து போட வேண்டிய கடிதங்கள் டைப் செய்யப்பட்டு தயாராக இருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்து, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் திருத்தி மீண்டும் டைப் செய்து கையெழுத்து போடுவார்.
காலை 11 மணிக்கெல்லாம் கைக்குத்தல் அரிசிச் சாதம் சாப்பிடுவார்.
காலை 11.30க்கு கோட்டைக்குப் புறப் படுவார். கோட்டையிலும் பார்வை யாளர்கள் காத்திருந்தால் அவர்களை முதலில் சந்தித்து விடுவார்.
அதன்பின் அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து உரையாடுவார்கள். பகல் 1.30 வரை கோட்டையில் இருப்பார். அதன்பின் வீடு திரும்பி சற்றே ஓய்வு எடுப்பது உண்டு.
கோட்டையிலேயே பகல் 2 மணிக்கும் மேல் அலுவல் இருந்தால் 3 மணிக்கு 1 தோசை ஒரு காபி சாப்பிடுவார்.
மாலையிலும் காமராசரைப் பார்வை யாளர்கள் சந்திக்க முடியும். அதன்பின் மாலை நேர அலுவல்களில் கலந்து கொள்வார். அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்வார். காலம் தவறு வது அவருக்குப் பிடிக்காது.
மாலையில் வீட்டிலிருந்து புறப்படும் முன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டுதான் புறப்படுவார். இரவில் திரும்பி வந்த பிறகும் ஒரு குளியல் உண்டு. இரவில் 2 அல்லது 3 இட்லிகளும் தேங்காய் சட்னியுமே அவரது உணவு. அதன்பின் ஒரு டம்ளர் பால். அதில் ஈஸ்ட் பவுடரும் தேனும் கலந்திருக்கும். அவருக்கு “சுகர்” வந்த பின் பாலுக்குப் பதில் “காம்பிளான் “அருந்துவார்.
அதன்பின் தனது படுக்கை அறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்.
காமராசரிடம் பென்சிலோ பேனாவோ கிடையாது. ஏதாவது கையெழுத்து போடும் போது உதவியாளரிடம் பேனா வாங்கி கையெழுத்து போடுவார். கைக் கடிகாரமோ பாக்கட் கடி காரமோ அவர் வைத்திருந்த தில்லை. தனது சட்டைப் பையில் பணமும் வைத்திருப்பதில்லை.
மாலையிலோ காலையிலோ வேறு அலுவல்கள் இல்லை என்றால் ராட்டையை எடுத்து நூல் நுற்பதும் உண்டு.
ஒரு நாளில் 3 அல்லது 4 முறை உடைகளை மாற்றுவார். பளிச் சென்று சலவை செய்யப்பட்ட கதர் வேஷ்டி சட்டை துண்டு அணிவார். பனியனோ அண்டர் வேரோ அணிவதில்லை.
தினசரி 3 அல்லது 4 முறை குளிப்பார். அப்போது களையும் ஆடைகளை அவரே மடித்து உரிய இடத்தில் வைத்து விடுவார். பின் அவை சலவைக்கும் போகும். வேஷ்டியோ சட்டையோ கிழியும் வரை அவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் குளிர்ந்த நீரில் தான் குளியல். குளிர் காலத்தில் மட்டுமே வெதுவெதுப் பான இளம் வென்னீர்.
தலைக்கு எண்ணை தேய்த்துக் கொண்ட வழக்கமே இல்லை யாம்.
பலதரப்பட்ட புத்தகங்களை காமராசர் படிப்பதுண்டு. சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவதிலும் அவர் வல்லவர். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது .

Friday 24 October 2014

விருதுநகரின் எச்சங்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை - விருதுநகரான விருதுபட்டி

விருதுநகரின் எச்சங்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை - விருதுநகரான விருதுபட்டி






பிழைப்புக்காகப் பிரதேசம் வந்தாலும் ஓடி ஆடி விளையாண்ட மண்ணின் நினைவுகளே அலாதி தான். விருதுநகரின் எச்சங்கள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.
ஊருக்கு நடுவே பராசக்தி மாரியம்மன் கோவில், பக்கத்தில் வெயிலாத்தேவர் பிள்ளையார் கோவில், பொட்டல், (இப்போது தேசபந்து திடல்) வெயில் உகந்த அம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோவில், ரேடியோ டெய்லர், பரபரப்பான பஜார்.
பெரும்பாலும் விருதுநகர் வாசிகளுக்கு பொட்டலும் ரயில்வே பீடர்ரோடும் தான் பொழுது போக்கு - ஊருக்கே தண்ணீர் வழங்கிய வேலா மடை வழியில் இருக்கிறது.
1990க்குப் பிறகு தான் பெரிதாக உள்ளது விருதுபட்டி ரயில் ஸ்டேசன், விருதுநகர் என்று பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டாலும் இன்னும் விருதுபட்டி என்றுதான் பழைய காலப் பெரிய வர்கள் பேசுகிறார்கள். ரயில்வே டிக்கெட்டுகளில் கூட ஏஞகூ என்று தான் போடுவார்கள்.
ஸ்டேசனுக்கு எதிரே இப்போது மரங்களாக உள்ள பகுதியில்தான் ஒரு ஆண் உட்கார்ந்து டிக்கெட் கொடுப்பார். நிலையம் ஒற்றைத் தண்ட வாளமாக இருக்கும். டிக்கெட் எடுத்து விட்டு ஓட வேண்டும். அப்போதும் 1970-களில் கூட்டமாகவே இருக்கும். ஆனால் பொறுமையாக ஏறி இறங்கு வார்கள். ஒரே ஒரு அய்யர் பாத்திரத்தில் வடை களை வைத்துக் கொண்டு நடைமேடை முழுதும் நடப்பார். ஐந்து பைசாவிற்கு ஒரு வடை அம்மா வாங்கித் தரும்போது, காரியாபட்டி ஊரணியோரக் கடை வடைகளின் ருசி மறந்து விருதுபட்டி கைப் பக்குவம் முந்தி நிற்கும். ரயில்வே ஸ்டேசனிலிருந்து வெளியே வரும் போது ஒரு சிறிய போஸ்ட் ஆபீஸ். சற்றுத் தள்ளி வந்தால் பஞ்சுப்பேட்டை இருக்கும். உள்ளே ரங்கநாதப் பெருமாள் கோவில் இருக்கும். அங்கே தான் மேடையில் உட்கார்ந்து கிருபானந்தவாரியார் “உபன்யாசம்” செய்வார். ஒவ்வொரு வருடமும் அவர் பேசும்போது இரவில் ரயில் போவதற்காக கேட்டை மூடுவார்கள். இவரும் “கேட்டை மூடினார்கள்” யாரைக் கேட்டு மூடினார்கள்” என்று டைமிங் டயலாக் பேச, கூட்டம் முழுவதும் சிரிக்கும். அவரும் சிரிப்பார்.
ராமமூர்த்தி ரோட்டில் நியூ முத்து டாக்கீஸ், இப்போது ராஜலெட்சுமி தியேட்டராகி விட்டது. மதுரை ரோட்டில் ராதா டாக்கீஸ் தரை டிக்கெட் பிரபலம். முப்பது பைசாவிற்கு டிக்கெட் வாங்கித் தரையில் உட்கார பீடியும் மூத்திரமும் நாசியைத் துளைக்கும். படம் போடச் சொல்லி விசில் சத்தம் எழும்பும். முக்கால்வாசி தமிழ்ப்படம் அங்கே தான் தரையில் உட்கார்ந்து பார்த்தது. இதனை விருதுபட்டியின் அடையாளம் என்றே சொல்லலாம். சுலோச்சனா தியேட்டராக பெயர் மாற்றப்பட்டு இப்போது கரூர் வைசியா பாங்க் ஆகி விட்டது. நகரின் நடுமையத்தில் பஸ் நிலையம் எதிரே சென்ட்ரல் தியேட்டர் இருந்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படம் ஓடும். தியேட்டரில் படம் பார்த்து விட்டு ஊருக்குப் போக பஸ் ஸ்டாண்டு நோக்கி ஓடும் ரசிகப் பெருமக்கள் பெரும்பாலும் கோட்டூர், பாலவநத்தம், வச்சக்காரபட்டி, புல்லலக் கோட்டை ஊர்வாசிகளாகத் தான் இருப்பார்கள். இப்போது எல்லா ஊர்களையும் போல சென்ட்ரல் தியேட்டரும் உருமாறி எதை எடுத்தாலும் நாற்பது ரூபாய் பஜாராகி விட்டது.
விருதுபட்டியில் எண்ணெய் புரோட்டா, புறாக்கறி போல ஆஞ்சநேயவிலாஸ் ஹோட்டலும் பெயர் பெற்றது. ஆதியில் வந்ததாக பெரியப்பா (ரெகுலர் கஸ்டமர்) கூறி அழைத்துச் செல்வார். இன்றும் பழைமை நிலை மாறாமல் அதே டேபிள், அதே உணவு வகை என்று தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பிறகு தன லெட்சுமி ஹோட்டல், பர்மா கடை என்று தோன்றி னாலும் நான் ஆஞ்சநேய விலாஸ் ரசிகர் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது.
விருதுபட்டியில் பொழுது போக்கு பொட்டல் தான். வெயிலுகந்தம்மன் கோவில் வாசலையும் பஜாரையும் இணைக்கும் இந்தப் பொட்டலில் தான், காமராஜர் சுதந்திர முழக்க மிட்டார். ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் என்று தலைவர்கள் வரும்போது காமராசரே ஒரு தொண் டரைப் போலக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவார் என்று இன்றளவும் பேச்சு உண்டு. இங்கே வந்து பேசாத அரசியல்வாதிகளே கிடையாது. அசோக சக்கர ஸ்தூபி ஒன்று பிரம்மாண்டமாக நிற்கும். அதன் அடியில் “மகாலிங்கம்! வந்திருக்கும் அய்யா விற்கு ஒரு சீட்டு கொடு” என்று கிளி ஜோசியர் கட்டளையிட சீட்டெடுக்கும் கிளிகள். கூட்டத்தைக் கவருவதற்காக கிளி ஜோசியர் கிளிகளுக்கு வண்டி தள்ளுதல், சறுக்கு விளையாடுதல் “என்று பயிற்சி கொடுத்து வைத்திருந்தார். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுதல், சுவை யான பருத்திப் பால் காடா விளக்கு எரிய ஜமுக் காளம் ஏலம் விடும் சங்கரன் கோவில் முத்துச்சாமி- இவைகளெல்லாம் இல்லாத பொட்டலுக்குப் போகவே மனம் கூசுகிறது. விருதுபட்டியின் உயிர்ப்பான இந்தப் பொட்டல் களையிழந்து இப்போது தேங்காய், மிளகாய், காய்கறி விற்கும் மார்க்கெட்டுகளாக மாறிவிட்டன. சுற்றி உள்ள வீடுகள், கட்டடங்களிலிருந்து மழை நீரைக் கொண்டுவந்து நிரம்பிய தெப்பக்குளம் ஊரின் நிலத்தடி நீர் வற்றாமல் காக்கிறது.
விருதுபட்டியின் பங்குனிப் பொங்கல் திரு விழா மிகவும் பேசப்படுகிற ஒன்று. கொடி கட்டிப் பொங்கல் சாற்றி விட்டால் எல்லா ஊர்களிலும் வாழ்கிற விருதுபட்டி மக்கள் ஜாதி பேதமின்றித் தங்கள் சொந்த விழாவாக எண்ணிக் குவிந்துவிடு வார்கள். தேரோட்டம், கரகாட்டம் என்று திகழும் விழாவையொட்டி மு.ஏ. சாலா பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி திறக்கப்படும். நாடகம், சினிமா நடிகர் உரை என்று குதூகலமாக விழாவில் மகனுக்குப் பெண்ணும் மகளுக்குப் பையனையும் பார்க்கச் செய்து நிச்சயம் செய்வதும் நடக்கும். பொங்கலன்றும் முன்னும் பின்னும் உடலில் கரியையும் சுண்ணாம்பையும் பூசிக்கொண்டு வேப்பிலைக் கொத்துக்களை இடுப்பில் சொருகி,
“ஆஹோ! அய்யாஹோ!
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது மக்களைப் பெத்தாத்தா!
என்னையும் சேர்த்துப் பெத்தாத்தா
எனக்கு நாழி போடாத்தா!’
என்று தெருத்தெருவாக வேண்டுதல் வலம் வரு வதும் கையில் உள்ள விபூதியுடன் கூடிய தட்டில் எதிர்ப்படுவோரிடம் வாங்கும் காசுகளைக் கொண்டு வந்து உண்டியலில் சேர்ப்பதிலும் இன்றும் கூட எழுவது வயதான பெரியவர்களும் கலந்துகொள்வது கண்கொள்ளாக் காட்சி.
விருதுபட்டி அக்கினிச் சட்டி மிகவும் பிரபலம். பள்ளிப் பிள்ளைகள் முதல் பேரிளம் பெண்கள் வரை அக்கினிச் சட்டியை எடுத்து தெப்பம், மேலரத வீதி சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சில இடங்களில் அக்கினிச் சட்டி எடுத்து வருபவர் களுக்கு சம்பந்திகள் மரியாதை செலுத்துவார்கள். வழியில் சாமியாடுவதும் அருள்வாக்கு கேட்பதுவும் நடக்கும். திருவிழா முடிந்து விருந்தாளிகள் ஊருக்குத் திரும்பும்போது இருபது திருமணங்களாவது பேசி முடித்துச் செல்வார்கள்.
விருதுநகர் பஸ் ஸ்டாண்ட் ஒரு சினிமா திரையரங்கம் அளவுதான், எம்.எஸ்.பி.ராஜா காலத்தில் உருவான இந்தப் பஸ் ஸ்டாண்டை ஒரு தரம் சுற்றி வந்தால் விருதுபட்டியின் கிராமிய பண்பாடு மிளிரும். இனிப்பான சேவு, ஜீரணி, காராச்சேவு இன்றும் கிடைக்கின்ற விருதுபட்டி பலகாரங்கள். பாலி கிளினிக், பிரசவ ஆஸ்பத்திரி என்றெல்லாம் வந்தாலும் விருதுநகரில் முன்னாளில் “லைசாண்டர் ஆஸ்பத்திரி தான் பெரிதும் பேசப்படும். இதன் அருகில் உள்ள சந்தில் பாம்பாட்டி முதலியார் என்பவர் வீட்டில் ஒரு சாமியார் ஆணிச் செருப்பு போட்டுக் கொண்டு அருள்வாக்கு கூறுவார். இதே போலத் தெப்பக்குளத்தின் கரையில் உள்ள “காய்ச்சல் கார அம்மன் தான் ஊராருக்கு உடனடி தீர்வு. காய்ச்சல் வந்தவர்களை அழைத்துச் சென்று திருநீறு பூசி” விட்டால் போதும். காய்ச்சல் குறைந்து விடுவதான நம்பிக்கை இன்றும் உண்டு. மாரியம்மனுக்கு கண் படிவம் கை, கால் உருவங்கள் வாங்கி பிரார்த்தனைக் கான நேர்த்திக் கடன்கள் கோவிலில் செலுத்தப் படும். விருதுபட்டியின் பழைய வீடுகளெல்லாம் ஒரே மாதிரி இருக்கும். உள்ளே வீடுகள் விசாலமாக இருந்தாலும் வாயிற்கதவுகள் குறுகியதாக இருக்கும். எல்லா வீடுகளிலும் “எடுப்புக் கக்கூஸ்” வழக்கம் 80கள் வரை இருந்தது.
எந்த அளவிற்கு காங்கிரசையும் காமராசரையும் விருதுபட்டி தூக்கிப் பிடித்து உலகளாவிய புகழ் பெறச் செய்ததோ அதை ஊர் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராசரைத் தோற்கச் செய்ததை இன்றளவும் வருத்தத்துடன் நினைவு கூர்கின்றனர். என்றாலும் காமராசர் பிறந்து வளர்ந்த சுலோச்சன நாடார் தெருவில் உள்ள அவரது வீடு இன்றளவும் பல மாநிலத் தலைவர்கள் வந்து காணும் நினைவு இல்லமாக உள்ளது. விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையே யான விற்பனைவரி தோன்றுவதற்கு விருதுபட்டி நாடார்களின் பிடி அரிசித்திட்டம், மகமைக்கு வரியே மூலகாரணமாகியுள்ளது என்பது பலருக்குத் தெரியாது. விருதுபட்டிக்கு வருகை தந்த ராஜாஜி இந்தப் பிடி அரிசித் திட்டம், மகமைக்கு வரி இவை களைக் கேள்விப்பட்டு வணிகவரி, விற்பனை வரியை அமுல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டுரை புத்தகம்: விருதுநகரான விருதுபட்டி
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: ஜூன்2013
 

Tuesday 21 October 2014

சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த உ. இராமசாமி நாடார்

சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த உ. இராமசாமி நாடார்.


உடையப்ப நாடார்--சின்னக் கருப்பாயி தம்பதிகளின் செல்வப் புதல்வராக பிறந்த அவர், வெளிநாட்டுக்கு வந்ததாலோ என்னவோ, மொழிப்பற்றுடனும் இனப் பற்றுடனும் இயல்பாகவே நடந்துகொண்டார். தமிழர்கள், எல்லாத் துறைகளிலும் மிளிரவேண்டுமென்று அவர் விரும்பினார். தமிழகத்தில் பிறந்த அவர்சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கொள்கைக்கேற்பஊரில் இருந்த சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்துகொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டு இங்கே வந்து சேர்ந்தார்.

சிங்கப்பூரிலும் பினாங்கிலும் 1912ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை மிகச் சிறந்த குத்தகையாளராக இருந்தவர்தான்இராமசாமி நாடார். அவரின் மூலமாகப் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில் அரசாங்கம் அவர் மேல் நம்பிக்கை வைத்துப் பல கட்டங்களில் அவரைப் பாராட்டியிருப்பதை அந்த நாளைய தமிழ் ஏடுகள் பதிவு செய்துள்ளன. குத்தகையாளராக இருந்த அதே வேளையில் அவர் மளிகைக் கடை வியாபாரத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதை மேலும் விரிவாக்கக் கருதி பலருக்கு அந்தத் தொழிலில் ஆர்வத்தை உண்டாக்கினார். சிங்கை மலேசியாவில் தமிழர்களும் சிறந்த வியாபாரிகளாகத் திகழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தலைசிறந்த முன்னோடியாக அவர் விளங்கினார். மொழியால் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவரிடமிருந்த பண்பாடு அந்த நாளில் முன்னேற்றம் பத்திரிகையின் உரிமையாளராக இருந்த திரு கோ சாரங்கபாணியைப் பெரிதும் கவர்ந்தது. மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்து வந்த தமிழர்கள்மற்ற இனத்தவர் பாராட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாகத் திகழ்ந்தார். 1919ஆம்ஆண்டு குடும்பத்துடன் சிங்கப்பூரில் தங்கினார்.

அந்தக் காலத்தில் அதிக வரிப்பணம் கட்டிய தமிழர்களில் அவரே முன்னோடி என்று கூறுவார்கள். நகர மேலாண்மைக் கழகத்துக்கு கூடுதலான வரி செலுத்திய தமிழர் அவரே என்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தியர் அல்லாதவர்களும் இராமசாமி நாடாரின் உழைப்பையும்முன்னேற்றத்தை யும் கண்டு வியப்படைந்தனர்வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டனர். வியாபாரியாக இருந்த அதே வேளையில் சமூக அமைப்புகள் பலவற்றுக்கும் இராமசாமி நாடார் பொறுப்பான கடமை ஆற்றிவந்தார். தேசபக்தி நிதியின் தென்னிந்திய பிரிவுக்குத் தலைவராக இருந்த அவர்அந்தக் காலத்தில் வெள்ளையர்கள் இங்குக் கொண்டு வந்திருந்த இந்தியப் படையினர்பால் தனி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அவர்களின் மேம்பாட்டு நிதிக்குப் பணம் கொடுத்த அவர்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் மேம்பாட்டு நிதிக்குப் பணம் கொடுக்கப் போவதாக வாக்களித்து அதன்படி நடந்துகொண்டார். வசதி உள்ளவர்களே குறைவாக நிதி உதவி செய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யுத்த நிதிக்குப் பத்தாயிரம் வெள்ளி கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அந்தக் காலத்துத் தமிழ் ஏடுகள் அவரைப் பாராட்டியதோடுசிங்கப்பூர்த் தமிழர்களின் செல்வர் தோழர் உ ராமசாமி நாடார் என்றே குறிப்பிட்டு வந்தன.

தொழிலில் வளர்ச்சி காணக் காணபொதுத் தொண்டிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் அவர் பெரும் ஈடுபாடு காட்டிவந்ததை அந்தக் காலத்து தமிழ்மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். திரு இராமசாமி நாடார் சற்றும் மயங்கவில்லை. நில உரிமையாளராகவும்,சிங்கப்பூர் மலாயாவில் ரப்பர் தோட்டச் சொந்தக்காரராகவும் இருந்தார். பல்வேறு பொதுத் தொண்டுகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்தார். விவேகானந்தர் சன்மார்க்கச் சங்கம்சிங்கைத் தமிழர் இளையர் கழகம் ஆகியவற்றுக்குப் புரவலராகவும் விளங்கினார். மலாயாவில் பினாங்கிலிருந்த இந்து சபைக்கு அவர் புரவலராக இருந்த அதே வேளையில் தமிழ்நாட்டில் குன்னக்குடியில் நாடார் மடம் ஒன்றைக் கட்டித்தரவும் தவறவில்லை.அங்கே பசி என்று யார் சென்றாலும் உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்இராமசாமி நாடார். சிங்கப்பூரில் திரு ஐ ஐ நாகலிங்கம் முதலியார் தலைவராக இருந்தபோது,தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் பல பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியவர்தான் திரு இராமசாமி நாடார். 
சிங்கப்பூர் இந்தியர் சங்க கட்டட நிதிஇராமகிருஷ்ண மடத்திற்கான கட்டட நிதி,விவேகானந்தர் சன்மார்க்க சங்கத்துக்கான கட்டட நிதிமகளிர் பாடசாலைக்கான கட்டட நிதிஆகியவற்றுக்கும் இராமசாமி நாடார் தாராளமாக வாரி வழங்கினார். திரு இராமசாமி நாடார்சாலைப் பணிகளுக்காக தம்முடைய சொந்த மான்யமாக தம் நிலத்தின் பகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறார். அதற்கென அவர் பணம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. கோலாலம்பூரில் உள்ள பத்துமலை தண்டாயுதபாணி ஆலயத்துக்குப் படிகளைக் கட்டும்போது தம் பங்கும் அதில் இருக்க வேண்டும் என்னும் நோக்கில் நிதி உதவி செய்தவர்தான்இராமசாமி நாடார். 

ஆதிநாளில் ஜவுளியும் மளிகையும் மட்டுமே வியாபாரத்தில் அவருக்குக் கை கொடுத்தன என்றாலும் அவர் தம்மையும் வளர்த்துக்கொண்டார். புதுப்புது தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார். ஒரு சாதாரண குக்கிராமமாகிய மணச்சையில் பிறந்திருந்தாலும் அவர்களும் மிகப் பெரிய உலக அளவிலான வர்த்தகர்களை உருவாக்க முடியும் என்பதற்கு அவரின் முயற்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று அவரைப் பற்றி அறிந்தோர் கூறுவர். சிங்கப்பூரிலும் மலாக்காவின் மூவாரிலும் அவர் தலைசிறந்த வணிகராக விளங்கியது அவரின் அயரா முயற்சியால் கிட்டிய பேறுகள்தானேநான்கு மகன்களுக்கும் ஏழு பெண்மக்களுக்கும் தந்தையாகத் திகழ்ந்த இரு இராமசாமி நாடார் எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பார். இந்த பூவுலகில் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் பல சிறப்புகளைச் செய்த பல நாடார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்பல அரிய சேவைகளைச் செய்து மறைந்திருக்கிறார்கள். அதனால்அவர்களைப் பற்றி நம் மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதைகளில்தான் நாம் இன்று நடந்து செல்கிறோம். நம் வருங்கால செல்வங்களும் அந்தப் பாதைகளில் தான் நடைபோடுவார்கள் என்பது திண்ணம். பெரியோர் காட்டிய வழிதான் எதிர்காலத்திலும் ஒளிவிளக்காகத் திகழும்.

Monday 20 October 2014

கடவுள்

கடவுள்


பன்னெடும் காலம் தொட்டு தமிழர்கள் ஏதாவது வகையில் கடவுளை வணங்கியே வந்துள்ளனர். அது எல்லை காவல் தெய்வமாக இருக்கலாம் அல்லது உருவமற்ற ஒளி வழிபாடாக இருக்கலாம் . தமிழ் புலவர்கள் இறைவனுக்கு காப்பு வைத்தே பாடல்களை இயற்றி உள்ளனர். தமிழ் தந்த சித்தர்கள் கடவுளை பற்றியும் இயற்கையின் ரகசியங்களை பற்றியும் நீண்ட நெடிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வுகளின் போதே பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொடுத்தனர்.

உடலை கட்டிக் காக்க யோகக் கலை, மனதை கட்டுப்படுத்தும் ஆழ்நிலை தியானக் கலை, உள்ளுறுப்புகளை செயல்பட வைக்கும் வர்மக் கலை, மூச்சுப் பயிற்சி, நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் கலை, உலோகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் ரசவாதக் கலை, மொழியை செம்மைப் படுத்தும் இலக்கியங்கள், உலகம் வியக்கும் கட்டடக் கலை, இசைக் கலை, தற்காப்புக் கலை போன்ற பல்வேறு கலைகளை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கொடுத்துள்ளனர் சித்தர்கள். இவர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. மாறாக இயற்கையோடு இசைந்து வாழ்ந்து இயற்கையின் ரகசியங்களை, உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளை பற்றியும் அண்டத்தில் உள்ள விண்மீன்கள் முதல் கோள்கள் வரையிலான தொடர்புகளை குறித்தும் நமக்கு கூறி உள்ளனர். அதற்கான சான்றுகள் சித்தர் இலக்கியங்களின் கொட்டிக் கிடக்கின்றது. கடவுள் என்பது இல்லை என்று ஏற்றுக் கொண்டால் அதற்கான தேடல் முற்றுபெற்று விடும் . மெய்யியல் என்பதும் இத்தோடு முற்றுபெற்று விடும். தேடலில் தான் பல அரிய கண்டுபிடிப்புகள் பிறக்கிறது. இன்று உள்ள பல மெய்யியல் கருத்துக்களும் இந்த தேடலில் இருந்து தான் பிறந்தது. அது பௌத்தம், சமணம், ஆசிவகம், ஜென் தத்துவம் உட்பட அனைத்தும் தேடலில் இருந்தே பிறந்தன. இவைகளில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் எந்த அளவிற்கு இவற்றில் உண்மைகள் இருக்கிறது என்பதில் தான் வேறுபாடுகள் உள்ளது.

இதை கடந்து மதங்கள் மனிதர்களை மூடத்திற்கு இழுத்து செல்லாமலும் இல்லை. இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் முன்னணி மதங்கள் உச்ச கட்ட மூடத்தை மக்களிடம் பரப்பி உள்ளதையும் நாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இதையே காரணமாக கொண்டு கடவுள் என்ற தேடலையே நாம் ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது. இங்கு கடவுள் என்று குறிப்பிடுவது ஏதோ வானத்தில் ஒரு சக்தி தனியே நின்று நம்மை இயக்குகிறது என்பது அல்ல. மாறாக எக்காலத்திலும் இருக்கும் இயற்கையின் தன்மையை மனிதன் அறிய முற்படுதலே மெய்யியல் என்று கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஆய்விற்கு தன்னை உட்படுத்தும் மனிதன் எந்த மதத்தையும், மார்கத்தையும் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. அவனுக்கு சாதியோ, மதமோ, மொழியோ, இனமோ தடை இல்லை . இந்த தடைகள் அனைத்தையும் கடந்தே அவன் மெய்யியல் தேடல் தொடர்க்கிறது. இந்த தேடலில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, உலகிற்கு தற்காலத்தில் தேவையான அரும்பெரும் சிந்தனைகள் கொடுத்தவர்களே சித்தர்கள் ஆவர். இப்படியாக சித்தர் வழியை கடைபிடிக்கும் மக்களும் வெகு சிலர் தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த கருத்துகளை பெருவாரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காதது சித்தர்கள் தவறு அல்ல , நம்முடைய தவறே ஆகும் . இந்த இடைவெளியில் மதத்தையும் மூடத்தையும் தமிழக மக்களிடம் பரப்பியவர்கள் தான் மதவாதிகள் (எல்லா மதத்தினரும் அடங்குவர் ) .

இப்போது நாம் களைந்தெறிய வேண்டியது பயனடையா மூட மதங்களே தவிர சித்தர்கள் அருளிய மெய்யியல் நெறிகளை அல்ல. தமிழர் நாட்டில் இருந்து உலகிற்கு வெளிப்பட்ட அற்புதமான படைப்புகள் தான் திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, பராபரக்கண்ணிகள், கொன்றை வேந்தன், நாலடியார், திருவாசகம், சித்தர் இலக்கியங்கள் போன்றவை. ஆதலால் தமிழர் வாழ்வியலில் இறை மற்றும் மெய்யியல் தேடல் என்பது பிரிக்க முடியாதது. இது தமிழ்ச் சமூகத்தில் என்றும் வாழும் தன்மையுடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழையடி வாழையாக இந்த மெய்யியலை கற்றுணர்ந்தவர்கள் தோன்றிய வண்ணமே இருப்பார்கள். இந்த மண், இந்த மொழி அத்தகைய சான்றோர்கள் தோன்றி சிறக்க என்றும் ஏதுவானதாகவே இருந்து வருகிறது என்பது நமக்கெலாம் பெருமை தான்.

இப்படிப் பெருமை நிறைந்த தமிழினம் இன்று சாதியாலும் மதத்தாலும் சண்டையிட்டு பெரும் பின்னடைவை நோக்கி பயணிக்கிறது என்பது வேதனையிலும் வேதனை. தமிழர்கள் பண்பாட்டில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் இந்த ஒப்பற்ற மெய்யியலை நம் வாழ்வோடு இணைத்தாலே போதுமானது. தமிழர்கள் சாதி மத சழக்கை விட்டு உடலையும், மனதையும், அறிவையும் செழுமைப் படுத்தி இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள். உலகமே தமிழர்களை பார்த்து வியப்படையும் என்பதில் ஐயமில்லை.