Tuesday 31 March 2015

கர்ம வீரரும் - கவியரசும்

கண்ணதாசன் பற்றி கூறும் போது கவியரசர் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள் கண்ணதாசனின் பெருந்தலைவருடனான அனுபவங்கள் பற்றி கூறியது:

காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.

வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.



”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான். 

1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார். 
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.

Monday 30 March 2015

பெருந்தலைவர் - பதிவிப் பிரமாணத்தின் போது உதிர்த்தவை



* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் 

* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது 

* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து 

* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது. 

* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். 

* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும் 

* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம் 

* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் 

* நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான். 

* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை 

* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது 

* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும் 

* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும் 

* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது 

* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது 

* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் 

* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை. 

* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. 

* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது 

* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து நீக்க முடிந்த மட்டும் பாடுபடுவேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை 

* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் 

* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும் 

- பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது

Sunday 29 March 2015

காமிக்ஸ் எனும் எனது கற்பனை உலகம்!

காமிக்ஸ் என்னும் உலகிலேயே சஞ்சரித்த காலகட்டங்கள் என் வாழ்விலும் உண்டு. ஆம் படிக்க பழகிய காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் காமிக்ஸ் கிடைக்கும். புதிய பிரதி கடைக்கு வந்த உடனேயே என் தந்தையார் வீட்டிற்கு வாங்கி வந்துவிடுவார். அப்போது காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தவை எனக்கு தெரிந்து மூன்று அல்லது நான்கு நிறுவனங்களே! ஒன்று இந்திரஜால் காமிக்ஸ் முத்து காமிக்ஸ், டைமன்ட் காமிக்ஸ் இன்னொன்று மாலைமதி காமிக்ஸ். இந்திரஜால காமிக்ஸ் புத்தகங்கள் பெரும்பாலும் வேதாளன் எனப்படும் வாக்கர் (WALKE alies PHANTOM) கதைகள், மாந்தரீக மாண்ட்ரேக் (MAGICIAN MANDARAKE) போன்றோர் கதைகளும், முத்து காமிக்சிலும் மாலைமதி காமிக்சிலும் மின்சாரத்தை தொட்டதும் மாயமாகும்  இரும்புக்கை மாயாவி (STEEL CLAW) , துப்பறியும் தொழிலதிபர் ஜானி நீரோ, துப்பறியும் இரட்டையர் லாரண்ஸ் & ஜூடோ டேவிட், துப்ப்றியும் ரிப் கிர்பி, அமானுஷ்யங்களை வேட்டையாடும் கார்த் போல பல காரக்டர்கள் உள்ள கதைகள் வரும்! அதே போல் கௌபாய் மற்றும் குதிரை வீரரான கிஸ்கோ கிட் ஒரு அருமையான பாத்திரம். இந்திர ஜால காமிக்ஸ் ஆங்கிலத்திலும் வந்தது. அதே போல் வன்ணத்தில் வந்ததும் இந்திரஜால் காமிக்ஸ் மட்டுமே!

இந்த காரக்டர்களுடன் வரும் துணை காரக்டர்களையும் மறக்கமுடியாது. உதாரணம் வேதாளருடன் (PHANTOM) வரும் வெள்ளை குதிரையின் பெயர் கேசரி (HERO) மலை ஓநாயின் பெயர் வாலி (DEVIL) அவர் வசிப்பது ஆழ்நெடுங்காட்டில் உள்ள கபால குகை. பாதுகாப்புக்கு விச அம்புடன் பிக்மி குள்ளர்கள்! அதே போல் குதிரை வீரர் கிஸ்கோ கிட்டுடன் வரும் அவரது உதவியாளர் ஒரு நகைச்சுவை பாத்திரம். மந்திரவாதி மாண்ட்ரேக்குடன் வரும் காட்டுவாசி லொதார் ஒரு பாத்திரம். அவர் வசிக்கும் அதிசிய வீடு ஜாநாடு பிரமிக்க வைக்கும்! மாண்ட்ரெக்கின் சமையல்காரர் ஹோஜோ ஒரு ஜோடோ நிபுனர். அதே போல் ரிப் கிர்பியின் உதவியாளரான சமையல்காரர். ஜானி நீரோ சாகசங்களில் பெரும்பாலும் அவருடன் வரும் அவரது பெண் ஸ்டெனோ உதவியாளர் என எல்லோருமே மனதில் நிற்பவர்கள். இவர் எவரையுமே இன்று வரை காமிக்ஸ் பாததிரமாக நினைக்க முடியாமல் என் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டனர். எனக்கு துப்பாக்கி மீது காதல் ஏற்பட்டதற்கு காமிக்ஸ் முக்கிய காரணமாக இருக்கலாம்! இந்த புத்தகங்களால் எனக்கு மிகப்பெரிய நட்பு வட்டாரமே உண்டு (கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய உண்டு!)! யாரும் என்னை லேசுக்குள் பகைத்துக் கொள்ள முடியாது! பகைத்தால் வீட்டுக்கு வந்து காமிக்ஸ் படிக்க முடியாது! 





அதே போல் ஆங்கிலத்தில் DELL காமிக்ஸ் மற்றும் DIAMOND காமிக்ஸ் புத்தகங்கள் பிரபலமானவை! வால்ட் டிஸ்னியின் அனைத்து பாத்திரங்களுமே அதில் வரும். GOOFY GOOF என்ற நாய். அது வளர்க்கும் SNOOPY என்ற நாய். அப்புறம் MICKEY MOUSE எலி. அதே போல் DONALD DUCK வாத்தும். இவை அனைத்துமே வன்ணபடத்தில் வருபவை. SUPER MAN, SPIDER MAN, BAT MAN என் பல் பாத்திரங்கள். அதே போல் பிரபல காமடி பலசாலி POPEYE . மறக்கவே முடியாத மற்றொரு அருமையான்  பாத்திரம் TINTIN! டின்டின் கதாபாத்திரத்தின் அனைத்து இதழ்களையுமே படித்திருக்கிறேன், வைத்திருந்தேன்.இந்த காமிக் புக்ஸ்களை போலவே மறக்க முடியாத வேறு சில இதழகளும் உண்டு தமிழில் அம்புலிமாமா, ஆங்கிலத்தில் CHANDHAMAMA. இவை பல ராஜா ராணி கதைகளையும் அந்த காலங்களையும் கண் முன் கொண்டு வந்தவை! அம்புலிமாமாவில் வரும் விக்கிரமாத்தித்தனும் வேதாளமும் நம் தினத்தந்தி சிந்துபாத்தை விட மிகவும் பிரபலமானவர்கள். முக்கியமான மற்றுமொரு காமிக்ஸ் AMARCHITRAKATHA. இதிகாசங்கள் மற்றும் அதன் பாத்திரங்கள் அனைத்திற்குமே உயிர் குடுத்தது இது!  அதே போல் ஆங்கிலத்தில் பரபரப்பான மற்றொமொரு குழந்தைகள் பத்திரிக்கை TWINKLE.







இந்த காமிக்ஸ் பாத்திரங்களில் பல கிட்டதட்ட அனைத்துமே இன்று சினிமாவில் வந்து விட்டாலும் அவற்றை காமிக்ஸ்சில் பார்த்த விறுவிறுப்பு கண்டிப்பாக சினிமாவில் இல்லை என அதை படித்தவர்கள் கண்டிப்பாக சொல்வார்கள். எனக்கு இன்னும் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களும், காமிக்ஸ்களும் நினைவில் இருந்தாலும் பதிய நேரமில்லை! உதாரணம் பழைய முத்து காமிக்ஸில் வரும் வாயு வேக வாசு போன்ற பாத்திரங்கள், பின்பு ராணி காமிக்ஸ் வந்த பின் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர் போன்றவை! சகோதர சகோதரிகளுக்கு நினைவில் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்! இன்று உள்ள குழந்தைகள் இந்த காமிக்ஸ் உலகை இழந்துவிட்டார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் கற்பனை உலகமே அடைபட்டிருக்கிறது என்பதும் நிதர்சனம். இருந்தாலும் இன்றைய குழந்தைகள் டோரா புஜ்ஜி, சோட்டா பீம், டாம் & ஜெர்ரி போல் தொலைக்காட்சி பாத்திரங்களில் மூழ்கி விட்டார்கள்!  இப்போதும் காமிக்ஸ் இணையத்தில் கிடைக்கின்றன ரசிகர்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.






எந்த வயதிலும், சாவிலும் மறக்கமுடியாதது என் காமிக்ஸ் உலகம்!!




Saturday 28 March 2015

என்னை கவர்ந்த பாடல் வரிகள் - திருடாதே பாப்பா திருடாதே..!

பட்டுகோட்டையார் எப்போதும் சமூக அக்கறை உள்ள பாடல்களை நிதர்சனத்தோடு எழுதுவதுபவர். அவர் பாடல்களில் எப்போதும் சமூகத்தின் மீது அக்கறையும் சமூக அவலங்கள் மீது சாடலும் இருக்கும். எனக்கு பட்டுக்கோட்டையார் அவர்களின் பாடல்கள் அனைத்துமே பிடித்த பாடல்கள்தான். இந்த பாடலும் அந்த வகையை சேர்ந்த சமூக சிந்தனையுள்ள பாடல்தான்! 

///வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே/// , ///உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது, மனம் கீழும் மேலும் புரளாது/// போன்ற வரிகள் அனைத்துமே மனதை புயலாக்கி விட்டு நம்மை உழைப்பாளி ஆக்கி விடும் வரிகள்!! பட்டுக்கோட்டையார் என் மனதில் கோட்டை கட்டியவர்.

சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இது. மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது. 

இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...

பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்தனையும் வைரம்... 



திரைப்படம்: திருடாதே (1961) 
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

திருடாதே... பாப்பா திருடாதே... 
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே... பாப்பா திருடாதே...

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே... பாப்பா திருடாதே...

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது

இனி எடுக்குற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

சான்றோர் சமூகம் - வணிகம் ஒரு ஆய்வு - பகுதி 5

நாயக்கர்கள் வடுகர்கள் என்பதால் அவர்கள் மூவேந்தர் பரம்பரையினராக இருக்க முடியாது. எஞ்சி இருக்கின்ற ஒரே தமிழ் அரசு என்று சொன்னால் மறவர் சமூகத்தவராகிய சேதுபதியின் அரசைத்தான் குறிப்பிட முடியும். சேதுபதி மன்னர்களுள் முதன் மன்னராகிய சடைக்கத்தேவன் கி.பி. 1605இல் மதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் ராமேஸ்வரம் திருத்தலத்தையும், திருத்தலப் பயணம் மேற்கொள்வோரையும் கள்வர்களிடமிருந்தும், போர்ச்சுக்கீசியர் தாக்குதலில் இருந்தும் காத்தவர்கள் என்ற பொருளில் 'சேதுபதி காத்த தேவர்' என்று பட்டம் சூட்டப் பட்டவராவார். சேதுபதி என்பது ராமேஸ்வரத்தின் மறுபெயர். எனவே, சேதுபதி காத்த தேவர் என்பது காலப்போக்கில் சுருங்கி சேதுபதி என நின்றுவிட்டது. இவர்களுக்கும் மூவேந்தர் வம்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. Ancient Tamil Monarchy and the Sethupathi Kings என்ற கட்டுரையில் (Authors: S. D. Nellai Nedumaran & S. Ramachandran, published in the Journal of the Epigraphical Society of India, Vol 26, Mysore, 2000) இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தமிழினத்தின் தனித்தன்மையுடைய அடையாளத்திற்குக் கருத்தியல் தளத்தில் உரிமை கொண்டாடுகின்ற வேளாளர் சமூகத்தவரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்களுடைய சமூக ஆவணங்களில் மூவேந்தரைச் சிறை வைத்து தமிழ் பாட வைத்த களப்பிர வம்சத்தவரைத்தான் தங்கள் முன்னோர்களாகக் குறிப்பிடுகிறார்களே தவிர மூவேந்தர் குடியினரையோ, வேளிர் குடியினரையே தங்களுடைய வம்சத்தவர் என்று உரிமை கொண்டாடவில்லை. (தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலம் செப்பேடு, கி.பி. 17ஆம் நூற்றாண்டு.)





சான்றோர் சமூகத்தவர் சத்திரியர் என்று உரிமை கொண்டாடுவதும், பூணூல் அணிவதும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு விருத்தியடைந்து வெள்ளையர்களுக்கு நிகரான லாபத்தை ஈட்டியதால்தான் என்று கூறுவது சிரிப்பை வரவழைக்கின்ற சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். ஒரு வேளை, வியாபாரம் செய்தது போக எஞ்சி நின்ற பருத்தியைப் பூணூலாகத் திரித்துப் போட்டுக் கொண்டார்கள் என்றும் சொல்வார்கள் போலும். வரலாற்றைத் திரிப்பது, கயிறு திரிப்பது என்பதைத்தான் கேட்டிருக்கிறோம். முதன்முதலாக பூணூலையே வடகயிறாகத் திரிப்பது என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இக் கிளிப்பிள்ளை வாதக்காரர்கள் வேதநூலாகக் கொண்டாடுகிற History of the Nadars of Tamil Nadu (by Robert Hardgrave) என்ற நூலில்கூட, அடிக்குறிப்பாகச் சிவகாசி நாடார்கள் 1880ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பரம்பரையாகக் குடுமி வளர்த்துக் கொண்டு பூணூல் அணிந்து வந்திருந்ததை மூதாட்டியர் சிலர் நினைவு கூர்ந்தது பற்றிய குறிப்புள்ளது. கி.பி. 17ஆம் நூற்றாண்டைய சான்றோர் சமூகப் பட்டயங்களில் "குலமும் முப்புரி நூலும் உடையோர்" என்று இச் சமூகத்தினர் உரிமை கொண்டாடியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பழையகோட்டைப் பட்டக்காரர் ஊரான ஆனூர்க் காளியம்மன் கோயிலில் காளியம்மனின் முதன்மையான அடியாரான செல்லமூப்பன் என்ற சான்றோர் சமூகத்தவரின் கற்சிற்பம் உள்ளது. இச் சிலை கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இச்சிலையில் முப்புரிநூல் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. (பனையேறுதல் போன்ற கடுமையான உடலுழைப்பின் போது, பூணூல் அறுந்துவிடுமே என கற்பக விநாயகம் கவலைப்படக்கூடும். பாரம்பரியமாக உடலுழைப்பின் போது கழுத்தைச் சுற்றி 'நிவீத'மாகப் போட்டுக் கொள்வார்கள். கவலைப்படத் தேவையில்லை.) சான்றோர் சமூகத்தவர் உழைப்பாளர்கள் என்பது உண்மையேயாயினும், பனையேறும் தொழில் ஒன்றுதான் சான்றோர் குலத்தவரால் மேற்கொள்ளப்பட்ட ஒரே கடினமான உடலுழைப்பு என்று கருதுவது உழைப்பு என்ற கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ளாத மனநிலையையே காட்டும். போர்ப்பயிற்சி, இக் கட்டுரையில் முன்னரே குறிப்பிட்ட வர்மக்கலையுடன் இணைந்த அங்கைப் போர்ப்பயிற்சி போன்றவையும் உடல் உழைப்பின் பாற்பட்டவையே.






1827ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆறுமுகனேரி தட்சிண மாற நாடு சீர்மை ஆயிரம் நாடாக்கள் செப்பேடு, மதுரையில் நெல்பேட்டைப் பகுதியில் சான்றோர் வணிகப் பேட்டை முன்பிருந்தே செயல்பட்டு வந்தமை பற்றியும், அங்கு ஒரு விநாயகர் கோயில் கட்டப்பட்டிருந்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. இச் செப்பேடு தற்போது திருநெல்வேலி சிந்து பூந்துறையில் உள்ள தட்சிண மாற நாடார் சங்க அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது (இச் செப்பேட்டின் வாசகங்களைத் திரு. எஸ். இராமச்சந்திரன் வாசித்துள்ளார். இச் செப்பேடு குறித்து Social movements of Nadars of Thoothukudi District என்ற ஆய்வுக் கட்டுரையில் S.D. நெல்லை நெடுமாறன் & எஸ். இராமச்சந்திரன் ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது). இச் செப்பேட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரின் ஆட்சி குறிப்பிடப்படுகிறது. சான்றோர் சமூகத்தவரில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இப்பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது உண்மையே. ஆறுமுகநேரி, குரும்பூர்ப் பகுதி நாடார்கள், தாமே பூர்விகத் தென்பாண்டி நாடாள்வார்கள் என்று உரிமை கொண்டாடி வந்தமையால் அவர்களுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பகைமை நிலவிற்று. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவர்கள் தக்ஷ¢ணமாற நாடார்கள் (தென்பாண்டி நாடாள்வார்கள் என்பதன் வேறு வடிவம்) என்ற பெயரில் வணிகர் சங்கம் அமைத்து, ஆங்கிலேய வணிகக் கும்பினியின் ஆதரவுடன் தமது பொருளாதார நலன்களைக் காத்துக் கொண்டனர். 






அதே வேளையில், திருவைகுண்டம் வட்டத்திலுள்ள பெருங்குளத்தையடுத்துள்ள 'நட்டாத்தி' எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு வாழ்ந்த சான்றோர் குலப் பிரிவினர் ஊமைத்துரை, செவத்தையா தலைமையில் அணிவகுத்ததோடு, ஆங்கிலேயக் கும்பினியரால் இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஒரு வார கால அளவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கும் உதவினர். (கோட்டை மீண்டும் விரைந்து எழுப்பப்பட்டது குறித்துப் பக்கம் 204, South Indian Rebellion by K. Rajaiyyan காண்க.) இவர்களால் வழங்கப்பட்ட கோழி முட்டையின் வெள்ளைக் கரு, பனை வெல்லம் (கருப்புக்கட்டி) ஆகியவையே கோட்டைக் கட்டுமானப் அணிக்கு முதன்மையாகப் பயன்பட்டன. நட்டாத்தி நாடார்கள், ஊமைத்துரையின் தம்பி செவத்தையா, குமாரசாமித் தளவாய், மருது வம்சத்தவராகிய சிவஞானம் ஆகியோருக்கு அடைக்கலம் அளித்ததன் அடையாளமாக இவர்களின் ஊரையொட்டிச் செவத்தையாபுரம் (சிவத்தையாபுரம் என்று 19ஆம் நூற்றாண்டைய கல்வெட்டுக் குறிப்பு உள்ளது. அண்மைக் காலமாகச் சிலர் செபஸ்டியான்புரம் எனக் கூறிவருகின்றனர்), குமாரகிரி, குமாரபுரம், சிவஞானபுரம் - ஆகிய ஊர்கள் உள்ளன. 1801ஆம் ஆண்டில் செவத்தையா தலைமையில் சான்றோர் குலத்தவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து 13-03-1801 தேதியிட்ட Madras Council, 'Military Consultations Vol 280 p. 1481 - சென்னை ஆவணக் காப்பகப் பதிவேட்டில் ஆதாரம் உள்ளது.







நன்றி: S.D. நெல்லை நெடுமாறன்
                  அ. கணேசன்

Friday 27 March 2015

உதாசீனப்படுத்தப்படும் தமிழர் விளையாட்டு

கபடி  அல்லது  சடுகுடு அல்லது  பலிஞ்சடுகுடு  என்று  அழைக்கப்படும்  விளையாட்டு  தமிழர்களால்  பல  காலமாக,  பரவலாக  விளையாடப்  படும்  தமிழர்  விளையாட்டுகளுக்குள்  ஒன்று.  கபடி  என்ற  பெயரும்  தமிழ்ப்பெயராக  இருக்கும்  என்று  கூறப்படுகிறது.  அதாவது கை+ பிடி = கபடி.  இது  தெற்கு  ஆசியா  நாடுகளில்  பரவலாக  விளையாடப்படுகிறது. இன்று White Collar Jobல் செட்டிலாகும் நம் தமிழர்களே கபடி போன்ற விளையாட்டுக்கள் நாகரிகம் அற்ற விளையாட்டாக கருதுவது வருந்தத்தக்கதாக உள்ளது! மேற்கத்திய விளையாட்டுக்களில் காட்டும் ஆர்வத்தை நம் பாரம்பரிய விளையாட்டுக்களிலும் காட்டலாம். தமிழக அரசும் இவ்விளையாட்டுக்களை ஊக்குவிக்கலாம். பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிவது நமது பாரம்பரியத்தை அழிப்பதோடல்லாமல் நம் பாரம்பரிய பல நல்ல குணங்களான வீரம், உழைப்பு, சுறுசுறுப்பு போன்றவற்றையும் அழித்து விடுகின்றன! மேற்கத்திய விளையாட்டுக்களை விட அதிக பரபரப்பான விளையாட்டு கபடி. கிராமங்களிலும் முன்பு நகரங்களிலும் கபடி விளையாடியவர்கள் இரவு பகல் பாராமல் விளையாடிய விளையாட்டு இது! எனக்கு தெரிந்து கிராமங்களில் பகலில் கடுமையாக உழைத்து விட்டு வரும் இளைஞர்களுடன் சோர்ந்து போகாமல் மாலையில் கபடி விளையாடியதுண்டு! விபச்சார ஊடகங்கள் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இருட்டடிப்பு செய்து இளைஞர்களை திசை திருப்புவதும் இந்த விளையாட்டுக்கள் விளிம்பில் நிற்பதன் காரணம்!



கபடி என்பது தமிழ்நாட்டில் சரித்திர காலம் தொட்டே விளையாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் சடுகுடு என்றும், பெரும்பாலான இடங்களில் கபடி என்றும் விளையாடப்பட்ட இந்த தமிழரின் விளையாட்டுக்கு உயிர்கொடுத்தவர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். இவர், 1950–1960–களில் பட்டி தொட்டியெல்லாம் இந்த கபடி போட்டியை நடத்த சொல்லி, அதற்காக தாராளமாக உதவிகளையும் செய்தார். அவர் ஏற்றிவைத்த தீபம் மெல்ல, மெல்ல அண்டை மாநிலங்களில் பரவி, இந்தியா முழுவதிலும் கபடிக்கான தனி மவுசை ஏற்படச்செய்தது. ஆனால், கபடி விளையாட்டு போட்டி ஆசிய அரங்கில் அறிமுகம் இல்லாமல் இருந்தது.


இந்த நிலையில், சி.பா.ஆதித்தனாரின் மகனான மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக இருந்தபோது, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் துணைத்தலைவராகவும் இருந்தார். அப்போது அவரது முயற்சியின் காரணமாக தன்னுடன் அந்த கவுன்சிலில் சக நிர்வாகியாக இருந்த துபாய் மன்னரையும் ஆதரவு தரச்சொல்லி பெரும் முயற்சியில், 1990–ல் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி விளையாட்டை சேர்த்தார். முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை பெற்ற இந்திய அணி, அதிலிருந்து தொடர்ந்து நடந்த எந்த போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை பெறாமல் நாடு திரும்பியதில்லை. 



பிரபல கபடி பாடல்:

நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாண்டிக் குதிக்க வாரன்டா!
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.

சந்தேகமில்லாமல் (பாரம்பரிய) தமிழன் வீரன்தான்!

என்னை கவர்ந்த பாடல் வரிகள் - ஒவ்வொரு பூக்களுமே

கடுமையான தோல்விகளை கண்டு மனம் துவண்டு, விளிம்பில் நின்ற காலக்கட்டங்களில் கூட நம்பிக்கை ஏற்படுத்திய பாடல் வரிகள் இவை. இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என முடிவு செய்து மூடி விடலாம் என முடிவு செய்த பொழுதெல்லாம் என மனதை திறந்துவிட்ட பா.விஜய்யின் வைர வரிகள். இந்த பாடலின் சிறப்பு என பல உண்டு. இந்த பாடலை கேட்க மட்டுமல்ல பார்த்தாலும் நம்மை நெகிழச் செய்துவிடும்! இந்த பாடலை கேட்கும் போதும் சரி, பார்க்கும் போதும் சரி என்னை அறியாமல் புல்லரித்துவிடும்! முக்கியமாக இந்த பாடல் வரிகள் தெளிவாக காதில் விழும்படி அருமையாக இசையமைத்த பரத்வாஜ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்! மனம் வெதும்பி இருந்தாலும் சரி, வாழ்வின் விளிம்பில் இருந்தாலும் சரி நம் தோல்விகளை புரட்டிப் போடும் வல்லமை படைத்த பாடல்களில் இதுவும் ஒன்று!! ஆர்ப்பாட்டமில்லாமல் மனதை வருடி, என் தாயோ, என் மனைவியோ எனக்கு ஆறுதலும் தெம்பும் கூறுவது போன்ற சூழலை தந்த பாடல் என்றால் மிகையாகாது! பா.விஜய்க்கு விருது வாங்கித் தந்த பாடல் மட்டுமல்ல, இது அவருக்கு ஒரு மணி மகுடமே!!



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிருந்தால்.. அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

Thursday 26 March 2015

மணிமுத்தாறு கண்ட மாவீரன் கே.டி கோசல்ராம்

1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர்.
1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார்.
ஆலயப்பரவேசம் : தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்.
அமைப்பாளர் : உப்புத் தொழிலாளர் சங்கம் நாசரேத்தில் கூட்டுறவு நூற்பு ஆலை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்து வெற்றி கண்டார்.
மணிமுத்தாறு அணை கட்டுவதங்கு நிதி இல்லை கே.டி.கே. வசூலித்து தந்தால் திட்டம் என்று கைவிரித்த மராமத்து இலாகா அமைச்சர் திரு.பக்தவச்சலம் கூற்றைச் சவாலாக ஏற்றுக் கொண்டு ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்து சாதனை செய்தார்.

மறைக்கப்பட்ட வரலாறு - குலசேகரபட்டினம் கலவரம்

நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு "சுதந்திர சேனை" என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.

1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.

ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் "அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது. அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர்.

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர். நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.





புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர். மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

 செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று 'வந்தேமாதரம்' என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர். கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார். சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர்.  புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர்.

 ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார். தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர். மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீசில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

 1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி குடிபோதையில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இவர்களை எதிர் கொண்டான். 

கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பி.எஸ்.ராஜகோபாலன் எனும் இளைஞரின் நெஞ்சைக் குறிபார்த்து அந்த லோன் துரை தன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுவிட முயற்சி செய்தான். அவன் இருந்த நிலை, துப்பாக்கியைப் பிடித்திருந்த சூழல், இவன் ராஜகோபாலனைச் சுட்டுவிடுவானோ என்று அனைவரும் பதறினர். அப்போது உடன் வந்த பல தொண்டர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வேல்கம்பை உயர்த்தி அந்த லோன் துரையின் மார்பில் பாய்ச்சினார். அதே நொடியில் உடன் வந்த தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர். லோன் துரை கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது. லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. 

கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது. குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து "குரும்பூர் சதி வழக்கு" பதிவாகியது. லோன் துரையின் கொலை "குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யர், ஐ.சி.எஸ். பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர். 1942 அக்டோபர் மாதம் வழக்கு தொடங்கியது. 1943 பிப்ரவரி ஆறாம் தேதி முடிவடைந்து, 




எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யருக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் அப்படி கோபமோ தெரியவில்லை. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை! ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை. மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

 நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், "நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?" என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது. இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், "இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்" என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை. மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று.

 அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர சிலர் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர். தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார். காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார். இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. 

 பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன. உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார்.

 ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி. லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும். அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது.

 அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர். இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் "தூக்குமேடை ராஜகோபாலன்", "தூக்குமேடை காசிராஜன்" என்று வழங்கலாயினர். 

இதில் ராஜகோபாலன் அவர்களை தூக்கில் போட்டும் உரம்வாய்ந்த அந்த உடலை ஓன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே பின்னர் தீர்ப்பில் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று வந்ததாம். வெள்ளை போலீஸ் அதிகாரியை கொன்றவரை வெள்ளையன் சும்மா விடுவானா? என்ற கருத்தையும் முன் வைக்கிறார் பாபுஜீ நாடார் அண்ணாச்சி அவர்கள்! இந்த கருத்துக்கும் ஆதாரம் தேடி கொண்டிருக்கிறோம்!