Monday 2 March 2015

பெருந்தலைவர் - ஆட்சியில் மின் உற்பத்தி

பெருந்தலைவர் அரசு மின் உற்பத்தியை பெருக்கவதிலும், கிராமப் பகுதிகளை மின்மயபாக்குவதிலும் அதிக சிரமம் எடுத்துக் கொண்டது. காமராஜர் ஆட்சியேற்ற போது, தமிழகத்தில் மேட்டூர், பைக்கரா, பாபநாசம் எனும் மூன்று மின்னுற்பத்தி தலங்களை மட்டுமே இருந்தது.

காமராஜர் பதவியேற்றதும், முதல்/இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் நான்கு பெரிய மற்றும் சிறிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. ஆனால் அரசின் வருமானமோ வெறும் 45 கோடி, முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் சென்னை மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ 95 கோடி.

நீர்மின் திட்டங்கள்:
1. குந்தா நீர் மின் திட்டம் ( 26 கோடி )
2. பெரியாறு மின் திட்டம் ( 10 கோடி) - இது திருவாங்கூர்-கொச்சி அரசோடு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டது.
3. கும்பார்-அமராவதி மின் திட்டம் ( 8 கோடி )
4. மேட்டூர் கீழ்நிலை திட்டம் (12 கோடி )
5. மோயாறு நீர்மின் திட்டம்
6. கூடலூர் நீர்மின் திட்டம்

அனல்மின் திட்டங்கள்:
1. நெய்வேலி அனல்மின் திட்டம்
2. சமயநல்லூர் அனல்மின் நிலையம்
3. சென்னை அனல்மின் நிலையம் (மூன்றாவது மின் உற்பத்தி பிரிவு)

அணுமின் திட்டங்கள்:
1. கல்பாக்கம் அணுமின் திட்டம். 

குறிப்பாக பெரியாறு மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம் முதலிய அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்களை நிறைவேற்றி முடித்ததனால், பெருந்தலைவர் அரசு கிராமப்புறங்களை விரைந்து மின்மயமாக்க முடிந்தது. 






மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு ஆகியவற்றைச் சீராகவும் செம்மையாகவும் செயல்படுத்த காமராஜர் அரசு, மின் வாரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். மின்சாரத்தை வணிக நோக்கில் லாபகரமாக விநியோகிக்கவும், அன்றாட நடைமுறைகள கவனிக்கவும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் மின் வாரியம் அமைக்கப்பட்டது. இத்திட்டங்களால், சென்னை மாநில அரசு, காமராஜர் ஆட்சி காலத்தில், மின்சாரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் இந்தியாவில் முதல் மாநிலமாக விளங்கியது, நீர் மின் உற்பத்தி திறனில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது. 

இவையனைத்தையும் தன் முதிர்ந்த அனுபவக் கூட்டாளியான திருவாளர்கள் கக்கன், பக்த்வத்சலம், சுப்பிரமணியம், வெங்கட் ராமன் துணையுடன் நிறைவேற்றினார் காமராஜ். 

மேலும் காமராஜ் பதவி விலகிய 1963-ம் ஆண்டு நிறைவேற்றுப்பட்டுக் கொண்டிருந்த திட்டங்களில் குறிப்பிடக் கூடியவை - சாண்டிய நல்லூர் நீர்மின் திட்டம், குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு, பெரியர் நீர்மின் திட்ட இரண்டாவது பிரிவு, பரம்பிக்குளம் நீர்மின் திட்டத்தின் பல பகுதிகள். இவை மட்டுமின்றி ஒகேனக்கல், பாண்டியாறு, புன்னம்புழா, மேல் தாமிரபரணி, சுருளியாறு, பரலியாறு ஆகிய நீர்மின் திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்படுத்தக் கூடிய நிலையை காமராஜ் அரசு ஏற்படுத்தியது.

இந்த வகையில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்ட மின் திட்டங்கள் மூலமாக, மின்சக்தி திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. காமராஜ் பொறுப்பேற்ற போது 156 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, 571 மெகாவாட்டாக உயர்ந்தது. 

No comments: