Tuesday 3 March 2015

பெருந்தலைவர்-தோள் தட்டாத முதல்வர்

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய அணைகள், நீர் தேக்க ஏரிகள் சார்ந்த பணிகளை செய்தது பெருந்தலைவர் அரசு. காமராஜர் ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்க்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்றது. 

மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறிய நீர் பாசண திட்டங்களை செம்மைபடுத்த தொடங்கியது.





நீர் பாசனத்திற்க்கு பயன்பட்டு வந்த குளங்களை செம்மை படுத்தியது; தூர் வாரி ஆழப்ப்டுத்தியது; சிதைந்த குளங்களை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. வானம் பார்த்த பூமியில் இந்த சிறிய நீர் பாசன திட்டங்கள் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்க்கு பெரிதும் உதவின. இத்திட்டத்தின் கீழ், வடிகால் நீர் கசிவுக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. 

விவசாயிகளுக்கு கிணறு வெட்ட 25% மானியத்துடன் நீண்ட கால தவணைக் கடன் வழங்கப்பட்டது. பாசனத்திற்க்கு பயன்படும் ஆயில் என்ஞின்களும், மின் பம்பு செட்டுகளும் தவணை முறைக் கடனில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காமராஜரின் ஆட்சியில் தமிழ் நாட்டின் நிலப்பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட 150 லட்சம் ஏக்கரில், 56 லட்சம் ஏக்கர் நிரந்தர நீர்பாசண வசதியை பெற்றது. இதன் மூலம், தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. 

சென்னை மாநிலத்தின் பல கிராமங்கள், நீர்ப்பாசனத்திற்க்கு பயன்படும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பை பெற்றன. பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் தொடங்கிய மின் பம்ப் செட் இணைப்புகள், முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் 14,626 ஆகவும், இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் 75,193 ஆகவும், மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில், 1966-ல் 2,60,000 ஆகவும் அதிகரித்தன. இதனால் கிணற்றுப் பாசன வசதி பெருகி, காமராஜர் பதவி விலகிய 1963-ம் ஆண்டிலேயே, விவசாய உற்பத்தி அதிகரித்துச் சென்னை மாநிலம் "மிகு தானிய உற்பத்தி நிலையை" கண்டது.



தமிழகத்தின் மேற்க்கெல்லையில் அமைந்த சிற்றூர் ஆனைமலை. உயர்ந்து செல்லும் மலைப் பகுதியில் சென்றால் கரிமலை, ஒரு கொம்பன்மலை, சுங்கமலை, பரம்பிக்குளம் மலை இவற்றிடையே பொழியும் மழை நீர் பரம்பிக்குளம் ஏரியாக உருவெடுத்து நில அமைப்பு காரணமாக கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கேரளாவில் புகுந்து கடலில் கலந்து கொண்டிருந்தது. 



தமிழகத்து நீர், நிலவமைப்பின் காரணமாக மேற்கே ஓடி வீணாகக் கூடாது. இந்த நீர் முழுமையும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட வேண்டும் என்று அத்துறை நிபுணர்களை திட்டமிடச்சொன்னார் பெருந்தலைவர். அன்றைய கேரள அரசோடும் சகோதரத்துவ உணர்வோடு பேச்சுவார்த்தை நடத்தினார், வெற்றி பெற்றார்.

மலைமுகடுகளின் அமைப்பை ஆய்ந்தனர். மலையைக் குடைந்து மேற்கே ஓடும் நீரைக் கிழக்கு முகமாகத் திருப்பிவிடலாம். ஆனால் வரும் நீருக்கு கொள்ளிடம் வேண்டும். அதையும் கண்டுபிடித்தனர். பொள்ளாச்சி நகருக்கு தென்பால் வால்பாறை மலையில் அடிவாரத்தில் இயற்கையன்னை அமைத்திருந்த ஆழியாற்றிலே நீரை சங்கமித்துவிடச் செய்துவிடலாமென முடிவெடுத்தனர்.

பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் உருவம் பெற்றது. இதைக் காணும் மேனாட்டு நீர் வழித்துறை அறிஞர்கள் அனைவரும் இது அரும் சாதனை என வியக்கின்றனர்.

அவருக்குப் பின் வந்த முதல்வர்களெல்லாம் செய்யும் சின்னஞ்சிறு திட்டங்களுக்கெல்லாம் மலையளவு விளம்பரம் செய்தார்கள், செய்கிறார்கள். 

ஆனால் மலையையே குடைந்து அனைவரையும் மலைக்க செய்த பெருந்தலைவர் சிறுகுன்று மணியளவு கூடத் தன் தோளை உயர்த்திக்காட்டவில்லை.

No comments: