Tuesday 24 March 2015

ராஜபக்சே குறித்து மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் நவீன சிற்பி என்று அழைக்கப்படும், சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ கூறியுள்ளார்.
“லீ குவான் யூ உடனான உரையாடல்கள்“ என்ற தலைப்பில், லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
முன்னணி பத்திரிகையாளரான பேராசிரியர் ரொம் பிளேட், எழுதியுள்ள இந்த நூலில்தான் மகிந்த ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார்
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது.
இலங்கையில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை.
இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர்.
இதன்மூலம் இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று சிறிலங்காஅதிபர் ராஜபக்ச கூறி வருகிறார்.
இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்.
சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன்.
அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது.
சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை.
பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான்.


ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.
யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது.  அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள்.
முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள்.
ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.
சிறிலங்காவில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது.
ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.
அதற்கேற்றபடி தான் சிறிலங்கா அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.
அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள் தான்.
மலேசியா, சிங்கப்பூரில் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும் தான் கடுமையாக உழைக்கிறார்கள்.
அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள்.
எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம் தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.

No comments: