Sunday 15 March 2015

சான்றோர் சமூகம் - வணிகம் - ஒரு ஆய்வு - பகுதி 2

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கரையார் அல்லது முக்குவர் எனப்பட்ட கடற்படை வீரர்களுக்கும், வணிகச் செட்டியார்களுக்கும் ஏற்பட்ட ஒரு பூசலின் போது வலங்கை உய்யக்கொண்டார் எனப்பட்ட சான்றோர் குல வீரர்கள் கரையார்களை வீழ்த்திச் செட்டியார்களைக் காத்தனர். செட்டியார்கள் இதற்கு நன்றியாகச் சான்றோர் குல வீரர்களைத் தம் தோளில் சுமந்து கெளரவித்தனர். 'செட்டி தோளேறும் பெருமாள்' என்று சான்றோர் குல வீரர்கள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை வர்ணிக்கின்ற 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை மாலை என்ற தலைப்பில் அமைந்த வில்லுப்பாட்டு இலக்கியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது:


வணிகர் மனைபுகுந்து வைத்த முதலுள்ளதெல்லாம்
அணியாக சென்று அருந்தி கரையான் வடிவாம்
பட்டு பருத்தி பசுமை முதலுள்ளதெல்லாம்
வெட்டிக் கரையான் வடிவாய் வீரத்திரம் பண்ணுகையில்
கண்டு வணிகர்களும் கலங்கி கிலேசமுத்து
தொண்டுசெய்து யாவரையும் தொளுது அடிபணிந்து
வந்த வகையின்று வகை வகையே தானுரைத்து
எந்தன் வினை தீர்ப்பார் யாவரோ வென்று சொல்லி
வாடி வணிகர் மனைதோறும் போயிருந்து
தேடி எழுநூத்துவரை சென்று கண்டு ஏதுரைப்பார்
தாருதனை வென்று தரணிதனிலீரேளும்
வாரிதனில் நீராடி வந்த குலச் சான்றோரே
பத்திரகாளி முலைப்பாலையுண்ட பாலகரே
வித்தியாதரன் யீன்ற வீரரே கேட்டருள்வீர்
தரைமீதிலெங்கள் சகல முதலுள்ளோரும்
கரையானருந்த கலங்கிகுடி யிளந்தோம்
போக வளிதேடி பொறி கலங்கி தட்டளிந்து
சாகமதியின்றி தலந்தோறும் போயிருந்தோம்
எங்கள் வினைதீர்த்து ரெட்சிக்க வல்லவராய்
உங்களுடை நாமம் ஒருநாளும் நாம்மறவோம்
என்றுயியல் வணிகர் எல்லோரும் செப்பியபின்
சென்று வலங்கையுள்ளோர் சிவன் கொடுத்த வித்தையினால்
கரையானை வெல்ல கெளதாரியாய் சமைந்து
அரையாமல் கொத்தி அருந்தி கரையான் குலத்தை
சேர்த்து துவைத்து திசை எட்டுந் தான் புகள
பாரில் வணிகருக்கு பசுமை விளங்க வைத்து
மண்டலத்தில் நன்றாய் வணிகர் கலி தீர்ந்து
பண்டுபோல் செல்வம் மிகு பாக்கியமுண்டான பின்பு
வாளும் புவியில் வணிகர் எழுநூத்துவரை
தோள்மேல் எடுத்து சுமந்தனர்காண் சோளன்முன்னே
வாளேறு மன்னா வாழ்த்தி குலசோள மன்னன்
தோளேறும் குமாரர் என்று தொல்புவியார் மெய்த்திடவே





('வலங்கை மாலை சான்றோர் குல விளக்கு' மாநாடு சுந்தரம் புலவர் இயற்றியது. பதிப்பித்தவர்: ஆர். சாமி நாடார், பூவன்னூர், 1904)
வலங்கை மாலை என்ற இவ் வில்லுப்பாட்டில் குறிப்பிடப்படுகின்ற மேற்குறித்த செய்தி போன்ற பல வரலாற்றுச் செய்திகள் சான்றோர் குலச் செப்புப் பட்டயங்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகின்றன. இச் செப்புப் பட்டயங்கள் 16-17ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை அல்ல எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டி மற்றும் கருமாபுரம் சான்றோர் மடச் செப்பேடுகள் மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறைப் பேராசிரியர் செ. இராசு அவர்களால் 'கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்' என்ற நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டு அவல்பூந்துறை சான்றோர் மடச் செப்பேடும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சான்றோர் மடச் செப்பேடும், வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் (ஆசிரியர்: எஸ். இராமச்சந்திரன், பதிப்பு: உலகத் தமிழாய்வு நிறுவனம், சென்னை) என்ற நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.




பருத்தி வாணிபம் மட்டுமின்றிப் பருத்தி நெசவினை அறிமுகம் செய்தவர்களும் சான்றோர்களே எனக் கொள்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கலிங்க நாட்டிலிருந்து விஜயன் தலைமையில் 700 வீரர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறி ஆட்சி புரிந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த விஜயனுடன் சென்ற எழுநூறு வீரர்களும் சான்றோர் குல வீரர்கள் என்றும் இவர்களுக்குச் சிங்க வீரர் மெய்த்துணைவர் எழுநூற்றுவர் என்று பெயரென்றும் சான்றோர் குலப் பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. இந்த எழுநூற்றுவர் தலைவன் குருபோளனி என்ற இயக்கர் குலப் பெண்ணைத் திருமணம் புரிந்ததாக வலங்கை மாலை குறிப்பிடுகிறது. குருபோளனி என்று வலங்கை மாலையில் குறிப்பிடப்படும் இயக்கர் குலப் பெண்ணின் பெயர் குவேணி என்று மஹாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறது. குவேணியே நெசவுக் கலையை அறிமுகப்படுத்தியதாகவும் பாரம்பரியக் கதைகள் உள்ளன. வலங்கை மாலையோ இந் நிகழ்வுகளையெல்லாம் ஒன்று கலந்து சிவனுக்குத் தூசு (ஆடை) நெய்து கொடுத்ததன் மூலம் தூசோர் என்று பட்டப்பெயர் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. தமது சிறுகுடியினர் எனப்படுகின்ற (சட்ட திட்டமான மண உறவு அல்லாத உறவில் பிறந்த) இளந்தாரி மக்களுக்கு ஈழவர் என்ற பட்டம் கொடுத்ததாகவும், நெசவுத் தொழிலை அவர்களுக்குரிய தொழிலாகச் சான்றோர்களே நிர்ணயம் செய்ததாகவும் வலங்கை மாலை குறிப்பிடுகிறது.

நன்றி-S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

4 comments:

Un known said...

அருமை....
நிறைய எழுதுங்கள்...

Unknown said...

இன்னும் நிறைய தகவல்களை வரலாற்று தகவல்களை பதிவிடுங்கள்

INDIAN said...

Anbarasu said...

கரையர் வேறு முக்குவர் வேறு.

கரையர் கிழக்கு கடற்கரை பரதவர்கள்.

வருணகுலத்தான் என்ற தஞ்சை நாயக்க தளபதி 5000 படை வீரர்களை போச்சுகீயர்க்கு எதிரிகா வழி நடத்தினார் தொடக்கத்தில் வெற்றிகள் பெற்றார் பின்பு மதுரை நாயக்கர் உதவி உடன் போற்றுகிசியர் அவனை பெற்றி கொண்டார்கள்.

கரையர் உருவாக்கமே முக்குவர் மற்றும் இஸ்லாமிய படையை வீழ்த்த தான்.


முக்குகன கற்றான என்ற முக்குவர் வீழ்ச்சி என்ற 15 ஆம் நூற்று ஆண்டு ஓலை8 ஆவணம் மூலம் அறிய முடியும்.