Wednesday 4 March 2015

மருத்துவர்களுக்குப் படியளந்த பெருந்தலைவர்

மருத்துவப் படிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பயிற்சிக் காலத்தில் எவ்வித உதவித்தொகையும் வழங்கப்பட்டதில்லை. பயிற்சி மருத்துவர்கள் (House Surgeons)  தங்களின் தேவைகளுக்கு தங்கள் கைக் காசை போட்டே பயிற்சியை முடித்தனர். பயிற்சி மருத்துவர்கள் அவ்வபோது துறை சார்ந்த அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியும், பாறையில் முட்டிய கதையாகவே முடிந்தது.

காமராஜர் அரசில் அத்துறையின் அமைச்சரும் மாணவர்கள் தரும் விண்ணப்பத்தை வாங்குவதோடு சரி, எந்தவித தீர்வும் எடுக்கவில்லை. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் இருபது பேர் கூடி காமரஜரை சந்தித்து தங்கள் கோரிக்கையை சொல்வதென முடிவெடுத்தனர். அக்குழுவில் இன்றைய பிரபல மருத்துவர்கள் சிலரும் இருந்தனர். அக்குழுவினர் முதல்வரை சந்திக்க தலைமை செயலகம் சென்றனர். அன்றைய பணிமுடித்து வெளியேறுகையில் காமராஜரிடம் விஷயத்தைக் கூற, உடனே அவர்களைப் பார்க்க வந்தார். 





" நீங்களெல்லாம் யாரு?" காமராஜ்.
" ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்ஸ்".
" அப்படின்னா என்ன" காமராஜ்.
" ஐந்து வருஷம் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருஷம் பயிற்சி டாக்டராக வேலை பார்க்கிற்வர்கள். நாங்கதான் இந்த ஒரு வருசத்துல வருகிற நோயாளிகளை சோதிப்பது, அவசர சிகிச்சை செய்வது, இரவும் பகலும் வார்டுகளில் நோயாளிகளை பார்த்துக்கிறது. இந்த ஒரு வருஷ பயிற்சிக்கு பிறகுதான் நாங்க டாக்டரா வெளியே வேலை பார்க்க முடியும்."
" சரி ...இப்ப என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க" காமராஜர்.
" ஐயா, இந்த ஒரு வருச பயிற்சி காலத்துக்கு எங்களுக்கு எதாவது உதவித் தொகை STIPEND தரனும்னு கேட்டுக்கிட்டுக்கோம். மந்திரி அம்மா பார்க்குறேன், செய்றேன்னு சொல்றாங்களே தவிர எதுவும் செய்யமாட்டேங்றாங்க".
" இதென்ன அநியாயமா இருக்கு ...5 வருஷம் படிச்சுட்டு ஒரு வருசம் ஓசியா வேலை வாங்குறது சரியில்லையே... சரி நீங்க போங்க, நான் அதை என்னன்னு பார்க்கிறேன்" காமராஜர் அனைவரையும் கும்பிட்டு அனுப்பினார்.

நான்காம் நாள், பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.105 சம்பளமும், கடந்துவிட்ட ஆறு மாதங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டுமென்ற் உத்தரவு வந்தது.

No comments: