Friday 27 March 2015

உதாசீனப்படுத்தப்படும் தமிழர் விளையாட்டு

கபடி  அல்லது  சடுகுடு அல்லது  பலிஞ்சடுகுடு  என்று  அழைக்கப்படும்  விளையாட்டு  தமிழர்களால்  பல  காலமாக,  பரவலாக  விளையாடப்  படும்  தமிழர்  விளையாட்டுகளுக்குள்  ஒன்று.  கபடி  என்ற  பெயரும்  தமிழ்ப்பெயராக  இருக்கும்  என்று  கூறப்படுகிறது.  அதாவது கை+ பிடி = கபடி.  இது  தெற்கு  ஆசியா  நாடுகளில்  பரவலாக  விளையாடப்படுகிறது. இன்று White Collar Jobல் செட்டிலாகும் நம் தமிழர்களே கபடி போன்ற விளையாட்டுக்கள் நாகரிகம் அற்ற விளையாட்டாக கருதுவது வருந்தத்தக்கதாக உள்ளது! மேற்கத்திய விளையாட்டுக்களில் காட்டும் ஆர்வத்தை நம் பாரம்பரிய விளையாட்டுக்களிலும் காட்டலாம். தமிழக அரசும் இவ்விளையாட்டுக்களை ஊக்குவிக்கலாம். பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிவது நமது பாரம்பரியத்தை அழிப்பதோடல்லாமல் நம் பாரம்பரிய பல நல்ல குணங்களான வீரம், உழைப்பு, சுறுசுறுப்பு போன்றவற்றையும் அழித்து விடுகின்றன! மேற்கத்திய விளையாட்டுக்களை விட அதிக பரபரப்பான விளையாட்டு கபடி. கிராமங்களிலும் முன்பு நகரங்களிலும் கபடி விளையாடியவர்கள் இரவு பகல் பாராமல் விளையாடிய விளையாட்டு இது! எனக்கு தெரிந்து கிராமங்களில் பகலில் கடுமையாக உழைத்து விட்டு வரும் இளைஞர்களுடன் சோர்ந்து போகாமல் மாலையில் கபடி விளையாடியதுண்டு! விபச்சார ஊடகங்கள் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இருட்டடிப்பு செய்து இளைஞர்களை திசை திருப்புவதும் இந்த விளையாட்டுக்கள் விளிம்பில் நிற்பதன் காரணம்!



கபடி என்பது தமிழ்நாட்டில் சரித்திர காலம் தொட்டே விளையாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் சடுகுடு என்றும், பெரும்பாலான இடங்களில் கபடி என்றும் விளையாடப்பட்ட இந்த தமிழரின் விளையாட்டுக்கு உயிர்கொடுத்தவர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். இவர், 1950–1960–களில் பட்டி தொட்டியெல்லாம் இந்த கபடி போட்டியை நடத்த சொல்லி, அதற்காக தாராளமாக உதவிகளையும் செய்தார். அவர் ஏற்றிவைத்த தீபம் மெல்ல, மெல்ல அண்டை மாநிலங்களில் பரவி, இந்தியா முழுவதிலும் கபடிக்கான தனி மவுசை ஏற்படச்செய்தது. ஆனால், கபடி விளையாட்டு போட்டி ஆசிய அரங்கில் அறிமுகம் இல்லாமல் இருந்தது.


இந்த நிலையில், சி.பா.ஆதித்தனாரின் மகனான மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக இருந்தபோது, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் துணைத்தலைவராகவும் இருந்தார். அப்போது அவரது முயற்சியின் காரணமாக தன்னுடன் அந்த கவுன்சிலில் சக நிர்வாகியாக இருந்த துபாய் மன்னரையும் ஆதரவு தரச்சொல்லி பெரும் முயற்சியில், 1990–ல் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கபடி விளையாட்டை சேர்த்தார். முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை பெற்ற இந்திய அணி, அதிலிருந்து தொடர்ந்து நடந்த எந்த போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை பெறாமல் நாடு திரும்பியதில்லை. 



பிரபல கபடி பாடல்:

நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாண்டிக் குதிக்க வாரன்டா!
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.

சந்தேகமில்லாமல் (பாரம்பரிய) தமிழன் வீரன்தான்!

No comments: