Sunday 22 March 2015

சொந்த செலவில் சூனியம்

நேத்து கிளப் பார்ட்டி போய்ட்டு வந்து நெட்ல நம்ம சினேகா பேட்டிய பாத்துக்கிட்டு இருந்தேன்....
வீட்டுக்காரம்மா ரொம்ப நேரமா கூப்பிட்டு கிட்டு இருந்தாங்க... நான் காதுல விழுந்தும் விழாத மாதிரியே இருந்தேன்.....
ஒருவழியா சினேகா பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.
அதுக்காகவே காத்திக்கிட்டு இருந்த மாதிரி வீட்டம்மா என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க
“ஏங்க….?” அப்படின்னு செல்லமா கூப்பிட்டாங்க
“என்ன குட்டிமா?” எனக்கு திகிலடிச்சிருச்சு
“அது வந்து… உங்க கிட்ட ஒரு புதிர் கேக்க போறேன்…” வீட்டம்மா சிரிச்சி கிட்டே சொன்னாங்க!
“உங்க அப்பா எட்டு வருசத்துக்கு முன்னாடி போட்ட புதிருக்கே இன்னும் விடை தெரியல” நான் முனுமுனுத்தேன்.
வீட்டம்மா முறைக்கிறத பார்த்ததும் சமாளிப்பா “அது…. உன்னைய மாதிரி ஒரு புத்திசாலிய
சமாளிக்கிர பொறுப்ப குடுத்துட்டாருன்னு சொல்ல வந்தேன்… ” ன்னு சொன்னேன்! 
“சரி… என்னை நல்லா பாருங்க…” வீட்டம்மா மறுபடியும் பாசமா கேட்டாங்க!
“ஐயயோ… என்னாச்சு குட்டிமா…” நான் பதறுனேன்.
“என் முகத்துல இன்னிக்கு ஒரு சேஞ்ச் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” வீட்டம்மா சவால் பார்வை பார்த்தாங்க!
“அடக் கடவுளே… குட்டிமா… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா எதாச்சும் சமைப்பியே…அப்படி ஏதாவது செஞ்சு குடு… சத்தம் போடாம சாப்பிடறேன்…” நான் டெர்ரர் ஆனேன்.
“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய சேஞ்ச் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…” அப்படினாங்க வீட்டம்மா!! 

சரி... இன்னிக்கு கிரகம் தோள்ல ஏறி உக்காந்திருச்சு!!
“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”ன்னு யோசிச்சேன்...
 “அடடா… என் பெரிய புத்திர சிகாமணி இன்னிக்கு முழிக்கும் போதே கண்ணாடிய காமிச்சான்!! என் மூஞ்சிலதான் முழிச்சேனா…. ஹும்… ”  முனுமுனுத்தேன், 
 “சரி சரி…சொல்றேன்” ன்னு எந்திரன் படத்துல நம்ம ரஜினி சிட்டி ரோபோ தயாரிக்க யோசிச்ச அளவுக்கு யோசிச்சேன்!!
என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன சேஞ்ச்…” வீட்டுக்காரம்மா ஆர்வத்துல அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்குல தெரியும்” டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கிரம்…”  வீட்டம்மா…

 ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” சந்தோசத்துல கத்திட்டேன்.

பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டிருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்.

" சொல்லுங்க சொல்லுங்க… ” எக்ஸ்சைட் ஆனாங்க வீட்டம்மா

“அது… நீ கம்மல் போட்ருக்க” பெருமையா சொன்னேன்!

”பின்ன இதுக்கு முன்னாடி கமண்டலமா போட்டிருந்தேன்” வீட்டம்மா முறைக்க ஆரம்பிச்சாங்க!

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப”  தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன சேஞ்ச் வேற…கண்டுபிடிங்க”ன்னார் வீட்டம்மா! (ஆப்ப சீவுறாங்க)

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” மறுபடியும் எந்திரன் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசிச்சுட்டு “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ
டீப்பா பாக்கலையே குட்டிமா… எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” முகத்த பாவம் போல வச்சிகிட்டு வீட்டம்மாவ பார்த்தேன்

ஒரு நிமிஷம் அமைதியா யோசிச்ச வீட்டம்மா “சரி விடுங்க… நீங்க இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க” ன்னு எந்திருச்சு போய்ட்டாங்க!!

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு” ரொம்ப குஷி ஆகிட்டேன்!
 பின்னால வரப்போற விபரீதம் தெரியாம!!

கொஞ்ச நேரம் கழிச்சு கிச்சனல  இருந்து வந்த வீட்டம்மா “ஏங்க… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிஸ்டம்ல ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”  கேள்வியை முடிக்கிறதுக்கு முன்னாடியே

“ஆமா…நம்ம சினேகா ப்ரோக்ராம் தானே… இன்னிக்கு நல்லா டிரஸ் பண்ணியிருந்தாங்கல்ல ” குஷியா கேட்டேன் நான்.

 பல்லை கடிச்சு கோபத்தை அடக்கிகிட்டே வீட்டம்மா “ஆமா ஆமா அவங்க போட்டிருந்த கம்மல் நல்லா இருந்ததுச்சு இல்லங்க”

ஆர்வத்துல நானு “ஆமாம் குட்டிமா… அந்த மாங்கா டிசைனுக்கு ஏத்த மாதிரி மாங்கா டிசைன்ல சூப்பர் கம்மல்”

வீட்டம்மா எதிர்பார்த்தது இதத்தான்!
வலையில் விழுந்துட்டேன்! 

“அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என வீட்டம்மா குழிய ஆழமாய் தோண்ட ஆரம்பிச்சாங்க!

சினேகாவ பத்தி வீட்டம்மாவே ஆர்வமா பேசினதும் எனக்கு இன்னும் குசியா போச்சு!

“என்ன குட்டிமா நீ? இத கூட பாக்கலையா… பிளாக் கலர் டாப்ஸ்… பிங்க் பேன்ட் …
நல்ல காம்பினேசன்ல குட்டிமா”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சிருந்தாங்களா என்ன?” வீட்டம்மா!

“என்னடா குட்டிமா? உனக்கு சுத்தமா வர வர கவனமே போச்சு போ… பான்ட்டுக்கு மேட்சா பிங்க் கலர்ல எவ்ளோ அழகா பொட்டு வச்சிருந்தாங்க, நீ பாக்கலையா” ரொம்பத்தான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.

அடுத்த செகன்டு குட்டிமா “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்”ன்னு அரம்பிச்சாங்க ,

அப்பதான் ஏதோ விபரீதமாகிப் போச்சுங்கிறதே உறைச்சுச்சு எனக்கு  “ஐயயோ…என்னாச்சு குட்டிமா?”

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்…  அந்த சிறுக்கி… அவ கம்மல்,
டிரஸ் கலர், பொட்டு கலர் எல்லாம் ப்ரோக்ராம் பாத்து ஒரு மணி நேரம் கழிச்சு கூட ஞாபகத்துல இருக்கு… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு வக்கிறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன சேஞ்சுன்னு
ஆசையா கேட்டா… ஒரு மணி நேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரியல இல்ல…
நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” வீட்டுக்காரம்மா கண்ணை கசக்கி கிட்டே!

"அதுக்கு முன்னாடி நான் யாருன்னு காட்டிட்டு போறேன்" பூரிக்கட்டைய எடுக்க கிச்சனுக்கு போனார்!

நான் என்ன செஞ்சேன்னு சொல்லித் தான் தெரியணுமா… 
வழக்கம் போல சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டேன். ஹையோ ஹையோ...

No comments: