Saturday 21 March 2015

பெருந்தலைவர் - பழமை மறவா நட்பு

அதிகாரம்: பழைமை

#குறள்_81:
///விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.///

பொருள்:
பழைய நட்பை மறவாது போற்றுபவர், பகைவராலும் விருப்பப்படுவார்.

------------------------------------------------------------------------------


அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார். நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த அவர், சிவகிரி பயணியர் விடுதியில் தங்கி இருந்தார். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த காமராஜ், ஒரு காட்சியைக் கண்டார். " போய்யா... பொழுது விடிய நேரமில்லை. இப்பவே வந்துட்டீங்க தொந்தரவு கொடுக்க... அய்யா இன்னும் எழுந்திருக்கல. அப்புறமா வாங்க..." என்று உரத்த குரலில் வாயிலில் நிற்கும் போலீஸ்காரர் ஒருவரை கெடுபிடி செய்து கொண்டிருந்தார். 

விரட்டப்பட்ட அந்த நபரோ, " அய்யா... தயவு செய்யுங்க. நான் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன். இங்கணக்குள்ள் ஒரு ஓரமா நின்னுக்கிட்டிருக்கேன். தலைவர் வெளியே வரும் போது..." என்று கூறிக் கொண்டிருந்த போதே, அவரை மேலும் பேச விடாமல் போலீஸ்காரர் மறுபடியும் விரட்டினார். இதனைக் கண்ட காமராஜர், விரட்டப்படும் மனிதரின் முகத்தை உற்று கவனித்தார். திடீரென்று காமராஜரின் முகத்தில் மலர்ச்சி. " இந்தாப்பா... அவரை ஏன் விரட்டுர... விடப்பா அவரை" என்ற காமராஜரின் குரல் கேட்டு, போலீஸ்காரர் குரல் வந்த திசை நோக்கினார். அதற்குள் காமராஜரே அங்கு வந்துவிட்டார். " வேலு நல்லா இருக்கியா? வா... வா... உள்ளே போகலாம்" என்று கூறியபடியே, விரட்டப்பட்டவரின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்றார். வேலுவின் உள்ளத்தில் திகைப்பும், மகிழ்ச்சியும் போட்டியிட்டன. எதிர்பாராத இந்த வரவேற்பு அவரை திக்கு முக்காட செய்துவிட்டது.

தன்னை காமராஜர் நினைவு வைத்திருந்தது, பார்த்தவுடன் " வேலு, வா வா" என்று அன்பு பொங்கிட அழைத்தது ஆகியவற்றால் தன்னை மற்ந்துவிட்ட அவர், காமராஜருடன் காபி அருந்தினார். கடந்த காலம் பற்றிய நினைவுகளை பரிமாரிக் கொண்டனர். ஆனால் காமராஜரை சந்திக்க அந்த அதிகாலை நேரத்தில் எதற்காக வந்தாரோ, அந்த விஷயத்தைக் கூறவே மறந்துவிட்டார்.

காமராஜரோடு சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே கொட்டடியில் சிறை வாசம் அனுபவித்த உத்தம தேசத் தொண்டர் வேலு. காமராஜின் உபசரிப்பிலும், அன்பிலும் திளைத்த அவர், " அப்ப நான் போய் வர்ரேனுங்க " என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு விடை பெற்றார். காமராஜரும், காலையில் எந்த கேட் அருகே போலீஸ்காரர் விரட்டி அடித்தாரோ, அந்த கேட் வரை வந்து வழியனுப்பினார்.

கேட்க வந்த விஷயத்தை வேலு மறந்துவிட்டார். கேட்காமலேயே ஊருக்குப் போய்விட்டார். வேலுவின் ஊரிலிருந்து தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வேலுவின் குடும்ப நிலைமை, ஏழ்மையில் அவர்கள் குடும்பம் படும் கஷ்டங்கள் எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார் காமராஜ். வேலு தம்மை சந்திக்க வந்த காரணத்தை தானே விசாரித்து புரிந்து கொண்டார். பிறகு சில நாட்களுக்குள்ளேயே, சின்னஞ்சிறு நிவாரணம் வேலுவின் வீடு தேடி சென்றது. மேலும் காமராஜர் முயற்சியில் ஒரு நல்ல இடத்தில் வேலுவுக்கும் வேலை கிடைத்தது. அதன் மூலம் ஒரு தொகை அவர் குடும்பத்துக்கும் கிடைக்க வழி பிறந்தது. வேலுவின் குடும்பத்தில் அதன் பிறகு துன்பம் இல்லை.

No comments: