Monday 16 March 2015

ஆகோ... ஐயாகோ... பங்குனி பொங்கல் - விருதை

நேற்று எங்கள் விருதுநகர் மாரியம்மன் கோவில் சாட்டியுள்ளார்கள். பங்குனி பொங்கல் திருவிழா தொடங்கி விட்டது. சிறு வயது நினைவுகள் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கி விட்டன!! சிறு வயதில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியவுடன் காசுக்கடை பஜாரில் உள்ள மாமம்மை (ஆச்சி) அவர்கள் வீட்டிலும் சரி... பட்டுத் தெரு முக்கில் உள்ள எங்கள் ஐயாம்மா (ஐயாவின் அம்மா) வீட்டிலும் சரி விடி காலையிலேயே கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, இடுப்பில் அரைஞான் கயிற்றில் வேப்பிலையை கட்டி கையிலும் வேப்பிலையை குடுத்து விட்டு விடுவார்கள்!!




துணைக்கு பெரியவர்கள் யாரும் தேவை இல்லை. பேரன்மார்கள் அனைவருமே தயாராவோம். மூன்று வயதிலிருந்து 13 வயது வரை தெருவில் உள்ள சிறுவர் பட்டாலமே கிளம்புவோம்! சில கிருத்துவ சிறுவர்களும் வருவது உண்டு! வீட்டிலிருந்து மாரியம்மன் கோவில் வரை சென்று விட்டு திரும்புவோம். போகும் போதும் சரி வரும் போதும் சரி ஆகோ... ஐயாகோ... ஆகோ... ஐயாகோ என்று உரக்க பாடிக் கொண்டு செல்வது உண்டு. மிக அருமையான அனுபவம் அது. மேல் சட்டை இல்லாமல் கால்சட்டை மட்டும் அணிந்து கொண்டு, முகம், உடல் எல்லாம் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கொண்டு, இடுப்பிலும் கையிலும் வேப்பிலையுடன் நாங்கள் சென்ற புகைப்படங்கள் இல்லாமல் போனது வருத்தமே!!

ஆகோ ஐயாகோ… ஆகோ ஐயாகோ...
ஆத்தாத்தா பெரியாத்தா...
அம்பது மக்கள பெத்தாத்தா...
எனக்கு நாலு போடாத்தா...
ஆகோ ஐயாகோ… ஆகோ ஐயாகோ...
கம்பு குத்தி... கவுறு குத்தி...
வேல் வேல் வேலாயுதம்!
சூல் சூல் சூலாயுதம்!
மாரியாத்தா கும்பம்..மாவிடிச்சுத் திம்போம்..
காளியாத்தா கும்பம்..களிக் கிண்டித் திம்போம்..
ஆகோ…ஐயாகோ !
ஆகோ ஐயா..கோ !
ஆகோ… ஐயா…...கோ !

வசந்த காலங்கள் திரும்ப வருமா??!!

No comments: