Thursday 19 March 2015

பெருந்தலைவர் - செயல் வீரர் 2

ராயபுரம் கடற்கரைக்குப் அடுத்த நிலையில் சென்னை மக்களின் மாலை நேர உல்லாசபுரியாக இருந்தது "ஹைகோர்ட் பீச்" என்றழைக்கப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் எதிரிலமைந்த பரந்த கடற்கரை. கடற்கரையில் வடபுறம் அமைந்த மக்கள் வாழ்பகுதியினர் அங்கு செல்ல, இடையில் வரும் இரயில்வே கிராசிங்கை கடந்தே போகவேண்டும். மின்சார தொடர்வண்டிகளின் அதிகமாக செல்கின்ற நிலையில், மக்களின் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் ரயில்வே கதவடைப்பால் தடைபடும்.

இந்நிலையில்தான் ரிசர்வ் பேங்க் கட்டிடம் பிரமாண்டமான உருவில் சகல வசதிகளுடன் இப்போதிருக்கும் இடத்தில் கட்டப்பட்டுவிட்டது. இதனால் மாலை நேர கடற்கரைக் கூட்டத்துடன், வங்கி செயல்படும் நேரம் மக்கள் கூட்டம் ரயில்பாதையருகே கூடத்தொடங்கி போக்குவரத்து சிக்கலேற்ப்பட்டது.




இதிலிருந்து மக்களுக்கு வசதி செய்து தர வேண்டுமெனில், ஒன்று, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், அல்லது தரை வழிப்பாலம் அமைக்க வேண்டும். வடபுறம் பாரிமுனை இருந்ததால் அங்கு மேம்பாலம் கட்ட சாத்தியமில்லை என முடிவாயிற்று. அப்படியானால், தரை வழிப் பாலம் அமைத்து ரயில்வே பாதைக்கும், மக்களின் போக்குவரத்திற்க்கும் வழியமைக்க வேண்டும்.

இது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி உயர்மட்ட குழுவினரும் தமிழக பொது வேலைத்துறையினரும் (PWD) ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வின் முடிவுப்படி தரைப்பாலம் கட்டினால் 1) ரிசர்வ் பாங்க் கட்டிட அடித்தளம் பாதிக்கப்பட்டு கட்டிடத்தில் விரிசல் ஏற்படலாம். 2) அருகில் கடல் இருப்பதால் பாலத்தின் உட்புறம் ஊறிவரும் நீரூற்றை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாது. இந்த முடிவோடு முதலமைச்சர் காமராஜரை சந்திக்க சென்றனர்.

காமராஜர் கேட்டார், "என்ன முடிவெடுத்திருக்கீங்க ?" குழுவினர் சொன்னார்கள் " ஐயா! தரைவழிப்பாலம் கட்ட முடியாது என்றே நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்". 

காமராஜர் புன்னகைத்தார், அடுத்து உறுதியான குரலில் சொன்னார்: " முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியிலிருந்து வந்தீங்க... தரை வழிப்பாலம் கட்டுறோம்... நீங்க சொல்ற எந்த குறைபாடும் வராமல் கட்டி முடிக்கிறோம். இந்த உலகத்திலே மனிதனால் செய்யமுடியாத்துன்னு எதுவுமே கிடையாது. நீங்க புறப்படலாம்" வந்தவர் சென்றனர்.

" இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து" அதற்க்குரிய வல்லுனர்களை அழைத்தார். பொறுப்பை ஒப்படைத்தார். 

இன்று நாள் தோறும் மக்கள் கடந்து செல்லும் "காமராஜர் சாலை" தரைவழிப் பாலம் உருவானது.

No comments: