Wednesday 18 March 2015

சான்றோர் சமூகம் - வணிகம் ஒரு ஆய்வு - பகுதி 4

சிவகாசி இன்றைக்கு குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறதென்றால், இது ஏதோ இடைத் தரகர்களின் செயல்பாடுகளால் விளைந்தது அல்ல. அவ்வாறு நினைப்பதே அரைவேக்காட்டுச் சிந்தனையின் அறிகுறியாகும். சிவகாசியைப் பொறுத்தவரை இவ்வூரிலுள்ள விசுவநாத சுவாமி கோயில் கி.பி. 1668இல் வியாபாரிகளும் விவசாயிகளும் சேர்ந்து மகமை ஏற்படுத்திப் புதுப்பித்துக் கட்டியதாகும். இச் செய்தி இக் கோயிலின் வாயில் நிலையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்று Virudunagar District - An Archaeological Source Book (Authors: V. Vedachalam, Sethuraman and Madhuca Krishnan) என்ற நூல் குறிப்பிடுகிறது. மகமை என்பது மகன்மை என்ற சொல்லின் திரிபாகும். சுவீகரித்தல் என்பது இதன் பொருள். 1668ஆம் ஆண்டுக்கு முன்பு இவ்வூரும் இக்கோயிலும் தென்காசிப் பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையவனவாக இருந்துள்ளன. சிவகாசியைப் பற்றிய புராணக் கதையும், இவ்வூரைத் தென்காசிப் பாண்டியரின் வான் வழியான காசிப் பயணத்தோடு தொடர்புபடுத்தியே குறிப்பிடப்படுகின்றன. சங்கரன்கோயில் தல புராணம் கி.பி. 1564இல் (சக வருஷம் 1486 ரக்தாக்ஷ¢ சித்திரை மாதம் 20ஆம் தேதி புனர்பூச நட்சத்திரத்தில்) முடிசூட்டப்பெற்ற சீவலமாற பாண்டியன் என்ற சிவகாசியிலிருந்து அரசு செலுத்திய பாண்டிய மன்னனால் இயற்றப்பட்டது எனத் தி.அ. முத்துசாமிக் கோனார் என்ற அறிஞரின் 'கொங்குநாடு' என்ற நூல் குறிப்பிடுகிறது (பக்கம் 156). பாண்டியர் ஆட்சி முடிந்த பிறகு - கி.பி. 17ஆம் நூற்றாண்டில் - இவ்வூர் வாணிக அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் முதன்மை பெறத் தொடங்குகிறது எனில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகக் கருதிப் பொருத்திப் பார்ப்பதில் எந்த விதத் தவறும் இல்லை. ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்ச்சி அடைகின்ற ஒரு சமூகம் அமைப்புகளைக் கட்டி நிர்வகிக்கின்ற ஆட்சி அனுபவம், விடா முயற்சி, சுயச் சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய களங்களில் புகுந்து வெற்றிக் கொடி நாட்டுவதென்பது ஒரு சிலரின் பார்வையில் தரகு வேலையால் பொருளீட்டுவது என்று பொருள்படும் போலும். வேறு எந்த ஒரு சமூகத்துடனும் ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்கு நாங்கள் விழையவில்லை. சான்றோர் சமூகத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரம் சிலரால் தொடர்ந்து வலியுறுத்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பத்தான் விழைகின்றோம். எத்தனை ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வழங்கினாலும் அவற்றையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தாங்கள் சொன்னதையே திரும்பித் திரும்பி வலியுறுத்திச் சொல்வதென்பது கிளிப்பிள்ளைத்தனமாகும்.


சிவகாசி நகரைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர் 1779ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலின் மேலைக் கோபுரம் அமைப்பதற்குப் பெரும் தொகையினை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வசம் வழங்கியுள்ளனர். அது குறித்த செப்பேடு திருவாவடுதுறை ஆதினத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அலுவலராகப் பணிபுரியும் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள்' என்ற நூலில் அச் செப்பேட்டின் வாசகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காலகட்டத்தில் சேதுபதி மன்னரின் ஆட்சியில் சிவகாசி அடங்கியிருந்தது. திருச்செந்தூர் மேலைக் கோபுரக் கட்டுமானப் பணியில் முதன்மையாக பங்கேற்ற பிறர், பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என்ற கம்பளத்து நாயக்கர் சமூகத் தலைவரும், ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் என்ற வன்னியக் கள்ளர் சமூகத் தலைவரும், சாத்தூர் எரபாப்ப நாயக்கர் போன்றவர்களும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்திலுள்ள ஏழூர் தட்டாப்பாறை வணிதம் சூழ்ந்த மகாஜனம் பிள்ளைமார், சாண்நாடார்கள் முதலாகிய 18 சாதியினரும் ஆவர். பாளையக்காரர்களுடைய ஆட்சியே இப்பகுதியில் வலிமையாக வேரூன்றி இருந்த போதும், இவர்களுக்குச் சமமாகச் சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் திருச்செந்தூர் மேலைக் கோபுரம் கட்டுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமது பட்டயத்தில் "சேர சோழ பாண்டியர் பூமியான இந்நாட்டில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த நாடாக்களும் பட்டடைக் குடிகளும் சேர்ந்து இந்த தர்மத்தைச் செய்வதாக"த்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, சேதுபதியின் ஆட்சியையோ நாயக்க மன்னர்கள் ஆட்சியையோ அங்கீகரிக்காமல் பண்டொழிந்துபோன மூவேந்தர் ஆட்சியை மறக்காமல் நினைவு கூர்ந்து குறிப்பிடுவதிலிருந்து, சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் தம்மையும் மூவேந்தர் வழிவந்த ஆட்சிக் குடியினர் என்றே தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சேதுபதி மன்னர்களுடைய எந்த ஆவணத்திலும் தமது நாட்டைச் 'சேர சோழ பாண்டியர் பூமி' என்று தொனிப் பொருளாகக் குறிப்பிடுவதைக் கூட நாம் காண இயலாது.

நன்றி: S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

No comments: