Thursday 5 March 2015

பெருந்தலைவர்-எல்லோருக்கும் ஒரே விதி

பெருந்தலைவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரத்தில் வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறை சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த சங்கத்தில் மகமை நிதியாக கொஞ்சம் தொகையும் இருந்தது. அந்த மகமை நிதியிலிருந்து ஏதாவது ஒரு உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என அச் சங்கக்ம் முடிவு செய்து, ஓர் உயர் நிலை பள்ளி துவங்க திட்டமிட்டு, அதற்கான் அனுமதி வேண்டி பொதுக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பம் செய்தார்கள். உயர் நிலை பள்ளி துவங்குவதற்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. தேவையான இடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் இப்படி சில. இப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் சங்கமும் உயர் நிலை பள்ளி தொடங்க அனுமதி கேட்டது. பொது கல்வி இயக்ககமும் அனுமதி குறித்த எந்த பதிலையும் அளிக்காமல் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் முதல்வர் காமராஜிடம் சென்று சங்க பொறுப்பாளர்கள் முறையிட்டனர். பொது கல்வி இயக்குனரோடு காமராஜ் தொடர்பு கொண்டு, இது பற்றி பேசுவதற்க்கு சம்பந்தபட்ட துணை இயக்குனரை அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொண்டார். தானே வருவதாக இயக்குனர் தெரிவிக்க, இந்த அனுமதி குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என் தெரிந்து கொள்ள மட்டுமே வேண்டும், எனவே இந்த சிறிய தகவலுக்காக இயக்குனர் வர வேண்டியதில்லை, துணை இயக்குனரை அனுப்பி வைத்தால் போதும் என்று காமராஜ் கூறிவிட்டார்.
குறிபிட்ட நாளில் துணை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு தலைமை செயலகம் சென்று காமராஜரை சந்தித்தார். முதலில் விதிமுறைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்ட காமராஜ், சங்கத்தினர் விதிமுறைகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி விட்டார்கள், எவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார். முதலமைச்சர் காமராஜர் விரும்புகிறபடி ஆணையிடுவதாக இயக்குனர் கூறச் சொன்னதாக நெ.து.சுந்தர வடிவேலு பதிலளித்தார்.
உடனே, "இந்த விசயத்தை நான் விரும்புகிறேனா இல்லையா என்று பாராமல், விதிமுறைகளின் அடிப்படையில் முடிவு செய்வதே நிர்வாகதிற்கு நல்லது. உயர்நிலைப் பள்ளிக்கு, என்று, பொருத்தமான தனிக்கட்டிடம் இல்லாத நிலையில் சாதாரணமாக என்ன அனுமதி கொடுப்பீர்கள்?" என்று காமராஜ் கேட்டார். பதிலுக்கு சுந்தர வடிவேலுவும் "புதிய கட்டடம் கட்டுவதை எதிர்பார்த்து முதல் மூன்று படிவங்களை தற்காலிகமாக அனுமதிப்போம், கட்டட வேலை முடிந்த பிறகு ஒன்பது, பத்து, பதினோறாவது வகுப்புகளை அனுபதிப்போம்" என்றார்.
காமராஜரும் அதை ஆமோதிக்கும் விதமாக, "இது சரியான போக்கே, வாக்குறுதியை நம்பி மட்டும் எடுத்த எடுப்பிலேயே, கேட்டதை எல்லாம் கொடுத்து விட்டால், அப்புறம் செயற்குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்தத் தொழிலை கவனிக்க போய்விடக்கூடும். அடியோடு அனுமதி மறுத்தால், ஊரார் மகமைப் பணத்தை நல்ல விதத்தில் செலவிட முடியாது. இதுவரை பின்பற்றும் நடைமுறை இனியும் தொடரலாம்" என்று ஆணையிட்டார். சுந்தரவடிவேலுவோ பணிவான குரலில்...
"தாங்கள் விரும்பினால் அவர்கள் கேட்டுள்ள முதல் நான்கு படிவங்களையும் கொடுப்பதாக, இயக்குனர் என்னிடம் கூறி அனுப்பினார்" என்றார். ஆனால் காமராஜர் உறுதியோடு, "இந்த பள்ளிகூடம் தொடங்க போகிறவர்கள் எனக்கு வேண்டியவரகள்தான். அவர்கள், அரசின் விதிமுறைக்கு கட்டுபட்டால்தான் மற்றவர்களை கட்டுபடுத்த முடியும், மூன்று படிவங்கள் கொடுத்தாலே போதும் என்று இயக்குனரிடம் சொல்லுங்கள்" என்பதோடு முடித்துக் கொண்டார்.
விதிமுறைகள் யாருக்காகவும் தளர்த்தப்படக்கூடாது, அப்படி நல்ல செயல்களுக்காக தளர்த்தப்பட்டாலும் கூட அது பொதுவாக அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையிலே இருக்க வேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணிபுரியக் கூடியவர்கள் வளைந்து கொடுக்க விரும்பினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்றுக் கொண்டால் பொதுவான தன்மை இல்லாமல் போய்விடும் என்பதையும்தான் காமராஜருடைய உறுதியான மனப்போக்கை வெளிப்படுத்துகிறது.

No comments: